🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஐயா.கந்தசாமி நாயக்கர் மறைவு.... கம்பளத்தாரின் கவச குண்டலத்தை இழந்தோம்.....

கோவை தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணித்தலைவரும், கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளருமான G.தர்மப்பிரகாஷ் அவர்களின் பாட்டனாரும்,  ஆர்.பொன்னாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும்,கோவை மாவட்ட திமுகழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவராய் திகழந்தவரும், சமுதாய மக்களால் தலைவர் என்றழைக்கப்பட்டவருமான ஐயா S.கந்தசாமி நாயக்கர் (88) நேற்று மாலை வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். 

கந்தசாமி நாயக்கர் மறைவு குறித்து கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் K.T.மோகன்ராஜ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பெரும் நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்து, 21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயா.கந்தசாமி நாயக்கர் தொடர்ந்து நான்கு முறை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் தொடர்ந்து, அனைவராலும் பொன்னாபுரம் தலைவர் என்று கடைசி வரை அன்போடு அழைப்பட்டவர் ஐயா கந்தசாமி நாயக்கர். 

1980 களில் கோவை மாவட்ட அதிமுக வில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும், நெகமம் நெப்போலியன் என்றழைக்கப்பட்டவருமான நெகமம் K.V.கந்தசாமி (KVK) மற்றும் திமுக வின் கோவை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் காரோட்டி கண்ணப்பன் அழைக்கப்பட்ட மு.கண்ணப்பன் ஆகியோருக்கிடையேயான இருதுருவ அரசியலில், ஆளும் கட்சியின் அசுரபலமிக்க KVK அவர்களை எதிர்த்து மு.கண்ணப்பனுக்கு காவல் அரணாகவும், பக்கபலமாகவும், படைத்தளபதியாகவும் இருந்து எதிர் அரசியல் நடத்தி புகழ்பெற்றவர் ஐயா கந்தசாமி நாயக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய அதிமுக ஆட்சியில் கேவிகே வை எதிர்த்து கூட்டம் போடமுடியாது, ஆதரவாக செயல்பட முடியாது என்ற நிலமையில், சொந்தபந்தங்களே ஒதுங்கியிருந்த காலத்தில், தன் சொந்த பலத்தாலும், ஆளுமையாளும் கண்ணப்பனுக்கு தோளோடு தோள் நின்று அரசியல் செய்தவர். மு.கண்ணப்பன் அவர்களை கம்பளத்தார் வசிக்கும்  பகுதிக்கெல்லாம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்துவைத்து ஆதரவுக்கரம் நீட்டி, வலிமைப்படுத்தியவர் மதிப்பிற்குரிய கந்தசாமி நாயக்கர் என்பது வரலாறு. 

அதேபோல் பொள்ளாச்சி நகரத்திலும், காய்,கறி சந்தையிலும் அன்றைய ஆளும் கட்சியினரின் முழு செல்வாக்கோடும், அதிகாரத்தோடும் கொடிகட்டப் பறந்தபோதும், சாதி பலமோ, கட்சி பலமோ இல்லாமல் தனித்த செல்வாக்கோடு பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியானாலும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியானாலும் தன்னிகரற்ற தலைவராக வலம்வந்தவர் ஐயா கந்தசாமி நாயக்கர் என்பது நினைவை விட்டு அகலாதது. 

அமைதியான சுபாவம்,  அஜாகுபாவன தோற்றம், எதற்கும் அஞ்சாதவர் கம்பளத்தாளத்தாருக்கே உண்டான கம்பீரத்தோடு யாருக்கும் தலைவணங்காமல் சிங்கிளாக வலம் வந்த சிங்கம் என்றால் அது கந்தசாமி நாயக்கரையே சேரும்.  அனைத்து சமூக ஆளுமைகளின் அன்பைப் பெற்றவர், அனைவராலும் மதிக்கப்படக்கூடியவராக, கம்பளத்தாரின் கவசகுண்டலமாக வாழ்ந்த கந்தசாமி நாயக்கரின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பு. 

தன் இறுதி மூச்சுவரை கம்பீரத்தை இழக்காமல், நிறைவு வாழ்வு வாழ்ந்து இயற்கை எய்திய ஐயா.கந்தசாமி நாயக்கரின் புகழ் கம்பளத்தார் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய  நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதேபோல் கந்தசாமி நாயக்கர் மறைவுக்கு சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, விருதுநகர் கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் மலைராஜன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் மாசிலாமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved