🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இளமை ததும்பும் 25 வயதில் மண்ணிற்காக உயிர்த்தியாகம் செய்தா பிர்சா முண்டா!

கடந்த செவ்வாயன்று (13.11.2024) ராஜ்பவனில் நடந்த "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்"  நூலை வெளியிட்டுப் பேசிய தமிழக ஆளுநர், தமிழகத்தில் பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். அவர் சொன்னதில் ஓரளவு உண்மையுள்ளது என்றாலும், அவ்வாறு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மறைக்கப்பட்டது தமிழகத்தில் மட்டுமே நடந்துவிடவில்லை, நாடுமுழுவதும் எண்ணற்ற தியாகிகள் குறிப்பாக, பழங்குடி மக்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. உண்மையில், பிரிட்டீஷ் இந்தியாவில் மட்டுமல்ல இன்றைய பெருமுதலாளித்துவ ஆதிக்க இந்தியாவிலும் பழங்குடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே எதார்த்த நிலைமை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலைப் போராட்ட வரலாறு குறித்தான பாடத்தில் கோண்ட் பழங்குடி போராளி கொமுரும் பீம் பற்றியோ, முண்டா அல்லது கோல் பழங்குடியின போராளியான பிர்சா முண்டாவை பற்றியோ அல்லது இவர்களை போன்ற பலரை பற்றியோ எதையும் காண முடியாது.

காலங்காலமாகக் காடுகளில் வசித்து வரும் ஆதிகுடி பழங்குடி மக்களில் பெருபான்மையினருக்கு காடுகளைத்தவிர நவீன உலகம் பற்றி எதுவும் தெரியாது.  இம்மக்களின் கடுமையான உழைப்பால் காடு, மேடுகளை விளை நிலங்களாக்கியுள்ளனர். தங்களுக்கான தனித்துவமான விவசாய உற்பத்தி முறையையும், பண்பாட்டையும் கொண்டுள்ள இம்மக்களுக்கு, காலனியார் காலம் வரை சுரண்டல் என்பதே தெரியாது வளர்ந்தவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் போடப்பட்ட சட்டங்கள் நிலங்களை பட்டா, ஜாகீர், ஜமீன் எனப் பல வகையில் தனி உடைமையாக்கி, தனி உடைமையல்லாத காடுகள் உள்ளிட்ட மற்ற அனைத்து நிலங்களும் அரசுடைமை என்றாக்கின. இதனால் பழங்குடி மக்களின் வாழ்வும், பண்பாடும் மிகப் பெரிய தாக்குதலுக்குள்ளாயின. இந்தத் தாக்குதலை எதிர்த்த கிளர்ச்சிகள், கலகங்கள் நாடெங்கிலும் வெடித்தன. இந்த கலகங்களும் கிளர்ச்சிகளும் முறையாகப் பதியப்படாவிட்டாலும், வரலாற்றாளர்கள் கவனத்திலிருந்து நழுவிவிட்டாலும் இவை இந்திய விடுதலை போராட்டத்தின் பகுதிகளே.

பழங்குடியினரின் "குண்ட்கட்டி" விவசாய முறைக்குப் பதிலாக பிரிட்டீஷ் காலனித்துவ அரசாங்கம் நிலப்பிரபுத்துவ ஜமீன்தாரி முறையை பழங்குடியினர் பகுதியில் அறிமுகப்படுத்தியது . நிரந்தர குடியேற்றம் மற்றும் ரயோத்வாரி குடியேற்றம் போன்ற நில வருவாய் முறைகளை இப்பகுதியில் அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக "குண்ட்கட்டி" அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானது. குன்ட்கட்டி விவசாய முறையானது சோட்டாநாக்பூர் பகுதியில் குறிப்பாக முண்டாஸ், ஓரான்கள் மற்றும் சாந்தல்கள் போன்ற பழங்குடி சமூகங்களிடையே , பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி வருவதற்கு முன்பு நிலவி வந்த ஒரு பாரம்பரிய முறைமையாகும்.

"குண்ட்கட்டி" அமைப்பின்படி, நிலத்தில் பழங்குடியினர் மத்தியில் கூட்டு உரிமை இருந்தது. சமூக உறுப்பினர்களிடையே சமமான அணுகல் மற்றும் பயன்பாட்டை உறுதிசெய்து, நிலத்தின் விநியோகம் மற்றும் நிர்வாகத்தின் மீது பெரியவர்களைக் கொண்ட கிராமசபை அதிகாரம் பெற்றது. ஒரு சில குடும்பங்களின் கைகளில் நில உரிமைகள் குவிவதைத் தடுக்க, பழங்குடியினருக்கு நிலம் அவ்வப்போது மறுபகிர்வு செய்யப்பட்டது.

இந்த அமைப்புக்கு முற்றிலும் மாற்றாக பிரிட்டீஷ் காலனித்துவத்தில் பழங்குடியினர் அல்லாத மக்களை குடியமர்த்துதல், முண்டாஸ்கள் கட்டாய உழைப்பு, அதிக வரிவிதிப்பு, உழைப்புச்சுரண்டல், கடன் அடிமைத்தனம் மற்றும் அடக்குமுறையால் பழங்குடி மக்கள் கடுமையாக சுரண்டலுக்குள்ளாயினர். மேலும், காலனித்துவ நிர்வாகத்தால் ஆதரிக்கப்படும் கிறிஸ்தவ மிஷனரிகள், பழங்குடியின மக்களை கட்டாயமாக கிறிஸ்தவர்களாக மாற்ற முயன்றனர். இது பழங்குடியின மக்களிடையே காலனித்துவ ஆட்சிக்கு எதிரான வெறுப்பை ஏற்படுத்தியது.

பழங்குடிகளுக்கு எதிரான பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை  எதிர்த்துப் போராடியவர்தான் பிர்சா முண்டா. 1875 ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் நாள் அன்றைய பெங்கால் பிரசிடென்சியாகவும், பின்னார் பிகார் மாநிலத்தின் ஒருபகுதியாயகவும், இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள உலிஹதி என்ற கிராமத்தில் சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு முண்டா ஆகிய வறுவமையான பழங்குடியின தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பிர்சா. 'பிர்சா' என்றால் வியாழன், 'முண்டா' என்றால் ஆதிவாசி என்று அர்த்தம். கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் சேர்க்கை பெருவதற்காக "கிறிஸ்தவ மத"த்திற்கு மாறினாலும், பிறகு மிஷனரி பள்ளியிலிருந்து விலகினார். குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதி சாலிபாசாவில் கழிந்தது.

காடுகள்தான் பழங்குடியினரின் வீடு என்பதை அறிந்துகொண்ட பிரிட்டீஷார் காடுகளுக்கான சிறப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்தனர். அந்த சட்டத்தின்படி, காட்டின் ஒவ்வொரு சதுரஅடியும் அரசுக்கே சொந்தம் என்று சொல்லியது. அதனடிப்படையில் காட்டிலுள்ள பழங்குடியின மக்களை வெளியேற்றி அவர்களை நாதியற்றவர்களாக்க வேண்டும் என்று எண்ணியது. ஆனால் இதை பிர்சா முண்டா கடுமையாக எதிர்த்ததுடன், காட்டிற்குள் நுழைந்த ஆங்கிலேயே அதிகாரிகள், காவலர்களை வில் அம்பு கொண்டு கொரில்லா போர் முறையில் குழுவோடு சேர்ந்து தாக்கி விரட்டியடித்தார். இத்தாக்குதலில் பலர் பலியானதோடு, எதிரிகளுக்கு மரண பயத்தையும் ஏற்படுத்தினார்.

பிர்சா முண்டா நடத்திய போர்முறைக்கு  'உல்குவான் போர்' என்று பெயர். இது இப்போதும் பழங்குடியின மக்களிடம் தீரத்துடன் பேசப்படுகிறது. இந்த உல்குவான் குழுவில் இருப்பவர்கள் யாரும் பொய் பேசக்கூடாது, மது அருந்தக்கூடாது, உடலையும், மனதையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும், பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பது போன்ற கொள்கைகளை வகுத்து வைத்திருந்தார். இவரது இந்த போர் முறை தந்திரத்தால் ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி, பழங்குடியினர் நிலங்களை பிடுங்கிவைத்திருந்த பண்ணையார்களும் பயந்து போய் நிலங்கலைத் திரும்ப கொடுத்தனர்.

இதனால் பழங்குடியின மக்களின் ஆதரவு பல மடங்கு பிர்சா முண்டாவிற்கு பெருகியது. தங்களுக்கு எதிரான சட்டங்களையும், அதிகாரிகளையும், நில உரிமையாளர்களையும் எதிர்த்து நியாயம் கேட்கலாயினர்.

வழக்கம்போல் தங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறை போன்றே பிர்சா முண்டாவிற்கு எதிராக போர்ப்பிரளயமே செய்தது ஆங்கில அரசு. அவரை கைது செய்து சித்திரவதை செய்தேயாக வேண்டும் என்ற தீராத வெறியோடு பிர்சா முண்டா  தலைக்கு விலை வைத்து தேடி அலைந்தது. பிர்சா முண்டாவை நெருங்கும் போதெல்லாம் பழங்குடியின மக்கள் அரணாக நின்று தடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர் மீது பாய்ந்து வந்த தோட்டக்களை தங்கள் நெஞ்சில் தாங்கிக் கொண்டு இறந்தனர். இப்படி நானுாறுக்கு மேலானபழங்குடியின மக்கள் உயிரைவிட்டனர். உயிரைக் கொடுத்தும் காப்போம் என்று தொண்டர்கள் சொல்லும் சொல்லுக்கு உதாரண புருஷராக விளங்கினார்.

ஒரு கட்டத்தில் இவரை பிரி்ட்டிஷார் கைது செய்து, இரண்டு வருடங்கள் சிறையில் அடைத்து சித்தரவதை செய்தனர். இந்த இரண்டு வருடங்களும் பழங்குடியின மக்கள் பிர்சா முண்டாவின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர்.

இனி சிறையை நினைத்தே பார்க்ககூடாது எனுமளவிற்கு அவருக்கு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வெளியே போனால் அடங்கிக்கிடப்பார் என்று எண்ணி அவரை விடுதலை செய்தனர். ஆனால் அவிழ்த்துவிடப்பட்ட சிங்கம் போல அதற்கு பிறகுதான் பிர்சா முண்டா கர்ஜித்தார், வெறிகொண்ட வேங்கையாக ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டே விரட்டவேண்டும் என்று முழங்கினார். அதற்கான போராட்டங்களை தீவிரப்படுத்தினார். அலை அலையாய் தன் பின் திரண்ட பழங்குடியின மக்களின் நலனில் யாரும் கைவைக்கவே அஞ்சும் சூழலை ஏற்படுத்தினார்.

இப்படியேவிட்டால் தங்களை சுத்தமாக கருவறுத்துவிடுவார், நம்மை துடைத்து நமது சொந்த மண்ணிற்கு திருப்பி அனுப்பிவிடுவார், எதற்கும் துணிந்தவர் இந்த பிர்சா முண்டா இவரை இனியும் விட்டுவைக்கக்கூடாது என்று முடிவு செய்து பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு மீண்டும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது பிரிட்டீஷ் அரசு.

சிறையில் வைத்து என்ன மாதிரியெல்லாம் சித்ரவதை செய்தார்களோ தெரியவில்லை? ஆனால் அடுத்த சில மாதங்களில் காலரா நோயால் சிறைக்குள்ளேயே இறந்துவிட்டார் என்று ஒரு கதையைச் சொல்லி பிர்சா முண்டாவின் கதையை முடித்தனர். தேக்கைவிட உறுதியான தேகமும், தீரமும் வீரமும் கொண்ட அவரா காலாராவால் இறந்தார், இருக்கவே இருக்காது என்று வெகுண்டு எழுந்த பழங்குடியின மக்கள், அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தினார். வீட்டிற்கு ஒருவர் பிர்சா முண்டாவாக உருவெடுத்தனர். இதன் காரணமாக காடுகளுக்கான சிறப்பு சட்டத்தை அரசு ரத்து செய்ததோடு, பழங்குடியின மக்களின் நிலம் அவர்களுக்கு மட்டுமே சொந்தம் வேறு யாரும் பயன்படுத்த முடியாது கூடாது என்றும் சட்டமியற்றியது.

இதுதானே நாம் வணங்கும் பிர்சா முண்டாவின் ஆசை ஆதங்கம் எல்லாம் என்று கண்ணீரால் நன்றி சொன்ன மக்கள் அன்று முதல் இன்று வரை பிர்சா முண்டாவை தங்கள் குலதெய்வமாக கொண்டாடி வருகின்றனர். 25 வயது வரை மட்டுமே வாழ்ந்து மறைந்திட்ட பழங்குடியின போராளி பிர்சா முண்டா இந்திய சுதந்திர வரலாற்றில் அழிக்கமுடியாத புகழைப்பெற்றார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மயைமண்டபத்தில் இடம் பெற்றுள்ள ஒரே பழங்குடியின தலைவரின் படம் பிர்சா முண்டாவுடையது தான். ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சி விமான நிலையம் இவரது பெயரால்தான் அழைக்கப்படுகிறது. மேலும்,

இவரது பெயரில் பல்கலைக்கழகம், விளயைாட்டு வளாகம், தொழில் நுட்ப மையம் அமையப்பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved