🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வரம் தரும் வரலட்சுமி விரதம் உருவான கதை!

வரலட்சுமி நோன்பு (தமிழில்:வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் நோன்பு இருத்தலாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

வரலட்சுமி விரத மகிமை :

வரலட்சுமி நோன்பு கடைப்பிடிப்பதால் செல்வ வளம் மட்டுமல்லாமல், மாங்கல்ய பலம், நல்ல ஆரோக்கியம், ஆயுள் பலம், நல்ல கணவன், குழந்தைப்பேறு, முற்பிறவி பாவம் நீங்குதல் என பல்வேறு நன்மைகள் வந்து சேரும்.

வரலட்சுமி விரதம் எப்போது 2023?

வரலட்சுமி விரதம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு ஆகஸ்ட் 25ம் தேதி (ஆவணி 8) கடைப்பிடிக்கப்படுகிறது.

முன்பு ஒரு காலத்தில் சவுராஷ்டிர தேசத்தில் பத்ரஷ்ரவா என்றொரு அரசன் இருந்தான். அவன் மிகவும் நல்ல முறையில் ஆட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி கசந்திரிகா அவளும் கணவனுக்கேற்ற மனைவியாக எல்லா வகையிலும் விளங்கினாள். சினம் என்பதையே அறியாதவள். அவர்களுக்கு ஏழு ஆண் பிள்ளைகளும் ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தைக்கு சியாமா என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். கசந்திரிகாயின் நற்குணங்களும், நற்செயல்களையும் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டால் வெள்ளி கிழமை துவாதசி திதியில் மகாலட்சுமி மிகவும் வயதான பழுத்த சுமங்கலி போல கசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தாள். 

அப்போதுதான் வயிறார உணவு உண்டு வாயில் தாம்பபூலம் தரித்துக் கொண்டிருந்தாள் கசந்திரிகா. அந்த சுமங்கலியை வரவேற்று உரிய முறையில் உபசரித்தாள். வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் முதலிய மங்கலப் பொருட்களைக் கொடுத்தாள். "தாயே, தாங்கள் யார்? என்னை நாடி வர என்ன காரணம்" என்று கேட்டாள். அதற்கு லட்சுமி தேவி, கசந்திரிகா நீ வணங்கும் லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று அதிதிக்கு உணவிடாமல் நீ இப்படி வயிறார சாப்பிட்டு தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கிறாயே இது நியாயமா?" என்று கேட்டாள்.

இதுநாள் வரை கோபமே வராத கசந்திரிகாவுக்கு அன்று மிகவும் ஆத்திரம் வந்து விட்டது. அன்னையைக் கன்னத்தில் அரைந்து இங்கு இருந்து போய்விடு என்றால். கண்கள் கலங்கிய லட்சுமி தேவியும் ஒன்றும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறத் தொடங்கினாள். 

அப்போது சியாமா அங்கு வந்து அந்த சுமங்கலியைப் பார்த்து, "தாங்கள் யாரம்மா? ஏன் கண்கள் சிவந்திருக்கின்றன? உங்களை யாராவது ஏதாவது சொன்னார்களா? என்று பரிவோடு வினவினாள். இதனால் உள்ளம் குளிர்ந்த திருமகள், "சியாமா, உன் அன்னைக்கு எப்படி லட்சுமிதேவியை முறைப்படி பூஜிப்பது என்பதை சொல்லிக் கொடுக்க வந்தேன். அனால் அவள் என் கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டாள்" என்றாள். உடனே "தாயே அந்தப் பூஜையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். நான் முறைப்படி செய்கிறேன்" என்று சியாமா கூற, அவ்வாறே அன்னையும் பூஜை முறைகளை அருளச் செய்தாள்.

அன்று முதல் சியாமா ஒவ்வொரு வருடமும் அந்த பூஜையை மிகச் சிறப்பாகச் செய்து வந்தாள். லட்சுமிதேவி அரண்மனையை விட்டு நீங்கியதால் பத்ரஷ்ரவா அரசனின் செல்வங்கள் குறைய ஆரம்பித்தன. அனைத்து செல்வங்களும் தன்னை விட்டுப் போகும்முன் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றான். சியாமா வருடந்தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்த பலனால் அவளுக்கு அவளை போற்றிப் பாதுகாக்கும் கணவனாக மாலாதரன் என்ற மன்னன் வாய்த்தான். சியாமா கணவன் வீடு சென்றாள்.

பத்ரஷ்ரவாவின் எதிரிகள் அவனையும், அவனது மனைவியையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டனர். நாட்டை விட்டு வெளியேறி காட்டில் அலைந்தனர் இருவரும். தன் பெற்றோரின் நிலை சியாமாவை மிகுந்த வருத்தத்துக்குள்ளாக்கியது. அவர்களை தன் நாட்டுக்கு அழைத்து உணவிட்டுக் காத்து வந்தாள். ஒரு முறை அவள் ஒரு குடம் நிறைய பொற்காசுகளைப் போட்டு தனது தாயிடம் கொடுத்து இதை வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாள். கசந்திரிகா தெட்டதும் அந்தப் பானையில் இருந்த தங்கக் காசுகள் எல்லாம் கரிகளாக மாறிப்போனது. இதைக் கண்ட சியாமாவுக்கு அப்போது தான் தன் தாய் அந்த சுமங்கலியை அவமானப்படுத்தி அனுப்பிய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. வந்தது சாதாரண மானிடப் பெண்ணில்லை. அந்த மகாலட்சுமியே தான் என்று உணர்ந்து அதை தன் தாயிடம் கூறினாள். தன் தவறை உணர்ந்த கசந்திரிகாவும் வரலட்சுமி பூஜை முறையை தனக்குக் கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அன்றைய தினம் முதல் கசந்திரிகாவும் வரலட்சுமி பூஜையை முறைப்படி செய்து வந்தாள். அதன் பலனாக அவள் கணவன் தைரிய லட்சுமியின் அருள் பெற்று, வீரத்துடன் படை வீரர்களை சேர்த்துக் கொண்டு சென்று எதிரி மன்னனை வீழ்த்தி மீண்டும் முடி சூடினான். இழந்த செல்வங்கள் வைபவங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றாள் கசந்திரிகா மீண்டும் மகாராணியாக வாழ்ந்து வந்தாள்.

வரலட்சுமி விரத பூஜை விதிகள்: 

இந்த பூஜையை மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், நாம் செய்யக்கூடிய பூஜை நேரத்தில் முழு ஈடுபாட்டுடன், உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமிக்கு உரிய மந்திரங்கள், அஷ்டோத்திரம் சொல்லி, 108 போற்றிகளை உச்சரித்து வழிபடலாம்.

அன்றைய தினம் லட்சுமி தேவியின் அம்சமான கலசத்தை வைத்து வழிபட வேண்டும். அதனை பூக்களால் அலங்கரித்து, அர்ச்சனை செய்து, லட்சுமி தேவிக்கு பிடித்த நிவேதனங்களைப் படைத்து, நோன்பு சரடு கையில் கட்டி வழிபட வேண்டும்.

பூஜைக்கு பின்னர் நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களனை வணங்கி தானங்களைச் செய்து இந்த விரதத்தை நிறைவு செய்யலாம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved