🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் – பகுதி 4

மெய்ஞானமும், விஞ்ஞானமும் – பகுதி 4

அன்புச் சொந்தங்களே வணக்கம்! சென்ற பகுதியில் நாம் சிந்தித்தது திருமூலர் எழுதிய திருமந்திரத்தின் முதல் பாடல். ஏன் எத்தனையோ சித்தர்கள், ஞானிகள் இருக்கையில் திருமூலர் எழுதிய திருமந்திரம் பற்றி நாம் பேச வேண்டும்? அவர் ஒருவர் மட்டுமே சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வருடம் ஒரு பாடல் வீதம் மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து மூவாயிரம் பாடல்களுக்கு மேல் இந்த பிரபஞ்சம் என்பது என்ன, எப்படி உருவானது, எதனடிப்படையில் இயங்குகிறது என்பதை தனது பாடல்கள் மூலம் உலகுக்கு தந்துள்ளார்.

மனிதனாக பிறந்த நாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பது மட்டுமல்லாமல், பிற உயிர்களிடத்து  நாம் எப்படி அன்பு செலுத்த வேண்டும், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள சூட்சுமங்கள் பற்றி சில நுட்பமான விஷயங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனுக்கும் சரியாக வாழ வழிகாட்டும் பைபிள் என்றால் அது திருமூலர் அருளிய திருமந்திரம் மட்டுமே. இதனை ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முடியும் முன்னர் ஒருமுறையாவது படித்து பயன்பெற வேண்டும். இந்த பிரபஞ்சம் கோடானுகோடி வின்மீன்களாலும், வளிமண்டலங்களாலும், அளவிடமுடியாத கோள்களாலும் ஆனது. அதில் பூமி பந்தானது ஒரு துகள் ( தூசு,a dust particle) மட்டுமே என மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தனது மெய்ஞானத்தால் கண்டு அருளிய விசயங்களை சுமார் முன்னூறு ஆண்டுகளே ஆன விஞ்ஞானம் தற்போது மெய்பித்துக்கொண்டுள்ளது.

சொந்தங்களே, இந்த பூமி பந்தே ஒரு தூசு தான் என்றால் இதில் நாம் கூறும் கண்டங்கள், நாடுகள், மனிதர்கள், மரங்கள், விலங்குகள், புல், பூண்டு, மலைகள், கடல்கள், ஆறுகள், நீங்கள் மற்றும் நான் எவ்வளவு சிறிது என்பதை  உணர்ந்து பாருங்கள்! வியப்பாக இருக்கிறது அல்லவா! அதுதான் உண்மை.

நான் என்பது மிக மிக மிக மிக…….. சிறியது. ஆக தனது ஒரே ஒரு பாடலால் நான், எனது என்ற கற்பனையை தகர்த்து எறிந்து விட்டார் அல்லவா? ஆக இந்த பிரபஞ்சம் என்பது எண்ணிலடங்கா அண்டங்கள், பேரண்டங்கள், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என கோடானுகோடி மண்டலங்கள், நட்சத்திரங்கள், வின் மீன்கள் மற்றும் கோள்களால் ஆனது என்ற உண்மையை, தனது மூவாயிரம் பாடல்கள் மூலம் உலகுக்கு தந்துள்ளார். விஞ்ஞானம் இந்த பிரபஞ்சம் பற்றி என்ன கூறுகிறது என்பதைப்பற்றி அடுத்த வாரம் காண்போம். தொடர்ந்து வாசியுங்கள், இன்னும் நிறைய அறிந்து கொள்ளலாம். வாழ்க வளமோடு!

அன்புடன் உங்கள்

Dr.கெ.நாகராஜன்.
இயற்பியல்துறை பேராசிரியர்,
பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி,
கோவை.

எனது பதிவுகளை ஆறாம் வகுப்பு முதல் அனுபவம் பெற்ற முதியவர்கள் வரை படித்து அறிந்து கொள்ளலாம். நீங்கள் கொடுக்கும் ஊக்கம் மட்டுமே என்னை மேலும் சிறப்பாக சிந்திக்க உதவும் அதன் மூலம் நிறைய கருத்துகளை பகிரவும் முடியும்.

நன்றி.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved