🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சப்த ரிஷிகளும் - ராஜ ரிஷிகளும்

சப்த ரிஷி என்பவர்கள் பிரம்மரின் நேரடி வழித்தோன்றல்கள் ஆவர். உலகம் தோன்றிய காலத்திலிருந்து உயிரினங்களை தோற்றுவிக்க படைப்பின் கடவுளான பிரம்மாவிற்கு உதவி புரிந்தவர்கள். இந்து சமயத்தில் சப்த ரிஷி எனப்படுவோர் அத்திரி, பாரத்துவாசர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிச்டர், விஷுவாமித்ரர் ஆவர். இவர்கள் நான்கு வேதங்களையும் இலக்கியங்களையும் தனது தவ வலிமையால் கற்றறிந்தவர்கள். ரிஷிகள், தங்கள் தவ வலிமையல், இறைவனிலிருந்து வரும் ஒலி அலைகளை கிரகித்து உணர்ந்து வேத மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆவார். ரிஷிகளை மந்திரதிரஷ்டா என்பர். வேத மந்திரங்களின் சப்தத்தை உணர்ந்து அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்று இதற்குப் பொருளாகும்.

ராஜ ரிஷிக்களும்- சப்த ரிஷிக்களும்

ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.

முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:

1.நீண்ட ஆயுள்

2.மந்திரங்களை காணும் சக்தி

3.ஈசுவரத்தன்மை

4.தெய்வீகப்பார்வை

5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு

6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்

7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்.

இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:– மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர்.

இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்துக்கு உரிய ஸப்தரிஷிகள்:

அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர்

நால்வர் : ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.

இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:

ராஜ ரிஷி : க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்.

பிரம்ம ரிஷி : பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்.

ஜன ரிஷி : மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.

காண்ட ரிஷி :வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்

மஹரிஷி : ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல

பரம ரிஷி : மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி

ச்ருத ரிஷி : வேத ஒலியைக் கேட்போர்

தவ ரிஷி : தவத்தில் சிறந்தவர்

சத்ய ரிஷி : சத்யத்தில் நிலைபெற்றவர்.

தேவ ரிஷி : தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.

மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:

கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள். ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவாமித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்.

ஊர்த்வரேதஸ் : பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்

ஆஸ்ரமவாசிகள் : கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.

யாயவரஸ் : நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்.

புரோகித வ்ருத்திகா :  புரோகிதம் செய்த ரிஷிக்கள்.

சாதரண வ்ருத்திகா : சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்.

சஸ்த்ர அத்யாபகா : ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்.

சாஸ்த்ர அத்யாபகா : சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்.

உக்ர தபஸ்வீ : இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.

சாதரண தபஸ்வீ : இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.

இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved