🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மணிமகுடம் யாருக்கு?- குடியரசுத் தலைவர் தேர்தல் - சிறப்புப் பார்வை-1

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட, மதச் சார்பற்ற நமது இந்தியத் திருநாட்டின் மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படுவது குடியரசுத் தலைவர் பதவியாகும். இந்தியாவின் மொத்த மக்கள் தொகை சுமார் 130 கோடி  மக்களில் "முதல் குடிமகன்"என்ற அந்தஸ்து குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. இந்தப் பதவியை அலங்காரப் பதவி என்றும் பரவலாகப்  பேசுவார்கள். அதே நேரம் நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படும் பொழுது , குடியரசுத் தலைவரின் முடிவு மிகவும் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாதபோது, யாரை புதிய அரசு அமைக்க  முதலில் அழைப்பது? என்பதை குடியரசுத் தலைவரே தீர்மானிப்பார். அதுமட்டுமா? ஏதாவது ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அவர் கருதும் பட்சத்தில், மாநில அரசைக் கலைக்கும் விசயத்திலும், அவரின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்னரே அது சட்டவடிவம் பெருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குடியரசுத் தலைவர் நாற்காலி அலங்காரப் பதவி எனக் கூறப்பட்டாலும், அது ஒரு அதிகாரம் மிக்க பதவியாகவும் தோன்றும்.

இவ்வளவு சிறப்புகள் பெற்றிருக்கும் குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இந்திய குடியரசுத் தலைவராக இருக்கும் மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் வரும் ஜுலை 24 ல் நிறைவடைய இருக்கிறது. ஆகவே அதற்கு முன்பே புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜுலை 18 ல் நடைபெற உள்ளது. இந்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இத்தேர்தலில்  35 வயது நிரம்பிய, தகுதி பெற்ற இந்திய குடிமகன் எவரும் போட்டியிடலாம். அதற்கான வேட்பாளராக போட்டியிடுவதற்கு 50 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும், அதேபோல் 50 எம்.பி.க்கள் வழிமொழிய வேண்டும். 

உலகின் வல்லரசாகவும், ஐ.நா சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் முக்கிய நாடாகவும் உள்ள அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் (ஜனாதிபதி) தேர்தலிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. அங்கு மக்கள் நேரடியாக வாக்களித்து அதிபரை தேர்வு செய்வார்கள். ஆனால் இங்கோ நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை,மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் உறுப்பினர்கள் ( எம்.பி.க்கள்), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) அடங்கிய தேர்தல் குழு (Electoral college) குடியரசுத் தலைவரை தேர்வு செய்கிறது. ஆதலால் நம் நாட்டில் உள்ள மக்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த பங்களிப்பும் இல்லை என்றே கூறலாம்.

இந்தியப் பாராளுமன்றத்தின் மக்களவையில் 543 எம்.பி.க்கள் , மாநிலங்களவையில் 233 எம்.பி.க்கள். ஆக இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 776 எம்.பி.க்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது. கடந்த 2017 குடியரசுத் தலைவர தேர்தலில் ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 இருந்தது. (மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பான 5 லட்சத்து 49 ஆயிரத்து 200 ஐ, மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையான 776 என்ற எண்ணைக் கொண்டு வகுத்தால், வரும் 708 தான் எம்.பி.யின் வாக்கு மதிப்பு) இது மாநிலத்துக்கு மாநிலம் மாறாது. இந்தியாவில் உள்ள எல்லா மாநில எம்.பி. க்களுக்கும் பொருந்தும். ஒட்டு மொத்த எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 231 ஆகும்.  

ஆனால் மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பு என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த மாநில எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ-வின் ஓட்டு மதிப்பு 208 ஆகவும், தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.வின் ஒரு ஓட்டு மதிப்பு 176 ஆகவும், சிக்கிம் மாநில எம்.எல்.ஏ வின் ஒரு ஓட்டு மதிப்பு வெறும் 7 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளில் மொத்தம் 4033 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.இவர்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 200 ஆகும். இந்த தேர்தலில் மொத்த எம்.பி.க்கள் 776, அதேபோல் மொத்த எம்.எல்.ஏக்கள் 4033 என ஒட்டு மொத்தமாக 4809 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்றாலும், இந்த தேர்தலில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 4809 பேர் வாக்குரிமை பெற்றவர்கள் ஆவர். தற்போதைய 2022  தேர்தலில் எம்.பி. யின் ஓட்டு மதிப்பு 700 ஆக குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.

முன்னதாக 1952 தேர்தலில் 494 இருந்தது என்றும்.பின்னர் 1957 தேர்தலில் 496 ஆக உயர்ந்து,1962 ல் 493 ஆகவும்,1967 மற்றும் 1969 தேர்தல்களில் 576 ஆக அதிகரித்தது .பின்னர் 1974 ஆம் ஆண்டில் 723 ஆக இருந்த ஓட்டின் மதிப்பு 1977 முதல் 1992 வரை 702 ஆக குறைக்கப்பட்டு இருந்தது.1997 முதல் 2017 வரை 708 ஆக இருந்தது. இந்த நிலையில் காஷ்மீரில் சட்டசபை கலைக்கப்பட்டு, தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. அத்துடன் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீர் தற்போது இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் சட்டசபை கொண்ட யூனியன் பிரதேசமான காஷ்மீரில் தொகுதி மறுவரையறை பணிகள் நடந்து வருகின்றன என்றும், எனவே இந்த ஜனாதிபதி தேர்தலில் காஷ்மீர் எம்.எல்.ஏ க்களின் பங்களிப்பு இருக்காது என்றும் கூறுகின்றனர். இதனால் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4033 ஆக குறைகிறது. ஆதலால் எம்.பி.  க்களின் ஓட்டு மதிப்பும் 700 ஆக குறையும் வாய்ப்பு உள்ளது.

ஒரு மாநில எம்.எல்.ஏ க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்காதது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் 1974 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலை எதிர்த்து மாணவர்கள் போராடியதால் குஜராத் அரசு கலைக்கப்பட்டது. இதனால் அந்த ஆண்டில் அம்மாநில எம்.எல்.ஏ க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது. இதைப்போல் இந்த ஆண்டு காஷ்மீர் எம்.எல்.ஏ க்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஆனால் அம்மாநில எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில்  தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களுடன், 234  சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர். வேட்புமனு ஜுன் 15 ல் தொடங்கியுள்ள நிலையில் ஜுன் 29 ல் நிறைவு பெறுகிறது.

தொடரும்....

கட்டுரையாளர்: திரு.A.காசிராஜன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved