🔴 LIVE | முப்பெரும் விழா 2023


துணைத்தலைவர் துணைவியார் திருமதி.இந்திராணி மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்!

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பெருமாள் அவர்களின் துணைவியார் திருமதி.இந்திராணி அவர்கள் நேற்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தலைவர் திரு.எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நமது சங்கத்தின் ஆற்றல்மிகு செயல்வீரராக விளங்கும் துணைத்தலைவர் திரு.பெருமாள் அவர்களின் துணைவியார் திருமதி.இந்திராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். கரூர் மாவட்டத்திலுள்ள குக்கிராமத்திலிருந்து சென்னையில் குடியேறி, அசைக்கமுடியாத ஆலமரமாக குடும்பத்தை நிலைநிறுத்தியவர் திருமதி.இந்திராணி. கணவரும், அவரும் அதிகம் படித்தவர்கள் இல்லையென்றாலும், அதைக்குறையாக எண்ணாமல் தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொண்டு தன் கணவரின் தொழிலுக்கு உறுதுணையாக இருந்ததுடன், குழந்தைகளுக்கும் நல்ல தாயாக விளங்கியவர் திருமதி.இந்திராணி. கணவரின் தொழிலுக்கு மட்டுமல்லாமல் தன் அன்புமகனை மருத்துவராக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் உழைத்து மருத்துவக்கல்லூரியில் சேர்த்து, பெண்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர். அவர் இல்லம் சென்றபோதெல்லாம் இன்முகம் கொண்டு வரவேற்று அன்பைப்பொழிந்தவர் இன்று நம்மிடம் இல்லையே என்று எண்ணும்பொழுது, வாழ்க்கை மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் திரு.பெருமாள் அவர்களுக்கும், அன்பு மகள் மற்றும் மகன் ஆகியோருக்கு என்ன வார்த்தைகள் சொல்லி ஆறுதல்படுத்துவது என்றே தெரியவில்லை. அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும்,உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


பொருளாளர் திரு.இராமராஜ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இளம் வயதில் இப்படியொரு கொடுமை நிகழும் என்று கனவிலும் நினைக்கவில்லை. கொரானோ பெருந்தொற்றின் தாக்கம் நகர்புறத்திறத்தில் அதிகமாக இருக்கும் என்று அதிலிருந்து தற்காத்துக்கொள்ள சொந்தஊர் சென்ற லட்சக்கணக்கான குடும்பங்களில் திரு.பெருமாள் அவர்களின் குடும்பமும் ஒன்று. சென்னையில் சொந்தமாக வீடிருந்தும் கிராமத்தின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, உறவினர்களுடன் ஊரடங்கு காலத்தை கழிக்கச்சென்றார், இயல்பு வாழ்க்கைக்கு சென்னை நகரம் திரும்பிக்கொண்டிருக்கையில், ஓரிரு வாரங்களில் திரும்பி வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருக்கையில், நம் எண்ணத்தில் மண்ணைத்தூவி, மண்ணிற்குள் புதைகொண்டுவிட்டார் என்று நினைக்கும்பொழுது அழுவதைத்தவிர வேறுவார்த்தைகளில்லை. மனைவி அமைவதெல்லால் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்லி பெருமைப்படுமளவிற்கு திரு.பெருமாள் அவர்களின் வாழ்வில் வரமாக வந்தவர். தன் கணவரை முழுமையான மனிதனாக்கி, வெற்றிகரமான தொழிலதிபராக்கி, சமுதாயத்திற்காகவும் எங்களிடம் ஒப்படத்தவர், தாயின் கனவை நனவாக்கி அன்பு மகன் மருத்துவராய் வரும் முன்பே முந்திக்கொண்டார். ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணத்திற்குப்பின் தான் தாயின் அரவணைப்பும், அன்பும் தேவைப்படும் என்ற நிலையில், மகளின் வாழ்க்கை துவங்கும் முன்பே மரணத்தை தழுவிக்கொண்டது என்ன நியாயம்? மருந்திட்டு ஆற்றும் காயமல்ல இது, மனதில் ரணங்களை ஏற்படுத்திய மரணத்திற்கு மருந்தில்லா உலகில், உங்களின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதைத் தவிர எதுவும் சொல்லி  எங்களைத்தான் ஆறுதல் படுத்திக்கொள்ள் முடியுமே தவிர குழந்தைகளிடம் சொல்லி அறுதல்படுத்திவிட முடியாது. அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும்,உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


மூத்த ஆலோசகர் திரு.நல்லையா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மருத்துவமனையில் உள்ளார் என்ற செய்திகேட்டு மனமுடைந்திருந்த நிலையில், மரணத்தை வென்று அன்புமகள் இந்திராணி இல்லம் திரும்பிவிடுவார் என்றெண்ணிக் கொண்டிருந்த வேளையில், இயற்கையின் அழைப்பை ஏற்று நம்மையெல்லாம் மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு இவ்வளவு சீக்கிரம் இந்திராணி இந்திரலோகம் செல்வார் என்று நினைக்கவில்லை. இந்திராணியே நீ எப்போது சென்றாலும் இந்திரலோகம் உனக்கே சொந்தமானது. ஆனால் கணவருக்கும், குழந்தைகளுக்கும் நீயல்லவா உலகம், அவர்களை தவிக்கவிட்டு உன் உலகைக்காண முந்திச்சென்றது சரியா? கணவரை உயர்த்திப்பார்த்தாய், மகளும், மகனும் வாழ்க்கையில் உயரும் முன்னே, நீ எட்டாத உயரத்தில் சென்றது ஏனோ?  ஆறுதல் படுத்திவிடமுடியாத இழப்பில் உள்ளவர்களை தேறுதல் படுத்துவதும் வித்தைகள் தெரியாமல் தடுமாறி நிற்கின்றோம். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும்,உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திரு.சுப்பையா, திரு.சுந்தரராஜன்,திரு.தங்கம், திரு.முருகன், திரு.ஆண்டிமுருகன், திரு.ஆனந்தகுமார், திரு.நாகப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் திருமதி.இந்திராணி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved