🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விபத்தில் வேல்முருகனை இழந்தது பெரும் துயரம்!

இரண்டாண்டு இடைவெளிக்குப்பின் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய சித்திரைத் தேர்திருவிழா படு உற்சாகமாக, எந்தவித சலசலப்புமின்றி கோலாகலமாக நடந்து முடிந்தது என்று நிம்மதிப்பெருமூச்சோடு, இயல்பு நிலைக்கு திரும்புகையில் வேல்முருகனின் மரணம் நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. 

மே-13 அன்று காலை விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகேயுள்ள N.புதூர் கிராமத்தில் இருந்து ஜோதியை ஏந்திக்கொண்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வாகனங்களில் புறப்பட்டது இளைஞர் பட்டாளம். அதில் பன்னீர் செல்வம் - ராமலெட்சுமி தம்பதிகளின் மகனான வேல்முருகன் (23) என்ற இளைஞனும் ஒருவர். உள்ளூரிலேயே டிரைவர் வேலை பார்த்துவரும் வேல்முருகன், நண்பர்களோடு டாடா சுமோ காரில் ஜோதியை ஏந்திக்கொண்டு உற்சாகம் கரைபுரல பயணித்துள்ளனர். 

வாகனம் கோவில்பட்டி நெருங்கும்பொழுது சோதனை சாவடி வருவதை அறிந்து அனைவரும் காரின் உட்புறம் சென்று அமர்ந்துகொண்டு, சன்னல் வழியாக ஜோதியை ஏந்திச்சென்றுள்ளனர். காரின் கதவு சரிவர மூடாததை கவனிக்காததால், கொஞ்சநேரத்தில் திடீரென காரின் கதவு திறந்துகொள்ள, அதில் சாய்ந்திருந்த வேல்முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனிருந்த நண்பர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி மருத்துவமனியிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்தவர்கள் பரிசோதித்துவிட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு அறிவுறித்தியுள்ளனர்.  கடந்த சில தினங்களாக கோமாநிலையில் சிகிச்சை பெற்றுவந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேல்முருகனின் உடல் பிரேதபரிசோதனைக்குப்பிறகு இன்று மதியம் பெற்றோர்களின் வசம் ஒப்படைக்கப்படும் என்று அதிர்பார்க்கப்படுகிறது. வேல்முருகனின் மறைவு செய்திகேட்டு த,வீ.க.பண்பாட்டுக்கழக மாநிலத்தலைவர் வரதராஜன் வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு பாளையங்கோட்டை மதிமுக வட்ட செயலாளர் மாரிச்சாமியை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இளைஞரணி செயலாளர் பூப்பாண்டி, மாவட்ட தலைவர் வலசை கண்ணன் ஆகியோரும் உரிய ஏற்பாடுகளை செய்வதாக தெரிகிறது.

வேல்முருகனின் மறைவிற்கு விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், அறக்கட்டளை தலைவர் மு.ப்ழனிச்சாமி, சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்கலாக மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளின் பொழுது வாகனங்களில் வரும் இளைஞர்கள் கார்களின் மூதும், பக்கவாட்டிலும் அமர்ந்து பெருங்கூச்சலிட்டுக்கொண்டு வேகமாகப்பயணிப்பதும், போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் போக்கும் அதிகரித்துள்ளதைக்கண்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தங்கள் கவலையை பகிர்ந்து வந்தனர். இளைஞர்களுக்கு எது நடந்துவிடக்கூடாது என்று சமுதாயத் தலைவர்கள் பயந்துகொண்டு எச்சரிக்கை செய்தனரோ அது இன்று வேல்முருகனின் உயிரை பறித்துள்ளது. அன்றாட தினக்கூலிகள், குடும்பத்திற்கு ஒரே வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய இளைஞர்கள் தங்கள் உயிரை இழந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் தலைவர்கள் சொன்னாலும், அதைப் புரிந்துகொள்ளாத இளைஞர் கூட்டம் சமூகவளைதளங்களில் இப்படி செல்வதுதான் "கெத்து" என்ற எண்ணத்தை விதைத்து வருகின்றனர். இதற்கு படிப்பறிவில்லாத பெரும்பாலான இளைஞர்களும் பலியாகின்றனர்.

ஆனால் இதுபோன்று விபத்துகளில் சிக்கி உயிர் இழந்தவர்களும் சரி, கை,கால் பாதிக்கப்பட்டவர்களும் சரி ஒருசில நாட்களில் மறக்கப்பட்டு விடுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. எனவே வேல்முருகனை இழந்ததே இறுதியாகட்டும். இனி எதிர்வரும் காலங்களில் இது போன்ற எந்தவொரு துயரச்சம்பவமும் நிகழாது, அனைத்து இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாய இளைஞர்கள், பொதுமக்கள் மிகவும் பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் எந்த ஒரு நிகழ்விழும் பங்கேற்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

துயரமான சூழலில் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதற்கே கடினமாக இருந்தபொழுதும், இதைவிட தகுந்த தருணம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved