🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பதற்கு காரணம்

தீர்த்த பிரசாதம் :

சிவன் கோவிலில் எப்படி திருநீறு மகத்துவம் நிறைந்ததோ, அதே போல் பெருமாள் கோவில்களில் தீர்த்தம் மிகவும் புனிதமான ஒன்றாகும். பெருமாள் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த பிறகு தீர்த்தம் பிரசாதமாக கொடுத்து, ஜடாரி வைப்பார்கள். இந்த தீர்த்தத்தில் பச்சை கற்பூரம், துளசி, மஞ்சள், ஏலக்காய், லவங்கம் உள்ளிட்ட பல பொருட்களை சேர்த்து பெருமாளின் பாதத்திற்கு அருகில் எப்போதும் வைத்திருப்பார்கள். பக்தர்களுக்கும் பிரசாதமாக கொடுப்பார்கள்.

பெருமாளுக்கு எத்தனையோ விதமான உணவுப் பொருட்கள் நைவேத்தியமாக படைத்தாலும் இந்த தீர்த்தமும் கண்டிப்பாக வைப்பார்கள். பெருமாளுக்கு படைக்கப்பட்ட தீர்த்தம், பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுவதற்கு முக்கிய காரணம் உண்டு.

சில கோவில்களின் தல வரலாறை பார்த்தால், அந்த தலத்தில் ரிஷிகளுக்கு நேரடியாக தெய்வங்கள் காட்சி தந்து, மரணம் இல்லாத வாழ்வு உள்ளிட்ட பல வரங்களை தந்து அருள் செய்துள்ளனர் என சொல்லப்பட்டிருக்கும். அதனால் இந்த தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கும் இறைவன் அதே போன்ற பலனை கொடுப்பார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் எல்லோராலும் இந்த தலங்களுக்கு சென்று தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை.

தீர்த்த பிரசாதத்திற்கான காரணம் :

வெளியூரில், வெளிநாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால் இது போன்ற சிறப்பு மிகுந்த கோவில்களுக்கு செல்ல முடியாது. அப்படி கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கும் பெருமாளின் திருவருள் கிடைப்பதற்கும், அவர்களுக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்கவும் பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளகிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அருந்தினாலே போதும். பெருமாளை அத்தகைய சிறப்பான தலங்களுக்கு சென்று தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை தரிசித்த பலன் கிடைத்து விடும் என வேதங்கள் செல்கின்றன.

அனைவருக்கும் பெருமாளின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. பெருமாளின் பாதம் பட்ட தீர்த்தம் அனைத்து விதமான நோய்களையும் நீக்கக் கூடியது என சொல்லப்படுகிறது. விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான் கங்கை நதிக்கே புண்ணிய நதி என பெயர் கிடைத்தது என சொல்லப்படுகிறது.

பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது, இடது கையில் துணியை வைத்துக் கொண்டு, அதன் மேல் வலது கையை வைத்து மிக கவனமாக அபிஷேக தீர்த்தத்தை வாங்க வேண்டும். நம்முடைய காலில் சிந்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெருமாளின் தீர்த்தத்தை பெறும் போது,

" அகால ம்ருத்யு ஹரணம்

சர்வ வியாதி நிவாரணம்,

சமஸ்த பாபக்ஷய ஹரம்

விஷ்ணு பாதோதகம் சுபம்"

என்ற ஸ்லோகத்தை மனத்திற்குள் சொல்லியபடி வாங்கி அருந்த வேண்டும். மனதில் பக்தியுடன் இந்த தீர்த்தத்தை வாங்கி அருந்தினால் கண்டிப்பாக அனைத்து விதமான நோய்களும் நீங்கும்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved