🔴 LIVE | முப்பெரும் விழா 2023


குறுநில மன்னர்களின் பொறுப்பற்ற பேச்சு – முதல்வர் கனவு பலிக்குமா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 15-இல் பேரறிஞர், தந்தைப்பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் திமுக உதயமானநாள் என மூண்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசும்போது தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுக-வின் ஆட்சிதான் என்ற வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் என்று கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார். அவர் பேசி முடித்த ஒரு சில நாட்களிலேயே பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்ற மூத்த அமைச்சர்களின் பேச்சும், செயலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஜெயலலிதா காலத்து அதிமுக போல் இல்லாமல் எடப்பாடியார் ஆட்சியில் மீடியாக்கள் முன் அமைச்சர்களை பேச அனுமதித்தது தமிழக மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இன்றைய அமைச்சர்களின் பேச்சுக்கள் மக்களின் சுயமரியாதைக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இதற்கிடையே அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுகளையும், முதல்வரின் கனவு நிறைவேற திமுக செய்ய வேண்டியதையும் அலசுகிறது இக்கட்டுரை. 

தமிழக முதல்வரின் அரைநூற்றாண்டுகால அரசியல் வரலாற்றின் என்னற்ற பொதுக்கூட்ட மேடைகளிலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பேசியிருப்பார். பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தியிருப்பார். பொதுவெளியில் அவரின் பேச்சுக்களும் செயல்களும் ஒருபோதும் பொதுமக்களின் முகம் சுழிக்கும் வகையில் இருந்ததில்லை. அதுவும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும், பேச்சும், உரையும் மிகவும் கண்ணியமாகவே இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அவரே அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, என்னால் கலைஞர் போல் பேசவோ, எழுதவோ முடியாது. ஆனால் அவரைப்போல ஒரு சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்று பேசியதை, தலைமைச்செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் மக்களின் விருப்பம் உணர்ந்து தேர்வு செய்து சிறந்த நிர்வாகத்தை அளிக்க முயற்சி செய்து வருகிறார். இதுவே முதல்வரின் மீதான பிம்பம் ஏறுமுகத்தில் இருப்பதற்கு காரணம். 

இதற்கு நேர்மாறாக அமைச்சரவையிலுள்ள சில மூத்த அமைச்சர்களின் சர்ச்சைப்பேச்சுகள், குறிப்பாக பொதுமக்களை நடத்தும் விதமும், பொதுஇடங்களில் பேசும் பேச்சும், திராவிட இயக்கத்தின் அடிப்படை தத்துவமான சுயமரியாதைக்கு எதிராக அமைந்துள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் இவ்வாறு பேசுவதற்கான தொடக்கப்புள்ளியாக எது விளங்குகிறது என்று ஆராய்ந்தால் திமுக என்ற கட்சி அமைப்பு குறித்தே விமர்சனம் வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

கடந்த அறுபதாண்டுகாலத்திற்கு மேலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் மிகமிக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது என்பது சமத்துவத்தின் அடையாளமாக இருந்தாலும், அதை கலைஞர் என்ற தனித்துவமான ஆளுமையால் நிரப்பட்டது என்பதை மறுக்க முடியாது. அதேவேளையில் தலைமையைத் தாண்டிய கட்டுமானம் முழுக்க முழுக்க பெருஞ்சாதிகளை மையமாக கொண்டு இயங்குவது அக்கட்சியின் எதார்த்தநிலை. திமுக என்ற இயக்கத்தில் அதிகாரமிக்க பதவியாகவும், முதுகெலும்பாகவும்  இருப்பதும், அமைச்சருக்கு இணையான அந்தஸ்தாகவும் பார்க்கப்படுவது மாவட்டச் செயலாளர் பதவி. 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க கால உறுப்பினராகவும், கட்சிக்காக சர்வ தியாகங்களை செய்தவராக இருந்தாலும், அம்மாவட்டத்தில் பெருஞ்சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் தவிர மாவட்டச் செயலாளர் பதவிக்கு வரவேமுடியாது. அப்படி வந்தவர்கள் யாராவது இருப்பின் அவர்கள் மாற்றுக்கட்சியில் இருந்து தங்களை நிரூபித்தவர்களாக இருப்பார்களே தவிர திமுக தலைமையால் கொண்டுவரப்பட்டவராக இருப்பதில்லை. இது கே.கே.எஸ்.எஸ்.ஆர் தொடங்கி ரகுபதி, இராஜகண்ணப்பன், எ.வ.வேலு வரையிலான நிரூபிக்கப்பட்ட உண்மை. இதை வெறும் அதிகாரப்பகிர்வாக பார்க்காமல், எந்தவிதமான விளைவை கட்சிக்குள் ஏற்படுத்தியுள்ளது என்று ஆராய்ந்தால், மாவட்டச் செயலாளர்களுடனான அதிகாரப்பகிர்வாக இல்லாமல், பெருஞ்சாதிகள் உடனான அதிகாரப்பகிர்வாகவே இருந்து வருகிறது என்பதே எதார்த்த நிலையாக உள்ளது. வாக்குவங்கி தேர்தல் அரசியல் ஜனநாயகத்தில் பெருஞ்சாதியை புறம் தள்ளிவிட்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட முடியாது என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவு உண்மை பெருஞ்சாதியை மட்டும் மையமாக வைத்து கட்சி நடத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதும் சாத்தியமில்லாத ஒன்று என்பதை இதுவரை தமிழக அரசியல் நிரூபித்து வந்துள்ளது. 

இந்த ஒற்றுமையையும், முரண்பாட்டையும் லாவகமாக கையாளும் கட்சிகளாலேயே வெற்றியை சாத்தியப்படுத்த முடிகிறது. குறைந்த பட்சம் அரசில் களத்தில் தாக்குப்பிடிக்கவாவது முடிகிறது. இந்த நுணுக்கமான அரசியல் விளையாட்டில் சத்தமின்றி காயடிக்கப்படுகின்றவர்கள் வாய்ப்பற்ற சாதி,மொழி சிறுபான்மை சமூகங்களே. மத சிறுபான்மை சமூகங்கள் அடைந்த பலனில் நூறில் ஒருபங்கு கூட இச்சமூகங்கள் அரசியல் அதிகார பலனை அடையவில்லை என்பதே இன்றுவரையிலான உண்மை. அதிமுக-வில் எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளால் சாதி, மொழி சிறுபான்மையினருக்கு கிடைத்த வாய்ப்புகளில், எம்ஜிஆர் காலத்தைவிட ஜெயலலிதா காலமே இவர்களுக்கு பொற்காலமாக இருந்தது. 

திராவிட முன்னேற்றக்கழகத்தில் பெருஞ்சாதியைச் சேர்ந்தவரே மாவட்டச் செயலாளராக, அமைச்சர்களாக வரமுடியும் என்ற நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவில் கட்சியின் தீவிர விசுவாசி, தலைமையின் விசுவாசிகள், யார் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம், மாவட்டச் செயலாளர் ஆகலாம், அமைச்சராகலாம் என்றிருந்த காரணத்தால், கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை இராதாகிருஷ்ணன், இராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலர் கட்சி பலத்தில் வெற்றிபெற்று அதிகாரத்திற்கு வந்தனர். இதனால் பெருஞ்சாதிகளைச் சேராத நூற்றுக்கணக்கான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வை ஏற்றுக்கொண்டு கட்சிக்கு வந்து, நம்பிக்கையோடு பணியாற்றினர். ஆனால் இதற்கு நேர்மாறாக பெருஞ்சாதி மாவட்டச் செயலாளர்களை நிரந்தரமாக வைத்துக்கொண்டு, அவர்களின் போக்குக்கு செயல்பட அனுமதிக்கும் திமுக-வின் போக்கு, புதிதாக அரசியலுக்கு வரவிரும்பும் இளைய சமுதாயத்தினரையோ, சிறுபான்மை சாதியினரையோ ஈர்ப்பதாக இல்லை. 

திமுக-வில் மாவட்டச் செயலாளராக இருக்கும் பெருஞ்சாதியைச் சேர்ந்தவர், கட்சியின் பிரதான அமைப்புகளிலும், துணை அமைப்புகளிலும் தன் சாதியைச்  சேர்ந்தவருக்கே முதன்மைப் பதவியை வழங்குவார். பிற சமூகத்தை குறிப்பாக சிறுபான்மை சாதியைச் சேர்ந்தவர் தன்னுடைய தீவிர விசுவாசியாக இருந்தாலும் கூட, எந்த ஒரு முக்கியப்பதவியையும் வழங்கிவிட மாட்டார். இதேநிலை தான் அவர் அமைச்சர் ஆனாலும், வாரியத்தலைவர் பதவியானாலும், எந்த ஒரு நியமனப்பதவியானாலும் தன் சாதிக்கே முதன்மை இடம். தேர்தலில் போட்டியிடத்தான் பெருஞ்சாதி கணக்கு என்றால், ஒரு நியமனப்பதவியைப் பெருவதற்குக்கூட வாய்ப்பற்ற சமூகங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு திமுக-வில் வாய்ப்பே இல்லை. நிவாரணம் கோரி தலைமைக்கு அனுப்பப்படும் புகார்கள் கூட மீண்டும் மாவட்டச் செயலாளர் கைவசமே ஒப்படைக்கப்படும் அளவிற்கு செல்வாக்கு. வாய்ப்பற்ற சமூகங்களுக்கு உரிய பதவிகள் போய்ச் சேர்கிறதா என்பது குறித்தோ, கட்சி நிர்வாகிகள் தேர்வில் அனைத்து சாதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்பது குறித்தோ ஆராயவோ, உரிய கவனம் செலுத்தவோ திமுக தலைமை என்றும் முனைப்புக்காட்டியதே இல்லை என்பது இன்றைய தேதி வரையிலான வரலாறு. 

கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக  இருந்த காலங்களில்கூட உடன்பிறப்புகள் உரிமையோடு அவர் இல்லம் சென்று முறையிட முடியும் என்ற நிலை தற்போது இல்லை என்பதும், தற்போது தலைமையைச் சுற்றி ஒரு பெரும் தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது என்பதும், அதை மீறி தலைமையைச் சந்திப்பது கனவில்கூட சாத்தியமில்லை என்பதுமே இன்றைய  உடன்பிறப்புகளின் புலம்பல். உரிய நிவாரணமோ, பரிகாரமோ கிடைக்காதவர்களுக்கு சமாதானம் கூட கிடைப்பதில்லை என்பது தான் துணைப்பொதுச்செயலாளர்களாக இருந்து விலகியுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோரின் கருத்துகளாக பார்க்கப்படுகிறது என்பதும் இதன் தொடர்ச்சியே. 

இப்படியாக மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியில் அளிக்கப்பட்ட எல்லையற்ற அதிகாரத்தால், கட்சியின் நிலையான வாக்கு வங்கி உயரவே இல்லை. கடந்த பத்து, பதினைந்தாண்டுகால வரலாற்றில் மதிமுக, தேமுதிக, அதிமுக என பல்வேறு கட்சிகளில் இருந்து இணைந்ததாக முரசொலியில் வெளியிட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை கோடிகளை தாண்டும். அப்படியிருந்தும் கட்சியின் வாக்கு வங்கி உயராதது ஏன் என்றும் தலைமை சிந்தித்தாக தெரியவில்லை. பல மாவட்டச் செயலாளர்கள் கட்சியினரிடமிருந்தும், மக்களிடமிருந்தும் அந்நியப்பட்டுள்ளனர் என்பதே சரி. அதிமுக-வில் தொண்டனுக்கும் மாவட்டச் செயலாளர் அல்லது அமைச்சருக்குமான உறவு என்பது மிக இயல்பாகவே இருக்கும். இந்த நெருக்கமே அதிமுக-வில் இருந்து திமுகவிற்கு வந்து முக்கிய பதவிகளை கைப்பற்ற பக்கபலமாக இருந்தது. 

பெரிய அளவில் திறமைகளை வளர்த்துக்கொள்ளாமலும், அரசியல் நுணுக்கங்களை வெளிப்படுத்தாமலும், பெருஞ்சாதி தகுதியோடு மாவட்ட பொறுப்பினை பெற்றவர்களின் திறமையின்மையே கடந்த சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்ட திமுக கூட்டணிக்கு 40 இடங்கள் வரை குறைந்து 160-க்குள் முடங்கியது. கொங்கு மண்டலத்தில் முழுமையாக திமுக தோற்றதற்கான காரணம், வன்னியர் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட வேட்டுவக்கவுண்டர், தொட்டிய நாயக்கர், போயர், நாட்டுக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர், கொங்கு செட்டியார், முத்தரையர் சமூகங்கள் ஏறக்குறைய 20 சதவீதத்திற்கும் மேல் கொங்கு மண்டலத்தில் உள்ள நிலையில், வன்னியர் இடஒதுக்கீடுக்கு எதிராக போராடி வந்த இச்சமூகங்களை ஒன்றிணைக்க திமுக தரப்பில் இருந்து எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதன் பலனாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதுமாதிரி ஒவ்வொருமாவட்டத்திலும் பெருஞ்சாதிகளுக்கு அடுத்துள்ள சமுதாய வாக்குகளை கவர திமுக-விடம் எந்த திட்டமும் இருந்ததில்லை. 

இப்படி பல பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், இதுகுறித்தெல்லாம் ஆராயாத தலைமை, மாவட்டச் செயலாளராக இருந்தால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு நிச்சயம், தேர்தலில் வெற்றி பெற்றால் மந்திரி பதவி நிச்சயம் என்ற எழுதப்படாத விதி, மாவட்டச் செயலாளர்களுக்கு குறுநில மன்னர்கள் மனோபாவம் மேலோங்க தூண்டுகோலாய் அமைகிறது. சமூக ஊடகங்களும், தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் பெருத்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், அதற்கு அப்டேட் ஆகாத, பண்ணையார் மனநிலையிலுள்ள அமைச்சர் பெருமக்கள், தங்களின் செயல்பாடுகளை தலைமை கவனிக்கிறதோ இல்லையோ பொதுமக்கள் கவனித்துக்கொண்டுள்ளனர் என்பதையே மறந்துவிடுகின்றனர். இப்பட்டியலில் அமைச்சர் பொன்முடி போன்ற முனைவர் பட்டம் பெற்ற மூத்த  அமைச்சர்கள் இடம்பெருவது, தமிழக முதல்வருக்கே தருமசங்கடத்தை ஏற்படுத்துகிறது. தன்னுடைய அரசு மக்களின் சுயரியாதை காக்கும் அரசாக இருக்கும் என்று மேடைதோறும் முதல்வர்  பேசுவது அவரின் அமைச்சரவை சகாக்களுக்கே சென்று சேரவில்லை என்பது வேதனையான விசயம். அமைச்சர்களின் இந்த செருக்குக்கு காரணம் திமுக என்ற கட்சி அமைப்பு தரும் பலமே. 

எனவே தமிழக முதல்வர் கட்சி அமைப்புகளில், நிர்வாகத்தில் வாய்ப்பற்ற நூற்றுக்கணக்கான சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கி, கட்சியையும் வலுப்படுத்தி, ஆட்சியையும் வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வாரேயானால், அவரின் விருப்பம் நிறைவேறுமே தவிர குறுநில மன்னர்களால் அல்ல. சாட்டையை சுழற்ற வேண்டியது முதல்வர் தான்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved