🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

ஆசிரியர்கள் பணியாளர் தேர்வு வாரியம் (TRB) நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) 2020-21 ஆம் ஆண்டுக்காண முதுகலை உதவியாளர் (பிஜி அசிஸ்டன்ட்), உடற்கல்வி இயக்குநர்கள் கிரேட்-1,  கணினி பயிற்றுவிப்பாளர் கிரேட்-1 பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களில். தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1:2 விகிதத்தில் அழைப்பாணை அனுப்பியுள்ள தேர்வாணையம், இடஒதுக்கீடு வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதில் ஏகப்பட்ட குளறுபடிகளும், மோசடிகளும் அரங்கேறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் முறைப்படி "ரேங்க்" பட்டியலை வெளியிடாமல், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்திருப்பதும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்காமல், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக வன்னியர் 10.5%, எம்பிசி/டிஎன்சி 7%, எம்பிசி 2.5 % என்று பிரித்து பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த முடிவு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடை எதிர்த்து பெரும் பொருட்செலவில் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்தி 8/2021 சட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில், இச்சட்டப்படி கடந்தாண்டு அரசு பதவிகளில் அமர்த்தப்பட்டவர்களும், கல்லூரி சேர்க்கையும் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால  தீர்ப்பின் படி ரத்து செய்யப்பட்டுருக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை நடமுறைப்படுத்தியிருக்க வேண்டிய தமிழக அரசு, தற்பொழுது உச்சநீதிமன்ற தீர்ப்பையே   காலில் போட்டு மிதிக்கும் வகையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முனைவது, 115 சமூகங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு செய்யும் அநீதி ஆகும்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் இந்த மோசடிகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்கள் அங்கம் வகிக்கும் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 7-ஆம் தேதி சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சமூகநீதி மாநாடு நடத்தும்பொழுது, இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆனாலும் சில அமைப்புகள் இன்னும் சமூகநீதிக்கு ஆபத்து என்று பொதுமக்களை ஏமாற்றுகின்றனர் என்ற விஷமப்பிரச்சாரத்தை சமூக ஊடகங்களில் பரப்பினர். ஆனால் இடஒதுக்கீடு பிரச்சினை இன்னும் முற்றுப்பெற்றுவிடவில்லை என்பதனையே ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் முடிவுகள் காட்டுகின்றன. இதேபோல் கடந்த மே மாதம் தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையக்கூட்டத்தில் வன்னியர் இடஒதுக்கீடு சம்மந்தமாக விவாதம் நடைபெற இருந்ததை "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடையாணை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று அரசு நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சமூகங்கள் அவர்களுக்கு ஆதரவான முடிவினை செயல்படுத்த எந்த நேரத்திலும் முயற்சிக்கலாம் என்பதால், மாணவச் செல்வங்களும், சமுதாய மக்களும் இடஒதுக்கீடு மேல் என்றும் ஒரு எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். இதற்காக நீண்ட சட்டப்போராட்டத்திற்கு சமூகம் தயாராக வேண்டியுள்ளது. எனவே சமுதாய நலன் விரும்பிகளும், மாணவச் செல்வங்களும் சமூகநீதிக்காக போராடி வரும் அமைப்புகளுக்கு பொருளாதார ஆதரவையும், தார்மீக ஆதரவையும் தொடர்ந்து வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved