🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கார்த்திகை தீப திருநாள் உருவான கதை!

நம் முன்னோர்களின் வாழ்க்கையிலும் வரலாற்றிலும் தமிழ் மக்களின் மங்கள பொருளாக கருதப்படுவது தீபம். தமிழர்கள் கொண்டாடப்படுகிற பல விழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்று. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு மண் அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இந்த மாதம் முழுவதும் மாலை நேரத்தில் வீடுகளின் வாசலில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இந்த கார்த்திகை மாதம் அழிக்கும்  கடவுளான சிவனுக்கும், தமிழ் கடவுளான முருகனுக்கும், காக்கும் கடவுளான பெருமாள் கடவுளுக்கு உகந்த மாதமாக பக்த கோடிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கார்த்திகை என்பது பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் தமிழர்கள் வீட்டிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் நாளாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கார்த்திகை நாளை (06.12.2022)செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக கொண்டாட பட உள்ளது. 

தீபம் தோன்றிய கதை:

கார்த்திகை தீப விழா தோன்றியதற்கு காரணமாக விளங்கிய புராண நிகழ்ச்சியான அடிமுடி தெரியாத ஒளிப் பிழம்பாய் சிவன் தோன்றியதும் அதனை விஷ்ணுவும் பிரம்மாவும் தேடிக் காணக் கிடைக்காமல் தோற்றதும், ஒளி வடிவில் இருந்த சிவன் லிங்கமாய் காட்சி அளித்ததும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பௌர்ணமி திருக் கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம் கூறுவது உண்டு. ஒருசமயம் சிவாலயம் ஒன்றில் நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. கோயிலுக்குள் புகுந்த அந்த எலி எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணியத்தை தந்தது. அந்த புண்ணியத்தின் விளைவாக எலிக்கு மானிடப் பிறவியும் அரச போகமும் அரண்மனை வாழ்வும் கிடைக்கப் பெற்றது. முன்ஜென்மத்தில் எலியாய் இருந்த பிறவிக்கு, அடுத்த ஜென்மாவில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறவி கிடைத்தது. மகாபலி எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது. உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.


தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வந்தால் காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக நிலைத்துவிட்டது. காலப்போக்கில் அனைத்து மக்களும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்:

நெருப்புக்குரிய புனித ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன் மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரையில் இந்த தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபம் சிறப்பு:

இந்நன்னாளில் அனைவரின் வீடுகளிலும் அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி பஞ்சாலோ அல்லது  திரியாலோ ஆன திரியை போட்டு விளக்கேற்றி பூஜை செய்து விட்டு அந்த விளக்குகளை வீட்டின் வாசல், நிலைப்பகுதி, ஜன்னல் ஆகிய பகுதிகளில் ஏற்றி வைப்பார்கள். இரவே பகலாக தெரியும் அளவிற்கு தெருக்கள் தோறும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இந்த தீப திருநாள் மூன்று நாள் கொண்டாடப்படுகிறது.

கிழக்கு நோக்கி வீட்டு வாசலில் அவரை இலையில் மாட்டு சாணம் வைத்து அதன் மேல் தீபம் ஏற்றியும், வீடுகளுக்கு உள்ளேயும், வெளியிலும் சிறிய அகல் விளக்குகளை ஏற்றி இல்லத்தை அலங்கரிப்பார்கள். கார்த்திகை அன்று வானில் ஏராளமான நட்சத்திரங்கள் தோன்றினாலும் அவற்றில் ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமாக இருக்கும். அதில் பிராகசமாக காணப்படும் ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திர கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கார்த்திகை திருநாளில் வீடு முழுவது அகல் விளக்கின் ஒளி பரவட்டும். அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று கார்த்திகை தீபம் திருளாலை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved