🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மதுரை மீனாட்சி கோவிலுக்கு உயிர்கொடுத்த நாயக்க மன்னர்கள் ஆட்சி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ள நிலையில் அதன் மூலம் பல புதிய உண்மைகள் வெளியாகி உள்ளன. தூங்கா நகர் என அழைக்கப்படும் மதுரை மாநகரில் குறிப்பிடுவதற்காக இடப்பட்டிருக்கும் மற்றொரு பெயர் கோவில் நகரம். நான்கு திசைகளிலும் வானுயர் கோபுரங்களுடன் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன் கோயிலே அதற்கு முக்கிய காரணம்.

கோவிலில் இருந்த 60 கல்வெட்டுகளை மட்டுமே ஆங்கில குறிப்புகளாகமத்திய அரசு வெளியிட்டதால் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமல் இருந்தது. அங்குள்ள கல்வெட்டு என்ற நிலையில்தான் மாநில தொல்லியல் துறையின் ஏற்பாட்டில் தற்போது 450 கல்வெட்டுகளை ஆய்வு செய்து படி எடுத்துள்ளது தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையிலான குழு.

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் மூலம் வெளிவந்துள்ளன பல முக்கிய தகவல்கள். கோவிலில் கண்டறியப்பட்டுள்ள 450 கல்வெட்டுகளில் முழுமையாக கிடைத்துள்ள கல்வெட்டுகள் வெறும் எழுபத்தி எட்டு மட்டுமே. அதில் எழுபத்தி ஏழு கல்வெட்டுகள் முழுமையாக தமிழிலும், தலா ஒரு கல்வெட்டு சமஸ்கிருதம் மற்றும் தேவநாகரி மொழியிலும் எழுதப்பட்டு உள்ளது. இவை தவிர, பெரிய அழிவுக்குள்ளான 23 உடைந்த கல்வெட்டுகள், சிறு சிறு துண்டுகளாக உடைந்து 351 கல்வெட்டுக்களும் கண்டறியப்பட்டுள்ளன. கிபி 1190 முதல் 1216 வரை ஆட்சி செய்த சடையவர்மன் குலசேகரன் காலத்தில் வைக்கப்பட்ட வைகைக்கரை கல்வெட்டு தான் இந்த கோயிலில் இருப்பதிலேயே மிகவும் பழமையான கல்வெட்டு. 7-ஆம் நூற்றாண்டி கூன்பாண்டியன் மன்னன் வைகை அணையில் தடுப்பனை கட்டி திருபுவனம் மற்றும் திருச்சுழி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்றதை குறிக்கிறது அந்தக் கல்வெட்டு. தமிழ்நாட்டில் அணை கட்டப்பட்டுள்ளதற்கான முதல் கல்வெட்டு சான்று இதுதான் என்பது ஆய்வாளர்களின் விளக்கம். கோவிலில் இருப்பதிலேயே மிகவும் பழமையான சிற்பம் என்றால் அதை எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சூரியனார் சிற்பம் தான். அதேபோல் கோயில் கோபுரங்களில் மிகவும் தொன்மையானது 12ஆம் நூற்றாண்டில் குலசேகரன் காலத்தில் தொடங்கப்பட்டு, அவரது தம்பி மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடைபெற்ற கிழக்கு கோபுரம். 

இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக்குழுத் தலைவர் சாந்தலிங்கம் நியூஸ் 18 தொலைக்காட்சியில் பேசியது யாதெனில், 

இப்போது இருக்கக்கூடிய இந்த மீனாட்சியம்மமை கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெளிவாகிறது. முதலாம் சடையவர்மன் குலசேகரன் காலத்திலேயே, அதாவது அவருடைய ஆட்சிக்காலம் 1190 முதல் 1216 வரையாகும். அதனுடைய கல்வெட்டுகள் இரண்டு கிழக்கு கோபுரத்தில் இருக்கின்றன. இந்த ஆதாரத்தை வைத்து பார்க்கும்போது, சடையவர்மன் குலசேகரன் கோவிலில் தான் இப்போது இருக்கக்கூடிய மீனாட்சியம்மை கல்கோவில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது என கூறியுள்ளார்.

அதன்பிறகு 14ஆம் நூற்றாண்டில் மேற்கு கோபுரமும், 15ஆம் நூற்றாண்டில் தெற்கு கோபுரமும், 16வது நூற்றாண்டில் வடக்கு கோபுரமும் கட்டப்பட்டு இன்றுவரை வியப்பில் ஆழ்த்துகின்றன அந்த கோபுரங்கள் அனைத்தும். அதையும் அங்கிருக்கும் கம்பத்தடி நூற்றுக்கால் மண்டபம் மற்றும் ஆயிரங்கால் மண்டபங்களும் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதற்கான அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

அதே நேரத்தில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் மீனாட்சி அம்மனின் கருவறை முதல் அர்த்த மண்டபம் வரை ஏற்பட்ட சேதங்களுக்கு எண்ணிக்கையில் இல்லை.  விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்த பதினாறாம் நூற்றாண்டில், அதாவது அச்சுதராயர் காலத்திய கல்வெட்டில் தான் சித்திரைத் திருவிழா பற்றி இருக்கிறது முதல் குறிப்பு. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெற்றதும், அதன் செலவுகளுக்கு பல கிராமங்கள் தானமாக வழங்கப்பட்டதும் கல்வெட்டுக் குறிப்புகளிலில் உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டில் அதாவது 1736 ஆம் ஆண்டு வரை மதுரையில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றதும் அவர்களால் பாதுகாக்கப்பட்டதும் தான் மீனாட்சியம்மன் கோயில் என்பதும் கல்வெட்டுக்களில் இருக்கும் முக்கிய வரலாறு. கோவில்களில் அத்தனை கல்வெட்டுக்கல் இருந்தாலும், அதில் இருக்கும் முக்கியக் குறிப்புகளில் ஒன்று மீனாட்சி என்ற பெயர் எங்குமே இல்லை என்பதுதான். ஆம், 1710 ஆம் ஆண்டில்தான் சொக்கநாதர் என்ற பெயரே சுவாமிக்கு அளிக்கப்பட்ட நிலையில், 1752 ஆம் ஆண்டு வரை மீனாட்சி என்ற பெயரே எங்கும் கிடையாது என்பதே கல்வெட்டு ஆதாரம். அதன் அடிப்படையில் மாடக்குளக்கீழ் மதுரோதயவளநாட்டு மதுரையில் திரு ஆலவாய் உடைய நாயனார் திருக்கோயில் என்பதே 16ஆம் நூற்றாண்டில் மீனாட்சி அம்மன் கோவிலின் பெயர். அதேபோல் மீனாட்சி அம்மனுக்கு அன்றைய காலத்தில் இருந்த பெயர் திருக்காமகோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்.

தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் மேலும் கூறுகையில், இந்த கல்வெட்டுகள் மூலமாக, நாம் இப்போது சொல்லக்கூடிய மீனாட்சி என்ற பெயர் மக்கள் பேச்சு வழக்கில் இருக்கிறதே தவிர, கல்வெட்டுகளில் அப்படிப்பட்ட பெயர் இல்லை. இறைவனுடைய பெயர் ஆலவாய் உடைய நாயனார் என்றும், மீனாட்சி என்று சொல்லப்படக்கூடிய இன்றைய அம்மையுடைய பெயர் திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்றும் வருகிறது. வடமொழியாக்கத்தின் காரணமாக அங்கையற்கன்னி, ஆலவாய் உடையார் என்று இருந்த பெயரை சுந்தரேஸ்வரர் மீனாட்சி என்று மாற்றி இருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கு புதுமையாக தெரிகின்றதாக கூறுகிறார்.

அதன் பிறகு 1898-ஆம் ஆண்டு கல்வெட்டில்தான் மீனாட்சி சுந்தரேஷ்வரர் என்று நாம் இன்று குறிப்பிடும் பெயர் காணப்படுகிறது. முதன் முதலில் மதுரையை 200 ஆண்டு காலம் ஆட்சி செய்த சோழர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எந்த ஒரு திருப்பணியும் செய்யவில்லை என்கிறது ஆய்வு முடிவு.  946 முதல் 966 வரை மதுரையை ஆட்சி செய்த வீரபாண்டியன் என்பவர், சோழ மன்னன் ஒருவனின் தலையை வெட்டிய இடமே இன்றைய சோழவந்தான். சோழாந்தக சதுர்வேதி மங்கலம் என ஆரம்ப நாட்களில் அழைக்கப்பட்டு, அடுத்த சில நூற்றாண்டுகளில் சோழவந்தானாக  மாறி உள்ளது. அதை விட முக்கியமாக பதினைந்தாம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் சாதி வரி என்ற வரி நீக்கப்பட்டதற்கு குறிப்புக்களும் கல்வெட்டுக்களில் உண்டு. இவற்றைப்போல எத்தனையோ வரலாற்று உண்மைகளை சுமந்தபடி, அங்கு உடைந்து கிடக்கின்றன ஏராளமான கல்வெட்டுகள்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved