🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இது என்ன வன்னியர் நல ஆணையமா? முதல்வருக்கு கடிதம்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் முதன்முதலாக 1969-இல் திமுக ஆட்சியில் சட்டநாதன் தலைமையில் அமைக்கப்பட்டது. 

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சீர்மரபினர் சமுதாயங்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மேம்படுத்தவும், உரிய திட்டங்களை வகுத்து முன்னேற்றமடையச் செய்யவும், தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு பரிந்துரை செய்வதும் இந்த ஆணையத்தின் நோக்கமாக உள்ளது. 

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணையத்தின் தலைவராக சட்டநாதன் தொடங்கி, அம்பாசங்கர், நடராஜன், ஜனார்த்தனம் என தற்போதைய தலைவர் தணிக்காசலம் வரை அனைவரும் வன்னியர் சாதியைச் சார்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

இப்படி நியமிக்கப்படுபவர்களின் சாதி பின்புலம் குறித்து அலச வேண்டிய தேவை இல்லை என்றாலும், அவர்களின் செயல்பாடுகளால் அந்த எண்ணத்தை ஏற்படுத்தி விடுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. 

இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக அம்பாசங்கர் அளித்த அறிக்கை இன்றுவயை கடும் விமர்சித்துக்குள்ளாகி வருகிறது. அவர் தனது அறிக்கையில் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் வன்னியர் மக்கள் தொகையை மிகைப்படுத்தியும், சில குறிப்பிட்ட சாதிகளை, குறிப்பாக சீர்மரபினர் பட்டியலிலுள்ள தொட்டிய நாயக்கர், கள்ளர் உள்ளிட்ட சாதிகளை, முந்தைய மக்கள் தொகையைவிட குறைத்தும் காட்டியுள்ளார். இயற்கைக்கு மாறான இந்த புள்ளிவிபரத்தை, ஆணையத்தில் இருந்த பெரும்பான்மை உறுப்பினர்களே ஏற்காமல் நிராகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் ஒய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனம் நான்குமுறை பதவிநீட்டிப்புப் பெற்று அப்பதவியில் இருந்துள்ளார். அவர் தலைவராக இருந்தபொழுது வன்னியர் சாதிக்கு தனி இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு பரிந்துதை செய்யும் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார். திடீரென கூட்டப்பட்ட ஆணையக் கூட்டத்தில் மற்ற உறுப்பினர்களுக்கு தீர்மானப்பொருளை முன்கூட்டியே தெரிவிக்காமல், கூட்டம் முடிவடையும் தருவாயில் தீர்மானத்தை வழங்கி கையெழுத்து பெற முயன்றுள்ளார். இதற்கு மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களை தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச்சென்று சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் சமாதானமாகாத மற்ற உறுப்பினர்கள், உரிய புள்ளிவிபர ஆவணங்களின்றி , ஒரு சாதிக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்வது, மற்ற வாய்ப்பற்ற சமூகங்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறி மறுத்துவிட்டனர். இருந்தபோதிலும் , இவரும் அம்பாசங்கர் பாணியில் அரசுக்கு தனியாக வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்து அறிக்கை வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற உறுப்பினர்கள் அரசிடம் அறிக்கை அளித்தனர். 

இவையெல்லாம் திட்டமிட்டு செய்யப்படுவது என்பதை இவ்விசயத்தை ஆழ்ந்து கவனிப்பவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதாவது வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்வார். உடனே உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு நோட்டீஸ் வழங்கும். அதற்காகவே காத்திருக்கும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக உள்ள வன்னியர், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக உள்ளவரிடம் கருத்து கேட்பார். அக்கடிதத்திற்காகவே காத்துக்கொண்டிருக்கும் ஆணையர் (ஜனார்த்தனம்) இடஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்வார். இப்படித்தான் தொடர்ச்சியாக மோசடிகளை அரங்கேற்றி வருவதாகவும், இதை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கண்டித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். 
இதன் நீட்சியாக இரண்டுமுறை பதவிநீட்டிப்பு பெற்றுள்ள தற்போதைய தலைவர் மு.நீதிபதி தணிக்காசலமும் எந்தவித புள்ளிவிவரம், கருத்துக்கேட்பு, மற்ற உறுப்பினர்களின் ஆலோசனையையும், ஒப்புதலையும் பெறாமல், அரசு கேட்டுக்கொண்ட 24 மணி நேரத்தில், தன் சாதிக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளார். 

இதனடிப்படையில் வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்க கொண்டுவரப்பட்ட 8/2021 சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பில், இவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

பொதுவாக நீதிமன்றங்கள் இம்மாதிரி கடுமையான கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது  சம்மந்தப்பட்டவர்கள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவது நடைமுறையில் உள்ள விசயம். ஆனால் முன்னாள் நீதிபதியான தணிக்காசலம் எந்தவிதமாய குற்ற உணர்ச்சியுமின்றி அப்பதவியில் நீடிப்பது அவமானகராமானது என்று விமர்சகக்கும் சமூகநீதி கூட்டமைப்பினர், அனைத்து சாதி மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு தன் சாதிக்காக பணியாற்றுவதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். 

எனவே இது குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிவரும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர், தமிழக அரசுக்கு தேவையற்ற அவப்பெயரையும், அரசுக்கு எதிரான மனநிலையை பிற சமுதாயங்களிடம்  உண்டாக்கும் தணிக்காசலம் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக கலைத்துவிட்டு, வன்னியர் அல்லாதவரை தலைவராக நியமிக்க வேண்டுமென்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved