🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மணிமகுடம் யாருக்கு? இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்-சிறப்புப்பார்வை- 3

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்: (சிறப்புப்பார்வை- 3)

உலக அரங்கில் உள்ள ஜனநாயக நாடுகளின் முன்னோடியாகத் திகழும் இந்தியாவில், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் அவர்களின் பதவிக் காலம் ஜுலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது .எனவே அதற்குள் அரசியலமைப்பின் சாசனப்படி தேர்தல் மூலம் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், ஜுலை 18 ல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் ஜுன் 29 அன்றே நிறைவடைந்துவிட்டது.

குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் தேர்வில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பிலும் விருவிருப்பான பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. இறுதியில் ஜுன் 21 அன்றே இரண்டு தரப்பிலும் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. அதில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு என்பவர் கடந்த ஜுன் 24 அன்று வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். அப்பொழுது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா,அதிமுகவின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், 16 வது நாடாளுமன்ற மக்கள் அவையின் முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் பாஜக ஆளும் சில மாநில முதலமைச்சர்களும் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக  பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை திரவுபதி முர்மு நேரடியாக சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். அதேபோல் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு கோரியதாக செய்திகள் தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் தரப்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்கா கடந்த ஜுன் 27 அன்று வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இவருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, சவுகதா ராய், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தெலுங்கானா ராஸ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் மகன் கே.டி. ராமாராவ் மற்றும் ராஷ்டீரிய லோக்தளம், ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியினர் போன்றோர் கலந்து கொண்டனர். இதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெறாமல் இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்த முக்கிய கட்சியான "சிபு சோரனின் " ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா இதில் கலந்து கொள்ளாதது கவனிக்கப் படவேண்டி உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் யஸ்வந்த் சின்கா தனக்கு ஆதரவு கோரியதாக தெரியவருகிறது.

குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா தவிர சுயோட்சைகளாக பலரும்  வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனா ல் ஜுன் 30 ல் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் தகுதி பெறாத பெரும்பாலானோரின் மனுக்கள், தேர்தல் அதிகாரியால்  நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளான ஜுலை 2 அன்று மாலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி திராவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா ஆகிய இருவரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், இந்த இருவரிடையே நேரடிப்போட்டி என்பது உறுதியாகி உ ள்ளது.

இவர்களில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு ஒடிசா மாநில பழங்குடி இன வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். இதன் மூலம் இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பழங்குடி இன வகுப்பைச் சேர்ந்த  முதல் பெண் வேட்பாளர் என்ற சிறப்பை பெற்றவர் ஆகிறார். அகவை 64 ஐ எட்டியிருக்கக்கூடிய இவரின் சொந்த ஊர் ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சா மாவட்டத்தில் உள்ள ராய்ரங்பூர் ஆகும். ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் மூலம் பல்வேறு கட்சி தலைவர்களையும் நேரிடையாக சந்தித்து ஆதரவு கோர உள்ளார். அவரது பயணத்திட்டப்படி ஜுலை 2 அன்று தென் மாநிலங்கலான புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார். முதலில் புதுச்சேரிக்குச் சென்றவர், அங்குள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவரும்,அம் மாநிலத்தின் முதலமைச்சருமான ரெங்கசாமி மற்றும் பாஜக தலைவர்களிடம் ஆதரவு கேட்டு உரையாற்றினார். பின்னர் தமிழகம் வருகை தந்தவர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் அதிமுக தலைவர்களான முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவின் முன்னணியினரிடமும், கூட்டணி தலைவர்களிடமும் ஆதரவு வேண்டி உரையாற்றினார். அப்பொழுது அவருடன் மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னணியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் எதிர்க்கட்சிகளின் தரப்பில் போட்டியிடுகின்ற 84 வயதுடைய வேட்பாளர் யஷ்வந்த் சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக  பணியாற்றிய இவர் 1984 ல் தமது பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் களத்திற்கு வருகை தந்தார். முதலில் ஜனதா, ஜனாதாதளம் கட்சிகளில் பொதுச்செயலாளர் ஆகவும், பின்னர் பாஜகவில் செய்தி தொடர்பாளராகவும் இருந்தவர், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து துணை தலைவராக பணியாற்றி வந்தார். குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதியான நிலையில், அறிவிப்பு வெளியாகிய  ஜுன் 21 காலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மேலும் இவர் சந்திரசேகர் பிரதமராக இருந்தபொழுது, மத்திய நிதியமைச்சர் ஆகவும், அடுத்து வந்த வாஜ்பாய் ஆட்சியில் நிதி மற்றும் வெளியுறவு மந்திரியாகவும் பணியாற்றியவர்.  அனல் பறக்கும் ஜனாதிபதி தேர்தலில்  தனக்கு ஆதரவு கேட்டு  பயணத் திட்டத்துடன் இவரும்  களத்தில் இறங்கிவிட்டார். குறிப்பாக தென் மாநிலங்களான கேரளாவில் தொடங்கிய மறுநாளான ஜுன் 30 ல் தமிழகம் வந்தவர், திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஆதரவு கோரிப் பேசினார். இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக முன்னணியினர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜுலை 2 அன்று தெலுங்கானா மாநிலம் சென்று தெலுங்கானா ராஷ்டிரா சமிதி தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் மற்றும் கூட்டணி தலைவர்களிடமும் ஹைதராபாத்தில் ஆதரவு கோரினார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

 தொடரும்....

கட்டுரையாளர்: திரு.A.காசிராஜன்.M.A.,

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved