🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை புறக்கணிப்பீர்!!! - பேராசிரியரின் உள்ளக்குமுறல்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை புறக்கணிப்பீர்!!!

தலைப்பை பார்த்தவுடன் ரத்தம் கொதிக்கிறதா கம்பளத்து உறவுகளே? இதுதான் அவர்களின் மூலதனம். கடந்த காலங்களை விமர்சனம் செய்யவேண்டாம், அதனால் ஆகப்போவது ஏதுமில்லை. ஆனால் வரலாறு நமக்கு வழிக்காட்டி என்பதையும் மறக்க வேண்டாம்.

கடந்த சில வருடங்களாக நமது சமுதாயத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை உற்று நோக்கி கவனித்து வருகிறேன். கல்லூரி ஒன்றில் உதவிப்பேராசிரியராக வேலை செய்யும் எனக்கு நேரடியாக சமுதாயப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு குறைவு. இருந்தாலும் கம்பளத்து சமுதாயம் முக்கிய காலகட்டத்தில் உள்ளதால், சிலவற்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். பரபரப்பான அரசியல் நகர்வுகள், ஆங்காங்கே கட்சிகளில் புதிய நிர்வாகிகள், மறுபுறம் புதிய புதிய அமைப்புகள் புற்றீசல்போல் உதயமாகி வருவதை கண்கூடாக காணமுடிகிறது. இவற்றையெல்லாம் பார்த்து சமுதாயம் வளர்ச்சிப்பதையில் செல்கிறது என்று நம்பிவிட வேண்டாம். இப்பொழுதுதான் மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும்.

சமுதாய மக்கள் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

இன்றைய தேதியில் தொட்டிநாயக்கர் சமுதாயத்திற்கு முக்கியமான, தலையாய பிரச்சினை எதுவென்று என்னிடம் கேட்டால், ஒரு பேராசிரியராகவும், கல்வி அறிவு பெற்ற சாமானியனாகவும் சொல்வேன், இடஒதுக்கீடு என்று. ஆம், நமது கம்பளத்து சமுதாயம் DNT பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சீர்மரபின பழங்குடியினர் எனப்படும் DNT பட்டியலில் 68 சமுதாயங்கள் இடம்பெற்றுள்ளன. 1979-இல் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சமுதாயத்தினரின் அறியாமையை பயன்படுத்தி DNT-யை இரத்து செய்ததின் மூலம் கல்வி மட்டுமல்லாது சமூகநலத்திட்டத்தின் பலன்களை 40 ஆண்டுகள் அனுபவிக்கமுடியாமல் உள்ளோம்.

சமீபகாலமாக பலகட்டப் போராட்டங்களை நடத்தி DNT- முறையை மீண்டும் கொண்டுவர கம்பளத்தார் தவிர பிற 67 சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகளும் போராடி வருகிறது. தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்குள்ள தலையாய பிரச்சினை இதுதான். DNT-மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நாம் பெற்றுவிட்டால் போதும், நமது மக்களின் வாழ்நாள் பிரச்சினையில் பாதி சுமை குறைந்து விடும். கல்வி உதவித்தொகை, விடுதிக்கட்டணம், இலவச வீட்டுமனைப்பட்டா மட்டுமல்ல வீடுகூட கட்டிக்கொடுக்கப்படுகிறது, இலவச விவசாய நிலம், முதியோர் ஓய்வூதியம், சுயஉதவிக்குழு நிதிஉதவி, சுய தொழில் தொடங்க கடன், விபத்து காப்பீடு, இறுதிச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி என வாழ்க்கையின் அனைத்து கட்டங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் பல ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. சில மாநிலங்களில் தனி இடஒதுக்கீடு, தனித்தொகுதிகள் கூட வழங்கப்பட்டு வருகிறது.

இவையெல்லாம் அரசு சும்மா கொடுக்கவில்லை, நம் முன்னோர்கள் சிந்திய வியர்வைக்கும், ரத்தத்திற்கும் நாடு செய்யும் பரிகாரம். இந்த சலுகைகளையெல்லாம் பெற்று தங்கள் சமுதாயத்தை உயர்த்த பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், எம்.எல்.ஏக்கள், மந்திரிகளைப்பெற்றுள்ள தேவர் சமுதாயம், முத்தரையர் சமுதாயம், படையாச்சி சமுதாயம் உள்ளிட்ட பல சமுதாய அமைப்புகள் தெருவில் இறங்கி போராடி வருகின்றன.

ஆனால், நீண்ட காலமாக இருப்பதாக பீற்றிக்கொள்ளும் பண்பாட்டுக்கழகம், நல சங்கம், அறக்கட்டளைகள், முன்னேற்றக்கழகம் என வித விதமான பெயர்களில் உள்ள கம்பளத்து நாயக்கர் சமுதாய அமைப்புகள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், கட்சியின் புதிய புதிய பொறுப்பாளர்கள் யாரேனும் ஒருவருக்காவது இது பற்றி தெரியுமா? இதுபற்றி பேசியிருப்பார்களா? மதுரையில் டிசம்பர் 25-ஆம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனரே, மதுரை சுற்று வட்டாரத்திலுள்ள ஒரு கம்பளத்தானாவது, சமுதாய அமைப்பாவது, ஒரே ஒரு அரசியல்வாதியாவது, ஒரு உள்ளாட்சி பிரதிநிதியாவது இதில் கலந்துகொண்டு தங்கள் சமுதாய மக்களுக்காக இந்த போராட்டக்களத்தில் பங்கேற்றிருப்பாரா? இவர்களெல்லாம் உங்களிடம் ஓட்டுக்கும்,வசூலுக்கும் மட்டுமே வரிசையாக வருவார்கள். சமுதாய மக்களுக்கான இந்த உரிமையைப் பெற்றுக்கொடுக்க முன்வராத, குறைந்தபட்சம் இதுபற்றியெல்லாம் தெரியாத ஒருவருக்குத்தான், நீங்கள் நம்ம சாதிக்காரன் என்று தேர்தலில் ஒவ்வொருமுறையும் வாக்களிக்கின்றீர். ஆனால் நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த, நிதியுதவி அளித்த "தற்குறித்தலைவர்களுக்கு" தங்கள் சமுதாயத்திற்கான உரிமைகள், கிடைக்கும் சலுகைகள் என்னெவென்று தெரியாத கிணற்றுத்தவளைகளாக உள்ளதை நீங்கள் உணரவேண்டும்.

இனிமேலாவது சமுதாயத்திற்கும், மக்களுக்கும் எது தேவை என்று உணராத தலைவர்களுக்கு வாக்கும் அளிக்காதீர், நிதியுதவியும் செய்யாதீர். மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளுக்கு அறைக்கூவல் விடுக்கும் அரைகுறை தலைவர்களை உதாசீனம் செய்யுங்கள். கூட்டத்தை திரட்டி அவர்கள் சாதித்தது என்ன? என்பதை ஒரு நிமிடம் யோசியுங்கள். மாவீரனுக்கு மரியாதை செய்ய விரும்பும் நீங்கள், தகுதியில்லாத எவர் பின்னாலும் செல்லாமல், தனியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யுங்கள், அல்லது வறுமையில் இருப்பவருக்கு ஒருவேளை உணவளியுங்கள் போதும். தேவையில்லாமல் தகுதியில்லாதவர்களை தலைவர்களாக வளர்த்து விடாதீர்... 

எல்லோரையும் ஏகமாக விமர்சிப்பதாக எண்ணிவிட வேண்டாம். உள்ளக்குமுறலின் வெளிப்பாடே... 

அன்புடன்,

பேரா.கு.நா.சாமி,சேலம்.

குறிப்பு:-

நாமக்கல், தொட்டிய நாயக்கர் நலசங்கத்தின் தலைவர் திரு.M.பழனிச்சாமி அவர்களின் வேண்டுகோளின்படி பிரசுரிக்கப்படுகிறது. பேராசிரியரின் விமர்சனத்தற்கு நமக்கல் சங்கத்தின் மறுப்பு அறிக்கை நாளை வெளியிடப்படும். 

பேராசிரியரின் விமர்சனம் குறித்து தங்கள் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் விவாதித்து சுயபரிசோதனை செய்துகொண்டு விளக்கமளிக்கப்படும் என்று வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை, தெரிவித்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved