அரசும் - கார்பொரேட்களும் கைகோர்த்தால் மக்கள் கதி அதோகதி!
Minimum Wages Act, 1948, அதாவது குறைந்த பட்ச கூலி சட்டம் 1948 என்ற சட்டம் மிக முக்கியமான ஒன்று. 1948 மார்ச் மாதம் 15ஆம் தேதி இயற்றப்பட்ட சட்டம். அதாவது நாடு விடுதலை அடைந்த ஏழு மாதங்களில் இயற்றப்பட்ட சட்டம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
இச்சட்டத்தின் தலையாய நோக்கமே, இந்தியாவில் எந்த ஒரு தொழிலாளியும் எவராலும் கூலி அல்லது ஊதியம் தரப்படாமல் ஏமாற்றப்படக் கூடாது, அதே நேரத்தில் அந்தந்த தொழிலுக்கான நியாயமான கூலி அல்லது ஊதியம் தரப் பட வேண்டும் என்பதுதான். ஒரு நியாயமான குறைந்த பட்ச ஊதியம் இருக்க வேண்டும் என்பதே. இங்கே அதிக பட்ச கூலி பற்றிப் பேசப்படவில்லை என்பதன் பொருளே குறைந்த பட்ச கூலியையாவது தொழிலாளி பெற வேண்டும் என்பதுதான்.
இச்சட்டத்தின்படி ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கான குறைந்தபட்ச கூலி ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை திருத்தப்படுகிறது, அதாவது உயர்த்தப் படுகிறது. கூடவே ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அடிப்படை ஊதியத்துடன் Variable Dearness Allowance எனப்படும் பஞ்சப்படியும் திருத்தப்பட்டு உயர்த்தப்படுகிறது.
இதன் பொருள் தெளிவானது. அரசுத்துறையில் Service Contract எனப்படும் சேவை துறை ஒப்பந்தம் எடுக்கிற தனியார் கான்ட்ராக்டர்கள் தம் கீழ் பணி செய்யும் Contract தொழிலாளர்களுக்கு இந்த குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ்தான் ஊதியம் வழங்க முடியும், அதற்கு குறைவாக ஊதியம் வழங்க முடியாது. முக்கியமான சட்டப்பிரிவு என்னவெனில் Principal Employer என்ற அரசு, இந்த குறைந்த பட்ச ஊதியத்தை குறிப்பிட்ட தனியார் காண்ட்ராக்டர் அதாவது முதலாளி அந்த ஒப்பந்தத்தின் கீழ் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு சரியாக கொடுக்கிறாரா என்று உறுதி செய்ய வேண்டும். அதற்கான பொறுப்பு Responsibility அரசுக்கு அதாவது குறிப்பிட்ட அரசுத்துறை நிறுவனத்தின் தலைவருக்கு உண்டு. இந்த வகையில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஊதியம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு Responsibility சென்னை மாநகராட்சி மேயர்க்கு உள்ளது.
இச்சட்டம் இயற்றப்பட்டு 77 வருடங்கள் ஆகின்றது. 90களுக்கு முன்பு இருந்த தொழில் சார்ந்த முதலாளி - தொழிலாளி உறவுக்கும் 90களுக்கு பின்பான தனியார் மயம், உலக மயம், தாராளமய கொள்கையின் பின்னணியில் ஆன உறவுக்கும் மலையளவு வேறுபாடு உள்ளது.
உலகளாவிய கார்பொரேட் முதலாளியம், ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் உயிரை இழந்து பெற்ற உரிமைகளையும் சட்டங்களையும் முற்றாக ஒழித்து விட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துவிட்டு நான்கு வழிகாட்டு நெறிகளாக Codes மாற்ற வேண்டும் என்ற புதிய வடிவில் ஒன்றிய அரசால் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அதாவது கார்பொரேட் முதலாளியத்துக்கு ஆதரவாக. இந்தப் பின்னணியில்தான் அரசுத்துறை ஒழிக்கப்பட்டு தனியார் மயம் ஊக்குவிக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை ஒழிப்பது அல்லது தனியாருக்கு விற்று விடுவது என்று காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தீவிரப் படுத்தப்பட்டது. அதன் பின் வந்த ஆட்சிகளும் அதை தொடர்கின்றன.
விளைவாக அரசுத்துறை ஒழிவதால் இட ஒதுக்கீடு, சமூக நீதி ஆகிய அடிப்படை உரிமைகள் தொடர்ந்து ஒழிக்கப்படுகின்றன. சமூகத்தின் அடித்தட்டு மக்கள், பட்டியல் இன மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசுதுறைகளில் நுழைவது அநேகமாக ஒழிக்கப்பட்டது. தனியார் முதலீடு, சர்வதேச கார்பொரேட் முதலீடு ஆகியவை கட்டற்ற வெள்ளம் என இந்தியப் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன.
சென்னை மாநகராட்சி ஊழியர் விவகாரம் இந்த நீண்ட பிரச்னையின் ஒரு வடிவம் அல்லது பகுதியே. இது போன்ற அரசு - தனியார் கூட்டணி கொள்ளை நடக்கும் என்று அன்றைய முன்னோர்கள் முன்னுணர்ந்துதான் குறைந்த பட்ச கூலி சட்டத்தை நிறுவினார்கள். இன்று அதற்கும் பாதகம் வந்து விட்டது. சென்னை மாநகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் இந்த சட்டத்தை மீறுகின்றன என்பதுதான் இதன் பொருள். தனியார் முதலாளியின் பக்கம் வெளிப்படையாக நிற்கின்றன.
அரசு - கார்பொரேட் கூட்டுக்கொள்ளைக்கு மேலுமொரு சிறந்த உதாரணம் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள். அதையே தற்போது மாநில அரசுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : இக்பால் அஹமத்.

