🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மணிமகுடம் யாருக்கு? இந்தியக் குடியரசுத் தேர்தல் - சிறப்புப் பார்வை-2

நமது தாய்த் திருநாடாம் இந்தியாவின் 15-ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக ஜுலை 18 ல் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தளுக்கான, வேட்புமனுத் தாக்கல் ஜூன் 15 ல் தொடங்கியுள்ள நிலையில், ஜுன் 29 அன்று முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவாக ஓட்டுச் சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் , மாநில சட்டமன்ற உறுப்பினர்க்களுக்கும் வாக்குச் சீட்டுடன், பிரத்யேக பேனாவும் வழங்கப்படும். அனைவரும் ஓட்டுப் போடுவதற்காக இந்தப் பேனாவைத் தான்  பயன்படுத்த வேண்டும். வேறு பேனாவைப் பயன்படுத்தினால் ஓட்டு செல்லாதது ஆகிவிடும். இத் தேர்தலில் ஆளும் பாஜக வெற்றி பெறுவதற்கு மேலும் 13000 வாக்குகள் தேவை என்கின்றனர். ஆகவே ஆளும் கட்சியான பாஜக சார்பிலும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் வேட்பாளர் தேர்வுப் பணிகள் ஜரூராக நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் யார் முன்னெடுப்பது என்பதில் போட்டி நிலவுவதாக பேசப்பட்டது. ஆனாலும் இந்தப் போட்டியில் திரிணாமுல் காங்கிரசின் கையே ஓங்கியிருந்ததாக சொல்லப்பட்டது. அதனடிப்படையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, ஜுன் 15 ல் கூட்டம் கூட்டுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 22 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.    

அந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகெளடா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், காஸ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட 16 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். மீதியுள்ள தெலுங்கான ராஸ்டிர சமிதி, ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ், ஆம் ஆத்மி, பீஜு ஜனதாதளம், அகாலிதளம், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி ஆகிய 6 கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டன. 

முதற்கட்டமாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கும் முயற்சியில் இறங்கினர். தனக்கு இதில் விருப்பம் இல்லை என்று ஒதுங்கி விட்டார் சரத்பவார். எனவே எதிர்க்கட்சிகளின் அடுத்த தேர்வாக மேற்குவங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை தொடர்பு கொண்டு பேசினர். இவர்  2017 ஆம் ஆண்டு நடைபெற்ற  துணை ஜனாதிபதி தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, இன்றைய துணை குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு விடம் தோல்வி அடைந்தவர் ஆவார். ஆனால் அவரும் இத்தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட்டார். இப்படி எதிர்க்கட்சிகள் சார்பில் இருவரும் போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், அடுத்ததாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவை தொடர்பு கொண்டனர். அவரோ தான் சார்ந்த காஷ்மீர் மாநிலதிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்திற்காக சேவையாற்ற வேண்டியுள்ளது எனக் கூறி அவர்களின் கோரிக்கையை மறுத்துவிட்டார். 

இறுதியில் ஜுன் 21 அன்று டில்லியில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் சில கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர் (ஆனால் தெலுங்கானா ராஸ்டிர சமிதி, பீஜு ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் பங்கு பெறாமல் நிராகரித்துவிட்டது). இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஸ்வந்த் சின்காவை தேர்வு செய்து அறிவித்தனர்.

இதற்கு முன்னர் இத்தேர்தலில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக , பாஜக சார்பில் அதன் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் தொலைபேசி மூலம் பேசியதாக தெரியவருகிறது. மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதீஷ்குமார், பிஜு ஜனதாதளம் தலைவர் நவீன் பட்நாயக் ஆகிய தலைவர்களுடன் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆனாலும் பாஜகவின் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.ஆ கவே மத்தியில் ஆளும் பாஜகவும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டத் தொடங்கியது. எனவே வேட்பாளர் தேர்வுக்காக கடந்த ஜுன் 19 ல் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனை நடத்தினார். இதற்குப் பின்னர் ஜுன் 21 அன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் சந்தித்து ஆலோசனை செய்தனர். இதன் பின்னர் பாஜகவின் ஆட்சிமன்ற குழு கூட்டம் கூடியது. இதன் இறுதியில்  ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான திரவுபதி முர்மு என்பவரை குடியரசுத்தலைவர் வேட்பாளராக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்தார். ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும்,எதிர்க்கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில்  குடியரசுத்தலைவர் தேர்தல் களம் களைகட்டத் துவங்கிவிட்டது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தொடரும்...

கட்டுரையாளர்: திரு.A.காசிராஜன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved