🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி 360 டிகிரியில் ஒரு பன்முகப் பார்வை! - பகுதி - 9

இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 340 ன்படி சமூகரீதியாக கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோரின் நிலையை ஆய்வுசெய்ய இந்திய குடியரசுத் தலைவர் ஆணையம் நியமிப்பர் என்று உள்ளது. அட்டவணைச் சாதிகளைப் போன்ற விரிவான சரத்து அப்போது கொடுக்கப்படவில்லை. மேலும் அட்டவணைச் சாதிகளுக்கு கொடுக்கப்பட்ட சரத்தில், சரத்து 338-10ன் கீழ் அந்த ஆணையமே இதர பிற்படுத்தப்பட்டோர் நலனையும் கவனிக்கும் என்று இருந்தது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அடையாளம் காண்பதற்காக போடப்பட்ட 16.11.1992ல் உச்சநீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் பத்தி 864-Aல் பிற்படுத்தப்பட்டோரைச் சேர்ப்பதற்கு நீக்குவதற்கும் பரிந்துரை செய்ய மத்திய மாநில அரசுகள் நிரந்தர ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்றும் அப்படி நியமிக்கப்பட்ட ஆணையங்களின் பரிந்துரைகள் அரசைக் கட்டுப்படுத்தும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மத்திய அரசு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் 1993ன் மூலம் நிரந்தர ஆணையம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் அரசாணை 9 நாள் 15.3.1993ன் மூலம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்பட்டது. இரண்டு ஆணையங்களின் அதிகாரங்களும் தனித்தனியானதாக இருந்தது. அதாவது மத்திய அரசு சாதிப்பட்டியலில் சேர்க்கவோ பரிந்துரை செய்யும் அதிகாரம் தேசிய ஆணையத்திற்கும் மாநில சாதிப்பட்டியலில் சேர்க்கவோ பரிந்துரைக்கும் அதிகாரம் மாநில ஆணையங்களுக்கு இருந்தது, பல மாநில அரசுகள் அந்த மாநில ஆணைங்களுக்கு தனிச்சட்டங்கள் இயற்றியுள்ளனர் (உதாரணம் மகாராஷ்ட்ரா மாநிலம்). இதைதவிர அந்தந்த அரசாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் மேம்பாடு தொடர்பாக கேட்டுக்கொள்ளும் பணிகளையும் மேற்கொண்டு வந்தனர். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா இல்லையா? இல்லையென்றால் அதைச் சரி செய்ய உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

 இந்நிலையில் 102வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2018ன்படி சரத்து 338-B, 342A, மற்றும் 366-26C சேர்க்கப்பட்டு சரத்து 338-10 நீக்கப்பட்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அட்டவணைச் சாதிகள் ஆணையத்திற்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்பட்டது. இதன்படி பிற்படுத்தப்பட்ட மக்கள் மேம்பாடு தொடர்பாக பரிந்துரை செய்யும் அதிகாரம் அனைத்தும் தேசிய ஆணையத்திற்கே மாற்றப்பட்டுவிட்டது. மேலும் இத்திருத்தத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் (ஜெய்ஷிரி பாட்டில் என்னும் மராத்தா வழக்கு) உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறிவிட்டது. அதன்பின் 105 வது அரசமைப்புச்சட்டத் திருத்தம் 2021ன் படி சரத்து 338-B, 342A மற்றும் 366 திருத்தப்பட்ட சமூகரீதியாக கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கண்டறியும் அதிகாரம் மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் மேலும் அப்படி அடையாளம் காணும் முடிவுகளுக்காக தேசி பிற்படுத்தப்பட்ட ஆணையத்தைக் கலந்து ஆலோசிக்கத் தேவையில்லை என்றும் வழிவகை செய்துள்ளது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாடு தொடர்பான மற்ற முக்கிய கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு முன்பும் மத்திய மாநில இரு அரசுகளும் தேசிய ஆணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த இரண்டு திருத்தங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி எதிர் பயில்லேறும் பெருமாள் என்ற வழக்கில் பரிசீலித்த உச்சநீதிமன்றம். இட ஒதுக்கீடு உள்இட ஒதுக்கீடு போன்றவை முக்கிய கொள்கை முடிவுகள் என்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட முடிவுகளில் தேசிய ஆணையத்தை கலந்து ஆலோசிக்கவில்லை என்றால் அச்சட்டங்கள் ஆரம்பமுதலே செல்லாத சட்டங்கள் என்று தீர்ப்பளித்துள்ளது.

 எனவே மாநிலத்தில் சமூகரீதியாக கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல்களைத் தயார் செய்யும் அதிகாரத்தை தவிர மற்ற அதிகாரங்கள் அனைத்தும் தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்குத்தான் உண்டு. மாநில ஆணையங்கள் மாநில சாதிப்பட்டியலில் சேர்க்க நீக்க பரிந்துரை செய்ய மட்டுமே அதிகாரம் உண்டு. மற்ற எல்லா முக்கிய கொள்கை முடிவுகளிலும் மாநில அரசு தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையங்களின் ஆலோசனையைப் பெற்றுவிட்டுத்தான் முடிவெடுக்க முடியும். அதே நடைமுறைதான் அட்டவணைச் சாதிகள் மற்றும் அட்டவணைப் பழங்குடிகள் வகுப்பினருக்கு கடைபிடிக்கப்படுகின்றது. இது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் செல்லவில்லை. சட்டத்தின் நிலையை மட்டுமே விளக்கியுள்ளோம். அடுத்த தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved