🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புதையுண்டுபோன வரலாறு! மீட்டுக்கொடுத்த முனைவர் மு.ரா!

புதையுண்டுபோன வரலாறு! மீட்டுக்கொடுத்த முனைவர் மு.ரா!

தமிழக அரசியல் வரலாற்றில் நீங்க இடம்பிடித்தது மதுரையை ஆண்ட விஜயநகர பேரரசின் ஆட்சி. மதுரையில் கொத்தளம் அமைத்து குடிகொண்டிருந்த முகலாயர்களை வீழ்த்தி, அன்றைய அந்நியரிடம் இருந்து தமிழ் மண்ணை காத்ததும், இம்மண்ணுக்கே உரிய சமயம், கலை, பண்பாடு, கோவில்களோடு, பூமிப்பந்தின் ஆதியில் தோன்றிய மொழிகளில் ஒன்றானதும், தனது தாய்மொழியான தெலுங்கின் தாயான தமிழ்மொழியை காப்பதிலும், பாளையப்பட்டு ஆட்சிமுறையை உருவாக்கி மண்ணின் பூர்வகுடிகளோடு அதிகாரத்தை பகிர்ந்துகொண்டு சகோதரத்துவம், சகிப்புத்தன்மையை இம்மண்ணில் வளர்த்தெடுத்து அமைதியை நிலைநாட்டியதிலும், நிலத்தை பண்படுத்தி, பாசனமுறைகளை உருவாக்கி, வளமான தமிழகத்திற்கு அடிகோலியதும் நாயக்கர் ஆட்சி என்றால் மிகையல்ல.

ஆயுதம் தரித்த ஆங்கிலேயர்கள் முன் வடபுலம் சடசடவென சரிந்து சரணாகதி அடைந்தபொழுது, இந்திய மண்ணின் வீரத்தை இறுதிவரை களத்தில் நின்று ஆங்கிலேயர்களுக்கே தோல்வியை பரிசளித்தவர்கள், விஜயநகரப்பேரரசின் தொடர்ச்சியாக இருந்து தென்னகத்தை ஆட்சிசெய்த பாளையக்காரர்கள். 72 பாளையங்களை ஆட்சி செய்த பாளையக்காரர்களின் சாதி வேறு, மொழி வேறு, சமயம் வேறு என்றாலும், அந்நியர் முன் அடியணியோம் என்று சங்கநாதம் முழங்கி அனைவரும் ஒன்றுகூடி சமர் புரிந்து சிந்திய ரத்தமே, அன்று முதல் இன்று வரை தமிழக மக்களை சாதியாலும், மொழியாலும், மதத்தாலும் பிரிக்க முடியாமல் போவதற்கான விதை. 

பாஞ்சை கோட்டை வீழ்ந்து பதைபதைத்த ஊமைத்துரை ஓடிச்சென்று உதவிகோரியது, தன் சாதி மன்னனிடமல்ல, மருதுசகோதர்களிடமே. கட்டியாண்ட மண், மகுடம் தறித்த மணாளன், கட்டிய தாலி சேர்த்து பொட்டையும், பூவையும் இழந்து, நிற்கதியாய் நின்ற வேலுமங்கை தேடிச்சென்ற தாய்வீடு விருப்பாச்சி. விருப்பாச்சியில் வீரம் பயின்ற வேலுமங்கை, ஆங்கிலேயர்களிடமிருந்து இழந்த மண்ணை மீட்ட ஒரே அரசி வீரமங்கை வேலுநாச்சியார் என்ற காலத்தால் அழியாப்புகழை அடைந்ததும், பின் முடிதுறந்து தன்னை விதைத்துக்கொண்டதும் விருப்பாச்சி மண்ணில் தான்.

இவ்வளவு வரலாற்றுப்பெருமை வாய்ந்த விருப்பாச்சி மண்ணை ஆண்டுகொண்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் பாளையக்காரர்களையும், சமஸ்தானங்களையும்  ஒன்றிணைத்து,  கடைசிவரை களத்தை இழக்காமல் போராடி தென்பாண்டி சீமையின் மாண்பையும், வீரத்தையும் பறைசாற்றிய விருப்பாச்சி கோபால நாயக்கர் மரணித்த தேதியில் இருந்த 220 ஆண்டுகால குழப்பத்திற்கு,  ஆவணப் புதையல்களை வேட்டையாடி,  நவம்பர் 20-ஆம் தேதி என்ற உண்மையை உலகறியச்செய்து,  முடிவில்லா தேடுதலுக்கும், குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த முனைவர்.மு.இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு கம்பளத்தாரின் நன்றிகளை காணிக்கையாக்குகிறோம். 

காலம் எவ்வளவு விசித்திரமானது, அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. நாங்கள் வேறு, நீங்கள் வேறு என்று அன்றே இருக்கவில்லை. போர்க்களத்தில் நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்தில் நாம் ஒன்றாக கலந்து விட்டோம். இடஒதுக்கீடு, DNT ஒற்றைச்சான்றிதழ் எல்லாம் நமக்கான பிரச்சினை என்று ஒன்று சேர்ந்தபொழுது தான் வெளிச்சத்திற்கு வந்தது நட்பின் ஆழமும், வரலாறும். மீட்டெடுக்கப்பட்டது 220 ஆண்டுகளாக புதைக்கப்பட்ட ஆவணம் என்று மட்டுமே பார்ப்பது அறியாமை. சமகால அரசியலோடு பொருந்திப்போகும் அடுத்து கட்டியெழுப்பப்பட வேண்டியதற்கான குறியீடு. நாம் வீழ்பவர்கள் அல்ல. மீண்டும் மீண்டும் முளைக்கும் அழிக்கமுடியாத விதைகள். அது 220 என்றாலும் 2200 என்றாலும் உறவுகள் தொடரும்.

அன்பும்-நன்றியுடன்,
ஸ்ரீதர் வேலுச்சாமி,
விருப்பாச்சி கோபால நாயக்கர் நேரடி வாரிசுதாரர்.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved