🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-16

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (15-ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம்:

நாளைய உலகை ஆளவேண்டும்
உழைக்கும் கரங்களே!
இந்த நாடு முழுதும் மலரவேண்டும்
புரட்சி மலர்களே!

1976 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தலைமையிலான அதிமுகவும், இ.கம்யூனிஸ்ட் கட்சியும்  திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேடைகள் தோறும் தொடர்ந்து முழங்கின. அதே நேரம் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் அறிக்கைகள் மூலம் மோதலில் ஈடுபடத் தொடங்கினர். அதன் விளைவாக ஜனவரி 31 -அன்று மாலையில்  அரசியலமைப்புச் சட்டம் 356 ஆவது பிரிவின்படி திமுக ஆட்சி  (Dismiss) நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் பிப்ரவரி 3 அன்று மத்திய அரசு, திமுக மீது விசாரணை நடத்துவதற்காக உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில்    விசாரணை ஆணையம் அமைத்தது.

அந்த நேரத்தில் ஜெய்சங்கர் நடித்த  'பணக்காரப்பெண்' படத்தில்  'ஜானகியின் நாயகனே இராமச்சந்திரா, ஸ்ரீ இராமச்சந்திரா, தர்மம் ஜெயிக்கும் என்று சொன்னவனே இராமச்சந்திரா, ஸ்ரீ இராமச்சந்திரா, நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே 'என்று  TMS பாடிய  பாடல்  இடம் பெற்றது.  எம்ஜிஆருக்கு ஆதரவாக கருதப்பட்ட இந்தப் பாடல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து ஜெய்சங்கரின் 'கன்னிப்பென்' படப்பிடிப்பை எம்ஜிஆர் கிளாப் அடித்து தொடங்கி வைக்கிறார். அப்பொழுது சில மணித்துளிகள் ஜெய்சங்கரிடம் உரையாடிய எம்ஜிஆர், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் உடற்பயிற்சி பற்றிய அறிவுரைகளைக் கூறி விடைபெற்றுச் செல்கிறார். அந்தப் படத்தில் நடித்த ஸ்டண்டு நடிகரும், எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவருமான கே.பி.ராமகிருஷ்ணனிடம் ஜெய்சங்கர் பேசியபோது , எனக்கு எம்ஜிஆரிடம் பிடித்தது மற்றவர்களுக்கு உதவும் அவரது தாராளக் குணம். இதைத்  திரைப்படத் துறையிலும், அரசியலிலும் உள்ள அவரைப் பிடிக்காதவர்கள் வேண்டுமானால், அவர் பிறருக்கு விளம்பரத்திற்காக கொடுக்கிறார்  எனக் குறை கூறலாம். ஆனால் பிறருக்கு உதவும் அவரின் உயர்ந்த குணத்தை என்னைப் போன்ற நடுநிலையாளர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது என்று கூறி இருக்கிறார். 

அப்படி விமர்சனம் செய்பவர்களின் கூற்றுப்படி பார்த்தாலும், அவர்கள் எத்தனை பேருக்கு உதவி செய்து இருக்கிறார்கள்? அல்லது அவர்களை இப்படி பேசத் தூண்டியவர்கள் ஏதாவது இதுமாதிரி மற்றவர்களுக்கு உதவி செய்தது உண்டா? என்ற கேள்வி நம்முன் எழத்தானே செய்கிறது. எம்ஜிஆரைத் தவிர வேறு எவரும் அதுபோல் உதவிகள் புரிய முன்வரவில்லையே என்ன காரணம்? ஏனெனில் அவர்களிடம் பணம் இருந்தும்  நல்ல மனம் இல்லை என்பதே உண்மை.பாடுபட்டுச் சேர்த்தப் பொருளைக் கொடுக்கும் போது இன்பம், வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும் போதும் இன்பம் என்ற 'இதயக்கனி ' படத்தின் பாடல் வரிகளுக்கு உயிரோட்டம் கொடுத்தவர் எம்ஜிஆர் என்பதே சரித்திரம். 

இதற்கு முன்னர் 1975  ஜூன் மாதம் 25-ல் அன்றைய குடியரசுத் தலைவர் "பக்ருதீன் அலி அகமது" அவர்களால் அரசியலமைப்புச் சட்டம் 352 ஆவது பிரிவின்படி, (உள்நாட்டு சக்திகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்) பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனம் 1977 ஆம் ஆண்டு ஜனவரி 18-ல் விலக்கிக் கொள்ளப்படுகிறது. இதையடுத்து அரசியல் களமும் வேகம் எடுக்கத் தொடங்குகிறது.அனைவரும் சட்டமன்ற,  நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களை எதிர்பார்த்த நிலையில்,  நாடாளுமன்றத்திற்கு மட்டும் மார்ச் மாதம் தேர்தல் என அறிவிப்பு வெளியானது. அதிமுக தலைமையில்  காங்கிரஸ், இ.கம்யூனிஸ்ட்  போன்ற கட்சிகள்   போட்டியிட்டன. திமுக அணியில் திமுகவும் ஜனதாவும் தலா 19, மா.கம்யூனிஸ்ட் மதுரை, திண்டுக்கல் ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள் என்ற முழக்கத்துடன் களம் கண்டது அதிமுக அணி. சர்வாதிகாரத்திற்கு விடை கொடுங்கள் என்றது திமுக அணி.

தேர்தல் முடிவுகளில் அதிமுக 18, காங்கிரஸ் 14, இ. கம்யூனிஸ்ட் 3 தொகுதிகள் என அதிமுக அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. திமுக அணியில் போட்டியிட்ட  ஜனதா 3 இடங்களில் வென்றது. ஆனால் திமுகவோ வடசென்னையில் (ஏ.வி.பி ஆசைத்தம்பி ) மட்டுமே தப்பியது. போட்டியிட்ட மற்ற இடங்களில் எல்லாம் தோல்வியையே தழுவியது. அதேபோல் மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தோல்வியே மிஞ்சியது. மத்தியில் ஜனதா கூட்டணி 269 இடங்களில் வெற்றி பெற்று மொராஜி தேசாய்  பிரதமர் ஆனார். அமைச்சரவையில் சரண்சிங், ஜெகஜீவன்ராம், வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோருடன் தமிழகத்தின் பா.இராமச்சந்திரன் உள்ளிட்டோரும் இடம் பெற்றனர்.

எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய 5 ஆண்டுகளுக்குள் நடைபெற்ற எல்லா தேர்தல் களத்திலும் திமுகவிற்கு தொடர்ந்து தோல்விகளையே கொடுத்து வந்தார். ஆதலால் திமுகவில் கருணாநிதியின் தலைமைக்கு எதிராகப் போர்க்குரல் ஒலிக்கத் தொடங்கின. அதைத் தொடர்ந்து கருணாநிதி ஏப்ரல் 10-ல் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் நெடுஞ்செழியனுக்கு கடிதம் எழுதுகிறார். உடனே நெடுஞ்செழியனும் தன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவிக்கிறார். இதனால் திமுகவில் பெரும் குழப்பம் நிலவுகிறது. பின்னர் தி.க. பொதுச்செயலாளர் கி. வீரமணி முயற்சியின் பேரில் இருவரும் தங்களது விலகலைத் திரும்ப பெற்றனர். 

ஆனாலும் இது நிறந்தரமற்ற தற்காலிக முடிவு என மூன்றே நாளில் வெட்ட வெளிச்சமானது. ஆம் ஏப்ரல் 15 ல் திமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட நான் வகித்து வரும் எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என்று நெடுஞ்செழியன் திமுகவின் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். அவரைத் தொடர்ந்து மேலும் சில முக்கியத் தலைவர்களான க.ராசாராம், செ.மாதவன், இராம.அரங்கண்ணல் போன்றோரும் விலகினர். திமுக மூன்றாவது முறையாக பிளவைச் சந்தித்தது. ஏப்ரல் 27 அன்று சென்னையில் உள்ள தி.நகரில்  நெடுஞ்செழியன் ஆதரவாளர்கள் கூட்டிய கூட்டத்தில் 'மக்கள் திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க தீர்மானம் செய்யப்படுகிறது. அதன் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பொருளாளராக க.ராசாராம், கொள்கை பரப்புச்செயலாளராக செ.மாதவன் ,அமைப்புச் செயலாளராக அரங்கண்ணல் ஆகியோரும் தேர்வு செய்யப்படுகின்றனர். 

இந்த கட்சியின் தொடக்க விழாப் பொதுக்கூட்டம் மே 8 அன்று சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி தேரடி வீதியில் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய நெடுஞ்செழியன், அண்ணா காலத்தில் வெற்றி மேல் வெற்றி பெற்ற திமுக, கருணாநிதி தலைமையில் தோல்வி மேல் தோல்விகளைப் பெறுவதேன்? 1971 பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு அடிப்படைக் காரணம் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் உழைப்பு, செல்வாக்கு, புகழுமே ஆகும். கருணாநிதி தலைமையிலான கழக ஆட்சி 8 குற்றச்சாட்டுகளுடன் குடியரசு தலைவரால் கலைக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம் கருணாநிதியே ஆவார் எனப் பேசுகிறார். இதையடுத்து திமுகவின் பொருளாளராக இருந்த க.அன்பழகன் பொதுச்செயலாளராக தேர்வாகிறார். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொடர் வெற்றிகளால் அரசியல் களத்தில் பவனி வருகிறார். அவருக்கு மேலும் ஒரு தித்திப்பான செய்தியாக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பும் வருகிறது. இதற்கு முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றிகளின் உற்சாகத்தில் மீண்டும் களத்திற்கு தயாரானார் எம்ஜிஆர். இந்த இனிய தருணத்திற்காக எம்ஜிஆருக்கு 5 வருட காலம் தேவைப்பட்டது. தற்போது காலம் கனிந்து வந்ததால் களம் அமைக்க தீவிரப் பணியில் இறங்குகிறார்.

சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved