🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டாக்டருக்கு படிக்க சமஸ்கிருதம் கட்டாயமா? அடித்து நொறுக்கிய பனகல் அரசர்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சி சார்பில் சென்னை மாகாண முதல்வராக  இருந்த பனகல் அரசர் என்றழைக்கப்பட்ட "பி.ராமராய நிங்கர்" அவர்களின் 157 வது பிறந்தநாள் இன்று. 

80 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது.அதில் அன்றைய சென்னை மாகாண முதல்வர் பனகல் அரசர் பி.ராமராய நிங்கர் (இவர் பற்றி மேலும் விரிவாக அறிய நீல நிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்)  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பார்ப்பனர் அல்லதோர் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வர் ஆனவர் அவர். முதலவருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்ற எண்ணத்தில், பனகல் அரசரைப் பற்றிக் கேலியும் கிண்டலுமாக சமஸ்கிருத சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.எல்லோரும் கை கொட்டிச் சிரிக்கின்றார்கள்.அமைதியாக அமர்ந்து இருக்கின்றார் பனகல் அரசர்.

நிறைவாக, "இப்போது முதல்வர் பேசுவார் என்று அறிவிக்கப்படுகிறது".

பனகல் அரசர் தனது பேச்சைத் தொடங்குகிறார்.

தமிழில் அல்ல… தெளிவான சமஸ்கிருதத்தில்.

பனகல் அரசர் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அதுவரை பேசியவர்களைவிடச் சிறப்பாக, அவர்களுக்கு பதில் சொல்வது போல், இலக்கியத் தரம் வாய்ந்த சொற்பொழிவை சமஸ்கிருதத்தில் ஆற்றி முடிக்கிறார்.

முதல்வர் சமஸ்கிருதத்தில் எம்.ஏ., படித்தவர் என்ற தகவல் அவர்களுக்கு தெரியாததால், அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானப்பட்டுப் போகிறார்கள். அந்த மாநாடு முடிந்த சில நாட்களுக்குள் ஓர் உத்தரவை பிறப்பிக்கிறார் முதல்வர்.

அதுவரை மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பாடமாக இருந்த சமஸ்கிருதத்தை நீக்கும் உத்தரவு அது.

சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் அதாவது பார்ப்பனர்கள் மட்டும்தான் மருத்துவக் கல்வி படிக்கவேண்டும். மற்றவர்கள் படிக்கக்கூடாது என்ற ‘பரந்த’ உணர்வே அதற்கு காரணம் என்பதை உணர்ந்தார் முதல்வர்.

அதனால் சமஸ்கிருதத்தை மருத்துவப் படிப்பு நுழைவுக்கு் ஒரு தகுதி என்றிருந்த சட்டத்தை நீக்குகிறார்.

முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு வருகிறது.

மருத்துவத் துறையில் தகுதி, திறமை போய்விடும் என்கிற கூப்பாடு எழுகிறது.

அதைப்புறம் தள்ளுகிறார் முதல்வர்.

அதன் பிறக தான் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்த்துவர்கள் என்று நிறையபேர் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள்.

இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களை கொண்ட ஊர் என்ற பெயரைப் பெற்று இருக்கின்றது சென்னை. வெளிநாட்டினர் கூட இங்கு வந்து இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு போகும் நிலைமை உருவாகிய இருக்கின்றது.

பனகல் அரசரின் இந்த உத்தரவு எவ்வளவு பெரிய சமூக புரட்சிக்கு வித்திட்டது என்பதை பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் நன்றியுடன் பனகல் அரசை நினைவுகூற வேண்டும்.

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு – செரியன், சாலமன் விக்டர் போன்ற உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல.

பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக பனகல் அரசர் பற்றி மேலும் பல்வேறு விவரங்கள் தெரியவருகிறது. முதல்வர் அறிக்கையின் விவரம் வருமாறு, 

திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!

அதிகாரத்தை நாம் அடைவதன் மூலம் நமது மக்களுக்கு நம்மால் எத்தகைய நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை, மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை, பெண்களுக்கு வாக்குரிமை, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற எண்ணற்ற புரட்சிகரத் திட்டங்களால் காட்டியவர் அவர்! பனகல் அரசர் பற்றிய துணைப்பாடக் கட்டுரைதான் பள்ளி மாணவராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாக விளங்கியது.

"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியார் போற்றிய பனகல் அரசர் வழிநடப்போம்! தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்! என கூறியுள்ளார்.

நன்றி : கூத்தன் செந்தமிழ்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved