🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வனவிலங்குகளை பாதுகாக்கவில்லையென்றால் மனித இனம் அழியும்!

இயற்கையின் சமனிலை தன்மையை சரியான அளவில் பேணுவது அதன் நிலைத்ததன்மைக்கு இன்றியமையாததாக அமைகின்றது. இதற்கு விலங்குகளே அதிகளவில் பங்களிப்புச் செய்கின்றன. காடுகளை பாதுகாப்பதிலும் உருவாக்குவதிலும் வனவிலங்குகள் முக்கிய பங்காற்றுகின்றன. விலங்குகள் இல்லையேல் உணவுச்சங்கிலியின் சமனிலை பாதிக்கப்பட்டு தாவரவுண்ணிகள் இவ்வுலகின் பசுமைகளை எல்லாம் அழித்துவிடும். எனவே வனவிலங்குகளின் நிலைத்தன்மை அவசியமாகின்றது. உலகின் மிகப்பெரிய வனங்களான அமேசன் மற்றும் ஆபிரிக்க காடுகளில் பல்லாயிரக்கணக்கான விலங்குகள் வாழ்கின்றன. இவற்றின் வாழ்விடங்களுக்கு வனங்கள் ஆதாரமாகத் திகழ்கின்றன. மரங்கள், தாவரங்கள் பெருக்கத்துக்கும், தட்ப வெப்பநிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம்.


ஆதிகால மனிதனுடைய வாழ்வியல் முறைகள், வன விலங்குகள், காடுகளைச் சார்ந்தே இருந்துள்ளன. இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நிற்கக்கூட நேரமில்லாமல் இயந்திர மயமாகிவிட்டதால் வனவிலங்குகள், காடுகளின் மதிப்பு தெரியவில்லை. காடுகளையும், அதில் வாழும் விலங்குகளையும் பாது காக்க தவறியதால் தற்போது சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளும், காடுகளும் ஒன்றையொன்று சார்ந்தது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும். அதனால் இந்த வன விலங்குகளை பாதுகாக்க வனவிலங்கு காப்பகங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

பண்டைய இந்தியாவில் மனிதனுக்குப் பயன்பட்ட விலங்குகளில் பசுவுக்கும், குதிரைக்கும் அடுத்தபடியாக யானை மிகவும் போற்றி பாதுகாக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் ஆசியாவில் பல யானை வகைகள் இருந்ததற்கான சான்றுகள் உண்டு. தற்போது ஆப்பிரிக்க யானை, இந்திய யானைகள் மட்டுமே உள்ளன. ஒரு காலத்தில் காடுகளின் அரசன் என யானைகள் பெருமையாகக் கூறப்பட்டன. தற்போது காடுகளை மனிதன் ஆக்கிரமித்துக்கொண்டதால் காடுகளின் அரசன் காடுகளை விட்டு வெளியேறுகின்றன. இதனால், ஒருபுறம் வாகனங்களில் அடிபட்டும், மனிதர்களால் சுடப்பட்டும் இறக்கின்றன. மற்றொரு புறம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதால் நோய் தாக்கி இறக்கின்றன. இதனால், யானைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.


மனிதன் தனது சொந்த தேவைகளுக்காக பல அபூர்வ விலங்குகளையும், தாவரங்களையும் அவற்றின் சுவடுகள் தெரியாதபடி அழித்து விடுகிறான். பெருமைக்காகவும், விற்பனைக்காகவும் வன விலங்குகளை வேட்டையாடுகிறான். கடந்த 2000 ஆண்டுகளில் 106 விலங்கினங்களும், 140 பறவையினங்களும் அழிந்துள்ளன. தற்போதைய கணக் கெடுப்பின்படி மேலும் சுமார் 300 இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பென்குவின், கஸ்தூரி மான், ஒற்றைக்கொம்பு காண்டா மிருகம், யானை, சிங்கம், கரடி, புலி, முதலை, பாம்பு, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் போன்றவற்றில் சில அடியோடு அற்றுப்போகும் நிலையில் உள்ளன. இறைச்சிக்காக பறவைகளும் வேட்டையாடப்படுகின்றன. விலங்கினம் பற்றிய கல்வியறிவும், ஆராய்ச்சிகளும், மக்களிடையே ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வும் வனவிலங்குகளை பாதுகாக்க உதவிபுரிகின்றன.


மத்திய, மாநில அரசுகள் தனிச்சட்டங்களை உருவாக்கி இந்த காப்பகங்கள் பராமரிக்கப்படுகின்றன. காப்பகங்களினால் சில அபூர்வ இனங்கள் அழிவில் இருந்து மீண்டு புத்துயிர் பெறுகின்றன. தமிழகத்தில் தற்போது 15 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 14 பறவைகள் சரணாலயங்கள் மூலம் வனவிலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. வன விலங்குளை பாதுகாக்க இது போன்ற சரணாலயங்கள் ஏற்படுத்து வதோடு நமது கடமை முடிந்து விடவில்லை. அழிந்துவரும் வன உயிரினங்களின் பாதுகாப்பையும், அதன் அவசியத்தையும் மக்களிடம் புரியவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

உலகிலேயே வனவிலங்கு பாது காப்புச் சட்டத்தை முதன்முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியாதான். 1972-ல் இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப் பட்டது. விலங்குகள் வாழ ஒவ் வொரு நாட்டிலும் உள்ள மொத்த காட்டுப் பகுதியில் 25% ஒதுக்கப் பட வேண்டும் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நமது மாநிலத்தில் மொத்த வனப்பரப்பில் 29.32% பரப்பளவில் வன உயிரின காப்பகங்கள் உள்ளன.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved