🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எடப்பாடியை துரத்தும் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்!

தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி க.பழனிச்சாமி அவர்கள், தமிழக அரசின் மக்கள் விரோதப்போக்கை (அக்கட்சி குறிப்பிட்டுள்ளபடி) கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று விருதுநகர் வருகை தருகிறார். இதனையடுத்து அவர் தென்மாவட்டங்களில் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு (MBC) ஒதுக்கப்பட்டுள்ள 20% இடஒதுக்கீட்டில் மறவர், வலையர், ஒட்டர், தொட்டியநாயக்கர் உள்ளிட்ட 115 சாதிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒரு சாதிக்கு (வன்னியர்) மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மறவர் நலக்கூட்டமைப்பு சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

முன்னதாக இச்சமூகங்கள் DNT ஒற்றைச்சான்றிதழ் வேண்டி 2014 முதல் போராடி வந்தநிலையில், ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு 2017-இல் ஆட்சி வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இம்மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத நிலையில், 2020-ஆகஸ்டு மாதம் மத்திய அரசு DNT மக்கள்தொகை புள்ளிவிபரங்களை திரட்டுவதற்காக நிதி ஒதுக்கி, தொடர்பு அதிகாரி (Nodal Officer) ஒருவரை மட்டும் மாநில அரசு சார்பில் நியமிக்க கடிதம் எழுதியிருந்தது. உடனே பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள், DNT மக்கள் புள்ளிவிபரங்கள் ஸேகரிப்புக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டவர், தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்தார். அதை உடனே ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சாதிவாரி புள்ளிவிபரம் திரட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். கண்துடைப்புக்காக அமைக்கப்பட்ட குலசேகரன் ஆணையம் பணிகளை துவங்க தனி அலுவலகமும் கொடுக்கப்படவில்லை , ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. இறுதிவரை அந்த ஆணையம் ஒருநாள் கூட செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட நாடகத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் குலசேகரன் ஆணையத்தின் முடிவுகள் வருவதற்கு முன்பே, கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைத்த  மருத்துர் இராமதாஸ் அவர்கள், வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையோடு, ரயில் மறியல் போராட்டத்தையும் அறிவித்தார். ஆளும் கட்சியும், பாமகவும் திட்டமிட்டு நடத்திய நாடகத்தில் சென்னை புறநகர் ரயில்கள் மீது கல்லெறியப்பட்டது. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காத எடப்பாடி அரசு, அடுத்த ஒருமணி நேரத்தில் அன்புமணி இராமதாசை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதனையடுத்து நடந்த சதியின் தொடர்ச்சியாக 2021-சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு அரை மணிநேரம் முன்பாக வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் 8/2021 சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, விவாதம்கூட நடத்தாமல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு அன்றைய ஆளுநரும் உடனடியாக ஒப்புதல் வழங்கி, 115 சமூகங்களுக்கு எதிரான சதியில் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

டிசம்பரில் இரயில் மறியல் போராட்டத்தையடுத்து வன்னியருக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படலாம் என்பதை தெரிந்துகொண்ட தொட்டிய நாயக்கர், மறவர், கள்ளர், முத்தரையர், போயர், வேட்டுவக்கவுண்டர் உள்ளிட்ட மிகவும் பிறபடுத்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த சாதியினர் நீதிமன்றத்தை நாடினர். அப்பொழுது நீதிமன்றம் சட்டம்வருமுன் ஏதும் செய்யமுடியாது என்ரு கைவிரித்து விட்டது. இதை சாதகமாக எடுத்துக்கொண்ட அதிமுக அரசு, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் வன்னியர் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய 115 சாதி தலைவர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் தணிக்காசலம், வன்னியர் இடஒதுக்கீடுக்கு பரிந்துரை செய்யும் முடுவு ஏதும் எடுக்கப்படவில்லை என்ற பொய்யை கூறி போராடியவர்களை அனுப்பி வைத்தார்.

இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் எடப்பாடியார் தலைமையிலான அரசால் ஏமாற்றப்பட்ட கள்ளர், மறவர், வேட்டுவக்கவுண்டர் உள்ளிட்ட சமூகத்தினர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-விற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தென்மாவட்டங்களில் மிகுந்த பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தால், அன்றைய துணைமுதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வெற்றிபெறுவதே பெரும்பாடாய் போனது. இதன்பிறகு பல இடங்களில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் தன் சொந்த சாதிக்கு எதிராகவே செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதிற்கு வருத்தம் தெரிவித்தார்.

இறுதியில் உச்சநீதிமன்றம் வரை  சென்று சட்டப்போராட்டம் நடத்தி, எடப்பாடியார் கொண்டுவந்த சட்டத்தை குப்பையில் தூக்கி எறிந்து விட்டாலும், அதற்காக உழைத்த உழைப்பும், சந்தித்த நெருக்கடிகளும், மாணவர் சமுதாயம் இழந்ததும் ஏராளம். வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தின் பாதிப்புகள் தற்போது நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் வரை நீடித்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதுதவிர தமிழகத்தில் வாழும் இருபெரும் சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் குறைத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து விட்டது இச்சட்டம். இப்படியாக பலநிலைகளில், பல்வேறு கோணங்களில் பாதிப்புகளை ஏற்படுத்திய வன்னியர் இடஒதுக்கீடு, சில சமூகங்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தின.

தமிழகத்தில் மாபெரும் ஆளுமைகளான கருணாநிதி,எம்ஜிஆர்,ஜெயலலிதா போன்றவர்களே கையில் எடுக்கத்தயங்கி இடஒதுக்கீடு விவகாரத்தை,   அசட்டுத்துணிச்சலில் தேர்தல் வெற்றி ஒன்றையே மையப்படுத்தி எடப்பாடியார் எடுத்த இந்த முடிவு, ஒரு தோல்வியோடு முடிந்துபோகவில்லை என்பதையே மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மூலம் தெரிய வருகிறது. பத்துப்பேர் பங்கிட்டு சாப்பிட்டு பசியாறிவரும் உணவை, தன் பதவி இச்சைக்காக, தனக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களை எல்லாம் முட்டாளாக்கி, ஒற்றுமையை உருக்குழைத்து, புளிச்ச ஏப்பக்காரனுக்கு பந்தி வைக்க நினைத்தது பெருங்குற்றம் என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம்.

115 சமூகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதிலோ, அதை சரிசெய்வதற்கு இச்சமூகங்கள் பட்டபாட்டையோ அவ்வளவு எளிதில் புரந்தள்ளிவிட முடியாது. மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் சமீபத்தில் அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம் தான் இந்த நாட்டை ஆளும் என்று பேசியது சர்ச்சைக்குள்ளானதோடு, எம்ஜிஆர் தொடங்கி, ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட அதிமுக, சாதிக்கட்சியாக சுருங்கிக்கொண்டது, அக்கட்சியில் இருக்கும் பிற சமுதாயத்தினருக்கே அதிர்ச்சியாக இருந்தது. 

எனினும் இப்பிரச்சினையை பாதிக்கப்பட்ட சமூகங்கள் அரசியல் ரீதியாக எதிர்கொள்வதுதான் சரியானதாக இருக்கும். எடப்பாடி அரசின் இந்த துரோகச்செயலை எதிர்த்து தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்யலாம் அல்லது அவரை ஆதரிக்கும் தங்கள் சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு நெருக்கடியை கொடுக்கலாம்.  அதைவிடுத்து மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு, அவரது அரசின் எடுக்கப்பட்ட ஒருமுடிவை மட்டும் வைத்து அவருக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டுவது தமிழக அரசியலுக்கு ஆரோக்கியமாக அமையாது. அமைதி,வளம், வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் தமிழகத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் தங்கள் எதிர்ப்பினை வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தால் பாதிக்கப்பட்ட 115 சமூகங்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved