🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ரெண்டு மாசமா பெட்ரோல், டீசல் விலை ஏறலைன்னு சந்தோசமா படுறீங்க!.... இருங்க வெச்சு செய்யறோம்!....

ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-வதுகூட்டம் சண்டீகரில் ஜூன் 28-29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்தவும், பொட்டலங்கள் (அ) வணிக பெயரில் அல்லாத பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பொருள்களுக்கு 5 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரிவிகிதம் உயர்த்தப்படும் பொருள்களும், வரி விகிதமும் பின்வருமாறு.

அச்சு மற்றும் எழுது பொருளுக்கான மை (Ink), வெட்டுபலகையுடன் கூடிய கத்தி, பென்சில் (pencil), ஷார்ப்னர் (Sharpener), பிளேடு (blade), கரண்டி, கேக் வெட்டும் கத்தி (knife), ஆழமான குழாய்-கிணறு ஆழ்துளை கிணற்றினுள் வைக்கும் பம்புகள், தண்ணீர் பம்புகள், சைக்கிள் பம்புகள், தூய்மைபடுத்தும் இயந்திரங்களுக்கான வரியானது 12 % -ல் இருந்து 18 %-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

முட்டைகளை வரிசைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், பழங்கள் அல்லது பிற விவசாயப் பொருட்கள் மற்றும் அதன் பாகங்கள் பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் பால் இயந்திரங்களை சுத்தம் செய்வதற்கான இயந்திரங்கள், எல்இடி விளக்குகள், விளக்குகள் மற்றும் சாதனங்கள், அவற்றின் உலோக அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகை; வரைதல் மற்றும் குறிப்பதற்கான கருவிகள் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12%-ல் இருந்து 18%-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விதைகள், தானியங்கள் ஆகியவற்றை தூய்மைபடுத்தும் இயந்திரங்கள், தரம் பிரிப்பதற்கான இயந்திரங்கள், அரைக்கும் தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள் (Grinders), சூரிய சக்தியால் இயங்கும் வாட்டர் ஹீட்டர் (Water heater), தயாரித்து முடிக்கப்பட்ட தோல்கள் பொருட்கள் ஆகிய பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தோல் பதப்படுத்துதல், தோல் பொருட்கள் மற்றும் காலணி உற்பத்தி, செங்கல் உற்பத்தி தொடர்பான பணிகளுக்கான சேவை வரியானது 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.

சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ (Metro), கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு போன்றவற்றுக்கான பணி ஒப்பந்தம். மத்திய மற்றும் மாநில அரசுகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், கால்வாய்கள், அணைகள், பைப்லைன்கள், நீர் விநியோகத்திற்கான ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கான உள்ளாட்சி மற்றும் அதன் துணை ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒப்பந்தம் ஆகிய பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எலும்பியல் சாதனம்- பிளவுகள் மற்றும் பிற எலும்பு முறிவு உபகரணங்கள், உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடு அல்லது இயலாமைக்கு ஈடுசெய்ய, அணிந்திருக்கும் அல்லது எடுத்துச் செல்லப்படும் அல்லது உடலில் பொருத்தப்படும் பிற உபகரணங்கள், உள்விழி லென்ஸ் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் மீத்தேனுக்கான (Methane) வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வெட்டி மெருகூட்டப்பட்ட வைரங்களுக்கான வரியானது 0.25 சதவிகிதத்தில் இருந்து 1.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு படைக்காக வாங்கப்படும் உபகரணங்களுக்கு ஐஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சரக்கு மற்றும் பயணிகள் பயன்படுத்தும் ரோப்வே போக்குவரத்துக்கான சேவை வரியானது 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.

பேக் செய்யப்படாத, லேபிளிடப்படாத மற்றும் முத்திரையிடப்படாத பொருட்களுக்கு தொடர்ந்து ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்று சில மருத்துவ பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளன.

பால், தயிர், பனீர் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகள், அரிசி, கோதுமை போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவற்றுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவாக வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு 12% வரி வசூலிக்கப்படும்.

ரூ.5000க்கு மேல் வாடகை வசூலிக்கும் மருத்துவமனை (ICU அல்லாத) அறைகளுக்கு ஐடிசி இல்லாமல் 5 சதவிகிதம் வரி விதிக்கபப்படும்.

தனியாகவோ அல்லது மொத்தமாகவோ வங்கிகளால் வழங்கப்படும் காசோலைகளுக்கு (Cheques) 18 சதவீத வரி விதிக்கப்படும்.

வரி இல்லாமல் இருந்த மேப்கள், அட்லஸ், க்ளோப் உள்ளிட்ட அச்சடிக்கப்பட்ட எல்லா வகை மேப்களுக்கும் இனி 12 சதவீத வரி விதிக்கப்படும்.

அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளதால் இனி அஞ்சல சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

பொட்டலங்களில் (அ) பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு, பொரி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது பொதுமக்களையும் சிறு வணிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதற்கட்டமாக 5 சதவீதம் விதிக்கப்பட்ட வரிவிதிப்பு படிப்படியாக அது 18 சதவீதத்தை எட்டும் என்ற அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. 

இதுதவிர தற்பொழுது வரி உயர்த்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களாக உள்ளது. ஒருசில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருப்பது பொதுமக்களுக்கு ஆறுதலாக இருந்தநிலையில், வேறு வழியில் அரசு தனது சுரண்டலை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதேபோல் நூல்விலை ஏற்றத்தால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களும், கோவையிலுள்ள பஞ்சாலைகளும் கடும் இழப்பும், வேலை இழப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தை கொஞ்சம் உயிர்ப்புடன் வைத்திருந்த வெட்கிரைண்டர், மோட்டார் பம்புகள், பால்பண்ணை இயந்திரங்களுக்கான வரி உயர்த்தப்பட்டிருப்பது உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் 2022 ஜூலை மாதம் 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வரி விதிப்பினால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பதிக்கப்படுவார்கள். இதனால் இந்த வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறித்து வணிக சங்க பேரவையின் மாநில கூடுதல் செயலாளர் கூறும்போது, ”தமிழ்நாடு பொது விற்பனைச் சட்டம் இருக்கும்போது, அதைப் பற்றிய புரிதலும் எங்களுக்கு எளிமையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து மதிப்புக் கூட்டு வரியாக அது மாற்றப்பட்டது. வணிகர்கள் இதனை எளிதில் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தோம். ஆனால் அதனை கற்றுக்கொள்வதற்கே எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்த வரிகளை பற்றிய புரிதல் வந்த பிறகு, ‘அந்த வரி சட்டங்களில் ஓட்டை உள்ளது. இனி தவறே நடக்காது’ என்று ஜிஎஸ்டியை மத்திய அரசு அமல்படுத்தியது. ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோது வணிகர்கள் யாருமே தவறு செய்ய முடியாது என்று கூறினார்கள். ஜிஎஸ்டியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனே இன்று கூறியிருக்கிறார். இந்த வரி உயர்வு முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில்தான் எடுக்கிறதா அல்லது மத்திய அரசு எடுக்கிறதா புரியவில்லை என்று அவர் கேட்கிறார்.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு இன்றும் எங்கள் வணிகத் தகவல்களை ஜிஎஸ்டி இணையப் பக்கத்தில் பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. அதிகாரிகளுக்கும் இதுகுறித்த புரிதல் இல்லை. இவ்வாறு ஐந்து ஆண்டுகளாக படித்தவர்களால் கூட பின்பற்ற முடியாத நிலையில்தான் ஜிஎஸ்டி உள்ளது.

ஜிஎஸ்டினால் வணிகர்களுக்கும் பயன் இல்லை, மாநில அரசுக்கும் பயனில்லை, பொதுமக்களுக்கும் பயனில்லை. ஆகவே ஜிஎஸ்டி போன்ற குழப்பான வரி விதிப்பு முறை நமது இந்திய தேசத்திற்கு ஒத்து வராது. கிட்டதட்ட 98 முறை ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைத்திருக்கிறார்கள். இதிலிருந்து அவர்களே புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்தச் சூழலில் சண்டீகரில் நடந்த 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ளது. அரிசிக்கு கூட வரி விதித்திருக்கிறார்கள். நல்ல தரமான பொருட்களை கொடு என்று கூறிவிட்டு, அவ்வாறு கொடுத்தால் அதற்கும் 5% வரி விதித்திருக்கிறார்கள் என்றால், இதில் என்ன நியாயம் இருக்கிறது?

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா காரணமாக ஏற்கெனவே பலர் தொழில் வணிகத்தில் சிரமத்தை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பினால் வணிகர்கள் தொழிலை விடும் சூழலில் உள்ளனர். வணிகர்கள் லாபம் வராத சூழலில், நாங்கள் அரசாங்கத்துக்கு சம்பாதித்துக் கொடுத்து கொண்டிருக்கிறோம். இதில் ஒரு பங்கை கூட நாங்கள் வீட்டுக்கு எடுத்து போவதில்லை. இவ்விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை.

ஜிஎஸ்டி வரியை கூட்ட கூட்ட, ஏமாற்றுதல்தான் அதிகம் நடக்கும். பில் போடாத சூழல்கள் உருவாகும். கையூட்டுகளும் தவறுகளும் ஏற்படும். அதிகாரிகளே பாதி பொருட்களுக்கு பில் போடு, பாதி பொருட்களுக்கு பில் போடாதே என்று கூறும் சூழல் ஏற்படும். வரியை எவ்வளவு எளிமையாக்குகிறீர்களோ, அவ்வளவு வெளிப்படத்தன்மை இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை இங்கு வரிகளை குறைத்து பொது மக்களின் வாங்கும் சக்தியைதான் அரசு அதிகரிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஜிஎஸ்டி வெற்றி பெறும். இந்த வரி விதிப்பினால் கடுமையாக பாதிக்கப்படப்போவது கடை நிலையில் உள்ள பொதுமக்கள்தான்” என்றார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த (48-வது) கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுதாவது நிவாரணம் ஏதேனும் கிடைக்க வாய்ப்புல்லதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

கட்டுரையாளர்: ஈச்சனாரி.G.மகாலிங்கம்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved