🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சிவனுக்கு கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேகம்!

சிவபெருமான் அபிஷேகப்பிரியர். அதிலும் சங்கினால் அபிஷேகம் செய்வது என்பது ஈசனின் மனதை மிகவும் குளிர்விப்பதாகும். கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கார்த்திகை சோமவாரம் என்று அழைக்கப்படும். இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் விமரிசையாக நடந்தேறும். சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வதை தரிசிப்பது மகா புண்ணியம் ஆகும். சகல தோஷங்களையும் போக்கும். சந்தோஷங்களையும் நிம்மதியையும் தந்தருளும். முக்திப்பேறு கிடைக்கும்.

இத்தகையை சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில், சோமவாரம் என்று சொல்லக்கூடிய திங்கட்கிழமைகளில், சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வதில் இன்னும் பல புண்ணியங்கள் வந்து சேரும். கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களில் சங்காபிஷேக பூஜை விமரிசையாக நடந்தேறும்.

சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். இதைத் தரிசிப்பவர்களுக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம்.

நவக்கிரகங்களில் சந்திரன் ‘மனோகாரகன் ஆவார். இவரே மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களை நிர்ணயிப்பவராக இருக்கிறார். குழப்பமான அல்லது தெளிவான முடிவெடுப்பதற்கு காரணகர்த்தா இவரே. இந்த சந்திரனை, சிவபெருமான் தலையில் சூடியுள்ளார்.

சந்திரனுக்கு ‘சோமன் என்ற பெயரும் உண்டு. இதனால் சிவனுக்கு ‘சோமசுந்தரர் ‘சோமசேகரன் ‘பிறை நுதலான் என்ற பெயர்களும் உண்டு. எனவே, மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க திங்கள்கிழமைகளில் சிவவழிபாடு செய்வது சிறப்பு பெறுகிறது. அதிலும் ஒளி மாதமான, கார்த்திகை சோமவார நாட்களில் சிவதரிசனம் செய்தால், குடும்ப ஒற்றுமை ஏற்படும். கணவனும், மனைவி ஒற்றுமை உண்டாகும்.

சங்கு என்பது மஹாவிஷ்ணு வாசம் செய்யும் இடமாக கருதப்படுகிறது. சங்கானது, சந்திரனின் சகோதரியான மஹாலட்சுமியின் அம்சமாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட தெய்வீக பொருட்களில் மஹாலட்சுமியோடு வெளிப்பட்டதே வலம்புரி சங்காகும். இது தான் மஹாவிஷ்ணுவின் இடக்கையில் உள்ளது. இந்து கடவுள்கள் ஒவ்வொருவருக்கும் சங்குகளை வைத்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. 

வலம்புரி சங்கிற்கு மட்டுமே விஷேச சக்தி இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. எந்த வீட்டின் பூஜையறையில் வலம்புரி சங்கு இருக்கிறதோ, அங்கு மஹாலட்சுமியே வாசம் செய்வதாக அர்த்தம். அந்த வீடே லட்சுமி கடாட்சத்தால் நிறைந்திருக்கும். வலம்புரி சங்கானது செல்வத்தை அள்ளித் தரும். தூய்மையின் அடையாளமாக கருதப்படும் சங்கில் பசும்பாலை நிரப்பி, அதை ஈசனுக்கு அபிஷேகம் செய்தால், ஆயிரம் யாகங்கள் செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். கங்கை நீரை நிரப்பு அபிஷேகம் செய்தால் பிறப்பே இல்லாத நிலையை அடையலாம் என்று பத்மபுராணம் விளக்கியுள்ளது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved