🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தகுதியை மரபணுவில் தேடாதே! - இடஒதுக்கீடு பூர்வகுடிகளின் உரிமை!

இட ஒதுக்கீடு என்பது ஒரு சமமற்ற பார்வை. அனைவரும் பெறும்  மதிப்பெண்களை வைத்து, அவர்களின் புத்திசாலித்தனத்தை அளந்து, அதன் அடிப்படையிலேயே கல்வி வாய்ப்பையும், வேலை வாய்ப்பையும் பெறவேண்டும் என்பதே இங்கு பலரின் கருத்தாகவும், கோரிக்கையாகவும் இருக்கின்றது. சரி ஒத்துக்கொள்ளலாம். எப்போது?, நமக்கு சமூகத்தை பற்றியோ, வரலாற்றை பற்றியோ தட்டையான அறிவிருந்தால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளலாம்.

எந்த நாட்டிலும் இல்லாத ஒரு விசித்திரமான சமூக அமைப்பு நம் நாட்டில் உண்டு. அனைத்து நாடுகளிலும் ஒருவனது திறமை வசதி வாய்ப்பை வைத்து சமூக கட்டமைப்பென்று ஒன்று உருவாகி இருக்கின்றது. ஆனால் நம் நாட்டில் மட்டும் சாதிய படிநிலை கட்டமைப்பில் சுமார் இரண்டாயிரம் வருடங்களாக சமூகம் உருவாகி இருக்கிறது. அதில் ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய குடியமைப்புகள் மட்டுமன்றி, இன்னார் இந்த தொழில் தான் செய்ய வேண்டும் என்பது, கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்தது. வெளிநாடுகளில் ஒருவன் இரும்பை அடித்து தொழில் நடத்துகிறான் என்றால் அது அவன், அறிவின், திறமையின் அடிப்படையில். ஆனால் நம் நாட்டில் அது சாதியின் அடிப்படையிலேயே இருக்கும். சற்று யோசித்து பாருங்கள், இரண்டாயிரம் வருடங்களாக நம் முன்னோர்கள் செய்த தொழில் நம் மரபணுக்களில் ஒரு அங்கமாகவே மாறியிருக்கும் இல்லையா? 

உதாரணத்துக்கு மீன் பிடிப்பவனுக்கு இயல்பாகவே நீச்சல் வரலாம், கடல் எப்போது, எப்படி இருக்கும் என்பது அவன் உள்ளுணர்விலேயே படிந்து இருக்கலாம். ஒரு பனையேறிக்கு இயல்பாகவே மரத்தை பிடித்து ஏறுதலுக்கு ஏற்ப, உள்ளங்கைகள் அகண்டு, கால்கள் வளைந்து இருக்கலாம். அதை போலவே காலம்காலமாக விவசாயம் செய்வனுக்கு, தச்சு வேலை செய்பவனுக்கு, நகை ஆசாரிக்கு, வியாபாரம் செய்பவனுக்கு, கடல்கடப்பவனுக்கு, கால்நடைகள் வளர்ப்பவனுக்கு என அனைவருக்கும் இந்த இரண்டாயிரம் வருடங்களாக பிரத்யோக குணங்களும், உடல் அமைப்புகளும், அந்தந்த தொழிற்சார்ந்த உள்ளுணர்வுகளும் இருக்கும் இல்லையா? மேலும் இவர்கள் அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டிருக்குமா?, எழுதப்படிக்க தெரிந்திருக்குமா? என்பது சந்தேகம் தான். 

ஆனால், சுதந்திரத்துக்கு பின், சட்டங்கள் மாற்றப்பட்டு அனைவருக்கும் கல்வி என்பதாக ஒரு சட்டம் உருவாகியது. முடிந்தவர்கள் படிக்கத் தொடங்கினார்கள். ஆனாலும் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் இருந்தன, இன்னும் இருக்கின்றன. காரணம், இங்கு நாம் பின்பற்றும் படிப்பு முறை. நம்முடைய கல்விமுறை என்பது, மனப்பாடமுறை, தரவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ளுதல், கணக்கு போடுதல் மற்றும் மொழிகளை கற்றல் இவற்றின் அடிப்படையிலேயே தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இது ஒரு சரியான படிப்பு முறையா? மதிப்பீட்டு முறையா? அனைத்து மாணவர்களையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பீடு செய்வது சரியா? என்றால் நம் நாட்டுக்கு இது போன்ற கல்விமுறை பொருந்தாது.

இந்த மனப்பாடம் செய்து, தரவுகளை நினைவில் வைத்துக்கொள்ளும் கல்விமுறை யாருக்கு சரியாக இருக்குமென்றால், இரண்டாயிரம் வருடங்களாக மந்திரங்களை மனப்பாடம் செய்து, புதிய வார்த்தைகளை நினைவு வைத்துக்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டு, அவன் மரபணுக்களிலேயே ஞாபகசக்தி என்பது ஒரு அங்கமாக இருப்பவனுக்கு மட்டுமே இது சரியான கல்வி முறை. நமக்கே தெரியும் அவர்கள் எந்த குலமென்று. பனையேறிக்கோ ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பவனுக்கோ கண்டிப்பாக இயல்பாக இந்த ஞாபக அறிவு வருவதில்லை. அவன் மரபுவிதியின் படி, அவன் சிறிய வயதில் இயல்பாகவே தொழுவத்தில் இருக்கும் மாட்டுடன் விளையாடிக்கொண்டிருப்பான் அல்லது மரத்தின் மீது ஏறி மாங்காய் பறித்துபோட்டுக்கொண்டிருப்பான். அவனுக்கு படித்தல் பற்றிய புரிதல் வர சிலவருடங்கள் ஆகலாம். அதற்காக அவனுக்கு அறிவில்லை என்பது அர்த்தமில்லை. 

பத்தாம் வகுப்பு முடித்தபின்பு மட்டுமே அவனுக்கு எதன் மீது ஆர்வம் பற்று என்பது தெரியவரும். ஆக, நம் கல்விமுறையின்படி, இது போன்றவர்களுக்கு, கல்வியில் ஆர்வம் வரவே பத்தாண்டுகள் ஆகிவிடும். அவன் அதன் பின் கற்று, தேறி ஒரு மருத்துவனாகவோ, பொறியாளராகவோ, விமான பைலட்டாகவோ ஆவதற்கு அவகாசம் அளிக்கவேண்டும். அவர்களால் தேர்ந்த தொழிற்பண்பட்டவர்க்ளாக ஆகமுடியும். அதனடிப்படையில் உருவாக்கபட்டது தான் இடஒதுக்கீடும், பள்ளி தேர்வு முறைகளும். 

இடஒதுக்கீடு கூடாது என்று கூவும் மக்களுக்கு, ஒன்று இவர்கள் படிப்பை முளையிலேயே கிள்ளவேண்டும் என்ற தீய எண்ணமோ, அல்லது இதை பற்றிய சரியான புரிதல்களோ இல்லாமலிருத்தல் வேண்டும். இன்றைய புதிய கல்வி கொள்கை திட்டம் பெரும்பான்மையானோரின் கல்வியை முளையிலேயே கிள்ளத் தான் திட்டம் போட்டு இருக்கிறது. அவர்கள் வைக்கும் வடிகட்டிகள் பல அடுக்குகள் கொண்டது. முதல் வடிகட்டி ஐந்தாம் வகுப்பில் பொது  தேர்வு, மாட்டுடன் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை பெயிலாகும் போது தனக்கு படிப்பு வராது என்று நம்பத்தொடங்கி இருக்கும். அப்படியும் பாசாகும் குழந்தைக்கு எட்டாம் வகுப்பு தேர்வு. அப்போது விடலை பருவத்தில்  பலவித மனக்கோளாறுகளுடன், குடும்ப சூழ்நிலை காரணமாகவும்  படிப்பின் முக்கியத்துவம் தெரியாமலும்  பெயிலாகும் வாய்ப்புகள் அதிகம். அப்போது, “உனக்கெல்லாம் படிப்பு வராது, பள்ளியிலேயே ஏதாவது தொழில் கல்வி கற்றுக்கொள்”, என்று நயவஞ்சக நரித்தனத்துடன் இளித்துக்கொண்டே புதியகல்விக்கொள்கை அந்த சிறுவனை வலியுறுத்துகிறது. 

அதிலும் தப்பிப்பவனை பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகியவற்றில் தேர்வு வைத்து வடிகட்டுகிறது. இதிலும் தேறுபவர்களை, விடாது படையெடுத்த கஜினி முகமதை போல கல்லூரி படிப்புகளுக்கு நுழைவு தேர்வொன்றை வைத்து இவர்கள் கல்லூரி படிப்புகளுக்கு மொத்தமாக மங்களம் பாடுகிறது புதிய கல்விக்கொள்கை. பள்ளி தேர்வுக்கான பாடங்களையும்  நுழைவு தேர்வுக்கும் சேர்த்து ஒன்றாக எத்தனை பேருக்கு படிக்க முடியும். எத்தனை பெரிய மன அழுத்தம் மாணவர்களுக்கு, எத்தனை பெரிய அநீதி அந்த சிறுவர்களுக்கு? படிப்பே வேண்டாம் என்று முடிவெடுத்துவிடுவார்கள். இது தானே வேண்டும் இவர்களுக்கு!

“ஏன் இவர்களுக்கு அறிவிருந்தா எட்டாம் கிளாஸ் பாஸ் பண்ண மாட்டாங்களா? பத்தாங்கிளாஸ், பண்ணண்டாங்கிளாஸ், பாஸ் பண்ண மாட்டாங்களா?” என்று கூவும் அறிவாளிகளுக்கு, கூறிக்கொள்வது என்னவென்றால் மனப்பாட அறிவை மட்டுமே பெரும்பான்மையாக பள்ளி கூடங்களில் வைத்திருக்கும் இந்த கல்வி முறைக்கு தான் அறிவில்லை. அவர்களுக்கு அறிவு இருக்கிறது. அவர்களின் ஒரு தலைமுறைக்கு மதிய உணவு இட்டு கல்வியை இலவசமாக, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கி பாருங்கள், அடுத்தடுத்த தலைமுறை சுதாரித்துக்கொள்ளும். இஸ்ரோ விஞ்ஞானியாகவோ, ஐஏஸ் ஐபிஎஸ் ஆகவோ ஏன் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ கூட வரலாம். காலம்காலமாக படிக்கக்கூடாது என்று கல்விமறுக்கபட்ட இனங்களுக்கு இதுவே தீர்வு. இல்லையென்றால் உங்கள் கல்வி தேர்வு முறையை மாற்றிக்கொளுங்கள். பள்ளிதேர்வுகள் மற்றும்  நுழைவுதேர்வுகளில் உங்கள் மனப்பாட தேர்வுடன், ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பதையும், பனையேறுவதையும், மீன் பிடித்தலையும், நெல் விளைவிப்பதையும் தேர்வாக வையுங்கள். நாங்கள் இட ஒதுக்கீடு கேட்கவில்லை.

இதற்கும் முன்னுதாரனம் உண்டுதானே!. மருத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்மந்தம் இருந்தது?. மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்த காலம் ஒன்று இருந்தது தானே!. இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லும் இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த மனநிலை? இந்த சிந்தனையை தங்களிடம் உள்ள ஊடக பலத்தால் விதைத்தவர்கள் எந்த சட்டத்தையும் மதிக்காது 10 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுக்கொண்டனரே, அதுகுறித்து இந்த இடைநிலை சாதி அடிமைகள் பேசுவார்களா? இல்லை இன்னும் ஏன் ஐஐடி-க்களில் இடஒதுக்கீடு முறையே இதுவரை முழுமையாக பின்பற்றப்படாமல் உள்ளதே அதுகுறித்தாவது கேட்பாளர்களா? கண்டிப்பாக எதுவும் நடக்காது. ஏனெனில் இவர்கள் மூளையற்ற முண்டங்கள், சுய அறிவுகொண்டு சிந்திக்க திறனற்ற மனிதர்கள்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பெற சாதிவாரி கணக்கெடுப்பே அடிப்படை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நீதியே இந்தியாவை வல்லரசாக்கும் ஒரே வழி. ஆகஸ்டு 7-இல் மதுரையில் நடைபெறும் சமூகநீதி மாநாடு வல்லரசு இந்தியாவிற்கான அடித்தளம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved