இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர்! - திருமதி.ஜெயா செல்லதுரை
திருமதி.ஜெயா செல்லத்துரை (48) அவர்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில், திரு&திருமதி செல்வராஜ் தம்பதிகளுக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப்பிறந்தார். தொடக்கக்கல்வி வரை பயின்றவர், திரு.செல்லத்துரை அவர்களை மணமுடித்துள்ளார்.
T.செல்லத்துரை (55) அவர்கள் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த திரு.தாசில் நாயக்கர் - திருமதி. வேலம்மாள் தம்பதிகளுக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தவர். செல்லத்துரை-ஜெயா தம்பதிகளுக்கு C.வசந்தன் என்ற மகனும் C.ரம்யா என்ற மகளும் உள்ளனர்.
செல்லத்துரை அவர்களின் தாய்மாமன் திரு.தங்கராஜ் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைச் செயலாளராக இருந்தவர்.1980-இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் கம்பம்.என்.நடராஜன் மறைவையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்ய வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் சுற்றுப்பயணத்தில் மாமாவோடு இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியதிலிருந்து அரசியலை தொடங்குகிறார் செல்லத்துரை. இதனையடுத்து வயது மூப்பின் காரணமாக, 1989-இல் மாமாவிடமிருந்து கிளைக்கழக செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். மேலும், 1990-96 வரை ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 2015-இல் ஆண்டிப்பட்டி ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
1989-இல் திமுகழகம் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததைத் தொடர்ந்து, அன்றைய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆசை அவர்களின் ஆதரவோடு கூட்டுறவு நிலவள வங்கியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுகிறார் செல்லத்துரை. 22-வயதில் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டதின் மூலம் மீண்டும் அதே பதவிக்கு 1996-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித்தேர்தலில் ஆண்டிப்பட்டி 19-வது வார்டு மாவட்டக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுகழக வேட்பாளராக போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து 2016-இல் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் தேர்தல் ரத்தானதைத் தொடர்ந்து, 2019-இல் நடைபெற்ற தேர்தலில் ஆண்டிப்பட்டி 19- வார்டில் துணைவியார் ஜெயா அவர்களை களமிறக்கி வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், 2022-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் ஜெயா அவர்களை உதயசூரியன் சின்னத்தில் களமிறக்கி வெற்றிபெற வைத்துள்ளார் செல்லத்துரை.
கட்சியின் தீவிர செயல்பாட்டாளரான செல்லத்துரை, கட்சி அறிவிக்கும் போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார். 1996-இல் கலைஞர் கைதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியலில் நீண்ட அனுபவமுள்ள செல்லத்துரை அவர்களின் ஆதரவோடு ஒன்றியக்குழு உறுப்பினராக ஜெயா அவர்கள், சாதி, மதம், இன,மொழி கடந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.