🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தென்தமிழகத்தின் முதலாளி இயற்கையோடு இணைந்தார் - ஆழ்ந்த இரங்கல்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீராமலிங்கா மில்ஸ் மற்றும் ஸ்ரீஜெயவிலாஸ் ஆகிய மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்களில் ஒருவரும், தென்மாவட்ட மக்களால் முதலாளி என்று அழைக்கப்படுபவருமான T.R.தினகரன் (85) அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு 11.50 மணியளவில் இயற்கை எய்தினார்.

சாது. இராமசாமி நாயக்கர் -ஆவுடையம்மாள் தம்பதியரின் மகனாகப்பிறந்த ஐயா.தினகரன் அவர்கள், வானம் பார்த்த கரிசல் பூமியில், வெயிலும்,வறட்சியும்,மட்டுமே வாழ்க்கை முறையாகிப் போன அருப்புக்கோட்டை பகுதியில் 1965 களிலேயே ஜெயவிலாஸ் என்ற பெயரில் பஞ்சு நூற்பாலைகளை துணிந்து அமைத்தவர்.

70 வருடங்களுக்கு முன்பே இன்ஜினியரிங் படித்த பொறியியல் பட்டதாரியான அவர்,வளர்ந்த நகரங்களில் தங்களது தொழில்களைத் தொடங்கினால் தான் தங்கள் தொழில்கள் வளரும்,லாபம் வரும் என்ற தொழில்துறையின் அடிப்படையையே மாற்றி,அனைத்து வகைகளிலும் மிகவும் பின்தங்கிய பகுதியில் தன் நூற்பாலைகள் எனும் ஸ்பின்னிங் மில்களை துவக்கி,அதை வளர்த்து எடுத்து,ஒன்றை பத்தாக்கி, இன்றைக்கு ஆசியாவின் மிகப்பெரும் நூற்பாலைகளாக அவற்றை மாற்றியவர்.

கிட்டத்தட்ட 50000 பணியாளர்களுக்கு நேரடியாக வேலை வாய்ப்பும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் வழங்கி வருபவர். ஒரு வேளை சோற்றுக்கே திண்டாடிய  குடும்பங்களுக்கு, வேலை தந்து, அவர்களது வீட்டு குழந்தைகளுக்கு கல்வியையும் தந்து, மூன்று வேளையும் வயிராற உண்ண வைத்தவர்.

அருப்புக்கோட்டை,விருதுநகர்,கமுதி, சாத்தூர் என அன்றைய ஒன்றிணைந்த இராமநாதபுர மாவட்டப் பகுதிகள் வளம் பெற்றதே இவரது ஜெயவிலாஸ் குழும நிறுவனங்களால் தான்.

கிள்ளித் தந்துவிட்டு பெருமை பேசுபவர்கள் மத்தியில்,ஏராளமான கல்வி நிறுவனங்களைத் துவக்கி அதன் மூலம் சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவசமாக கல்வியை அளித்து,அவர்களுக்கு பொருளாதார உதவிகளையும் அள்ளி அள்ளி தரும் விளம்பரம் விரும்பாத தகைசாளர்.

தமிழக அரசு வழங்கும் முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற தொழிலதிபர் ஐயா.தினகரன்.  கம்பன் கழகத்தில் பணியாற்றியவர். இறைதொண்டில் ஆர்வம் மிக்கவர். கல்வி சேவை புரிந்தவர். மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.

லட்சக்கணக்கானவர்களின் பசி தீர்த்து, தென்மாவட்டத்தின் முக்கிய தூணாகவும், அரணாகவும் விளங்கிய முதலாளி ஐயா.T.R. தினகரன் அவர்களின் மறைவுக்கு கம்பளத்தாரின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved