வியாழனை விஞ்சிய சனி - 274 நிலவுகளுடன் சனி முதலிடம்!
சனிக் கோளை 128 புதிய நிலவுகள் சுற்றி வருகின்றன என்று விண்வெளியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனிக் கோளுக்கு இப்போது 274 நிலவுகள் உள்ளன. சூரிய குடும்பத்தில் மிக அதிக நிலவுகளைக் கொண்ட கோள் என்ற பெருமையை இந்தக் கோள் பெற்றுள்ளது. இது வரை அதிக நிலவுகளைக் கொண்டிருந்ததால் வியாழன் “நிலவுகளின் அரசன்” என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது சனிக் கோள் மொத்தம் 274 நிலவுகளுடன் உள்ளது. இது சூரிய குடும்பத்தில் மற்ற எல்லா கோள்களும் பெற்றிருக்கும் நிலவுகளின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு.
முன்பு இதே ஆய்வுக் குழுவினர் கனடா பிரான்ஸ் ஹவாய் தொலைநோக்கியை (Canada France Hawaii telescope) பயன்படுத்தி சனியின் 62 நிலவுகளை அடையாளம் கண்டனர். மங்கலாகத் தெரிந்த அவற்றின் மூலம் சனிக் கோளிற்கு மேலும் கூடுதல் நிலவுகள் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஊகித்தனர். 2023ல் மேலும் உற்றுநோக்கல்கள் நடந்தன.
“128 புதிய நிலவுகள் உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் சனியின் இடத்தை இனி மேல் வியாழன் ஒருபோதும் பெறமுடியாது. 5 பிப்ரவரி 2024 புள்ளிவிவரங்களின்படி வியாழனை 95 நிலவுகள் உறுதிசெய்யப்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றிவருகின்றன” என்று தாய்வான் அகடிமியா ஷின்ஷர் (Academia Sincia) அமைப்பின் விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியல் கழகத்தின் முன்னணி ஆய்வாளரும் முதுகலை முனைவர் பட்ட மாணவருமான டாக்டர் எட்வர்டு ஆஷ்ட்டன் (Edward Ashton) கூறுகிறார்.
சனியின் புதிய நிலவுகள் சர்வதேச விண்வெளியியல் சங்கத்தால் (International Astronomical Union IAU) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய நிலவுகளுக்கு எண்களும், எழுத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு விரைவில் காலிக் (Gallic), நோர்ஸ் (Norse) மற்றும் கனடியன் இனியுட் (Canadian Inuit) கடவுள்களின் பெயர்கள் கொடுக்கப்படும். இவை மூன்றும் வெவ்வேறு நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
ஒவ்வொன்றும் தனித்துவமான புராணக் கதைகள், கடவுளர்கள், கலாச்சாரக் கதைகளைக் கொண்டவை. காலிக் என்பது கெல்டிக் (celtic) ஆதிவாசிகளிடம் இருந்து தோன்றியது. இது இப்போதைய பிரான்சின் கோல் (Gaul) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தோன்றியது. இயற்கை, ஆண் மற்றும் பெண் கடவுள்கள் மற்றும் வீரச் செயல்கள் புரிந்த ஆளுமைகளைக் கொண்டது.
நார்ஸ் புராண நம்பிக்கை ஜெர்மனியின் நார்ஸ் பகுதியில் தோன்றியது. கடவுள்கள், மாவீரர்கள் இதில் முக்கியமானவர்கள். பிரபஞ்சத்தில் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளவை, இயற்கை, ஆன்மாக்கள் ஆகியவற்றை பாரம்பரியமாகக் கொண்டதே கனடாவின் இனியுட் புராண நம்பிக்கை. இந்த நம்பிக்கைகளின் படி சனியின் புதிய நிலவுகளுக்கு பெயர்கள் சூட்டப்படும்.
கோள்களின் முதண்மை நிலவுகளுக்கு அவை சுற்றிவரும் வட்டப் பாதைகளின் அடிப்படையில் பெயர்கள் வைக்கப்படுகின்றன. ஒழுங்கற்ற நிலவுகளுக்கு பழைய புராணங்களின் அடிப்படையில் பெயர்கள் வைக்கப்படுகின்றன. வழக்கமாக சனியின் நிலவுகளுக்கு இதன் அடிப்படையில் பெயர் வைக்கப்படும். பெரும்பாலான நிலவுகளும் நார்ஸ் கூட்டத்தில் உள்ளன.
பல கடவுள்களை வணங்கும் பாரம்பரியமான வைக்கிங் (Viking) நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த பெயர்கள் ஆராயப்படுகிறது. நிலவுகளின் பாதையை வானில் கண்டறிய உதவும் ஷிஃப்ட் மற்றும் ஸ்டாக் தொழில்நுட்பத்தை (shift and stack technique) பயன்படுத்தி இந்த நிலவுகள் கண்டறியப்பட்டன. இத்தொழில்நுட்பத்தின் மூலம் நிலவுகளின் தொடர் படங்கள் பெறப்படுகின்றன. இவை ஒன்றிணைக்கப்பட்டு பெரிதாக்கப்படுகின்றன. நிலவுகள் பிரகாசமாக மாறுகின்றன.
இதனால் ஆய்வாளர்கள் வான்வெளியில் இவற்றின் பாதையை சுலபமாக அடையாளம் காணமுடியும். புதிய, 128 நிலவுகளும் ஒழுங்கற்ற, உருளைக்கிழங்கு வடிவமுடையவை. ஒரு சில கிலோமீட்டர் அளவுடையவை. “இந்த கண்டுபிடிப்பு வருங்காலத்தில் நிலவுக்கான வரையறை பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தும். இது வரை ஒரு நிலவு என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான வரையறை இல்லை.
இப்போது புதிய நிலவுகளை கண்டுபிடிப்பதற்கு ஒரு எல்லை ஏற்பட்டுள்ளது. சனி, யுரேனஸ், நெப்டியூனை சுற்றி வரும் நிலவுகளைக் கண்டறிய பயன்படும் இப்போதுள்ள தொழில்நுட்பமே புதிய நிலவுகளைக் கண்டுபிடிப்பதற்கும் உள்ள சிறந்த தொழில்நுட்பம்” என்று எட்வர்டு ஆஷ்ட்டன் கூறுகிறார். இந்த சிறிய நிலவுகளை உற்றுநோக்குதல் மூலம் சூரிய குடும்பத்தில் முன்பிருந்த நிலையற்ற சூழ்நிலை பற்றி அறியமுடியும்.
அப்போது கோள்கள் நிலையற்ற சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றின. சர்வசாதாரணமாக மோதல்கள் நடந்தன. புதிய நிலவுகள் கொத்து போல குழுவாக உள்ளன. ஒரே மாதிரியாக இருக்கும் இவற்றில் பெரும்பாலானவையும் கடந்த நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பொருட்கள் மோதி சிதறியதால் உருவானவை. இவை அணைத்தும் பெரிய, கோளிற்கு அருகில் இருக்கும் நிலவுகளை நோக்கிய கோணத்தில் அமைந்துள்ள கோள வடிவ வட்டப் பாதைகளைக் கொண்டுள்ளன.
“இவை அணைத்தும் முன்பு இருந்த நிலவுகளின் சிதறடிக்கப்பட்ட சிறிய வடிவங்களே. இவை மற்ற சனியின் நிலவுகள் அல்லது கடந்து சென்ற விண்கற்களின் வன்முறையான மோதல்களால் உடைந்து உருவானவை” என்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக விண்வெளியியலாளர் பேராசிரியர் ப்ரெட் க்ளாட்மென் (Prof Brett Gladman) கூறுகிறார். பல நிலவுகளின் இயக்கவியலைப் புரிந்துகொள்ளுதல் சனியின் வளையங்களின் தோற்றம் பற்றி அறிய உதவும்.
கோளின் முரட்டுத்தனமான ஈர்ப்புவிசையால் இழுத்து அகற்றப்பட்ட ஒரு நிலவால் இவை உருவாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐரோப்பிய விண்வெளி முகமை ஹீரா (Hera) ஆய்வுக்கலனை செவ்வாயைக் கடந்துசென்று டேமோஸ் (Deimos) என்ற ஏழு மைல் குறுக்களவு உள்ள அதன் சிறிய நிலவை 300 கிலோமீட்டருக்கு அருகில் பறந்துசென்று ஆராய அனுப்பியுள்ளது.
செவ்வாயில் ஏற்பட்ட ஒரு பெரிய தாக்கம் அல்லது செவ்வாயால் ஈர்க்கப்பட்ட ஒரு விண்கல் மோதியதால் இந்த நிலவு உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. செவ்வாயின் ஃபோபோஸ் (Phobos) என்ற பெரிய நிலவையும் ஹீரா படமெடுக்கும். பிறகு ஹீரா டெமோஃபோஸ் (Dimorphos) என்ற விண்கல்லை நோக்கி செல்லும். மூன்றாண்டுகளுக்கு முன்பு நாசாவின் பாதுகாப்பு அமைப்பு இந்த விண்கல் மீது வேண்டுமென்றே மோதியது.
இந்த மோதலின் தாக்கம் பற்றி ஹீரா ஆராயும். இதன் மூலம் வருங்காலத்தில் பூமியின் மீது மோதவரும் ஆபத்தான விண்கற்களின் பாதையை வேறு பக்கம் திருப்பி அனுப்பும் ஆய்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. புதிய நிலவுகளின் கண்டுபிடிப்பு வருங்காலத்தில் விண்வெளியியலில் புதிய அறிவுகளைப் பெற நமக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

