🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பெருந்தலைவர் சென்னையா நாயக்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவன தலைவரும், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சென்னை மாவட்ட முன்னாள் தலைவரும், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் தந்தையுமான ஆர்.சென்னையா நாயக்கர் (வயது-80) வயது மூப்பின் காரணமாக இன்று சனிக்கிழமை (19.08.2023) காலை 11 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


சென்னையா நாயக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், தேனி மாவட்டம், ஆனைமலையாம்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தொடக்கக் கல்வி மட்டுமே பயின்ற சென்னையா நாயக்கர், சிறுவயதிலிருந்தே சுயதொழிலில் ஆர்வம் கொண்டு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல மாநிலங்களுக்கு சென்று வணிகத்தில் ஈடுபட்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் பெருந்தலைவர் சென்னையா நாயக்கர். 


வடமாநில மார்வாரி வணிகர்களின் ஆதிக்கம் நிறைந்த சென்னை மண்ணடியில், ராஜா பிளாஸ்டிக் என்ற பெயரில் தொழில் நிறுவனத்தை நிறுவி, பெரும் வர்த்தக நிறுவனங்களோடு போட்டிபோட்டு வெறிக்கனியை பறித்தவர் சென்னையா நாயக்கர். பெரும் செல்வந்தராக உயர்ந்த பின்பும் மண்ணடி இல்லத்திலிருந்து நடைபயணமாக கடற்கரை ரயில்வே ஸ்டேசன் சென்று அங்கிருந்து புறநகர் இரயிலில் கிண்டி சென்று, அங்கிருந்து நடந்தே தொழிற்சாலைக்கு செல்வதை கடந்த ஆண்டுவரை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் சங்கத்தின் மாதாந்திரக்கூட்டம் என்றாலும், பிற நிகழ்ச்சிகள் என்றாலும் பேருந்து பயணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே நிகழ்விடத்திற்கு வருவது நேர மேலாண்மையில் சென்னையா நாயக்கர் கொண்டிருந்த முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.


தெலுங்கு மொழி மீது அளவற்ற பற்றுகொண்டவர், கம்பளத்தார் தவிர எந்த தெலுங்குமொழி பேசுபவரைப் பார்த்தாலும் அவர்களிடம் தெலுங்கில் மட்டுமே பேசுவார். தெலுங்கு பேசத்தெரியாத இளம் தலைமுறையினரிடம் பேசும்போது, தாய்மொழியின் அவசியம் குறித்து கொஞ்சநேரமாவது பேசாமல் விடமாட்டார். அதேபோல் சங்கக்கூட்டம், குடும்பவிழா என எந்த நிகழ்விலும் தெலுங்கு மொழியில் மட்டுமே பேசுவார். இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவன தலைவராக, சங்கத்தை வேறூன்றி தழைக்கச் செய்த சென்னையா நாயக்கர், மாதாந்திரக்கூட்டத்தில் 99 சதவீத வருகைப்பதிவேடு உள்ளவர் என்பதின் மூலம் அவரின் சமுதாயப்பற்றை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்.


பெரும்செல்வந்தராக இருந்தும் சமுதாய அர்ப்பணிப்போடு சமுதாயப்பணியில் தனது இறுதிகாலம் வரை ஈடுபடுத்திக்கொண்ட சென்னையா நாயக்கர், தன் காலத்திற்குப்பிறகும் சங்கம் சீராக செயல்பட்டு சமுதாயத்திற்கு அரணாக  விளங்கவேண்டும் என்பதற்காக இளம் தலைமுறையினருக்கு வழிவிட்டு தலைவர் பதவியை துறந்து ஆலோசகராக செயல்பட்டு சங்கப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved