🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தாமிரபரணி நதிக்கரை தந்த தமிழ்கடல் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பு.

தமிழ்கடல் என்றழைக்கப்படும் நெல்லை கண்ணன் (77) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 1945 ஜனவரி 27-இல் நெல்லையில் பிறந்தவரான கண்ணன் தமிழ் இலக்கிய உலகிலும், பட்டிமன்ற அரங்கிலும் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கியவர். காமராஜரின் சீடராக அரசியலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

விஜய் டிவி-யில் நெல்லை கண்ணன் நடுவராக இருந்து "தமிழ் பேச்சு... எங்கள் மூச்சு" நடத்திய நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பல இளைஞர்கள் இன்று டிவி மீடியாவில் வெற்றிகரமாக வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், தமிழ் இலக்கியவாதி, அரசியல்வாதி என்ற பன்முகத்தன்மையுள்ளவரான நெல்லை கண்ணன், இரண்டு முறை நெல்லை தொகுதியிலும், ஒரு முறை 1996 ல் அதிமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக கலைஞர் மு.கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் கலைஞர் 46097 வாக்குகளும்,நெல்லைக் கண்ணன் 10313 வாக்குகளும் பெற்றனர்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்து நெல்லை வந்தபோது  நெல்லைகண்ணன் வீட்டில் தான் உணவு சாப்பிட்ட பெருமைக்குரியவர். 1992 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் ஜெயந்தி நடராஜனிடம் தனக்கான வாய்ப்பை இழந்தவர். 2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டவர், ஓரே ஆண்டில் அதிமுகவிலிருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.

நித்தியானந்தா மதுரையின் ஆதீனமாக பொறுப்பேற்றபோது அதை எதிர்த்து போராடிய சைவக்கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர். காஞ்சி சங்கராச்சாரியார் நெல்லையப்பர் கோவிலை தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக ஆக்க முயற்சித்த போது, அதை எதிர்த்து போராடி, நெல்லையப்பர் கோவிலில் இருந்து சங்கராச்சாரியாரை வெளியேற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். அதன் பிறகு சங்கராச்சாரி நெல்லையப்பர் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமயச்சொற்பொழிவு மேடைகளில் சைவத்தையும், தமிழையும் ஒருங்கே வளர்த்த  தாமிரபரணி நதிக்கரை தந்த தமிழ்கடல் கண்ணன் மறைவுக்கு இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved