🔴 LIVE | முப்பெரும் விழா 2023


குருமகாசன்னிதானத்திடம் துறவறம் பெற்று சைவம் வளர்க்கும் அருள்முருக அடிகளார்!

தமிழக - கர்நாடக எல்லையை ஊடுருவிச் செல்லும் மேற்குத்தொடர்ச்சி மலையின் நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் (கோயமுத்தூர் மாவட்டம்) நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிற்றூர் சின்னத் தொட்டிபாளையம். இங்கு ஓர் எளிய விவசாயக்குடியில் அய்யாசாமி-சென்னம்மாள் தம்பதியினருக்கு 1968 இல் பிறந்த அருள்முருக அடிகளாரின் இயற்பெயர் முருகன் என்பதாகும். இவர்களின் விவசாய நிலத்தையோட்டி செல்லும் ஓடக்கரையிலுள்ள மாவிலிங்கம் – வேம்பும் சேர்ந்து வளர்ந்த மரத்தடியில் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து முன்னோர்களால் வழிபாடு செய்யப்பட்டு வரும் கருப்புசாமி, கன்னிமார், முனீஸ்வரர் ஆகிய நாட்டார் தெய்வங்கள் இருந்து வருகிறது. 

அதிகாலை எழுந்து கைக்குழந்தையோடு தோட்ட வேலைக்குச் செல்லும் அய்யாசாமி தம்பதியினர், நாட்டார் கோவில் வேம்புமரக் கிளையில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். குழந்தை பசிக்கு அழுதெழும் போது மடியில் கிடத்தி அன்னை தாய்ப்பாலூட்டி ஆராரோ பாடியதும், தோள் மீது சாய்த்து தந்தை கொஞ்சி விளையாடியதும், மழலையாக தவழ்ந்ததும், மண்ணைத் தின்று வளர்ந்ததும், நாட்டார் சாமிகளோடு பேசி விளையாடியதும், கோபித்துக்கொண்டு மண்ணை வாரி வீசியதும், மண் வீடு கட்டி விளையாடியதும், தாத்தாவின் விரல் பிடித்து நடை பயின்று பழகியதும் இந்த நாட்டார் கோவில் மரத்தடி நிழலில் தான்.  

முனீஸ்வரனுக்கு மூணு போசி, கருப்பசாமிக்கு மூணு போசி, கன்னிமாருக்கு மூணு போசி தண்ணி கொண்டுவந்து ஊத்து என்ற பாட்டியின் சொல் கேட்டு, கஞ்சி கொண்டுபோய் காலியாகிப்போன தூக்குப்போசியில் கரைக்கும், ஓடைக்கும் கால் வலிக்க நீர்சுமந்து விளையாடிய ஞாபகம் இன்னும் முருகனாரின் நினைவுகளை விட்டு நீங்கவில்லை. பாட்டி தொடங்கிவைத்த இந்த விளையாட்டு, பள்ளி செல்லும் காலத்திலும் தொடர்ந்தது. ‘சாமி’ என்று சொன்னாலும் அல்லது யாரவது சொல்லக்கேட்டாலும் முருகனாரின் மனக்கண் வந்து நிற்பது இந்த நாட்டார் தெய்வங்களே. அதேபோல் பாலகன் முருகனாருக்கு பாதுகாவலர்களும், முதல் நண்பர்களும் இந்த முனீஸ்வரன்-கன்னிமார்-கருப்பசாமியும் தான். பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பியதும், சக நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதும் இக்கோவில் மரத்தடியில் தான். இப்படியாக முருகனாருக்கும் நாட்டார் கோவிலுக்குமான நட்பு பிரிக்க முடியாத அளவில் தொடர்ந்து வந்தது.


ஒன்பதாம் வகுப்புக்குப்பின் படிப்பைத் தொடராத முருகனார், அக்கிராமத்திலுள்ள மற்ற இளைஞர்களைப் போலவே கால்நடை வளர்ப்பிலும், பசும்பால் வியாபாரத்தில் ஈடுபடலானார். தனது மாட்டிலிருந்து கறக்கும் பாலோடு, சுற்று கிராம விவசாயிகளிடமிருந்தும் பால் சேகரித்து, அதை 8 கி.மீ தூரமுள்ள மேட்டுப்பாளையம் நகருக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார். சிலவருடங்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வந்த முருகனார், வியாபாரம் முடிந்தவுடன் நேராக கோவிலுக்கு வந்துதான் பால்கேன்களை இறக்கி வைப்பார். குழந்தையாக இருந்த போதும், வாலிபனாக ஆனபோதும் வேலை நேரம், சாப்பிடும் நேரம் தவிர முருகனாரின் பொழுதுபோக்கு, வசிப்பிடம் எல்லாம் இந்தக்கோவில் மட்டுமே. 

ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தாலும், இந்தக் கோவிலைத்தவிர வேறெங்கும் செல்லமாட்டார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற பூசகர்கள் போல் முருகனாருக்கு பூசை, புணஸ்காரம் முறைப்படி செய்யத் தெரியாது, தெரிந்துகொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டதில்லை. குழந்தை பருவம் முதலே நாட்டார் தெய்வங்கள் மீதான ஈர்ப்பால், தனக்குத் தோன்றியபடி வழிபாடு செய்து வந்தார். அதேவேளையில் புலால் உணவை மிகவும் விரும்பி உண்பார். புலால் உணவு சாப்பிட்டாலும் கோவிலுக்குப்போவதை நிறுத்தமாட்டார்.


இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் சித்தார்த்த கௌதமரின் பெற்றோர்கள் கவலையுற்றது போலவே, முருகனாரின் பெற்றோர்களும் மகனின் அதிதீவிர ஆன்மீக ஈடுபாட்டைக்கண்டு கவலையுற்று, இல்லற வாழ்வில் நுழைத்து திசைமாற்ற முயன்றனர்.  சித்தார்த்தனைப் போலவே முருகனாரும் பெற்றோரின் விருப்பத்தை மறுக்காமல் இல்லறமேற்றார். ஆனாலும்  திருமண வாழ்க்கை முருகனாரின் ஆன்மீக ஈடுபாட்டை குறைக்க முடியவில்லை. 

நூற்றாண்டுகளுக்கு மேலாக மரத்தடியில் எழுந்தருளி முன்னோர்கள் காலம் தொட்டு அருள்பாவித்து வரும் முனீஸ்வரன்-கன்னிமார்-கருப்பசாமி க்கு கோவில் கட்ட விரும்பினார் முருகனார். ஆனால் கோவிலைத்தவிர சொந்த பந்தங்கள் வீடுகளுக்குக்கூட செல்லாதவர், இதற்காக பிறர் கையை எதிர்பார்க்க சுயமரியாதை இடம்கொடுக்காது என்பதால் கோவில்கட்டும் விறுப்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியவில்லை.


கோவிலில் முருகனாரின் பூசைகள் நடத்திவருவது வழக்கமானதே என்றாலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய தினங்களில் நடத்தும் விஷேச பூசைகள் மெல்ல, மெல்ல உள்ளூர் மக்களின் கவனத்தைப் பெற்றது. பூசை நேரம் தவிர்த்து பிற நேரங்களில் தியானத்தில் ஈடுபடுவது முருகனாரின் அன்றாட வழக்கம். தியானம் ஆழ்நிலையை எட்டும்போது சில சமயங்களில் அருள்வாக்கு சொல்வது வாடிக்கை. இச்செய்தி சுற்றுவட்டார மக்களுக்கு தெரியவந்தபோது, பலபகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் கஷ்டங்கள், பிரச்சினைகள் தீர தினந்தோறும் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதும், முருகனாரிடம் அருள்வாக்கு கேட்கபதும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் இக்கோவில் சுற்று வட்டாரங்களில் புகழ்பெற்றது. இதன் எதிரொலியாக ஒரு ஆடிமாத நிகழ்வில் பக்தர்களெல்லாம் கூடி 120 ஆட்டுக்கிடாய் வெட்டி,10 மூட்டை அரிசி போட்டு விருந்து போடுமளவிற்கு செல்வாக்கு பெற்றது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் யார்? என்ன விவரம்? அவர்களின் வேண்டுதல் என்ன? என்பது குறித்தெல்லாம் கேட்கும் வழக்கம் முருகனாரிடம் என்றும் இருந்ததில்லை. தற்போது இங்த கோவிலுக்கு வந்து வழிபட்டுச் சென்ற பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறி வருவதால், தங்கள் நினைவாக சாமிக்கு ஏதாவது செய்ய விரும்புவதாக முருகனாரிடம் பக்தர்கள் தெரிவித்து வந்தனர். மரத்தடியிலுள்ள கோவிலுக்கு என்ன தேவை இருக்கப்போகிறது என்று சொல்லும் முருகனார், பக்தர்களின் திருப்திக்காக எண்ணெய், பத்தி உள்ளிட்ட பூசை சாமான்களை மட்டும் பெற்றுக்கொள்வார். 


இப்படியாகப் போய்க்கொண்டிருந்த சூழலில், பல மாதங்களாக அமாவாசை பூசை முடிந்த மாலைவேளையில், பக்தர்கள் அதிகமில்லாத நேரம் வந்துகொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர், சமீபகாலமாக கோவில் பக்கம் தென்படுவதில்லை. 

அப்பெண்ணிடம் ஆரம்ப நாட்களிலேயே, அமாவாசை பூசையில் கலந்துட்டாத்தானுங்க விஷேசமுங்க… என்று முருகனார் சொன்னதுண்டு. 

அதிகம் பேசாத அப்பெண்மணி, பரவாயில்லைங்க சாமி… அது நமக்குத் தோதுப்படாது என்று மறுத்துவிடுவார். 

வரும்போது சூடம், பத்தி, எலுமிச்சை மட்டும் கொண்டுவருவார். தீபாரதணை முடிந்து சில நிமிடம் கண்மூடி மௌனமாக தியானித்துவிட்டு, எலுமிச்சை பழம் ஒன்றை மட்டும் பெற்றுக்கொண்டு புறப்பட்டு விடுவார். ஏனோ சமீபகாலமாக அப்பெண்மணி கோவிலுக்கு வருவதில்லை. முருகனாரும் தொடக்கத்தில் சில நாட்கள் எதிர்பார்த்தது உண்டு. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை.


ஒரு சில ஆண்டுகள் கடந்திருக்கும். எப்போதும் அதிகாலையில் எழுந்து கோவிலுக்குச் செல்லும் வழக்கமுள்ள முருகனார், அன்றைய தினமும் கோவிலுக்கு சென்றார். அவர் வருவதற்கு முன்பே வழக்கமாக சாலைகளில் தென்படும் கார்கள் போல் அல்லாமல், கொஞ்சம் விலை உயர்ந்த கார் நிற்பதை பார்த்தார் முருகனார். யாராக இருக்கும்? என்று யோசித்தவாரே கோவிலை நோக்கி முன்னேறி நடந்தார். முருகனாரைக் கண்டதும் காரில் இறங்கிய அப்பெண்மணி, முருகனாரை வணங்கி வரவேற்றார். 

அவரை அடையாளங்கண்டுகொண்ட முருகனார்,

எங்கீங்க… ரொம்ப நாளா ஆளக்காணமுங்க... 

அம்மாவுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ… 

ஒரு தகவலும் இல்லைன்னு,, நானும் அப்பப்போ நெனச்சிக்கிறது உண்டுங்க… என்றார் முருகனார்.

தன் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினரையெல்லாம் முருகனாரிடம் அறிமுகம் செய்து வைத்து, நடந்த விவரத்தையெல்லாம் கூறிய அப்பெண்மணி, சாமிகிட்ட நான் வேண்டிகிட்டதை, நல்லபடியாய் நிறைவேற்றிக் கொடுத்திருக்கு. பிரச்சினையெல்லாம் முடுஞ்சு நாங்க குடும்பத்தோட வெளிநாட்ல செட்டிலாகப்போறோம் என்றார்.

அப்படீங்களா? சந்தோசம்… 

நல்ல விசயம் நடந்திருக்கு… 

நல்ல படியா போயிட்டு வாங்க…. என்ற முருகனாரே, தொடர்ந்தார். 

கொஞ்ச நேரம் பொருங்க… சாமிக்கு தீபாரதணை காட்டுறேன்.

அதற்குள் அப்பெண்…

சாமிங்களுக்கு மாலை வாங்கிட்டு வந்திருக்கோம். அதைப்போடுங்க என்று மாலையோடு, வழக்கம்போல் வாங்கிவரும் சூடம், பத்தி, எலுமிச்சை ஆகியவற்றையும் கொடுத்தார்.

பூசையெல்லாம் முடிந்தபின், அப்பெண்மணி முருகனாரிடம், 

சாமி… 

ரொம்பவருசமா கோவில் இப்படியே இருக்கு. நான் மண்டபம் கட்றதா வேண்டியிருக்கேன் சாமி என்றார்.

பண்ணலாம்ங்க…. 

ஆனா கோவில் வேலைய ஒருத்தரே செய்யக் கூடாதுங்களே…. 

நான் எதுக்கும் கலந்துட்டு, உத்தரவு கேட்டு சொல்றேனுங்க.. என்றார் முருகனார்.

உடனே, சாமிக்கு என் வேண்டுதலை எப்படியாவது நிறைவேற்றனுங்களே என்றார் பெண்மணி…

பண்ணலாம்ங்க… 

சாமி உத்தரவு கொடுக்கோனுமல்லங்க… 

கட்டாயம் கலந்துட்டு, பொறகு சொல்றேனுங்க என்று அவர்களை அனுப்பி வைத்தார் முருகனார். 

ஏற்கனவே, கோவில் கட்ட தனக்கு இருந்த விருப்பம், பக்தர்கள் சிலரும் அவ்வப்போது சொல்வதுண்டு.

கோவில் கட்டிவிட முடியும் என்பது உறுதியானால் மட்டுமே தெய்வங்களிடம் உத்தரவு கேட்க வேண்டுமென்று பொறுமையாக இருந்தார் முருகனார்.

அதற்கு முன் முக்கியமான பக்தர்கள் சிலரிடம் இதுகுறித்து பேசினார் முருகனார். 

அவர்களும் உடனே சம்மதம் தெரிவித்தனர். 

ஆனால், அவர்களிடம் ஒரு நிபந்தனை மட்டும் விதித்தார் முருகனார்.

அதாவது…, கோவில் கட்ட ரசீது புக் அடிச்சு யாரிடமும் பணம் கேட்கக்கூடாது. அதேமாதிரி ஒருத்தரே தனியா செலவு செய்யக்கூடாது. நம்ம எல்லோரும் சேர்ந்து, நம்ம சக்திக்கு என்ன முடியுதோ அந்த அளவு மட்டும் செய்வோம். கோவில் கட்ற வேலை தொடங்குனா நிக்கக்கூடாது. அத மனசுல வெச்சுட்டு, அதுக்குண்டான யோசனை சொல்லுங்க என்றார் முருகனார்.

ஆனால் கோவில் கட்டும் எண்ணம் வந்ததிலிருந்தே விரதமிருக்கத் தொடங்கிவிட்டார் முருகனார். ஓரளவு இறுதி செய்யப்பட்ட பின், சாமிகளிடமும் உத்தரவு பெற தீர்மானிக்கப்பட்டது. பக்தர்களின் வேண்டுகளுக்கு தெய்வங்களும் இறங்கி வந்து ஒப்புதல் அளித்தனர்.

அதற்குள் முருகனார் விதித்த கட்டுப்பாட்டுக்குள் கோவில் திருப்பணியை செய்து முடிக்க பக்தர்களிடம் ஏலச்சீட்டு பிடிப்பதென முடிவு செய்யப்பட்டு, அதெற்கென ஒரு குழுவை உருவாக்கி, அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஏலச்சீட்டு முறையில் நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தாலும், அது மாதந்தோறும் நல்லமுறையில் நடந்து, கோவில் பணி தடைபடாமல் நடக்க வேண்டுமென்ற வேண்டுகோளோடு கடும் விரதத்தை கடைபிடித்தார் முருகனார். ஒரு நாள் வேலை தடைபட்டாலும் அன்று முழுவதும் உணவருந்தமாட்டார். இப்படி பலநாட்கள் உணவருந்தாமல் தியானத்தில் மூழ்கிய தருணங்கள் உண்டு. 


ஒரு அமாவாசை தினத்தில் கடும் விரதம் மேற்கொண்டு தியானம் முடித்து, ஆழ்ந்த நித்திரைக்கு சென்ற முருகனாரின் கனவில், திருக்கோவில் பணிகள் நிறைவு பெற்று, காவி ஆடை அணிந்த துறவிகள் கூட்டம் புடைசூழ, மக்கள் திரட்சிக்கு மத்தியில், தமிழ் மந்திரங்கள் முழங்க திருக்குடமுழுக்கு நடைபெறும் காட்சியைக் கண்டார். (இதுவே பின்நாட்களில் முருகனாரின் துறவறத்திற்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது). அதிகாலை எழுந்த முருகனாருக்கு, எப்பவும் ஐயமாருக தானே அக்னி குண்டம் வெச்சு, வேற பாஷையில மந்திரம் சொல்லி கும்பாபிஷேகம் பண்ணுவாங்க. ஆனா நம்ம கனவுல என்ன வித்தியாசமா இருக்கேங்கிற சிந்தித்தவாறே இருந்தார். 

சிறுவயது முதலே நாட்டார் கோவிலைத் தாண்டி ஆன்மீகத் தேடலாகவோ அல்லது பயணமாகவோ முருகனார் எந்தக்கோவிலுக்கும் சென்றதில்லை. இதனால் வேதமோதும் பிராமணர்களுக்கும், சைவ துறவிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனாலும், தான் கட்டி வரும் நாட்டார் கோவில் பிரசித்திபெற்ற பெருந்தெய்வங்கள் போன்றது அல்ல என்பது மட்டும் தெரியும். ஆகையால் மிகச்சாதாரணமாக கட்டப்பட்டு வரும் நாட்டார் கோவிலுக்கு, துறவிமார் புடைசூழ ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் கும்பாவிஷேகமா? என்பதை முருகனாரால் நம்ப முடியவில்லை. அதுபோக, கனவில் கண்டது போல நடக்கனும்னா, செலவு எவ்வளவு ஆவது? இதனால் கனவில் கண்ட காட்சியை பக்தர்கள் யாரிடமும் சொல்லாமல், திருப்பணியை விரைந்து முடிப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தார். 

வழக்கம்போல் திருப்பணி நடைபெற்று வந்த நிலையில், இக்கோவில் குறித்து கேள்விப்பட்டு அங்கு வந்த இருவர், தங்களை பக்தர்களைப்போல் காட்டிக்கொண்டு, கோவிலின் வரலாறு, பின்னனி, நிதி எப்படி திரட்டப்படுகிறது என்பதையெல்லாம் முருகனாரிடம் இயல்பாக பேச்சு வாக்கில் கேட்டறிந்து கொண்டு சென்றுவிட்டனர். ஒருசில வாரங்கள் கழித்து மீண்டும் கோவிலுக்கு வந்த இருவரும், பேரூர் வருகை தந்து குருமகா சன்னிதானம் தவத்திரு.சாந்தலிங்க அடிகளாரைச் சந்திக்குமாறு வேண்டுகோள் வைத்தனர். ஆதீனம், மடாலயம் குறித்தெல்லாம் எதுவுமே தெரியாத முருகனார், அடிகளார் குறித்து விலாவாரியாகக் கேட்க, 

வந்திருந்த இருவரும் பேரூர் மட வரலாற்றைச் சொல்லச் சொல்ல, தான் கனவில்கண்ட காட்சியோடு குருமகா சன்னிதானத்தின் தோற்றம் ஒத்துப்போவதை உணர்ந்தார். இதுபற்றி அவர்களிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாத முருகனார்,

சரி, ஆவுட்டமுங்க…. முக்கியமானவங்கெல்லாம் வருவாங்க.. கலந்துட்டு ரெண்டொரு நாள்ல சொல்றேணுங்க… என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

சைவம், வைணவம், கௌமாரம், சிவ வழிபாடுக்கும், பெருமாள் வழிபாடுக்குமான வித்தியாசம் குறித்தெல்லாம் எதுவுமே முருகனாருக்குத் தெரியாது. இவ்வளவு ஏன் எந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியையும் முழுமையாக பார்த்ததில்லை.

நீண்ட ஆலோசனைப்பின் பேரூர் மகாசன்னிதானத்தை பார்க்க ஒப்புக்கொண்ட முருகனார், அவரிடம் என்ன கேட்க வேண்டுமென்றெல்லாம் முடிவு செய்யவில்லை. 

அவரைப் பொறுத்தவரை ஏதோ ஒரு பெரிய சாமியார்ங்கிறாங்க…, அதை வெச்சுப்பார்த்த, நம்ம கட்றது கோபுரம்கூட இல்லாத சின்னக்கோவில், இதுக்கெல்லாம் அவ்வளவு பெரிய சாமியாருக வருவாங்களா? என்ற எண்ணம் தான் ஓடியது. 

சரி, நடக்கிறது நடக்கட்டும்… முனீஸ்வரன் விட்ட வழி என்று நினைத்துக்கொண்டு பேரூர் செல்வதற்கு ஆயத்தமாகிறார்.

ஒருநாள் அதிகாலை புறப்பட்டு பேருந்தில் பேரூர் பயணமாகிறார். பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போதே,பெரிய மடம், சாமிண்ணு சொல்றாங்க… 

சாதாரணமான நம்மை எப்படி நடத்துவாங்கன்னு தெரியலை….

சரி, மடம் என்ன உதவி செய்யனும்னு சாமி கேட்டால், கும்பாபிஷேகத்தை நடத்திக்கொடுங்கன்னு மட்டும் கேட்கலாம்னு இறுதியாக முடிவு செய்து கொண்டு பேரூர் சென்றடைந்தார் முருகனார். 

அங்கு ஏற்கனவே அறிமுகமான இருவர் முருகனாரை அழைத்துக்கொண்டு ஆதீனம் தங்கியிருக்கும் மடத்திற்கு அழைத்துச்சென்றனர். ஆசனத்தில் வீற்றிருந்த 23 ஆம் பட்டம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரை வணங்கியபடி சென்றவரை முருகனாரை இன்முகம் காட்டி கைகளை உயர்த்தி ஆசி வழங்கி வரவேற்றார். 

மகாசன்னிதானத்தை கண்டநொடியில் ஒரு பரவசத்தை உணர்ந்தார் முருகனார். அதுவரை தனக்கிருந்த தயக்கம் நீங்கியவராக, கோவில் பற்றிய விவரங்களை எடுத்தியம்பி, திருக்குடமுழுக்கை மகாசன்னிதானம் தலைமையேற்று நடத்திட வேண்டுமாய் கோரிக்கை வைத்தார். சற்றும் யோசிக்காத குருமகாசன்னிதானம் இன்முகத்தோடு பதிலுரைத்த, சாந்தலிங்க அருள்நெறி மன்றத்தின் சார்பில் திருக்குடமுழுக்கு விழாவை தானே தலைமையேற்று நடத்துவதாக அறிவித்தார்.

மகாசன்னிதானத்தை அறிவிப்பைக்கேட்டு ஆனந்தத்தில் உச்சத்திற்கே சென்ற முருகனார், கனவில் தான் கண்ட காட்சி கடவுள் தனக்கு காட்டிய குறிப்பாக உணர்ந்து, மகாசன்னிதானத்தின் பாதம் பணிந்து நெகிழ்ந்தார்.

நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக ஓடக்கரையின் மரத்தடியில் முருகனாரின் முன்னோர்களாலும், ஆடு மாடு மேய்ப்போராலும் வழிபட்டு வந்த நிலை முருகனாரின் வரவிற்குப்பின் நிலைமை மாறியது. பூசை, புணஸ்காரம், வேதமந்திரங்கள் எதுவும் தெரியாத சாதாரண பக்தனின் நம்பிக்கையாலும், அவனின் தினசரி பூசைகளாலும் தெய்வத்தின் சக்தி வலுப்பெற்றுக்கொண்டே சென்றது என்று சொல்லுமளவிற்கு, அனுதினமும் மக்களின் ஆதரவும், செல்வாக்கும் கூடிக்கொண்டே சென்றது, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவிலும் தொடந்தது. 

தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமையேற்று திருக்குடமுழுக்கு விழா நடக்க இருப்பதை எண்ணி முருகனாரும், பக்தர்களும் மகிழ்ந்திருந்த வேளையில், அவர்களுக்கு மேலுமொரு இன்ப அதிர்ச்சி அளிக்கும்வகையில், பேரூர் ஆதீனம் மட்டுமின்றி கொங்கு நாட்டிலுள்ள பிற ஆதினாங்களான சிரவை ஆதீனம், கௌமார மடாலயம் குமரகுருபரசாமி அடிகளார், பழனி சாது சண்முக மடம் தவத்திரு சண்முக அடிகளார், செஞ்சேரிமலை திருநாவுக்கரசர் திருமடம் தவத்திரு முத்துசிவராமசாமி அடிகளார், பேரூர் பச்சார்பாளையம் பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகளார், கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்ட எல்லா ஆதீனங்களையும் திருக்குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக சாந்தலிங்க அருள்நெறி மன்றத்தினரின் தகவல் வந்தது சேர்ந்ததும் முருகனாருக்கு பேரின்ப அதிர்ச்சியாக இருந்தது.

முனீஸ்வர்-கன்னிமார்-கருப்புசாமியோடு விநாயகருக்கும் சேர்த்து நான்கு தெய்வங்களுக்கும் நடைபெறும் திருக்குட நன்னீராட்டு விழாவிற்கு, மக்களின் நன்மதிப்பைப்பெற்ற கொங்குநாட்டு ஆதீனங்கள் எழுவரும் ஒரே சமயத்தில் கலந்துகொள்கிறார்கள் என்ற செய்தி அப்பகுதி மக்களிடம் தீயாய் பரவியது. இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சாரை சாரையாய் வந்து திருக்குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு இறையருள் பெற்றுச் சென்றனர். இதனால் கோவிலின் மதிப்பும், முருகனாரின் அறிமுகமும், செல்வாக்கும் கூடியது.

திருக்குட நன்னீராட்டு விழாவிற்குப்பிறகு முருகனாரின் ஆன்மீகப்பாதையில் புத்தொளி பிறந்தது. பேரூர் ஆதீனத்துடனான தொடர்பு புதிய பாதை அமைத்துக்கொடுத்தது. திருக்குட நன்னீராட்டுவிழா முடிந்த இரண்டே மாதங்களில் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் வழிகாட்டுதழில் மாசி மாத நன்னாளில் இல்லறம் துறந்து துறவறமேற்றார். பேரூர் ஆதீன மடத்தில் சிலகாலம் தங்கியிருந்து திருமந்திரம், வேள்வி, தியானம், இறைவழிபாடு உள்ளிட்டவற்றை முறையாக கற்றுக்கொண்டார்.

முருகனாரின் ஈடுபாடு, அடக்கம், ஒழுக்கம் ஆகியவற்றால் கவரப்பட்ட மகாசன்னிதானம் முருகனாருக்கு “அருள் முருக அடிகளார்” என்று பெயர் சூட்டி, சாந்தலிங்க அருள்நெறி மன்றத்தின் அடிகளார் குழுவில் ஒருவராக இணைத்துக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக சாந்தலிங்க அருள்நெறி மன்றத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆன்மீகப்பணிகளுக்காகவும், சைவ நெறியை பரப்புவதற்காகவும் நாடு முழுவதும் சுற்றிவந்தார். பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்துகொள்ளும் திருக்குட நன்னீராட்டுவிழா, வேள்வி, திருமண நிகழ்ச்சி, புதிய இல்ல திறப்புவிழா நிகழ்ச்சி, மணிவிழா (ஷஷ்டியப்த பூர்த்தி), சதாபிஷேக விழாக்களில் பங்கேற்று சைவ சிந்தாந்த நெறிமுறையில் பாண்டித்யம் பெற்றுள்ளார் அருள்முருக அடிகளார்.


2022 ஆம் ஆண்டோடு துறவறம் மேற்கொண்டு 20 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இதுவரை தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகள் என 300 க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் சைவநெறிப்படி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு வைபவத்தை நடத்தியுள்ளார். இதுதவிர, மலைவாழ் பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில்களுக்கு இலவசமாக திருக்குடமுழுக்கு விழாவை நடத்திக் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் கர்நாடகாவின் மைசூர், பெங்களூர் போன்ற பலபகுதிகளிலுள்ள மக்கள் தங்கள் குடும்ப விசேஷங்களுக்கும், கோவில் திருக்குடமுழுக்கு, பௌர்ணமி பூஜை, விளக்குபூஜை போன்ற நிகழ்வுகளை சைவநெறிப்படி நடத்திட வேண்டி அருள்முருக அடிகளாரை நாடி வந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம்: சந்தோஷ் கவுடா, மைசூர்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved