🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாடல்கள் மூலம் புரட்சியை விதைத்த கத்தார் காலமானார்.

புரட்சிகர வரிகளால், மக்களிடையே உணர்ச்சிப் பிழம்பை ஏற்படுத்திய பிரபல மேடைப் பாடகர் கத்தார் காலமானார். அவருக்கு வயது 77. மக்கள் பாடகர் எனப் புகழப்பட்ட கத்தார், தனித் தெலுங்கானா போராட்டங்களின் போது பெரும் பங்காற்றினார்.

1949ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த கத்தாரின் இயற்பெயர் கும்மாடி விட்டல் ராவ். இளம் வயதிலேயே மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட கத்தார், 1980 காலவாக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்று பாடல்கள் பாடி கவனம் ஈர்த்தார்.

சுதந்திர போராட்டத்தின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட கடார் கட்சியின் (Gadar party) மீதான ஈர்ப்பால் தன் பெயரை கத்தார் (Gaddar) என்று மாற்றிக் கொண்டவர் இவர்.

1997ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார் கத்தார். இதில் அவரது முதுகெலும்பில் துப்பாக்கிக் குண்டு ஒன்று சிக்கிக் கொண்டது. அதன் காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். எனினும், தொடர்ச்சியாக தனது குரலால் மக்களை ஈர்த்து வந்தார்.

 தனி தெலுங்கானா மாநிலத்துக்கான தனது குரலை வலுவாக முன்வைத்து வந்தவர் கத்தார். தனித் தெலங்கானா போராட்டங்களின் போது பல பாடல்கள் மூலம் மாநிலம் முழுவதும் புரட்சித்தீ மூட்டினார். 2010ஆம் ஆண்டு வரை நக்சல் இயக்கச் சார்பாளராகச் செயல்பட்டு வந்த கத்தார், பின்னாட்களில் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் கத்தார். ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து, தெலங்கானா ப்ரஜா முன்னணி என்ற இயக்கத்தைத் தொடங்கி போராட்டங்களை முன்னெடுத்தார். தனது பாடல்களின் மூலம் மக்கள் பிரச்சனைகளை அழுத்தமாக பதிவு செய்ததால் 'மக்கள் பாடகர்' என்று அழைக்கப்பட்டார்.

சமீப சில காலமாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த மக்கள் பாடகர் கத்தார், உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கத்தார் நேற்று (ஜூலை 6) உயிரிழந்தார்.

இந்துஸ்தான் டைம்ஸ் மாவோயிஸ்ட் புரட்சிப் பாடகர் கத்தார் அவர்கள் ஆன்மீகவாதியாக மாறிவிட்டதாக செய்தி வெளியிட்டபோது புரட்சிப் பாடகர் கத்தார் ஆன்மீகத்தில் மூழ்கி சித்தாந்த மரணமடைந்தார் என்று இடதுசாரி செயல்பாட்டாளர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

“மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஜீவனற்ற நிலைகளின் ஜீவனாகவும் இருக்கின்றது” என்ற மதம் பற்றிய மார்க்சின் அணுகுமுறையைத் தங்கள் பிழைப்புவாதத்திற்குத் தக்கவாறு அவர்கள் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். மதம் என்பது வர்க்க சுரண்டல் நடப்பதையும், சமூகத்தின் சுரண்டப்படும் வர்க்கங்களின் பிரச்சினைகளுக்கான உண்மையான காரணத்தை அறியவிடாமல் அவர்களை ஆசுவாசப்படுத்த உதவும் ஒரு போலியான சாதனமாகவும் உள்ளது என்ற பொருளில் அதைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் அதைத் திரித்துப் புரட்டி இந்திய நிலைமைக்குத் தகுந்தவாறு அதைப் பார்ப்பனியத்துக்கு பாதகம் வராத ஒரு கருத்தாக மாற்றினார்கள் என்று ஆன்மீகப்பாதைக்கு சென்ற கம்யூனிஸ்ட்களை கடுமையாக சாடினார்கள்.

மக்கள் பாடகர் கத்தாரின் மறைவுக்கு காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ், ஆளுனர் தமிழிசை, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கத்தார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெலுங்கானா முதல்வர் அறிவித்துள்ளார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved