🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழ்நாட்டின் மொழிப்போர் வரலாறு!

உலகில் எங்கெல்லாம் திணிப்பு, அடக்குமுறை தொடங்குகிறதோ அங்கெல்லாம் எதிர்ப்பும், புரட்சியும் கிளம்பும் என்பதே நிதர்சனம். அதுவும் முக்கியமாக தமிழ்நாட்டில் ‘இந்தி திணிப்பு’ என்றால் கடுமையான எதிர்ப்பு மட்டுமல்லாமல் ’மொழிப்போராகவும்’ வெடித்து பலர் உயிர் இழந்துள்ளனர். தமிழ் காக்கும் மொழிப்போரில் மாணவர்கள், இளைஞர்கள் என இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி வழக்கு வாங்கி சிறைத்தண்டனை அனுபவித்தும், தீக்குளித்தும், நஞ்சுண்டும், குண்டடிப்பட்டும் பலியான தமிழர்கள் பல நூறு பேர். தமிழ்மொழி காக்க நம் முன்னோர்கள் செய்த தன்னலமற்றப் பங்களிப்பை நினைவுக்கூறும் நாளாக ’மொழிப்போர் ஈகியர் நாள்’ தை மாதம் 11-ம் தேதி (சனவரி 25) வீரவணக்கம் செலுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் பலவேறு காலக் கட்டங்களில் நடைபெற்றது. இதுவரை தமிழ்நாட்டில் நான்கு மொழிப்போர் நடந்துள்ளது.

1. 1938-1940                 முதல் மொழிப்போர்

2. 1948-1952                 இரண்டாம் மொழிப்போர்

3. 1965 (50 நாட்கள்) மூன்றாம் மொழிப்போர்

4. 1986 (140 நாட்கள்) நான்காம் மொழிப்போர்

முதல் மொழிப்போர்:

1937-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு, சி.ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராகப் பதவியேற்றார். பதவியேற்ற சில நாட்களில் நடந்த கூட்டத்தில் கட்டாய இந்தி பாடம் குறித்து அவர் பேசினார். 1938 ஏப்ரலில் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கு இராஜாஜி ஆணையிட்டார். இதனை எதிர்த்து பெரும் போராட்டங்களை தனித் தமிழ் இயக்கங்களும், தந்தை பெரியாரும் மேற்கொண்டனர். பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இந்திக்கு எதிராக மறியல் போராட்டங்கள் நடந்த நிலையில், 1940-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்தின்போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.

* தமிழ் வீரன் நடராசன் அவர்கள், இந்திக்கு எதிராக மறியல் செய்தற்க்காக அரசு, இவரை கைது செய்து சிறையில் அடைத்தது, சிறைவாசத்தால் கடுமையாக உடல்நலம் குன்றி, உயிருக்கு போராடிய நேரத்தில் “மன்னிப்பு எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்கிறோம்” என ஆச்சாரியர் அரசு கேட்டது. மன்னிப்பு மண்டியிடாத தமிழ் வீரன் நடராசன் அவர்கள் 15/1/1939 அன்று உயிழந்து ஈகியரானார்.

* தமிழ் வீரன் தாளமுத்து அவர்கள், நடராசன் மறைந்த இரண்டு மாத இடைவெளியில் சென்னை சிறையில் தாளமுத்து அவர்களும் 13/9/1938 அன்று உயிரிழந்து ஈகியரானார்.

இரண்டாம் மொழிப்போர்:

1948ஆம் ஆண்டு சூன் மாதம் மீண்டும் இந்தி கட்டாயமாக்கப்படுவது குறித்து சென்னை மாகாண அரசு அறிவித்தது. முதலில் சென்னை மாகாணத்தில் இருந்த (இப்போதைய) ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகளில் இந்தி கட்டாயமென்றும் (தற்போது) தமிழ்நாடு இருக்கும் பகுதிகளில் விருப்பப் பாடமென்றும் அறிவிக்கப்பட்டது. பிறகு, தமிழ்நாட்டிலும் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. கடும் எதிப்பு கிளம்பிய நிலையில் முடிவில் 1950ல் இந்த ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது.

மூன்றாம் மொழிப்போர்:

இந்தி பேசாத மாநிலங்களின் மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் 1963ல் கொண்டுவரப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தில், 1965க்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரலாம் என்று ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. ‘தொடரலாம்’ என்று இருப்பதை ‘தொடரும்’ என்று மாற்ற வேண்டுமெனக் கோரப்பட்டது. இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்றார் பிரதமர் நேரு. அப்படியானால், தொடருமென மாற்றுவதில் என்ன தயக்கமெனக் கேள்வியெழுப்பினார் அறிஞர் அண்ணா. பல எதிர்ப்புகளை மீறி 1963 ஏப்ரல் 23ஆம் தேதி அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தி எதிர்ப்புக்கான குரல்கள் ஆங்காங்கே ஒலித்த நிலையில்,

* மொழிக்காக தீக்குளித்த உலகின் முதல் வீரர் கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்கள், ஆட்சி மொழியாக இந்தி அரியணையில் அமர்த்தபட்ட செய்தி அறிந்து சின்னசாமி வருந்தி, ’தமிழை காப்பாத்துங்க ஐயா’ என்று அன்றைய முதலமைச்சர் எம்.பக்தவச்சலத்திடம் காலில் விழுந்து கதிறினார். அதனை அலட்சியமாக இடறி தள்ளி சென்று விட்டார் அன்றைய முதலமைச்சர். ”தமிழ் வாழ வேண்டும் என்று நான் சாகிறேன்”, ”இன்று நான் செய்த காரியம் நிச்சயம் வெல்லும்” என்று கீழப்பழுவூர் சின்னச்சாமி தீக்குளித்து 25/1/1964 அன்று ஈகியரானார்.

* தமிழ்நாடு முழுவதும் மாணவர் பேரணி 25/1/1965 ஆம் நாள் மாவட்டம் தோறும் நடந்தது, அப்போது மதுரை பேரணியில் மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட செய்தி கோடம்பாக்கம் சிவலிங்கத்தை சினம் கொள்ள வைத்தது, ”நாளைக்கு இந்திய ஆட்சி மொழியாக போகிறது அன்று நமக்கு துக்க நாள் என கருப்பு சின்னம் அணிய போகிறேன்” என்று போராட்டக் களத்தில் குதித்தார். ”உயிர் தமிழுக்கு உடல் தீயிற்கு” என சொல்லி, இந்தி ஆட்சி மொழியாவதை கண்டித்து 26/1/1965 அன்று சிவலிங்கம் தீக்குளித்து ஈகியரானார்.

* இந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய அரசு நடவடிக்கையை விருகம்பாக்கம் அரங்கநாதன் அவர்களை கொந்தளிக்க வைத்தது, தன்னை எரித்துக் கொண்டாவது தமிழை வாழ வைக்க விரும்பி 27/1/1965 ஆம் நாள் இரவு 2 மணிக்கு தன் உடலில் தீயிட்டு கொண்டு உயிரிழந்து ஈகியரானார். அமெரிக்க நியூயார்க் நகரில் கூடிய உலக நாடுகள் ஒன்றிய (ஐநா) அவை கூட்டத்தில் சிவலிங்கம் மற்றும் அரங்கநாதன் தீக்குளித்தை பின்னணி பற்றி விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

* கீரனூர் முத்து அவர்கள் இந்தி திணைப்பை இனியாவது நிறுத்துங்கள் என முதலமைச்சர் எம்.பக்தவச்சலத்திற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு 27/1/1965 அன்று நஞ்சுண்டு உயிர்துறந்து ஈகியரானார்.

* சிவகங்கை இராசேந்திரன் அவர்கள், இந்தி எதிர்ப்பு முழக்கத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 3000 பேருக்கு மேல் 27/1/1965 நாள் சிதம்பரம் நோக்கி ஊர்வலமாக சென்றனர் இக்கூட்டத்தை களைப்பதற்கு காவல்துறையினர் கற்களை வீசி கலைக்க முடியாததால், காவல்துறையும் இராணுவமும் வரவழைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இராசேந்திரன் அவர்களின் நெற்றியில் துப்பாக்கி கொண்டு பாய்ந்து பலியாகி ஈகியரானார். இதில் பலர் காயமுற்றனர்.

* சத்தியமங்களம் முத்து அவர்கள், ”தமிழ் வாழ்க இந்தி ஒழிக” என குரல் எழுப்பினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ”தமிழ் மாணவர்கள் தாக்கப்படக்கூடாது, தமிழ் வாழ வேண்டும், தமிழினம் காக்கப்பட வேண்டும்” அதற்காக தான் நான் (11/2/1965) தீக்குளித்தேன் என காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்து, 18/2/1965 அன்று உயிரிழந்து ஈகியரானார்.

* மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் இந்தி எதிர்ப்புக்கு எதிராக போராடினர், அப்போது அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் என்ற தலைமை ஆசிரியரான இவர், மாணவர்கள் பங்கேற்கும் இந்திய எதிர்ப்பு ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றார். அரசின் அடக்குமுறையும் தமிழ் உணர்வாளர்களின் உயிரிழப்பும் ஆசிரியர் வீரப்பனை பதற வைத்தது. ”இந்தி திணிக்கும் முறைகேடான அரசின் கீழ் ஆசிரியராக பணியாற்றுவது முறையற்றது” என்று தீர்மானித்து கடிதம் எழுதிய ஆசிரியர் வீரப்பன் அவர்கள் 10/2/1965 ஆம் நாள் பதிவஞ்சல் அனுப்பி மறுநாள் 11/2/1965 ஆம் நாள் தன் உடலில் தீயிட்டுக் கொண்டு அன்று உயிரிழந்து ஈகியரானார்.

* விராலிமலை சண்முகம் அவர்கள்: ”தமிழினமே என் போன்றோர் உடலை பார்த்தாவது விழித்தெழு தமிழ்த்தாயின் பாதம் இரத்தத்தால் கறைபடிந்துள்ளது, உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு 25/2/1965 அன்று நஞ்சுண்டு உயர்துயர்ந்து ஈகியரானார்.

* கோவை பீளமேடு தண்டபாணி அவர்கள்: தமிழுக்கு வாழ்வை தேடிய மனம் அவரின் வாழ்வை பொருட்படுத்த மறுத்து, ”உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என கடிதம் எழுதி வைத்துவிட்டு 2/3/1965 அன்று நஞ்சுண்டு உயிரிழந்து ஈகியரானார்.

* மயிலாடுதுறை சாரங்கபாணி அவர்கள்: தமிழை பாதுகாக்கும் தீர்வு கிடைக்கவில்லையே என்ன கவலைப்பட்ட நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு ’தமிழ் வாழ்க’ என்று உயிர் துறந்து ஈகியரானார்.

நான்காம் மொழிப்போர்

1986 ஆம் ஆண்டு ‘நவோதயா பள்ளிகள்’ தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது அதை ‘இந்தி திணிப்பு’ என கலைஞர் எதிர்த்து போராட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து இன்று வரை பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டு மக்கள் போராடிக்கொண்டே இருக்கிறோம்.

தமிழ்நாடு எதிர்க்கும் புதிய கல்விக்கொள்கையின் வடிவம்தான் மும்மொழிக்கொள்கை. இந்தி மூன்றாவது கட்டாயமொழி என்றனர். அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் நீங்கள் விரும்பிய மொழியை முன்றாவது மொழியாக கற்றுக்கொள்ளலாம் என்றுவிட்டனர். ஆனால், எந்த மொழியினை நாம் விரும்பினாலும், அந்த மொழிப்பாடத்தினை கற்றுத்தர பள்ளியில் ஆசிரியர்கள் இருப்பார்களா? எந்த ஆசிரியர் இருக்கிறாரோ அந்த மொழியினை கற்றுக்கொள்ளலாம் என்கிற வடிவில் மீண்டும் இந்தி திணிப்புதான் நடைபெறும் வேளை இதுதான், பிறகு இந்திக்கு பின் செத்தமொழி சமசுகிருதம் வளர்க்க வேகமாக ஒன்றியரசு முயல்கிறது, இதனால் ஆரியத்துக்கு அடிமையாக்க முயற்சிக்கிறது, இதனால் எந்த வடிவத்திலும் மும்மொழி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

ஏன் இந்தியினை எதிர்க்கிறீர்கள் என்று கேட்டால், மொழிகளுக்கு இடையில் சமத்துவம் இருந்தால்தான் மொழி பேசும் மக்களுக்கு இடையில் சமத்துவம் இருக்கும், ஒரு மொழி திணித்தால் எந்த மொழி திணிக்கப்படுகிறதோ அந்த மொழிக்கு உரியவர்கள்தான் எல்லா நிலையிலும் ஆதிக்கத்தில் வருவார்கள். “இந்தி திணிப்பு என்பது வெறும் மொழியினை பற்றிய செய்தி அல்ல. நம்முடைய கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, சந்தை, பண்பாடு என அனைத்தும் பறிபோகும்.

ஆதலால் தான் நம் முன்னோர்கள் நம் மொழிக்காகவும், நமக்காகவும் உயிர் துறந்துள்ளனர். அதனால் ’மொழிப்போர் ஈகியர் நாளில்’ தமிழ்மொழி காப்போம் இந்தி ஆதிக்கத்தை ஒழிப்போம்எனஉறுதிமொழி எடுப்போம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved