🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உலக வரலாற்றில் சைகை மொழியில் போர்நடத்திய ஒரே ஒப்பற்ற மாவீரன் ஊமைத்துரை!

“இறுதி தருணங்களில் கட்டபொம்மனிடம் ஒருவித துணிச்சலும் கர்வமும் தென்பட்டது. ஆனால் தூக்குமேடையை நோக்கி நடந்து செல்லும்போது, ஒருவரைப் பற்றி மட்டும் மிகவும் கவலைப்பட்டார் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அது அவரது தம்பி ஊமைத்துரை”.

அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது குறித்து ஆங்கிலேய அரசின் (மதராஸ் மாகாணம்) செயலருக்கு மேஜர் பானர்மேன் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது 1881-இல் மதராஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொதுவரலாறு' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்த ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ், 1830இல் வெளியிட்ட ‘Military Reminiscences’ (இராணுவ நினைவலைகள்) என்ற புத்தகத்தில், “நான் அறிந்ததிலேயே மிகவும் அசாதாரணமான ஒரு மனிதர், ஊமைத்துரை தான்” என்று கூறியுள்ளார்.

(40 ஆண்டுகள் ஆங்கிலேய படையில் பணிபுரிந்த கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ், இந்தியா நிலப்பரப்பு முழுமையும் எப்படி இராணுவ மயமாக்கினார்கள் என்பதை தனது "இராணுவ நினைவலைகள்" என்ற புத்தகத்தில் மிக நுட்பமாக விளக்கி உள்ளார்).

தமிழறிஞர் மா.பொ.சிவஞானம் எழுதிய ‘கயத்தாற்றில் கட்டபொம்மன்’ என்ற நூலில், “வீரபாண்டியனை விட ஊமைத்துரையே ஆங்கிலேயரை எதிர்த்து அதிகம் போராடினார்” என்று கூறியுள்ளார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட போது, அவரது தம்பி ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது இயற்பெயர் குமாரசுவாமி.

இவர் பின்னர் பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்துச் சென்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல நாட்களுக்கு போர் செய்தார். இறுதியில், நவம்பர் 16, 1801ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார்.

சைகை மொழியில் போர்களை வழிநடத்தியவர்

ஊமைத்துரை குறித்து தனது ‘Military Reminiscences’ புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார் ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ். இவர் 1790 முதல் 1848 வரை பிரிட்டிஷ் கிழக்கிந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். இந்திய வரலாற்று ஆய்வுகளில் இவரது ‘Military Reminiscences’ புத்தகம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

“கட்டபொம்மனுக்கு மிகவும் நெருக்கமான நபராக இருந்தவர் ஊமைத்துரை. அவரால் பேச முடியாது, அவருக்கு காதும் கேட்காது. எனவே அவரை ஆங்கிலத்தில் ‘Dumb Brother’ என்றே அழைத்தோம்” என்று எழுதியுள்ளார் ஜேம்ஸ் வெல்ஷ்.

அவரது தோற்றம் குறித்து, “மெலிந்த தேகம் கொண்ட இளைஞர், ஆனால் சிக்கலான நேரங்களில் சிறப்பாக செயல்படக் கூடியவர், அபாரமான மனவலிமை உடையவர். அவர் மீது அதீத நம்பிக்கை கொண்ட மக்கள் அவரை கடவுளாகப் பார்த்தனர், ‘சாமி’ என்று அழைத்தனர்.” என்று விவரித்துள்ளார் ஜேம்ஸ் வெல்ஷ்.

மேலும், “ஊமைத்துரை மக்களால் போற்றப்பட்டார். அவரது சிறு சைகை கூட மக்களுக்கு இறைவாக்கு, ஒவ்வொரு மனிதனும் அவர் கட்டளையிட்டதை நிறைவேற்ற துடித்தார். அவர் தலைமை தாங்காத எந்த சபையும் அங்கே கூடவில்லை. அவர் தலைமை தாங்காத எந்த துணிச்சலான சாகசமும் மேற்கொள்ளப்படவில்லை.” என்று எழுதியுள்ளார் ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ்.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் வே. மாணிக்கம் பிபிசியிடம் பேசுகையில், “பலருக்கும் ஊமைத்துரையின் சாமர்த்தியம் மற்றும் வீரம் குறித்து தெரியாது. சைகைகள் மூலமாகவே பல நாட்களுக்கு ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தியவர். இவரைப் போல ஒருவரை வரலாற்றில் காண்பது அரிது” என்கிறார்.

“ஆங்கிலேயப் படைகள் வருவதை தன் வீரர்களுக்கு உணர்த்த, இடது கையில் வைக்கோல் புற்களை வைத்துக் காட்டி, வலது கையால் தொப்பி அணிவது போல சைகை செய்வார். அவர்களைத் தாக்குங்கள் என்று சொல்வதற்கு ஒரு வித்தியாசமான சத்தத்தை எழுப்புவார்.” என்று கூறுகிறார் வே. மாணிக்கம்.

ஜேம்ஸ் வெல்ஷ் தனது புத்தகத்தில், ஊமைத்துரையின் போர் தந்திரங்களைக் குறிப்பிட்டு, “ஆங்கிலேயர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மையானவராக இருந்தார். அவர் எங்கு சென்றாலும், அவரது கட்டுக்கடங்காத வீரம் வெற்றியை உறுதி செய்தது. எனினும் இறுதியாக தூக்கு மேடை ஏற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்கு முன் நடந்த ஒவ்வொரு சண்டையிலும், அவர் எங்களிடம் இருந்து தப்பித்தது பெரும் அதிசயம் தான்” என்று எழுதியுள்ளார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு என்ன நடந்தது?

கட்டபொம்மன், ‘வரி ஒழுங்காகக் கட்டவில்லை, கலெக்டர் அழைத்த போது சந்திக்க மறுத்தார், சிவகிரியாரின் மகனுக்கு ஆதரவாகப் படைகள் அனுப்பினார், மேஜர் பானர்மேன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுச் சரணடையாமல் எதிர்த்து போரிட்டார்,’ ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 16, 1799 அன்று தூக்கிலிடப்பட்டார் (‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' நூல்).

அந்த சமயத்தில், அவரது தம்பி ஊமைத்துரை மற்றும் சிவத்தையா உட்பட பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த முக்கியமான நபர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அந்தப் பகுதியில் ஆங்கிலேயப் படைகளுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய ஜார்ஜ் ஏ.ஹியூஸ், ‘The Madras Journal of Literature and Science’ எனும் இதழில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் (இது 1844இல் வெளியிடப்பட்டது).

“1800ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கட்டபொம்மனை தூக்கிலிட்ட மேஜர் பேனர்மேன் ஐரோப்பாவுக்கு திரும்பினார். அதன் பின்னர் மேஜர் ராபர்ட் டூரிங் வந்தார், பிறகு அந்த இடத்திற்கு மேஜர் காலின் மெக்காலே வந்தார்.”

இந்த மேஜர் மெக்காலே தான், ஊமைத்துரை மற்றும் அவரது படைகளுக்கு எதிராக ‘இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சி போரின்’, முதல்கட்ட தாக்குதலில் ஆங்கிலேயப் படைகளை வழிநடத்தினார்.

ஊமைத்துரை மற்றும் அவரது சகாக்கள் சிறையில் இருந்து தப்பியது குறித்து தனது நூலில் விவரிக்கும் ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ், “1801ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி, பாளையங்கோட்டையிலிருந்து சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள சங்கரநாயனார்கோவிலில் எங்கள் படை முகாமிட்டிருந்தது. சுமார் இருபது ஆங்கிலேய பெண்கள் மற்றும் ஆண்கள், மேஜர் மெக்காலே வீட்டு விருந்தில் இருந்தனர்.”

“அதுமட்டுமல்லாது அப்போது சின்னம்மை பரவல் இருந்ததால், அபாயகரமான கைதிகளின் இரும்பு கை விலங்குகளை அகற்றியிருந்தோம். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பாளையங்களைச் சேர்ந்த கைதிகள், தங்களது படையினரை வரவைத்து, காவலர்களைத் தாக்கி தப்பினர். பல நாட்கள் தீட்டப்பட்ட திட்டம் இது. விடிவதற்கு முன் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சியை அடைந்துவிட்டனர்” என்று எழுதியுள்ளார்.

அந்த பல நாள் தீட்டப்பட்ட திட்டம் என்பது சுவாரசியமான ஒன்று எனக் கூறும் எழுத்தாளர் மாணிக்கம், அதை பின்வருமாறு விவரிக்கிறார், “ஊமைத்துரையின் ஆட்கள் சிலர் தொடர்ந்து சிறைச்சாலை இருந்த பகுதியில் உளவு பார்த்து, படைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். பின்னர் சுமார் 200 பேர் காவடி எடுத்துச் செல்வது போல பாளையங்கோட்டை எல்லைக்கு வருகின்றனர். பின்னர் 100 விறகுக் கட்டுகளுக்குள் ஆயுதங்களை மறைத்து ஒரு கட்டுக்கு 2 பேர் என விறகு விற்பவர்கள் போல ஊருக்குள் வருகிறார்கள்”

“அப்படி வருகிறவர்களை உண்மையான வியாபாரிகள் என நினைத்து மக்கள் விறகு வாங்க அணுகக்கூடாது என்பதற்காகவே ‘ஒரு கட்டு விறகு 5 ரூபாய்’ என மிக அதிகமான விலையைக் கூறுகிறார்கள். சிறைச்சாலையை நெருங்கியவுடன் அதிரடியாக உள்ளே நுழைந்து, தாக்குதல் நடத்தி ஊமைத்துரையை மீட்கிறார்கள்”.

இந்தத் தாக்குதலின் போது, குறைவான ஆங்கிலேயர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், அவர்களை ஊமைத்துரையின் படை கொல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வே. மாணிக்கம், “பாஞ்சாலங்குறிச்சி செல்லும் வழியில் கூட ஆங்காங்கே சிதறி இருந்த ஆங்கிலேயக் குழுக்களை அவர்கள் நினைத்தால் எளிதாக கொன்றிருக்கலாம். ஆனால் போர் என்பது நேர்மையாக இருக்க வேண்டும் என ஊமைத்துரை நினைத்தார்” என்கிறார்.

இதைப் பற்றி ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் தனது ‘Military Reminiscences’ புத்தகத்தில், “அந்தப் படை தப்பிக்கும் அவசரத்தில் எங்களை கொல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்கள். அவர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தார்கள், வழியில் இருந்த சிறு ஆங்கிலேயப் படைகளும் அவர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இல்லை.”

“ஒருவேளை எங்களைத் தாக்கியிருந்தால், மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் ஆயுதங்களை மட்டுமே பறித்துக் கொண்டார்கள். அன்று பாளையங்கோட்டையில் இருந்த அத்தனை ஆங்கிலேய சிப்பாய்களும் சேர்ந்திருந்தாலும் அவர்களை தடுத்திருக்க முடியாது” என்று எழுதியுள்ளார்.




பாஞ்சாலங்குறிச்சியில் மீண்டும் ஆங்கிலேயப் படைகள்

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முழுமையாக அழிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, அனைத்து பாளையக்காரர்களும் தங்களது கோட்டைகளை இடிக்க வேண்டுமென்றும் ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பாளையக்காரர்களின் 42 கோட்டைகள் தகர்க்கப்பட்டன. இது மேஜர் பானர்மேனுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

பாளையக்காரர்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்வது தொடர்பாகவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால், திருநெல்வேலி மாவட்டத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக எழுந்த அத்தனை கிளர்ச்சிக் குரல்களும் அடக்கப்பட்டன. இந்த வெற்றியுடன் மேஜர் பானர்மேன் ஐரோப்பா திரும்பினார். இரண்டு வருடங்களுக்கு மேலாக நீடித்த அந்த அமைதி நிலை, பாளையக்காரர்களின் இறுதிப் போரால் முடிவுக்கு வந்தது. (‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', அத்தியாயம் 7, பக்கம் 193)

“அந்த இறுதிப் போரில் மிக முக்கியமான பங்கு வகித்தவர், ஊமைத்துரை. பாளையம்கோட்டையில் இருந்து தப்பிய பிறகு, அவரது படை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் , காடல்குடி, நாகலாபுரம், கோலார்பட்டி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியது. பின்னர் அவரது தலைமையில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வெறும் 6 நாட்களில் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது.” என்று கூறுகிறார் வே.மாணிக்கம்.

இதை ஜார்ஜ் ஏ.ஹியூஸ், ‘The Madras Journal of Literature and Science’ எனும் இதழில், “அரசுக்குச் சொந்தமான பல சிறிய கோட்டைகள் பாளையக்காரர்களின் கைகளில் சிக்கிக் கொண்டது. இதன் மூலம் அவர்கள் சுமார் ஆயிரம் துப்பாக்கிகளையும் அவற்றின் வெடிமருந்துகளையும் கைப்பற்றினர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஆறு நாட்களில் மிகவும் வலிமையான ஒரு கோட்டை பாஞ்சாலங்குறிச்சியில் உருவானது ஏதோ அதிசயம் போல எங்களுக்கு தோன்றியது” என ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் தனது ‘Military Reminiscences’ புத்தகத்தில் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய வே.மாணிக்கம், “ஆறு நாட்களில் உருவான கோட்டை என்பதற்காக அது பலவீனமாக கட்டப்படவில்லை. பீரங்கி கொண்டு எளிதாக தகர்க்க முடியாதபடி கட்டப்பட்டது. முதலில் கோட்டையைத் தாக்க வந்த மேஜர் மெக்காலேயின் படை பலத்த சேதத்தை சந்தித்தது. கோட்டைக்கு அருகே வந்த ஒவ்வொரு ஆங்கிலேய படை வீரரும் ஈட்டியால் குத்திக் கிழிக்கப்பட்டார்” என்கிறார்.

ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் இந்த சம்பவத்தைக் குறித்து தனது புத்தகத்தில், “தாக்குதல் நடத்திய குழுவில் இருந்த நூற்று இருபது ஐரோப்பியர்களில் நாற்பத்தி ஆறு பேர் மட்டுமே காயமின்றி தப்பினர். அதிகாரிகள், பீரங்கிப் படையினர் உட்பட நூற்று ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.” என்று விவரிக்கிறார்.



படக்குறிப்பு:கட்டபொம்மன் காலத்தில் இருந்த பாஞ்சாலங்குறிச்சி குறித்த ஆங்கிலேயர்களின் ஓவியம்

கர்னல் பீட்டர் ஆக்னியூவின் வருகை

பாஞ்சாலங்குறிச்சியின் பரம்பரை எதிரிகளான எட்டயபுரம் பாளையத்தார்கள், சுமார் 1000 பேர் கொண்ட படையுடன் வந்தார்கள் என்றும், ஆனால் அவர்களாலும் வெற்றி பெற முடியவில்லை, அவர்கள் பக்கம் எத்தனை இறப்புகள் என்பது தெரியவில்லை எனவும் ஜேம்ஸ் வெல்ஷ் குறிப்பிடுகிறார்.

"மேஜர் மெக்காலேயின் இந்தத் தோல்விக்குப் பிறகு, விழித்துக் கொண்டது ஆங்கிலேய அரசு. கர்நாடகா, மலபார் கடற்கரை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து படைகள் வரவழைக்கப்பட்டன. குதிரைப் படை ஒன்று அங்கே அனுப்பப்பட்டது. திருச்சிராப்பள்ளியிலிருந்து பீரங்கிப் படை கிளம்பியது. போருக்கு தலைமையேற்க ஒரு புதிய அதிகாரி வரவழைக்கப்பட்டார்."

"அவர் கர்னல் பீட்டர் ஆக்னியூ. சிறந்த ராணுவ அனுபவம் வாய்ந்தவர், பல ஆண்டுகளாக ஆங்கிலேய ராணுவத்தின் துணை ஜெனரலாக நன்கு அறியப்பட்டவர்." (‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', அத்தியாயம் 7, பக்கம் 202)

இதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களை ஜார்ஜ் ஏ.ஹியூஸ், ‘The Madras Journal of Literature and Science’ இதழில் பின்வருமாறு விவரிக்கிறார்.

“எதிர்பார்க்கப்பட்ட படைப்பிரிவுகள் அனைத்தும் மே மாத மத்தியில் (1801ஆம் ஆண்டு) பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தன. கர்னல் அக்னியூ 21ஆம் தேதி தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது வருகையிலிருந்து மூன்றே நாட்களுக்குள், மே 24ஆம் தேதி கோட்டை கைப்பற்றப்பட்டது.”

“அந்த மூன்று நாட்களில் பீரங்கிகள், கையெறி குண்டுகள், என இடைவிடாத கடும் தாக்குதல் இரவும், பகலும் தொடர்ந்தது. இதனால் எதிரிகளுக்கு (ஊமைத்துரை மற்றும் அவரது படையினர்) சேதத்திலிருந்து மீள அல்லது அடுத்தகட்டம் குறித்து யோசிக்க அவகாசம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது, கோட்டையை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது”

கோட்டையிலிருந்து சுமார் 2000 பேர் வரை தப்பித்திருப்பார்கள் என்றும், கோட்டைக்குள் ஆங்கிலேயப் படைகள் நுழைந்தபோது 450 பேரின் உடல்கள் கிடந்தன என்றும் ஜார்ஜ் ஏ.ஹியூஸ் பதிவிட்டுள்ளார்.

“அந்தப் போரில் பலத்த காயமடைந்த ஊமைத்துரை, கோட்டைக்கு சில மைல்கள் தூரத்தில் மயங்கிக் கிடந்தார். அவர் உயிர் பிழைத்தது பெரும் அதிசயம், குறிப்பாக மக்கள் அவரைக் கடவுளாகப் பார்த்தது தான் அதற்கு காரணம்” என்கிறார் எழுத்தாளர் வே. மாணிக்கம்.


படக்குறிப்பு,பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு புதிய கோட்டை ஆறே நாட்களில் கட்டப்பட்டது என ஜேம்ஸ் வெல்ஷ் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் (படத்தில் தற்போது இருக்கும் மாதிரி கோட்டை)

ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் தனது ‘Military Reminiscences’ புத்தகத்தில், “கோட்டையிலிருந்து தப்பியோடியவர்களில் சிலர், மூன்று மைல்கள் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், படுகாயமடைந்து கிடந்தனர். அதில் தன் மகனைத் தேடித் சென்ற ஒரு தாயும் அவரது உறவினர்களும், அவனை அடையாளம் கண்டுகொண்டு தூக்குகிறார்கள்.”

“அப்போது அந்த மகன், ‘அம்மா, என்னைக் காப்பாற்ற முயற்சி செய்யாதே. என்னருகே சாமி கிடக்கிறார், அவரை முதலில் காப்பாற்று’ என்று சொல்ல, அப்போதுதான் அவர்கள் அங்கு உயிருடன் கிடந்த ஊமைத்துரையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்கள்” என்று விவரிக்கிறார்.

இதில் ஊமைத்துரையை ‘சாமி’ என்று அழைப்பதைக் குறிப்பிட்டு, “இறக்கும் தருவாயிலும் அவரைக் காப்பாற்ற நினைத்த அந்த மகனின் செயலில் இருந்து, ஊமைத்துரையை அந்த மக்கள் கடவுளாகவே பார்த்தனர் என்ற எனது கூற்று நிரூபணமாகிறது.” என்று ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் எழுதியுள்ளார்.

மேலும், “அதன் பிறகு அந்தத் தாயின் வீட்டில் வைத்து ஊமைத்துரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரையும் மீதிமிருந்த அவரது படைவீரர்களையும் ஆங்கிலேயரும், எட்டயபுர படைகளும் தேடிக் கொண்டிருந்தன.”

“எட்டயபுர படைகள் அந்த கிராமத்திற்குள் நுழைந்தவுடன், ஊமைத்துரையின் உடலில் ஒரு வெள்ளைத்துணியைப் போர்த்தி, ‘அது சின்னம்மையால் இறந்த ஒரு இளைஞனின் உடல்’ என அங்கிருந்த பெண்கள் கூறிவிட்டனர். சின்னம்மை என்று சொன்னவுடன் பயந்து, அங்கிருந்து எட்டயபுர படைகள் வெளியேறிவிட்டன. இது ஊமைத்துரையின் உயிரை மட்டுமல்ல, பலரின் உயிரைக் காப்பாற்றியது” என்று ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் எழுதியுள்ளார்.

மருது சகோதரர்கள் - ஊமைத்துரை நட்பு

அதைத் தொடர்ந்து நடந்தது குறித்து எழுத்தாளர் வே.மாணிக்கம் விவரிக்கிறார், “சில நாட்கள் கழித்து, காயங்களில் இருந்து குணமடைந்து, கமுதி சென்ற ஊமைத்துரை, மருது சகோதரர்களைச் சந்தித்தார். குறிப்பாக சின்ன மருது, ஊமைத்துரை மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். அவர்களோடு சில நாட்கள் சிறுவயல் ஊரில் தங்கியிருந்தார் ஊமைத்துரை.”

“இதை அறிந்துகொண்ட கர்னல் பீட்டர் ஆக்னியூ, ஊமைத்துரையை உடனே தன்னிடம் ஒப்படைக்கும்படி மருது சகோதரர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் மறுத்துவிட்டனர். மீண்டும் பெரும் போர் வெடித்தது. இம்முறை மருது சகோதரர்களும் அதில் இணைந்தனர். ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.” என்கிறார்.

போரின் முடிவில், மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையின் உயரமான கொத்தளத்தில் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரையும் அவரது சகோதரரும் (சுப்பா நாயக்கர்) பாஞ்சாலங்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்டு, கோட்டைக்கு அருகே இருந்த சிறு குன்றின் மீது தூக்கிலிடப்பட்டனர். (‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', அத்தியாயம் 9, பக்கம் 222)

“அதோடு பாளையக்காரர்களின் கிளர்ச்சி மொத்தமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதைக் குறித்து எந்த சுவடும் இருக்கக்கூடாது என பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மொத்தமாக அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேல் ஊமைத்துரை நடத்திய இந்த போருக்கு சாட்சியாக இன்று எஞ்சி இருப்பது, அப்போது இறந்துபோன ஆங்கிலேய சிப்பாய்கள், அதிகாரிகளின் கல்லறைகள் மட்டும் தான்” என்கிறார் எழுத்தாளர் வே.மாணிக்கம்.

நன்றி:சிராஜ், பிபிசி தமிழ்.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved