🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - ஈச்சனாரி. திரு.G.மகாலிங்கம்

ஈச்சனாரி.திரு.G.மகாலிங்கம் அவர்கள், 1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி, கோவை மாவட்டம், குறிச்சி அருகேயுள்ள, ஈச்சனாரி கிராமத்தில் திரு.கணேஷ் நாயக்கர் – திருமதி. நாகம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு மூத்த சகோதரிகளும், ஒரு இளைய சகோதர, சகோதரியும் உள்ளனர். ஈச்சனாரி அருகேயுள்ள மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் இறுதி ஆண்டு வரை படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி. M.ராஜேஸ்வரி என்ற மனைவியும், M.பிரகாஷ்.B.E., என்ற மகனும், M.லலிதாம்பிகை. M.Com, என்ற மகளும் உள்ளனர். 

பள்ளிக்காலம் தொட்டே சமூகப்பணி மற்றும் அரசியல் பணிகளில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டார். கோவை, ஈச்சனாரி அருகேயுள்ள புகழ்பெற்ற  பி.பி.பி எனும் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றியவர், திமுக தொழிற்சங்க தலைவராக தொடர்ந்து 15 ஆண்டுகள் செயல்பட்டார்கலைஞருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் எல்லோரையும் ஈர்த்ததுபோல் இவரையும் ஈர்த்தது வியப்பொன்றும் இல்லை. இதனால் சிறுவயது முதலே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். சிறந்த தொழிற்சங்கவாதியும், பண்பாளருமான மேனாள் பேரூர் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த மக்கள் தொண்டன் ஆ. நடராசன் அவர்களை அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, அவருடன் இணைந்து கட்சி அறிவிக்கும் பல்வேறு போராட்டங்களிலும், கட்சிப்பணிகளிலும் ஈடுபட்டார்.

இவரின் அரசியல் பணி, சமுதாயப் பணியை எவ்வித்திலும் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டார். இயல்பாகவே சமுதாயத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளவர். ஆதலால், கலைஞர் முதல்வராக இருந்தபொழுது, கம்பளத்தார் இனத்தின் முகவரியாம்,மாமன்னன், விடுதலைப் போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட மாவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் சிதிலமடைந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை, புதிதாக கட்டி கொடுத்து தலைவர் கலைஞர் மீது கொண்டிருந்த தீராத பற்றிற்கு மேலும் வலுவூட்டியது. அரசியலில் ஆர்வத்துடன் செயல்பட்ட பொழுதும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மிகவும் பின்தங்கியிருக்கும் சமுதாய மக்களுக்கு கடமையாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டபொழுது,  80களில் இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவர் (ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி) மறைந்த திரு.ஜெயராஜ் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற திரு.நல்லய்யா ஆகியோருடன்  இணைந்து தீவிரமாக பணியாற்றினார்.


திரு. ஜெயராஜ் அவர்கள் மறைவிற்குப்பின், இராஜகம்பள மகாஜன சங்க செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைக் களம் என்ற ஒரு அமைப்பைத் துவங்கி, நாமக்கல் திரு. கொ. நாகராஜ் அவர்களை தலைவராகவும், திரு.க.மகாலிங்கம் அவர்கள் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று தீவிர சமுதாயப்பணியை தொடர்ந்தார். தான் பொதுச்செயலாளராக இருந்த காலகட்டத்தில் இராஜகம்பள சமுதாயத்தினரை ஒன்று திரட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, ராசிபுரம், நாமக்கல், கோவில்பட்டி, திண்டுக்கல் என பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி,இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டி,அவர்களின் பார்வையை சமுதாயத்தின்பால்  திருப்பினார். மேலும் 2006-ஆம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற சமுதாயத்தினரை, தமிழகம் முழுவதிலிமிருந்து அழைத்துவந்து, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வரதராஜன் தலைமையில் மாபெரும் பாராட்டுவிழாக் கூட்டம் நடத்தி, விடுதலைக்களத்தின் வீச்சை அரசியல் இயக்கங்களுக்கும், அரசுக்கும் பறைசாற்றினார். அதைத்தொடர்ந்து, கோவையில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு  சிலை அமைக்க வேண்டும் என்ற இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டவர், கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல லட்சம் மதிப்புடைய தன் சொந்த நிலத்தை தானமாக வழங்கி, மாவீரனின் முழு உருவ சிலையை நிறுவி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், மேனாள் மத்திய அமைச்சர். திரு.மு.கண்ணப்பன், பொங்களூர்.திரு.நா.பழன்சாமி, திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் போன்ற அமைச்சர் பெருமக்களையும், சமுதாய தலைவர்களையும் அழைத்து வந்து, மாபெரும் மாநாட்டின் மூலம் சிலை திறப்பு விழாவை நடத்தி, இளைஞர்களின் கனவை நனவாக்கினார். மேலும், விடுதலைக்களத்தின் பொதுச்செயலாளாராக, சமுதாய இளைய தலைமுறையினரின் தீவிர செயல்பாட்டை கண்காணித்து,அவர்களை ஊக்குவித்து, பொதுவாழ்வில் அவர்களுக்கு வழிக்காட்டி, பல இளம் தலைவர்களை இச்சமுதாயத்திற்கு உருவாக்கித்தந்துள்ளார் என்பது இதுவரை யாரும் செய்ய முன்வராதது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அடியோற்றி சமுதாயப்பணியும்,அரசியலும் பயின்ற பலரும் குறிப்பாக, குள்ளக்கா பாளையம் திரு.கே.டி.மோகன்ராஜ், போளியம்பட்டி திரு,குணசேகர், தாமரைக்குளம் திரு.குமரேசன், ஈச்சனாரி திரு.R.A.கணேசன் மற்றும் ஈச்சனாரி புயல்குமார் என்ற சிவக்குமார் போன்றவர்கள், இன்று பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள், உள்ளாட்சி மன்றங்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றில்  பல்வேறு பொறுப்பு வைப்பது, இளைஞர்களை பொதுவாழ்வில் எப்படி வார்ப்பிக்க வேண்டும் என்று இன்றைய அரசியல் தலைவர்களுக்கும், சமுதாயத் தலைவர்களுக்கும் ஒரு முன்மாதிரி என்றால் மிகையல்ல.


இயக்க அரசியலிலிருந்து மீண்டும் கட்சி அரசியலில் பங்கெடுத்தவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம், குறிச்சி நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்றவரை, 2016-ல் கோவை மாநகராட்சியின் 100 டிவிசன், திமுக வேட்பாளராக அறிவித்தது. அத்தேர்தல் தள்ளிப்போகவே, இராஜகம்பள சமுதாயம் ஒரு சிறப்பான மாமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்க வேண்டியது தவறியதில் சமுதாயத்திற்கு பேரிழப்பே. கடந்த 10 ஆண்டுகளாக கோவை மாநகர 100 ஆவது டிவிசன் செயலாளராகப் பணியாற்றி வரும் திரு.க.மகாலிங்கம் அவர்களின் சமூகப்பணியை பாராட்டி, 2020-ஜனவரித் திங்களில் ,எழுத்தாளர் குழுமம் சார்பில் “மக்கள் பணிச் செல்வர்” என்ற விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விருது தான் தொடர்ந்து சமூகப்பணியாற்றுவதற்கு ஊக்கமாக இருக்கும் என்கிறார் திரு.க.மகாலிங்கம்.

திரு.மகாலிங்கம் அவர்கள் கட்சிப்பணியில் தீவிரமாக களமாடினாலும், சமுதாயத்தின் மீதான காதல் என்றும் மாறாதது, மறையாதது என்பதற்கு   சில நிகழ்வுகளை நினைவு கூறுகின்றனர் அவரிடம் அரசியல் பயின்ற மாணவர்கள். சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலசங்கம் சார்பில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு, அந்த அமைப்பின் சார்பில் திரு.மகாலிங்கம் அவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என்ற போதிலும், சமூக ஊடகங்களில் செய்தியை பார்த்தவர், தன் சொந்த செலவில் ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து, கோவை மாவட்டத்தை சேர்ந்த பல கிராமங்களிலிருந்து சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை  அழைத்துக்கொண்டு விழாவிற்கு வந்திருந்து, கடைசி வரிசையில் அமர்ந்து நிர்வாகிகளை ஊக்கப்படுத்தியது, அந்த அமைப்பினருக்கே நெகிழ்ச்சியைத் தந்தாக குறிப்பிட்டவர், தன் அடியோற்றிவரும் சமுதாய இளைஞர்களை, தான் சார்ந்த கட்சிக்கு அழைக்காமல், அவர்கள் விரும்பும் கட்சியில் சேர்ந்து பணியாற்றுவதற்கு அனுமதிப்பதுடன், அவ்வப்பொழுது அவர்களின் வளர்ச்சிக்கும் ஆலோசனை வழங்குவது, மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு என்ற கருத்தை அவர்கள் முன்வைக்கின்றனர். திரு.மகாலிங்கம் அவர்கள் மேன்மேலும் பல தலைவர்களை சமுதாயத்திற்கு வழங்கி,வருங்காலத்தலைமுறை பாதுகாப்பான அரசியல் சூழலில் வாழ அடித்தளம் அமைத்து, தன் அரசியல் பயணத்தில் தொடர் வெற்றிகளை குவிக்க வாழ்த்திகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved