🔴 LIVE | முப்பெரும் விழா 2023


யார் இந்து? யார் திராவிடன்? பிரச்சினையில் கம்பளத்தார்கள் - சுவாரஸ்யமான தகவல்

உறவுகளே, அண்ணா எழுதிய நூலொன்று வாசித்துக்கொண்டிருந்தேன். வலிமையான கருத்துக்களை எளிய நடையில், ஆங்காங்கே எதுகை மோனையும், குத்தல் மொழியும், நையாண்டி பேச்சும் குறைவில்லாமல் செல்கிறது. தன் கருத்தை நியாயப்படுத்த எண்ணற்ற ஆதாரங்களை அடுக்கடுக்காய் வைத்து மலைக்கச் செய்கிறார். நூலின் பக்கங்கள் என்னவோ 60 தான். ஆனால் ஒருசில பக்கங்களைப் புரட்டினாலே அவர் ஏன் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்டார் என்பது விளங்கும். வாசிப்பின் போதுதான் திடீரென கம்பளத்தார்களின் சம்பிரதாயங்களை மேற்கோள் காட்டி தனது தர்க்கத்திற்கு வலுசேர்க்கிறார் அறிஞர் அண்ணா. நாட்டில் 5000 க்கும் மேல் சாதிகள் உண்டு. ஆனால் அண்ணா மேற்கோள் காட்டும் அளவிற்கு கம்பளத்தார் தங்கள் சம்பிரதாயங்களை பின்பற்றுவதில் தனித்தன்மையை இழக்காமல் உறுதியாக இருந்து வரும் பெருமைமிக்க சமூகமாக இருப்பதில் எத்தனை மகிழ்ச்சி. அதைத்தான் உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

அண்ணாவின் நூலை அறிமுகம் செய்யும் முன் நான் சில உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும். இந்திய நிலப்பரப்பிற்கென்று நீண்டிய நெடிய வரலாறு உண்டு. ஆனால் அது எதுவும் ஐரோப்பியர் வரும்வரை பதிவு செய்யப்படவில்லை. தவிர ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம், ஒரே இனம், ஒரே மொழி பேசும் ஒற்றை தேசமாக இருந்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். அதேசமயம் உலகெங்கும் மதக்கட்டமைப்புகள் வலுப்பெற்ற காலத்தின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் மதக்கட்டமைப்புகள் உருவாகத்தொடங்கின என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்வீராக.

சிற்றரசுகள், பேரரசுகளாக மாறும் காலங்களில் மதக்கட்டமைப்புகள் வேகமெடுக்கத்தொடங்கின. இதிலிருந்து மதம், அது சார்ந்த சடங்குகள்,  அதையொட்டி உருவான கோவில்கள், வழிபாடுகள் மற்றும் பண்பாடு மற்றும் கலச்சாரங்களில்  ஏற்பட்ட படிப்படியான மாற்றங்கள். இதின் பின்னணியில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு மக்களிடம் செல்வாக்கு செலுத்திய பிரிவினரின் வரலாற்றுப் பின்னணியில் இருந்து அறிஞர் அண்ணாவின் இந்தநூலை அணுக வேண்டியிருப்பதால், ஒரு சிறு முன்னுரையோடு தொடங்க வேண்டியுள்ளது.

அதனடிப்படையில்....

நாடெங்கும் சுதந்திரம் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தபோது ஆங்கிலேயர் ஆட்சியில் மக்களின் ஏகபோக பிரதிநிதிகளாக அதிகாரத்தின் அனைத்து விழுமியங்களையும் அபகரித்துக்கொண்டு,  விடுதலைக்குப் பின்னும் நாடு தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டுமென காரியமாற்றிக் கொண்டிருந்த ஆரிய பிராமணர்கள் ஒருபுறம், நாட்டில் எங்கும் எழாத சிந்தனையாக இராயிரமாண்டு அடிமைத்தனம் ஆங்கிலேயர்களோடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென சென்னை மாகாணத்தில்  தீவிரமாக களமாடி வந்த திராவிட இயக்கத் தலைவர்கள் மறுபுறம் என தென்னக அரசியல் களமே தத்துவத்தின் பிடியில், உலக நாடுகளின் வரலாறும், இலக்கியங்களும் மேடைப்பேச்சுகள், நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக கல்வியற்ற கடைக்கோடி மனிதர்களிடம் கொண்டுசேர்த்த தருணம்.

மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவின் வடமேற்கில் குடியேறிய ஆரிய பிராமணர்கள், மற்றவர்களைப்போல படைகொண்டு வந்து இந்தியாவை வெற்றிகொண்டவர்கள் அல்லர். இன்றைய இந்தியா போல் ஒற்றை இந்தியா அல்ல. பல்வேறு மொழிபேசும் இனக்குழுக்களால் சிறிய சிறிய நிலப்பரப்புகள் ஆளப்பட்டு வந்தன. பேரரசுகள் தோன்றியிறாத காலம். இந்திய நிலப்பரபில் குதிரைகளை அறிமுகப்படுத்திய ஆரியர்களுக்கு வேதமும், யக்ஞமும் (யாகம்) மட்டுமே மூலதனம். மண்ணுக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு பின் மண்ணையும், மக்களையும் தங்களுக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய வல்லமை மிக்கோர் ஆரியர் என்பது பல வரலாறுகள் சொல்லும் உண்மை. ஆரியர்களின் மேலாதிக்கம் இந்திய நிலப்பரப்பில் நிலைபெற பேருதவியாய் இருந்தவை வேதமும், யக்ஞமும். ஆரியர்கள் கடைபிடித்த யாக முறைகள் இந்திய நிலப்பரப்பை ஆண்டுகொண்டிருந்த சிற்றரசர்களை வளைப்பதற்கு போதுமானதாக இருந்தது.  இதனைத் தொடர்ந்து உருவான ஸ்ருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் பிராமணர்களுக்கான மதிப்பை அரசர்களிடமும், மக்களிடமும் உயர்த்திய அதே வேளையில், ஆதிக்கமும் நிலைபெற வழிகோலியது.  உருவ வழிபாடற்ற பிராமணர்கள் அரசர்களும், மக்களும் உருவாக்கிய கோவில்களின் ஏகபோக உரிமையாளர்கள் ஆனார்கள்.

ஒவ்வொரு இனக்குழுவும் பின்பற்றி வந்த சடங்கு, சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறை, கடவுள்கள் பொதுமைப்படுத்தப்பட்டு,  வேதங்களில் சொல்லப்படாத உள்ளூர் கடவுள்களுக்கும் தங்களையே பிரதிநிதியாக அறிவித்துக்கொண்டனர். அதுவரை பின்பற்றி வந்த சடங்கு, சம்பிரதாயங்களை விட்டு ஆரியப் பண்பாட்டு முறையை மன்னர்கள் ஏற்றுக்கொண்டாலும், பெரும்பான்மை மக்கள் தங்கள் காலம் காலமாக பின்பற்றி வந்த சம்பிரதாயங்களை முழுமையாக கைவிட்டுவிடவில்லை. அதுகுறித்து ஆரியர்களும் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களின் திட்டங்கள் நீண்டகாலத்திற்குறியவை. காலத்தின் போக்கில் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ளும் வித்தை அறிந்தவர்கள். அரசாட்சி காலத்தில் மன்னனும், மக்களும் மாறலாம், கடவுளும், வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் அழிவதில்லை. ஆகையால் அரசியலில் எந்த மாற்றம் வந்தாலும் பிராமணிய இருப்புக்கோ, ஆதிக்கத்திற்கோ அது சவாலாக இருக்கவில்லை. மாறாக அவர்களுக்கு அரசுகளும், மன்னர்களும் ஆதரவாக இருந்து வந்துள்ளன.

(தொடரும்)

கட்டுரையாளர்: வை.மலைராஜன், பி.ஏ.,
மாவட்ட அமைப்பாளர்,
திமுக கலை இலக்கிய பகுத்தறிவு அணி ,
விருதுநகர் வடக்கு 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved