🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆளும்கட்சிக்கெதிராக ஒரு சமூகத்தை நிறுத்துவது ஆரோக்கியமான அரசியலாகுமா?

ஆளும்கட்சிக்கெதிராக ஒரு சமூகத்தை நிறுத்துவது ஆரோக்கியமான அரசியலா?

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 224-வது நினைவுநாள் கடந்த 16 ஆம் தேதி தமிழகமெங்கும் மிகுந்த எழுச்சியோடு அனுசரிக்கப்பட்டது. சுதந்திரப்போராட்ட வீரனின் நினைவுநாளை திமுக தலைமை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதைக் கண்டிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி, ஒட்டுமொத்த சமூகத்தையும் (கம்பளத்தார்) ஆளும்கட்சிக்கு எதிராக நிலைநிறுத்துவது சரியான, ஆரோக்கியமான அரசியலாக இருக்காது என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

சாதி ஆதிக்க மனநிலை புரையோடிப்போயுள்ள தென்மாவட்டங்களில் ஒவ்வொரு சாதியும் தங்கள் வலிமையை ஜெயந்தி, குருபூஜை என்ற பெயர்களில், அவரவர் சமூகம் சார்ந்த தலைவர்களை கொண்டாடுவதின் மூலம்  வெளிப்படுத்தி வருகின்றனர். 

ஒவ்வொரு சாதியினராலும் தங்களுக்கானவர்களாக அடையாளப்படுத்தப்படும் தலைவர்கள் அனைவரும் நாட்டிற்காக தங்கள் வாழ்க்கை, இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் தானே தவிர, சொந்த சாதிக்காக அல்ல என்ற உண்மை வசதியாக மறக்கப்படுகிறது. தங்கள் சமுதாயத்திலிருந்து தொடர்ச்சியாக ஆளுமைமிக்க தலைவர்கள் உருவாகாமல் அல்லது உருவாக்க முடியாமல் போவதும், தனித்தன்மையோடு தலைதூக்கும் தலைவர்கள் உட்சாதி பூசல்களில் கரைசேர முடியாமல் போவதும், சமூகமாக இயங்கி தலைவர்களை உருவாக்கும் நிலை இல்லாமல் இருப்பதால், வரலாற்று நாயகர்கள் குறிப்பாக மன்னர்கள் / சிற்றரசர்கள் / மறைந்த அரசியல் தலைவர்கள் ஏகமனுதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதிக்குள் அடைக்கப்படுவதில் எந்த சாதியும் விதிவிலக்கல்ல. 

நிகழ்கால அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் சுயவலிமை, ஆளுமை குன்றிய சமூகங்கள், ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் போராடிய தலைவர்களை முன்னிறுத்தி சமூகத்தை ஒருங்கிணைக்கவும், அடையாளப்படுத்திக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்கின்றன. இதனால் சிறுமைப்பட்டுப்போவது என்னமோ அந்தந்த தலைவர்கள் தான். நாடுமுழுவதும் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய தியாகிகளை, சாதிக்குள் அடைப்பது மட்டுமல்ல, அதையொட்டி ஏற்படும் வன்முறையும், கலவரங்களும், அப்பெருமக்களின் தியாகம் மறைக்கப்பட்டு, பொதுமக்கள் வெறுக்கவும், விமர்சிக்கவும் காரணமாகிறது. ஒவ்வொரு தியாகிகளின் குருபூஜை, ஜெயந்தி தினங்களில் 144 தடை உத்தரவு போட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய நிலையில்தான் நாகரீக சமூகத்தில் சாதிய அமைப்புகளின் பங்களிப்பாக உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

மக்களைப் பண்படுத்த வேண்டிய அரசியல் கட்சிகள், எளிதில் பற்றி எரியக்கூடிய சாதிய உணர்வுகளுக்கு சாம்பிராணி போட்டு சமூகங்களுக்குள் புகைச்சலை வளர்த்த காலம் இருந்தது. கல்வி, தொழில்புரட்சி, அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் சாதி பின்னுக்குத்தள்ளப்பட்டு, வளர்ச்சி முன்னிறுத்தப்பட்டு வரும் இன்றைய வாழ்வியலில், தமிழ்தேசியம் என்ற பெயரில் பொய்யும், புரட்டும் கலந்து உண்மை வரலாற்றை திரித்து, தெலுங்கு மொழி பேசுவோரை குறிவைத்து செய்யப்படும் பிற்போக்கு அரசியல் சக்திகளை அரசுகளும், நீதிமன்றங்களும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதால், சாதியாய் அணிதிரட்டி எதிர்தாக்குதல் செய்ய வேண்டியநிலைக்கு சமூகங்கள் தள்ளப்பட்டிருப்பதையும் ஒதுக்கிட முடியாது. 

பெரும்பான்மையைச் சார்ந்து இயங்கும் சனநாயகத்தில், சிறுபான்மை வாக்குகள் கொண்ட சமூகங்கள் அரசியலில் மதிக்கப்படுவதும் இல்லை, அங்கீகரிக்கப்படுவதும் இல்லை. நல்வாய்ப்பாக, விளிம்புநிலை சமூகங்கள் அரசியல் அதிகார மட்டத்திலிருந்து முழுமையாக அப்புறப்படுத்தப் பட்டிருந்தாலும், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இடஒதுக்கீட்டுக் கொள்கையில் தெளிவோடும், உறுதியோடும் தமிழகம் இருந்தபடியால் 69 சதவீத இடஒதுக்கீடு அனைவரையும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் கரைசேர்த்து விட்டுள்ளது. இதனால் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் கோபம் கூர்மையடையாமல் போனது. அரசியல் அதிகாரம் குறித்து அச்சமூகங்கள் அவர்களும் கவலை கொள்வதுமில்லை.

ஆனால் சிறுபான்மை என்று புறக்கணித்து விடவும் முடியாத, பெரும்பான்மைக்குள் வகைப்படுத்தவும்  முடியாத அதேவேளையில், நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி,தோல்விகளை நிர்ணயிக்கும் எண்ணிக்கை வலிமையை  பெற்றுள்ள கம்பளத்தார் சமூகத்தை அரசியலில் இருந்தும் முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. எண்ணிக்கை பெரும்பான்மை ஜனநாயகத்தில் அதிகார அரசியல் கைகூடாமல் போயிருந்தாலும், இச்சமூகத்திற்கு அரசியல் அதிகாரம் புதிதொன்றுமல்ல. ஆட்சி, அதிகார அரசியல் வரலாற்றில் ஆழமான வேர்களை தேசம் முழுவதும் பரப்பியிருந்த சமூகம். இன்றும் பல கிராமங்களில் ஒற்றைக் குடும்பமாக வாழ்ந்தாலும் தனித்துவத்தோடும், அதிகாரத்தோடும் வாழ்வதை இன்றும் காணலாம். 

அரசியலை முற்றிலும் துறந்து ஒதுங்கிக்கொள்ளமுடியாத வாழ்வியல் கம்பளத்தாருடையது. அது பாரம்பரியத்தாலும், வசிப்பிடத்தாலும், தொழிலாலும், வாழ்வியலாலும் பின்னி பிணையப்பட்டுள்ளது. எனவே, நேரடி அதிகாரத்தில் கிடைக்க வேண்டிய பங்கும், மரியாதையும் தங்கள் சமூகத்திற்கு கிடைக்கவில்லை யென்றாலும், மாற்று சமுதாயத்தினாரால் தங்கள் அடையாளமாக முன்னிறுத்தப்படும்  தலைவர்களுக்கு அரசியல் கட்சிகள் கொடுக்கும் மரியாதையும், கௌரவமும், கீர்த்தியில் யாருக்கும் குறைவில்லாத தங்கள் சமுதாய தலைவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் சமரசமின்றி வாழ்பவன் கம்பளத்தான். அப்படி ஒவ்வொரு கம்பளத்தாரின் நெஞ்சிலும் நிலைகொண்டுவிட்ட கட்டபொம்மனுக்கு ஏதாவது செய்துவிட்டால் போதும், அதுவே அவனை பேருவகை கொள்ளச்செய்யும்.

அந்தவகையில், திமுக தலைவர் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தங்கள் தலைவருக்கு கொடுத்த மரியாதையை, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு செய்யவில்லை என்பது ஒருசாராரின் கவலையாகவும், குற்றச்சாட்டாகவும் உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுக தலைவர், ஈரோடு, கரூர் ஆகிய இரண்டு இடங்களிலும், கொரோனா பொதுமுடக்கத்தில் ஒருமுறை அண்ணா அறிவாலயத்திலும் மாவீரனது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதற்கு அப்போதே மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொண்ட கம்பளத்தார்கள், முதல்வராக திமுக தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டபின், அன்று செய்ததை இன்று செய்திருந்தால் அது ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்திருக்கும் என்பதே சாமனியனின் ஆதங்கம்.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தலைநகர் சென்னையில் சிலை வேண்டுமென்ற கம்பளத்தாரின் அரைநூற்றாண்டு கால கோரிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்து ஆட்சியைப்பிடித்த திமுக, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் முழு உருவசிலையை நிறுவி, அதை தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்டு, தனி சாதிக்கான வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.

இந்த சிலை வைக்கப்பட்டதின் பயனாக சமுதாயத்தினர் தாண்டி கட்டபொம்மனாரின்பால் அன்பும், மரியாதையும், ஈர்ப்பும் கொண்ட திரைநட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு சமுதாய அமைப்பினர், சுதந்திரப்போராட்ட வீரர்கள், தமிழ் உணர்வாளர்கள் என பலரும் சாரை சாரையாக அணிவகுத்து வந்து கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்தியதை இருதினங்களுக்கு முன் கண்டு பூரித்தோம் என்பதையும் இந்த நேரத்தில் சீர்தூக்கிப்பார்க்க வேண்டியுள்ளது.

இந்த ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவிர வேறு எந்த தலைவரும் தங்கள் சமூக ஊடகப்பக்கங்களில் இட்ட பதிவைத் தவிர, நேரடியாக நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று கட்டபொம்மனாருக்கு மரியாதை செலுத்தியதாக தெரியவில்லை. இவைகளெல்லாம் அட்மின்களால் சடங்குகளாக செய்யப்படுவது தானே தவிர, உணர்வுப்பூர்வமானதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இந்த சம்பிரதாய நடைமுறையைக்கூட திமுக செய்யாமல் போனதில், தனித்துவமான தமிழக அரசியலில் எப்படியான வரலாற்று ஞானமுள்ளவர்களை அட்மின் குழுவில் வைத்துள்ளார்கள் என்பதுபற்றி கவலை கொள்ளாமல் இருக்கமுடியாது. பாரபட்சமற்ற சிந்தனையாளர்களின் மேற்பார்வையில், தங்கள் சமூக ஊடக பக்கங்கள் கையாளப்படுவதை அரசியல் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

ஆனால் இதை ஒரு சாக்காக வைத்து, தமிழகத்தில் வாழும் ஒட்டுமொத்த கம்பளத்தாரையும் ஆளும்கட்சிக்கு எதிரானவர்களாக சித்தரிக்க முயல்வதற்கு சமுதாயத்தின் மூத்த தலைவர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக கவுன்சிலர் மாசிலாமணி, இதுவரை கேள்விப்படாத அல்லது அப்படியொரு அமைப்பாகவே இல்லாத "இராஜகம்பள (தொட்டிய நாயக்கர்) சமுதாயம்-தமிழ்நாடு" என்ற பெயரில், கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்! நாயக்கர் சமுதாயத்தை வஞ்சித்த திமுக அரசை கண்டிக்கின்றோம். வராதே, வராதே, நாயக்கர் பகுதிகளில் ஓட்டுக்கேட்டு வராதே! என்ற வாசங்களோடு சமூக ஊடகங்களில் பார்த்தபொழுது, அரசியல் கட்சிகளின் உள்ளடி வேலையாக இருக்கும் என்று எண்ணத்தோன்றியது. தென்மாவட்டத்தை மையமாக வைத்து பரவிய இந்த செய்தி, மாற்றுக்கட்சியைச் சேர்ந்த நம்மவர்களால் சமூக ஊடகங்களிலும், தினசரி ஒன்றின் வாயிலாகவும் மிகப்பெரிய அளவில் பரப்பப்பட்டு வருவதின் மூலம், ஒருசிலரின் அரசியல் ஆதாயத்திற்காக சமுதாயத்தை பலியிட துணிந்துவிட்டது வேதனை தருவதாக தெரிவித்தார். 

மாவீரன் கட்டபொம்மனை மதிக்கிறோம் என்றால் ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்று பொருள். அப்படியிருக்க அவரை மையப்படுத்தி இயங்கும் ஒரு சமுதாயம், எப்படி ஒரு சமூகநீதி இயக்கத்தை உள்ளே வரக்கூடாது என்று சொல்ல முடியும்? என்றார். அரசியலில் மட்டுமல்லாது எல்லாத்துறையிலும் சமுதாயம் எட்ட வேண்டிய உயரம், போக வேண்டிய தூரம் அதிகம். இப்போதுதான் துளிர்விடத் தொடங்கியுள்ளோம், அதற்குள் வேர்களில் வெந்நீர் ஊற்ற வேண்டாமே என்றவர், இந்த ஆபத்தான பாதையை யார் தேர்ந்தெடுத்தாலும் சாதியை செங்குத்தாக பிளப்பதற்கு ஒப்பானது, இதை மாற்றுக்கட்சியைச் சேர்ந்த உறவுகள் உணர வேண்டும் என்று எச்சரிக்கிறார்.

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக, புதூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் எம்.செல்வராஜ், ஒரு சிறு சம்பவத்தை எடுத்துக்கொண்டு அது மட்டுமே கம்பளத்தாரின் வாழ்வியல் பிரச்சினை என்பதுபோல் சித்தரித்து, கட்சி மீதும், மாண்புமிகு அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் மீதும், ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை அபாண்டமான பழி சுமத்தி சேற்றைவாரி இரைத்துள்ளனர். 

உண்மையில், தூத்துக்குடி மாவட்ட திமுக வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்பட்டு, வடக்கு மாவட்டச் செயலாளராக மாண்புமிகு அமைச்சர் கீதாஜீவன் உள்ளார். இதில் தூத்துக்குடி, விளாத்திக்குளம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளவர், துத்துக்குடி தெற்கு மாவட்ட எல்லைக்குள் உள்ள பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி அவர்கள் செல்வதற்கு தடையாக உள்ளார் என்று கூறுவதில் என்ன லாஜிக் உள்ளது?. அதுவும் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் ஒரு அமைச்சராக இருக்கும்போது என்கிறார்.

மேலும், திருமதி.கீதாஜீவன் அவர்கள் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றக்கொண்ட பின்னர் தான், புதூர் ஒன்றிய திமுக வில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரான என்னை (எம்.செல்வராஜ்) முதன்முதலாக ஒன்றியச் செயலாளராக்கி அழகுபார்த்தார். ஒரு சாமானிய பொருளாதார பின்புலமுள்ள எனக்கு எத்தனையோ இடைஞ்சல்கள் வந்தபோதும், அமைச்சர் எனக்கு பக்கபலமாக இருப்பதை நாடறியும். கட்டபொம்மனார் மீது அக்கறையுள்ளதாகக் காட்டி, "சாதியை பலிகடாவாக்கி அரசியல் செய்ய வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

திமுக மற்றும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பேசிய விருதுநகர் வடக்கு மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் அமைப்பாளர் வை.மலைராஜன், யாருக்கும் வரலாறு தெரியாது என்று நினைத்து, வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் விமர்சனம் என்ற போர்வையில் அவதூறு அள்ளி வீசப்படுகிறது. 

ஆங்கிலேயர்களால் அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பி, நடுமண்டபத்தில் சிலை வைத்து, மாவீரன் கட்டபொம்மன் புகழை மீண்டும் நிலைநிறுத்தியதோடு, வீழ்ந்து கிடந்த கம்பளத்தார் சமுதாயத்திற்கு முகவரி கொடுத்தது திமுக ஆட்சியும், கலைஞரும் என்பதை விசுவாசத்திற்குப் பெயர்போன கம்பளத்தார்களுக்கு தெரியும். 

மாவீரன் கட்டபொம்மனுக்கு கலைஞர் செய்ததுபோல் வேறுயாராவது செய்ததுண்டா? என்பதை, எந்த ஒரு அரசர்/பாளையக்காரரின் அழிக்கப்பட்ட கோட்டை ஏதாவது மீண்டும் கட்டி எழுப்பட்ட வரலாறு சுதந்திர இந்திய வரலாற்றில் ஒன்றையாவது சுட்டிக்காட்டமுடியுமா?. 

பரங்கியர்களின் பீரங்கி குண்டுகளால் வீழந்த பாஞ்சைக்கோட்டையை ஒரே வாரத்தில் மீண்டும் கட்டியெழுப்பிய ஊமைத்துரை கட்டபொம்மனின் உடன்பிறந்த தம்பியென்றால், 170 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் கோட்டையை கட்டியெழுப்பி, மாவீரன் புகழுக்கு உயிர்கொடுத்த கலைஞர் அவர்கள் கட்டபொம்மனின் உடன்பிறவா தம்பியல்லவா? 

நெருக்கடிநிலை (எமர்ஜென்சி) காலகட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை திறந்துவைத்துப்பேசிய கலைஞர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோட்டைகட்டி திறப்புவிழா மேடையில் இருந்துகொண்டு நான் நெருக்கடிநிலையை ஆதரிக்க முடியுமா? என்று கேட்ட வரலாறு இவர்கள் அறிவார்களா?

உயிரை இழந்தாலும் இழப்பேனே தவிர, தன்மானம், சுயமரியாதை இழந்து உயிர்வாழ மாட்டேனென்று, உயிரை துச்சமென மதித்து தூக்குமேடையேறிய கட்டபொம்மன் காட்டிய அதேவழியில், நெருக்கடிநிலையை எதிர்ப்பதாக பாஞ்சை மண்ணில் நின்று சூளுரைத்தாரே கலைஞர், அவர் வளர்த்த இயக்கமா கம்பளத்தாரை வஞ்சிக்கிறது என்கின்றீர்? 

கோட்டை திறந்த கையோடு "கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம்" நிறுவி மகிழ்ந்தாரே அதைத்தான் மறுக்கமுடியுமா?

இதுமட்டுமா? தொட்டிய நாயக்கர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததின் பயனை, உலக நாடுகளிலுள்ள பெருநிறுவனங்களிலெல்லாம்  லட்சங்களில் சம்பளம் வாங்க்கிக்குவிக்கும் பொறியாளர்களின் மனசாட்சி சொல்லுமா? கம்பளத்தாரை திமுக வஞ்சித்து விட்டதென்று...

வள்ளுவர் கோட்டத்தில் கட்டபொம்மனுக்கு அஞ்சல்தலை வெளியீட்டு விழாவை தலைமையேற்று நடத்தியவர் கலைஞர் என்பதை யாராவது மறுக்கமுடியுமா?  

12 மாவட்டங்களில் கம்பளத்தார் இருப்பதாக கூறிவிட்டு விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட அமைச்சர்களை மட்டும் குறிவைத்து தாக்கும் குள்ளநரித்தனம் ஏன்? மற்ற மாவட்ட உறவுகளையெல்லாம் சாதி விலக்கு செய்து விட்டீர்களா? இல்லை அவர்களெல்லாம் கம்பளத்தார்களே இல்லை என்று மரபணு பரிசோதனை செய்துவிட்டீர்களா? அங்கெல்லாம் உங்கள் பொய்மூட்டை அரியாசனம் ஏறாது என்பதாலா?

மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்கள் மீது சேற்றை வாரிவீசும் நேற்றைய மழையில் முளைத்த காளான்கள் வரலாறை மறைத்தும், திரித்தும் பதிவிடுவதால் உண்மை மறைந்துபோகுமா? 

எம்ஜிஆர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு வ.ஊ.சி மாவட்டம் அமைந்தபின், திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டத்திற்கு கட்டபொம்மன் பெயர் வைக்க வேண்டுமென்று கேட்டபோது, அன்றைய திருநெல்வேலி மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்தவர் பாஞ்சாலங்குறிச்சி வ.ஊ.சி மாவட்டத்திற்குள் சென்ருவிட்டது, திருநெல்வேலிக்கு சம்மந்தமே இல்லாத கட்டபொம்மன் பெயரில் மாவட்டம் இருக்க முடியும் என்ற எதிர்ப்பையும் மீறி, அந்த மாவட்டத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, முதலாளிக்கு வாக்கு கொடுத்துவிட்டேன், அதை மீறமாட்டேன் என்று ஒரே இரவில் திருநெல்வேலி-கட்டபொம்மன் மாவட்டம் என்று அறிவித்தாரே எம்.ஜி.ஆர். இவர்கள் சேற்றைவாரி இரைக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தான் எம்.ஜி.ஆரின் முதலாளி என்பது தெரியுமா?

தொட்டியநாயக்கர் உட்பிரிவில் "எர்ர கொல்லவார்" பிரிவு சேர்க்காமல் விடுபட்டுப் போனதனால், MBC சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் ஒன்றுபட்ட  சேலம் மாவட்ட கம்பளத்தார்கள் பட்ட கஷ்டமும், வேதனையும், இழப்பும் யார் அறிவார்? அன்று நாமக்கல் தொட்டிய நாயக்கர்கள் போராட்டத்தில் பிறந்த குழந்தைதான் விடுதலைக்களம் கட்சி என்பது பலருக்கும் தெரியாத வரலாறு. 

பல ஆண்டு போராடியும் பெறமுடியாத வெற்றியை, 1996-இல் மீண்டும் கழக ஆட்சி அமைந்தவுடன், முதல்வர் கலைஞருடனான ஒரே சந்திப்பில் சாத்தியமானதற்கு இன்றும் வாழும் மூத்த வழக்கறிஞர் நாமக்கல் பழனிச்சாமி, பிடிஓ நாகப்பன் ஆகியோரே சாட்சி. சேலம் மாவட்ட கம்பளத்தாருக்காக முதல்வர் வீட்டுக்கதவை திறந்த சாவி விருதுநகர் மாவட்டத்தில் இருந்தது. அந்த சாவி தான் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

கொங்குகோட்டையிலே பாஞ்சைவேந்தனுக்கு சிலைவைத்தபோது, கோவை மாவட்ட உறவுகள் ஓடி வந்து அழைத்துச்சென்றது இதே கே.கே.எஸ்.எஸ்.ஆரைத் தானே. ஒரு சாதி அமைப்பு நடத்தும் உள்ளூர் நிகழ்ச்சியில் வேறு மாவட்ட அமைச்சர் தலைமை தாங்கி அதில் உள்ளூர் அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக நடந்த வரலாறு இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!.

90-களில் சிலநூறு குடும்பங்கள் வசிக்கும் தலைநகர் சென்னையில் கட்டபொம்மனுக்கு தபால் தலை வெளியீட்டுவிழாவா? முதல்வர் தலைமையில் நிகழ்ச்சி, மத்திய அமைச்சர்களெல்லாம் வருகை. வள்ளுவர் கோட்டத்தை நிரப்ப ஆட்களுக்கு என்ன செய்ய?. அரசுப்பேருந்தை இலவசமாக அனுப்பி வைக்கிறேன். காடு கழனியில் காலெமெல்லாம் சுற்றித்திரியும் கம்பளத்தாரை அழைத்துவந்து அரங்கை நிரப்புங்கள் என்று கட்டளையிட்டவர் தானே இந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

சமுதாயத்திற்கு செய்ததை பட்டியலிடலாம். தனி நபர்களுக்கு செய்ததையும், செய்வதையும் பொதுவெளியில் சொல்லமுடியுமா?. 

எனவே, 'கருத்துக்களை முன்வைக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், சமுதாயத்தின் பெயரில் அவதூறு பரப்புவதால் என்ன சாதித்துவிடப்போகின்றீர்?. உண்மைக்கு மாறான அவதூறுகளால் சமுதாயத்தில் அந்நியப்பட்டுப்போவீர்கள் என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்று கூறினார்.

கடந்த ஜனவரி 29 இல் கலைவாணர் அரங்கில் முப்பெரும் விழாவை நினைவு கூர்ந்து பேசிய வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், இந்த நேரத்தில் ஒளிவு மறைவின்றி ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். முப்பெரும்விழா நடத்துவதென முடிவு செய்துவிட்டோம். ஆனால் யாரை தலைமையேற்க வைப்பது என்ற குழப்பம் இறுதிவரை நீடித்தது. கம்பளத்தார் நிகழ்ச்சி என்றால் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இல்லாமல் நடந்திடுமா?. நடத்தித்தான் பார்க்கலாமே என்று இறுதிவரை முயற்சி செய்தோம். இறுதியில் இயற்கை அவரிடமே கொண்டு நிறுத்தியது. முன்பின் அறிமுகமில்லாத எங்களின் முதல் சந்திப்பின் பரபரப்பு, நாங்கள் உள்ளே நுழையவும், அவர் வெளியே கிளம்பவும் சரியாக இருந்தது. அவசரமாக கார் அருகே ஓடி, இராஜகம்பளத்தார் என்றோம். முதல்வரின் அவசர அழைப்பு, அப்புறம்  பார்க்கலாம் என்று சொல்லி சென்றுவிட்டார்.

முதல்வரின் சந்திப்பு முடிந்து இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பியவர், அருப்புக்கோட்டை தொழிலதிபர் கிருஷ்ணன் அவர்களை அழைத்து, "யாரோ நம்ம ஆளுக வந்தாங்க, காலைல 7 மணிக்கு வீட்டுக்கு வரச்சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். அருப்புக்கோட்டையில் உள்ள அண்ணனுக்கு அமைச்சரிடம் யார் சென்றது என்று தெரியாமல், நல்லாசிரியர் ஐயா சங்கரவேலுக்கு தகவல் சொல்ல, அவர் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்து அமைச்சர் வரச்சொன்ன செய்தியை சொன்னார். இந்த நேரத்தில் இதை சொல்வதற்குக் காரணம், முப்பெரும்விழா மேடையில், நானும் கம்பளத்தார் வீட்ல வளர்ந்தவன் தான் என்று சொன்னது வேறும் வார்த்தையில் மட்டுமல்ல, செயலிலும் அப்படித்தான் இருந்தார்.

எங்களைப் பொறுத்தவரையில், எல்லாக்கட்சிகளிலும் நம்மவர்கள் இருக்கிறார்கள், அதுவும் காலம் காலமாக இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் போதிய அங்கீகாரம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், பெரும்பான்மையை மையப்படுத்தி நடக்கின்ற அரசியல் இப்படித்தான் இருக்கும். இதற்கு ஒரே தீர்வு விகிதாச்சார பிரதிநிதித்துவம் மட்டுமே. சாதிவாரி கணக்கெடுப்பு தேசிய அளவிலான விவாதம் ஆகியிருப்பதின் மூலம் அதற்கான சூழல் கனிந்திருக்கிறது. இந்த சூழலை பக்குவமாகப் பயன்படுத்தி நமக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ரோகிணி ஆணையம் ஏற்கனவே மத்திய அரசில் ஓபிசி மக்களுக்கு வழங்கப்படும் 27% இடஒதுக்கீடை பிரித்து,  9% DNT சமூகங்களுக்கு வழங்க பரிந்துரை செய்துள்ளது. இனி இந்திய அரசியல் அடுத்த சுற்று ஓபிசிக்களை மையப்படுத்தியே இருக்கப்போகிறது. கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அரசியலிலும் நமது இளைஞர்களுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நம்புகிறோம். 

நமக்கான அரசியலுக்கு தயாராகும்போது யாரை வெறுத்தாலும், ஒதுக்கினாலும் நஷ்டம் நமக்குத்தான். வெறுப்பு என்பது காட்டுத்தீயைப் போன்றது. வனத்திற்குள் இருந்துகொண்டு நெருப்பு மூட்டினால், நெருப்பை மூட்டியவனும் சேர்ந்துதான் வெந்துசாக வேண்டும். வெறுப்பு அரசியல், அவதூறு அரசியல் நமக்கானது அல்ல. கம்பளத்தாரின் இயல்புக்கு மாறானது. எது நம்மை புறக்கணிக்கிறதாக நினைக்கின்றோமோ, அது நம்மை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் நமது செயல்திட்டங்கள் இருக்க வேண்டும்.

எனவே, "எதுவும் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. தக்கன பிழைக்கும், தகாதன அழியும்" . ஆளும்கட்சிக்கெதிராக ஒரு சமூகத்தை நிறுத்துவது ஆரோக்கியமான அரசியலாகுமா? சமூகத்திற்கு நன்மை பயக்குமா? என்பதை சமுதாய மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவதாகக் கூறினார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved