🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பூப்பறிக்கவா நம் அரசியல் தலைவர்கள்? திசைமாறும் மக்கள் கோபம்!

திமுக,அதிமுக என எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்கள் சாதிக்காக அரசியல் செய்யும்பொழுது வன்னியர் அல்லாத இதர சாதியைச் சேர்ந்த தலைவர்கள் சமுதாய வாக்குளைப்பெற்றுக்கொண்டு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்களாக பதவிமோகத்தில், சுகபோக வாழ்க்கை வாழும் சுயநலவாதிகளாக, தங்கள் சமுதாய மக்களின் இடஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட்ட பொழுதும் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்று சமூகநீதி கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் நிராகரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை திசைதிருப்பி மீண்டும் அவசரச் சட்டத்தை நிறைவேற்ற வன்னியர் சமுதாய "லாபி"க்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதுகுறித்து மதுரையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற உண்ணாவிரத்தப்போராட்டத்தில் பேசிய சமூகநீதி கூட்டமைப்பின் மூத்த தலைவர், அதிமுக ஆட்சியில் இருந்தபொழுது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும், தற்பொழுது திமுக ஆட்சியில் மூத்த அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் தங்கள் சாதி நலனுக்காக துடியாய் கிடந்து துடிக்கின்றனர். 

மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருக்கும் வன்னியர் அல்லாத 115 சாதிகளில் 26 சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே ஒரு அரசுப்பதவியில் கூட கிடையாது, ஆனால் அதுகுறித்து சிந்திக்காத சமூகநீதி பேசும் அரசைச் சேர்ந்த மூத்த அமைச்சர் தன் சாதிக்காக உச்சநீதிமன்றம் நிராகரித்த சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற முதல்வரிடம்  தன் சாதி தலைவர்களை அழைத்துச்சென்று பேசுகிறார். ஆனால் வன்னியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 255 சாதியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற, அமைச்சர் பெருமக்களால் முதல்வரிடன் தங்கள் சமுதாய பிரதிநிதிகள் முதல்வரை சந்திக்க கடந்த ஒருவருடமாக நேரம் பெற்றுத்தரமுடியவில்லை. சமூகநீதி பேசும் தமிழக முதல்வரும் ஓராண்டாக இந்த எளிய மக்களை சந்திக்காமல் இருப்பது எந்தவகையில் சமூகநீதி என்றும் கேள்வி எழுப்பினார்.


இதேபோக்கு நீடித்தால் 255 சாதிகளைச் சேர்ந்தவர்கள் நம் சமுதாய அரசியல் தலைவர்கள் குடும்பத்தோடு ஏன் திருமண உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். சுயநலவாதிகளை, வாய்மூடி ஊமைகளாக, கட்சித் தலைமையை தோளில் சுமக்கும் பொதி கழுதைகளாக இருப்பவர்களை நம் தோளில் ஏன் சுமக்க வேண்டும் என்று சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது என்ற எச்சரிக்கை மணியை அடித்துள்ளார். மூத்த தலைவரின் இந்தப்பேச்சு கூட்டத்தினரிடையே பலத்த வரவேற்பைப்பெற்றது.

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் பிற சாதி அரசியல் தலைவர்கள் இன்னும் வாய்மூடி இருப்பார்களேயானால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கோபத்திற்கும் ஆளாக நேரிடலாம் என்று எச்சரிக்கின்றனர் போராட்டக்குழுவினர். அடுத்த கட்டமாக தங்கள் சமுதாய உள்ளாட்சி,சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை அவர்களின் வீட்டு வாசலிலேயே செய்யத்துடித்துக்கொண்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது, அரசியல் தலைவர்கள் விழித்துக்கொண்டால் நல்லது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved