🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-23

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (22 ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம், "தியாகிகளான தலைவர்களாலே சுதந்திரம் என்பதை அடைந்தோமே, ஒருசிலர் மட்டும் அனுபவிக்காமல் பலருக்குப் பயன்பெறச் செய்வோமே ".

தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு பணியாற்றுகிறார் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள். தமிழ்நாட்டில் அரிசி பற்றாக்குறை நிலவிய சமயம் அது. மத்திய தொகுப்பிலிருந்து போதுமான அரிசியை  அனுப்ப வேண்டும் என  மாநில அரசு பலமுறை வலியுறித்தியும், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. எனவே 1983 பிப்ரவரி 9 அன்று அண்ணா நினைவிடம் முன்பாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்கிறார். அதன்படி அன்று காலை 9.45 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் ப.உ.சண்முகம், பொருளாளர் செ.மாதவன், ஜேப்பியார் எம்.எல்.சி, மதுசூதனன், மதுரை முத்து மற்றும் சிலருடன் அண்ணா நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து வணங்கிய எம்ஜிஆர், சுமார் 10 மணியளவில் மேடையேறி உண்ணாவிரதத்தை துவங்குகிறார்.பின்னர் சபாநாயகர் ராசாராம், துணை சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், பொன்னையன், குழந்தைவேலு, எஸ்.முத்துசாமி, ராகவானந்தம், ஹண்டே, ராஜாமுகம்மது, எஸ்.என். ராஜேந்திரன், திருநாவுக்கரசு எனப் பலரும் கலந்து கொள்கின்றனர்.   நேரம் செல்லச் செல்ல மக்கள் கூட்டம் சாரை சாரையாக வரத்தொடங்கி பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். 

இந்த தகவல் டில்லியை எட்டியதைத் தொடர்ந்து சுமார் 11 மணியளவில் மத்திய உணவுத்துறை அமைச்சராக இருந்த ராவ்பீரேந்திரசிங் முதல்வர் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்வரின் செயலாளர் பரமசிவம் IAS அவர்களிடம், உங்களின் முதலமைச்சருடைய உண்ணாவிரதம் வருத்தம் அளிக்கிறது. அதைக் கைவிட்டு அவரை டில்லி வரச் சொல்லுங்கள். அரிசிப் பிரச்சினையை பேசி சரிசெய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் திட்டமிட்டபடி மாலை 5 மணிவரை உண்ணாவிரதம் மேற்கொண்ட எம்ஜிஆர், பலரசம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறார்.பின்னர் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசிய எம்ஜிஆர் மத்திய அமைச்சர் தொடர்பு கொண்டதைக் குறிப்பிட்டதோடு, காலதாமதம் செய்யாமல் அரிசி கிடைக்க வேண்டும் என்கிறார். மாநில உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஒரு மாநில முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆர் தான் உதாரணம் என்று வடநாட்டுப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல் தொடங்குகிறது.அதன் உச்சகட்டமாக ஜுலை 25 அன்று கொழும்பு நகரில்  உள்ள வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈழப் போராளிகளான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 37 தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி கொல்லப்படுகின் றனர். இந்தச் செய்தி உலகெங்கும் காட்டுத் தீயாகப் பரவியது. இதைக்கேட்ட தமிழர்கள் கொதித்து எழுந்தனர். அப்பொழுது தமிழக முதல்வர் எம்ஜிஆர், இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறார். அத்துடன் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கு, இலங்கையில் உள்ள தமிழர்களை இரக்கமற்ற முறையில் கொல்வது, கலவரம் விளைவிப்பது, வீடுகளைச் சேதப்படுத்தி தீ வைப்பது போன்ற செய்திகள் வருகிறது. இதுமாதிரியான வன்முறைகள் தமிழக மக்கள் மத்தியில் கவலையையும்,கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்களை இத்தகைய கொடூரத் தாக்குதலில் இருந்துக் காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் இந்த வன்முறைச் சம்பவத்தை உலக மக்கள் அறியும் வண்ணம் ஐ. நா சபையில் எழுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவசரத் தந்தி ஒன்றையும் அனுப்புகிறார். எம்ஜிஆரின் தந்தியைக் கண்ட இந்திரா காந்தி இலங்கை சம்பவங்களை இந்தியா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது, இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்றாலும் இலங்கைத் தமிழர்களும், இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது என்று எச்சரிக்கை விடுத்தார். தி.க, திமுக, அதிமுக கட்சிகள் கண்டன நடவடிக்கையில் இறங்கின. 

திமுக சார்பில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது.தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து  ஆகஸ்ட் 2 ல் முழு அடைப்பு(பந்த்) நடைபெறும் என்று அறிவித்தார்  எம்ஜிஆர். தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மாநில, மத்திய அரசு அலுவலகங்கள் எல்லாம் மூடப்பட்டன. தொடர்வண்டிகளும் ஓடவில்லை. இதுபோல் முழுமையாக பந்த் நடைபெற்றது. இதையடுத்து இதே காரணத்திற்காக  திமுக ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தது. மூன்று நாட்களுக்கு முன்பு  பந்த் நடத்தியதைச் சுட்டிக்காட்டிய எம்ஜிஆர், இப்போராட்டத்தைக் கைவிடுமாறு கருணாநிதியிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ஆனாலும் எம்ஜிஆரின் வேண்டுகோளை நிராகரிக்கிறார் கருணாநிதி. பிறகு இந்திராவிடம் பேசிய எம்ஜிஆர்  ஆகஸ்ட் 5 அன்று தமிழ்நாட்டில் ரயில்களை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி அன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழகம் முழுவதும் ரயில்கள் நிறுத்தப்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் சமவாழ்வு, சமஉரிமைக்காக ஏராளமான பொருள் உதவியும் செய்தவர் எம்ஜிஆர் என்பதை நாடு நன்கறியும். தனிப்பட்ட முறையிலும் அவர்களுக்காக கோடி கோடியாய் கொடுத்து உதவினார் என்பதால், இன்றும் இலங்கைத் தமிழர்கள் எம்ஜிஆரை போற்றி  வணங்குகின்றனர். 

இலங்கை இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி டில்லியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான  வைகோ,எல்.கணேசன் போன்றோர் ஆகஸ்ட் 11 ல்  உண்ணாவிரதம் இருந்தனர். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி விடுதலைப் புலிகள், டெலோ(தமிழீழ விடுதலை இயக்கம்), ஈரோஸ், பிளொட்(தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு), ஈ.பி.ஆர்.எல்.எப்(ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி)போன்ற இயக்கங்கள் செயல்பட்டன. போராளிக் குழுக்களின் தலைவர்களைச் சந்திக்க விரும்பிய எம்ஜிஆர் பத்திரிக்கைகள் மூலம் அழைப்பு விடுக்கிறார். அதேபோல் கருணாநிதியும் அழைப்பு விடுத்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் ஆண்டன் பாலசிங்கம், பேபி சுப்பிரமணியம், சங்கர், நித்தியானந்தன் ஆகியோர் எம்ஜிஆரை சந்தித்துப் பேசினர். தன்னைச் சந்தித்த விடுதலைப் புலிகளுக்கு எம்ஜிஆர், கோடிக்கணக்கில் பணம் கொடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்விற்காக பல உதவிகள் செய்தவர் எம்ஜிஆர் என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

1983 செப்டம்பர் 20 ல் சென்னை பல்கலைக் கழகம் தன் 125 ஆம் ஆண்டு விழாவில் எம்ஜிஆர் அவர்களுக்கு "டாக்டர் பட்டம்" வழங்கி சிறப்புச் செய்கிறது. அந்த பட்டமளிப்பு விழாவில் எம்ஜிஆர் அவர்களின் சிறப்பியல்புகள் அடங்கிய சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படுகிறது. அதில் மனித இன நலனுக்காக எம்ஜிஆர் போராடி வந்திருக்கிறார். இந்நோக்கத்திற்காக அவர் திரைப்படங்களையும், அரசியலையும் பயன்படுத்த தயங்கியதில்லை. "அதனால் தான் அவரை மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சி தலைவர் போன்ற பட்டங்களால் மக்கள் அழைக்கின்றனர்."பரந்த மனம் படைத்தவர்"எனப் பகுத்தறிவு பகலவன் பெரியாரும், "அர்ச்சுனன் போன்ற அறப்போர் வீரர்"என்று மூதறிஞர் ராஜாஜியும்,"குன்றா எழிலும், உணர்ச்சி மிக்க கவிதையும் என்று பேரறிஞர் அண்ணாவும் எம்ஜிஆரை புகழ்ந்துள்ளனர்.சமூகத்தில் நிலவும் குறைபாடுகளைக்    களைய தொடர்ந்து போராடும் வெற்றிக்காகவும், அவரது தளராத கொடைத்திறனுக்காகவும், கலை உணர்விற்காகவும், புதியன படைத்திடும் திறமைக்காகவும், மனித இன பண்புகள் மேம்பாட்டிற்கு அவர் கொண்ட ஈடுபாட்டிற்காகவும் எம்ஜிஆர் அவர்களுக்கு "டாக்டர் பட்டம்" வழங்கப்படுகிறது. 

டாக்டர் பட்டம் பெற்ற எம்ஜிஆருக்கு திரை உலகினர்  பாராட்டு விழா நடத்த முடிவு செய்தனர்.நவம்பர் 20 அன்று சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில்  நடந்த பாராட்டு விழாவில் திரை உலகமே திரண்டு  வாழ்த்து மழைப் பொழிந்து பாராட்டியது. இந்த விழாவை முன்னிட்டு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இருந்து  புறப்பட்ட பிரமாண்ட ஊர்வலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், நாகேஷ், பிரபு, மோகன், நம்பியார், ஸ்ரீதேவி, ராதா, அம்பிகா உள்ளிட்ட நடிகர் நடிகையரும், கே. பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், டி. ராஜேந்தர் போன்ற இயக்குநர்களும் அணி வகுத்து வருகை தந்தனர். அண்ணா சாலையில் காயிதேமில்லத் பெண்கள் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து எம்ஜிஆர் ஊர்வலத்தை பார்வை இடுகிறார். விழாவில் இசைஞானி இளையராஜா, கே. வி. மகாதேவன், சங்கர் கணேஷ் ஆகியோரின் இசை நிகழ்ச்சியில் பி.சுசிலா, ஜானகி, மலேசியா வாசுதேவன் எனப் பலரும் பாடினார்கள். பாரதிராஜா தலைமையிலான இவ்விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எம்ஜிஆரை வெகுவாகப் பாராட்டினார். அந்த விழாவில் எம்ஜிஆரின் சத்துணவு திட்டத்திற்காக திரையுலகம் சார்பில் முதல் தவணையாக ரூபாய் 10 லட்சத்தை  பாரதிராஜா வழங்குகிறார். லட்சிய நடிகர் எஸ். எஸ்.ஆர்,ஜெமினிகணேசன்,விஜயகாந்த்,சிவக்குமார், விஜயகுமார், தியாகராஜன், தங்கவேலு,வினுச்சக்ரவர்த்தி, கே.ஆர். விஜயா,விஜயகுமாரி, மனோரமா, நளினி, ரேவதி, ராஜசுலோச்சனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும், தங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினராகக் கருதி மாபெரும் விழா எடுத்து மகிழ்ந்தது.

    சரித்திரம் தொடரும்....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved