🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! தொடர்-14

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (13 ஆம் வாரத் தொடர்ச்சி)

எம்ஜிஆரின் தத்துவம் "ஒரு தாய் மக்கள் நாம் என்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம், தலைவன் ஒருவன் தான் என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்"

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும்  பரவத் தொடங்கியது. அந்த வகையில் 1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களை ரஷ்ய அரசு, அந்நாட்டின்  தலைநகர் மாஸ்க்கோவில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்தது. அங்கு செல்லும் வழியில் நம் இந்தியாவின் தலைநகர் டில்லியில், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்ஜிஆருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்படுகிறது. 


பின்னர் ரஷ்யாவில் நடைபெற்ற படவிழாவில் இந்திய அரசின் சார்பில், அப்போதைய செய்திஒளிபரப்புத்துறை அமைச்சர் ஐ.கே.குஜ்ரால் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது தமிழகத்தில் எம்ஜிஆரின் செல்வாக்கு மற்றும் அவருடைய படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார். பிறகு  அங்கிருந்து லெனின்கிராடு நகருக்குச் சென்ற எம்ஜிஆர் அவர்களை, ரஷ்ய வானொலி பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒளிபரப்புகிறது. இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் செல்கிறார். அங்குள்ள தமிழ்ச்சங்கம் சார்பில் மிகப்பெரிய பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்ஜிஆர், லண்டன் பிபிசி வானொலிக்கு சிறப்பு பேட்டி அளிக்கிறார். 


ரஷ்யாவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகருக்குச் செல்கிறார். அங்கும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு கிழக்கு ஆப்பிரிக்கா சென்ற எம்ஜிஆர் அவர்கள் இறுதியில் தாயகம் திரும்புகிறார். இப்படி உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்த உலகம் சுற்றும் வாலிபன் நம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.

மதுரை வந்திருந்த பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்த எம்ஜிஆர், அதற்காக சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்குப் புறப்படுகிறார். அந்த இரவு நேரத்திலும் எம்ஜிஆரைப் பார்ப்பதற்காக, வழி எங்கிலும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. திருச்சியில் இருந்து வரும் வழியில் மக்கள் வெள்ளம்  ஆங்காங்கே ரயிலை  நிறுத்துகிறது. எம்ஜிஆரும் ரயில் பெட்டியின் கதவைத் திறந்து வழி நெடுகிலும் மக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டே வருகின்றார். ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள், ஓட்டமும் நடையுமாக ரயிலின் முன்பும் பக்கவாட்டிலும் வரத் தொடங்கு கின்றனர். மக்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ரயில் ஓட்டுநர் மெதுவாக இயக்குகிறார். நேரம் கடந்து செல்கிறது. இதையெல்லாம் கவனித்த எம்ஜிஆர், இந்திராவை குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பதற்காக கொடைரோட்டிலிருந்து இறங்கி காரில் செல்ல முடிவு செய்கிறார்.


அப்பொழுது ரயில் ஓட்டுனரும், ஸ்டேஷன் மாஸ்டரும் எம்ஜிஆரிடம், வழி முழுவதிலும் உங்களைக் காண்பதற்காக மக்கள் காத்திருக்கின்றனர். நீங்கள் இல்லை என்றால் நிலைமை விபரீதமாகிவிடும், நீங்கள் ரயிலில் வருவது தான் ரயிலுக்குப் பாதுகாப்பு, ஆகவே தயவு செய்து ரயிலிலேயே தங்கள் பயணத்தை தொடருங்கள் என்கின்றனர். நிலைமையைப் புரிந்து கொண்ட எம்ஜிஆரும் அதன்படியே  பயணத்தைத் தொடர்கிறார். பின்னர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மூலம் இந்திரா காந்தியிடம் தாமதத்திற்கான காரணத்தை தெரிவிக்கச் சொல்கிறார். காலை 7 மணிக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்து சேருகிறது. சுமார் 10 மணி நேரம் தாமதம் ஆகிறது. தமிழக மக்கள் எம்ஜிஆர் அவர்களை எந்த அளவுக்கு நேசித்தார்கள் என்பதற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறு எதுவாக இருக்க முடியும் என்று எண்ணிப் பாருங்கள்.


எம்ஜிஆர் இந்திரா காந்தி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதேபோல் இந்திராவும் எம்ஜிஆர் மீது அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தார். எம்ஜிஆர் பிறந்த அதே 1917 லில் தான் இந்திராவும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் உடல்நிலை டிசம்பர் 22 அன்று இரவு நேரத்தில்  பாதிக்கப் படுகிறது. அதன் பின்னர் மருத்துவ சிகிச்சைப் பலன் அளிக்காமல் 24 அன்று காலை 7.40 மணிக்கு வேலூரில் மரணம் அடைகிறார். உடனே கருணாநிதி, எம்ஜிஆர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் 36 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன், பெரியாரின் உடல் தேக்குமரப் பெட்டியில்   அடக்கம் செய்யப்படுகிறது. 

 

1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாண்டிச்சேரியில் சட்டமன்ற, பாராளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பாக திண்டுக்கல் தொகுதியில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தில் முதன் முதலாக ஒரு,பொதுத்  தேர்தலைச் சந்திக்க எம்ஜிஆர் தயாராகிறார்.  அங்குள்ள மொத்த 30 சட்டமன்ற தொகுதிகளில், 21 தொகுதிகளில் நின்ற அதிமுக 12 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது. கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் ஆதரவுடன், அதிமுக முதல் முறையாக புதுவையில் ஆட்சியைக் கைப்பற்றி சாதனை புரிகிறது. எம்ஜிஆர் அவர்கள், எஸ்.ராமசாமி என்பவரை முதல்வராக்கி அழகு பார்க்கிறார்.  அங்குள்ள ஒரே நாடாளுமன்ற தொகுதியிலும் அதிமுகவின் பாலாபழனூர் அமோக வெற்றி பெறுகிறார்.அதேபோல் தமிழகத்தில் நடந்த கோவை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் செ.அரங்கநாயகம் என்பவரை வெற்றி பெற வைத்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்குகிறார் . இந்த தொடர் வெற்றிகளால்  அதிமுக தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 


அடுத்து மொரீசியஸ் நாட்டின் அழைப்பை ஏற்ற எம்.ஜி.ஆர், அந்நாட்டின் சுதந்திரதின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அங்கு அந்த நாட்டின் பிரதமருக்கு அடுத்த இருக்கை கொடுத்து எம்ஜிஆர் சிறப்பிக்கப்படுகிறார். ஒரு நாட்டின் நடிகர் வேறொரு நாட்டின் சுதந்திரதின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அதன் பிறகு எம்ஜிஆர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்களின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்கிறார். அப்பொழுது அமெரிக்கத் தூதர் வரவேற்று அழைத்துச் செல்கிறார். பின்னர் அங்குள்ள ஹாவாய் பல்கலைக் கழகத்தில்  எம்ஜிஆர் அவர்கள் மிக நேர்மையாகவும், சாதுரியமாகவும் பேட்டி கொடுக்கிறார். இதன்பிறகு புகழ் பெற்ற மௌண்ட் சினாரியோ கல்லூரி சார்பில் வரவேற்பிதழ் அளிக்கப்படுகிறது. அடுத்து எம்ஜிஆருக்கு அரிசோனா பல்கலைக் கழகம்  கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வந்த போதும் அதை ஏற்க மறுத்து விடுகிறார். பின்னர் எம்ஜிஆர் தமிழக முதல்வரான பிறகு இந்திய முதல்வர்களில் எம்ஜிஆருக்கு மட்டுமே அமெரிக்கா பாராளுமன்றம் மரியாதை செலுத்தியுள்ளது.


இது மாதிரியான சிறப்புகள் பெற்ற எம்ஜிஆர் அவர்கள் நம் நாட்டுக்கே கிடைத்த மிகப் பெரிய பொக்கிசம் ஆவார். பின்னர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான "நேற்று இன்று நாளை" படம் எப்பொழுதும் போல் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. இந்தப் படத்தில் வரும் 'தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று' என்ற பாடலில் எம்ஜிஆர் சேரிப்பகுதியில் தூய்மையையும், சுகாதாரத்தையும் வலியுறுத்தி தெருவை சுத்தம் செய்து கொண்டே, 'தெருத் தெருவாய் கூட்டுவது பொது நலத் தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுய நலம் உண்டு'... என்று அரசியல்வாதிகள் பற்றி பாடி இருப்பார். (இதையே 2014 ல் மத்திய அரசு "சுவாச் பாரத்" என்ற பெயரில் தூய்மை இந்தியா திட்டமாக  அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது). தொடர்ந்து 'மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்'... என்று  குடும்ப அரசியல் பற்றியும் அழகாகப் பாடி இருப்பார். சினிமா மூலம் சமூக கருத்துக்களை பரப்புவதில் எம்ஜிஆர் மிகச் சிறந்த சீர்திருத்தவாதி, என்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது என்பதே உண்மை.

            சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved