🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாண்டியர்களை வீழ்த்தியது வடுகர்களா? முகமதியர்களா?-பகுதி1

தமிழக வரலாற்றில்  நமக்கு நன்கு தெரிந்தவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள். இவர்களுடைய ஆட்சிக்காலமெல்லாம் முடிந்து, சுல்தான்களின் ஆட்சி நடைபெற்ற வரலாறு  பலருக்கும் தெரியாது. ஓராண்டு, ஈராண்டு அல்ல; சுமார் 65 ஆண்டுகள் சுல்தான்களின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. 

சுல்தான்களின் ஆட்சி டெல்லியில்தானே நடைபெற்றது, பண்டைய தமிழகத்திலுமா? ஆமாம். மதுரையை தலைநகராகக் கொண்டு, தமிழகத்தை ஆட்சி புரிந்தனர் சுல்தான்கள். இவர்களுக்கு மதுரை சுல்தான்கள் என்று பெயர்.

இந்திய சரித்திரத்தில் டெல்லியை தலைநகரமாகக் கொண்டு பல சுல்தானிய வம்சங்கள் ஆட்சி புரிந்திருக்கின்றன. 13ம் நூற்றாண்டில் அடிமை வம்சம் (Slave Dynasty) தொடங்கி கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், சயது வம்சம் மற்றும் லோடி வம்சம் என பல சுல்தான்கள் இந்தியாவில் ஆட்சி செய்திருக்கின்றனர். இந்த வம்சங்களின் ஆட்சியாளர்கள் அனைவருக்குமே டெல்லி சுல்தான்கள் என்று பெயர். டெல்லி சுல்தான்களின் 300 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து முகலாய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தவர் பாபர்.

டெல்லி சுல்தான்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். நிறைய படித்திருக்கிறோம். ஆனால் மதுரை சுல்தான்கள் நமக்குப் புதியவர்கள். மதுரை சுல்தான்கள் எப்படி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தார்கள்? அப்போது சோழர், பாண்டியர்களின் நிலைமை என்ன? மதுரை சுல்தான்களின் ஆட்சி எப்படி இருந்தது? மதுரை சுல்தான்களின் ஆட்சி எப்படி முடிவுக்கு வந்தது? போன்ற கேள்விகளுக்கு விடைகளை பார்க்கப் போகிறோம்.

பொதுவாக தமிழர்களிடையே ஓர் அபிப்பிராயம் உண்டு.

சுல்தான்களின் ஆட்சி அமைவதற்குக் காரணமான முகமதியர்களின் படையெடுப்பு வடநாட்டில்தான் ஏற்பட்டது என்றும், தென்னாட்டில் முகமதியர்களின் படையெடுப்பு நடைபெறவில்லை என்றும் ஒருபரவலான கருத்து நிலவி வருகிறது. மதுரை சுல்தான்களின் ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருந்த உல்லூகானின் படையெடுப்பிற்கு முன்னதாகவே இரண்டு முகமதியர்களின் படையெடுப்பு தமிழகத்தில் நிகழ்ந்தது. இந்த உல்லூகான் வேறுயாருமில்லை . நமக்கு நன்கு அறிமுகமான முகமது பின் துக்ளக் தான். உல்லூகானுக்கு முன்னதாக தமிழகத்தின் மீது படையெடுத்தவர்களில் ஒருவர் நமக்கு நன்கு அறிமுகமான மாலிக்கபூர். இன்னொருவர் குஸ்ரவ் கான்.

இந்த படையெடுப்புகளைப் பற்றியும், சுல்தான்களின் ஆட்சி பற்றியுமான சரித்திரப் பதிவுகளை அமிர் குஸ்ரு, ஃபெரிஸ்டா, ஜியா உதின்பர்னி, இபின் பதூத்தா, அப்துல்லா வாசஃப், கங்கா தேவி போன்ற சரித்திர ஆசிரியர்கள் நமக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். அமிர் குஸ்ரு, அப்துல்லா வாசஃப், ஜியா உதின் பர்னி, ஃபெரிஸ்டா ஆகியோர் சுல்தான்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் சுல்தான்களின் அரசவையில் அதிகாரிகளாகவும் கவிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்கள், சுல்தான்கள் படையெடுத்துச் சென்றபோது, கூடவே சென்று தாங்கள் நேரில் கண்ட சம்பவங்களை சரித்திரப் பதிவுகளாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இபின் பதூத்தா ஒரு வெளிநாட்டுப் பயணி. மொரோக்கோவைச்சேர்ந்தவர். இஸ்லாமிய நாடுகளிலும் பிற நாடுகளிலும் இவர் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் பயணம் செய்து எழுதிய பயணக்குறிப்புகள் ‘ரிகிலா' என்றழைக்கப்படுகின்றன. இபின் பதூத்தா, முகமது பின் துக்ளக் காலத்தில் நீதிபதியாகவும் செயல்பட்டிருக்கிறார். இபின் பதூத்தாவைப் போல் மார்க்கோ போலோ என்ற இத்தாலிய பயணியும் தன்னுடைய பயணக் குறிப்பில் அன்றைய தமிழகத்தைப் பற்றிய பல தகவல்களைத் தந்திருக்கிறார்.

மார்க்கோ போலோ, இபின் பதூத்தாவிற்கு முந்தையவர். தென்னிந்தியாவில் சுல்தான்களின் படையெடுப்பு நிகழ்வதற்கு முன்னரே தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவை விட்டுச் சென்று விட்டார். மார்க்கோ போலோ தென்னிந்தியாவில் தன்னுடைய இந்திய பயணத்தின் பெரும் பகுதியை நடத்தியிருக்கிறார். மற்ற சரித்திரப் பதிவாளர்களைப் போல் ஆட்சி செய்தவர்களுடன் மார்க்கோ போலோ நெருங்கிப் பழகவுமில்லை. ஆட்சி அதிகாரத்திலும் அவர் இல்லை. சுல்தான்களின் படையெடுப்பிற்கு முன் பாண்டியர்களின் ஆட்சியிலிருந்த தமிழகம் எப்படி இருந்தது என்ற செய்தியை நமக்குப் பதிவு செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இவர்களெல்லாமிருந்து சற்று வேறுபட்டவர் கங்காதேவி, இவர் ஒரு பட்டத்தரசி. சுல்தான்களிடமிருந்து தமிழகத்தை மீட்பதற்காக நடந்த போரில் பங்கு கொண்ட விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் அரசர் புக்கரின் மகனான கம்பணாவின் மனைவி. கங்காதேவி, தன் கணவர் கம்பணாவுடன் போர்க்களத்துக்குச் சென்றார். தான் கண்ட, கேட்ட செய்திகளையெல்லாம் "மதுரா விஜயம்" என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார்.

மேலே குறிப்பிட்ட அறிஞர்கள் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்யாமல் போயிருந்தால் நமக்கு இந்தச் சரித்திரம் கிடைக்காமலே போயிருக்கும். மேற்சொன்ன பதிவுகளைத் தவிர திருவரங்க ரெங்கநாதர் கோயில் வரலாற்றை குறிப்பிடும் கோயில் ஒழுகு மற்றும் வைஷ்ணவ குரு பரம்பரை, ஆச்சாரிய சுக்தி முக்தாவழி போன்ற நூல்களிலிருந்தும் சுல்தான்களின் படையெடுப்பைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெறுகின்றன. இவை தவிர தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்த கல்வெட்டுகள் முகமதியர்களின் படையெடுப்பிற்கும் அவர்களது ஆட்சிக்கும் சான்றாக இருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவாமாட்டூரில் கிடைத்த கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் கிடைத்த கல்வெட்டு, இவற்றைத் தவிர தமிழகத்தில் உள்ள திருகளக்குடி மற்றும் திருப்புட்குழி போன்ற இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளெல்லாம் பல சரித்திர நிகழ்வுகளைப் பறைசாற்றுகின்றன.

13ம் நூற்றாண்டின் பாண்டியர் வரலாற்றை அறிவதற்கு முன் சில விஷங்களை அறிந்து கொள்வோம். அப்போது தென்னாட்டில் நான்கு பெரும் ராஜ்ஜியங்கள் இருந்தன.

1. யாதவப் பேரரசு

2. காகதீயப் பேரரசு

3. ஹொய்சாளப் பேரரசு  

4. பாண்டியப் பேரரசு . 

இவைகளைப் பற்றி சுருக்கமாக தெரிந்து  கொண்டால்தான் அடுத்தடுத்த வரலாற்றுப் பதிவுகளைப்  புரிந்து கொள்ள முடியும்.

யாதவப் பேரரசு :

தேவகிரியை தலைமையிடமாகக் கொண்டு, யாதவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். இன்றைய மகாராஷ்டிரா மாநிலம், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் வட பகுதி ஆகியவைதான் யாதவர்கள் ராஜ்ஜியத்தின் பகுதிகள்.

காகதீயப் பேரரசு :

இன்றைய ஆந்திர மாநிலத்தை உள்ளடக்கிய பகுதிளைக் கொண்ட ராஜ்ஜியத்தை காகதீயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். காகதீயர்களின் தலைநகரம் வாராங்கல். 

ஹொய்சாளப் பேரரசு :

இன்றைய கர்நாடகத்தையும், தமிழகத்தின் வடமேற்குப் பகுதிகளையும் உள்ளடக்கிய ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தவர்கள் ஹொய்சாளர்கள். இவர்களது தலைநகரம் வெவ்வேறு இடங்களில் இருந்தது. முதலில் பேலூரில் இருந்த தலைநகரம் பின்னர் ஹலபேடுவுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் துவாரசமுத்திரமும்,

தமிழகத்தில் உள்ள கண்ணூர் கொப்பமும் (இன்றைய சமயபுரம்) தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் திருவண்ணாமலையும் ஹொய்சாளர்களின் தலைநகரமாக இருந்தது.

பாண்டியப் பேரரசு :

தமிழகம் மற்றும் இன்றைய ஆந்திராவின் தென்கிழக்குப் பகுதியை பாண்டியர்கள் ஆட்சி செய்து வந்தனர்.பாண்டியர்களின் தலைநகரமாக மதுரை இருந்தது. இந்த ராஜ்ஜியங்களைத் தவிர காம்பிளி தேசம் என்ற ஒரு சிறிய நாடும் தென்னிந்தியாவில் இருந்தது. காம்பிளி, யாதவர்களின் ஆட்சியிலிருந்து பிரிந்து, தனிநாடாகச் செயல்பட்டது.  இன்றைய கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி,ராய்ச்சூர் மற்றும் தார்வாட் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டது காம்பிளி தேசம்.

இந்த தென்னகத்தில்  சுல்தான்கள் ஆட்சி எப்படி ஏற்பட்டது? மதுரை சுல்தான்கள் எப்படி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தார்கள்? அப்போது சோழர், பாண்டியர்களின் நிலைமை என்ன? மதுரை சுல்தான்களின் ஆட்சி எப்படி இருந்தது? மதுரை சுல்தான்களின் ஆட்சி எப்படி முடிவுக்கு வந்தது? போன்ற கேள்விகளுக்கு விடைகளை இனி விரிவாகப் பார்க்கலாம்.

நன்றி: மருதுபாண்டியன்.
மதுரை சுல்தான்கள் - S.P. சொக்கலிங்கம்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved