🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்!- தொடர்-11

காசிராஜன் ௭ழுதும் சரித்திரத்தின் சகாப்தம் ௭ம்ஜிஆர் (10-ஆம் வாரத் தொடர்ச்சி)

எம்ஜிஆரின் தத்துவம் "பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும்போது இன்பம், வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போதும் இன்பம்"

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம். இத்தொடரின் சரித்திர சகாப்த நாயகன் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வாரிசாக மக்களால் கருதப்பட்ட தமிழகத்தின் இரும்பு மங்கை 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என தவ வாழ்க்கை வாழ்ந்த புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளில் இதய அஞ்சலி செலுத்தி இந்த வாரத் தொடரைக் காண்போம்...

 1972 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8 ஆம் நாள் அன்று திமுகவில்  பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி நாளிதழ்களில் வெளியான புரட்சி தலைவர் எம்ஜிஆரின்   அந்த  உரைவீச்சு இதுதான்....

 திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ என்ன என்ன பேச வைத்தார்களோ, அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கும் காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்து வைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே, அண்ணா அவர்களைச் சந்தித்து விட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன்.

எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க. தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!

உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! இதைக்கூட புரிந்து கொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப் படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்துக்கு உரியவர்கள்!

முன்பொருமுறை சொன்னேன், காமராசர் அவர்களைத் தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும் தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்துக்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர் தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள் தான் தி.மு.க-வுக்கு வழிகாட்டி, காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது.

அப்போதும் இதே மதுரை முத்து, தூக்கி எறிவோம் என்று சொன்னார். தூக்கி எறிந்தே பழக்கம்! ஆனால், யாரை என்று தெரியவில்லை.

கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப் போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன். அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக் கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாதவாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும்.

கடைசியாக பணத்தோட்டம் என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்த பிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்துக்கு வந்தவன்.

கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன்.

ஒரு சமயம், கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரயில்கள் கவிழ்க்கப் பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ? என்னவோ? ஆனால், நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன். இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம் தான் தீர்மானிக்க வேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன்.

இப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்த பிறகு அண்ணாவின் கொள்கை தான் நாட்டுக்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்துக்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்து கொண்டபோது நெற்றியில் விபூதியைப் பூசிக் கொண்டு செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாள்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா?

கழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு, சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம். யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கு காட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?

ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு!

இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.

மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்ல வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம்.

நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம். 15-ம் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன் என செய்தி தாள்களில் செய்திகள் பரபரப்பாகி  தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.   

சரித்திரம் தொடரும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved