கட்டபொம்மன் மீது அவதூறு - போலி தமிழ்தேசிவாதிகளுக்கு சவுக்கடி

தற்போது நடந்துவரும் அவதூறுகளுக்கு எதிராக வரலாற்று தகவல்களை பகிர்கிறேன்...
ஆங்கிலேயருக்கு எதிராக பாளையக்காரர்கள் பல்வேறு புரட்சி குழுக்களை உருவாக்கியதை ஆய்வாளர் பேராசிரியர் ராஜய்யன் ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். மே17 இயக்கத்தால் அருந்திரள் தமிழர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்ட இந்தியாவின் தலை சிறந்த வரலாற்று ஆய்வாளர் 97 வயதில் மதுரைக்கு அருகே வாழ்ந்து வருகிறார். வட இந்தியாவில் 1856ல் நடந்த சிப்பாய் கலகம் தான் இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் எனப்பட்டதை எதிர்த்து வழக்கு நடத்தி தென்னிந்தியாவில் நடந்த பாளையக்காரர்கள் புரட்சியே முதல்போர் என ஆய்வுப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்தவர். இந்த வழக்கிற்கு பின்னர் இந்திய வரலாற்று ஆய்வகம் சிப்பாய் கலகத்தை இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என சொல்வதில்லை.
அப்படிப்பட்ட சிறப்பிற்குரிய வரலாற்றாசிரியர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் மருது பாண்டியர்களுக்கும் இடையே ஏற்பட்ட புரட்சி ஒப்பந்தம் குறித்து ஆவணப்படுத்தியுள்ளார். தென் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆங்கிலேயரின் கொடுமைக்கு எதிராக பாளையங்கள் திரள ஆரம்பித்தன. இந்த பாளையங்களை ஒருங்கிணைக்கும் பணியை வீரபாண்டிய கட்டபொம்மன் மேற்கொண்டிருந்தார். இந்த புரட்சிக்கூட்டணி தம்மை வலுவாக்கிக்கொள்ளும் வரையில் ஆங்கிலேயருடன் சமரசமாக செல்வது என்று ராமநாதபுரம் கோட்டையில் நடந்த சண்டைக்கு பிறகு சமாதானம் மேற்கொள்கிறார். 1798ல் நடந்த இந்த நிகழ்விற்கு பின்னர் பல்வேறு பாளையங்களை ஒருங்கிணைக்க்கும் பணிக்கான குழுவை உருவாக்கி சந்திக்க வைக்கிறார்.
தென் தமிழகத்தில் மூன்று புரட்சிக்குழு கட்டமைப்புகள் உருவாகின்றன. நெல்லை புரட்சி குழு, சேதுச்சீமை குழு, சிவகங்கை குழு. இதில் நெல்லைச்சீமை குழுவில் பலவேறு பாளையங்களை இணைக்கும் பணியை கட்டபொம்மன் மேற்கொள்கிறார். அதில் முதல்கட்டமாக நாகலாபுரம், மன்னார்கோட்டை, போவல்லி, கோலார்பட்டி, சென்னுல்குடி ஏற்கனவே ஒன்றுபட்டு காவல் உரிமைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து நிற்பதை கூட்டமைப்பிற்குள்ளாக கொண்டு வருகிறார். இந்த குழுவிற்கு தலைமை தாங்கும் பணியை கட்டபொம்மன் மேற்கொள்கிறார். இக்குழு சேதுச்சீமையில் ராமநாதபுரம் பகுதி உரிமைக்காக ஆங்கிலேயரை எதிர்க்கிறது. அவருடைய புரட்சிக்குணமும், பொருளாதார வலிமையும் இக்குழுவினை வழி நடத்த உதவுகின்றன. இந்த குழுவை மேலும் வலுபடுத்த சாப்டூர், ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகியோர்களை பேசி இணங்க வைக்கிறார். பின்னர் செவத்தையா, வீரபாண்டிய நாயக்கர், வீரபத்ர பிள்ளை ஆகியோரை இளவரசனூருக்கு அனுப்பி அப்பகுதி கள்ளர்களின் ஆதரவை பெறுகிறார். ராமநாதபுர கோட்டையில் சிறைப்படுத்தப்பட்ட தமது தளபதி சிவசுப்ரமணிய பிள்ளையின் சகோதரர் பாண்டியபிள்ளையை சென்னைக்கு அனுப்பி ஆங்கிலேயரின் நகர்வுகளை உளவு பார்க்கச் செய்கிறார். ஜூன் 1799ல் பழமனேறியில் சிவகங்கையின் மருதுபாண்டியர்களை சந்திக்கிறார். மருதுபாண்டியர்களின் புரட்சி தூதுக்குழு தொடர்ந்து கட்டபொம்மனை சந்தித்து பாஞ்சாலங்குறிச்சியை போராட்டத்துடன் இணைக்கிறது. பழமனேறியில் மருது பாண்டியர் அனுப்பிய 500 போர் வீரர்களுடன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைகிறார் கட்டபொம்மன்.
நெல்லை புரட்சியாளர்களுக்கு ஏதுவான கோட்டையாக சிவகிரி கோட்டை இருப்பதை அறிந்து அதை கைப்பற்றி ஆங்கிலேயருக்கு எதிராக போரை நடத்தும் முயற்சியில் அவர் வீழ்த்தப்படுகிறார். கட்டபொம்மனின் சிவகிரி முற்றுகையை எதிர்கொள்ள இயலாமல் பானர்மேன் மேலதிக படைகளை குவித்ததும் முக்கிய திருப்பங்கள். திப்பு சுல்தானை வீழ்த்திய பிறகு தென் தமிழ்நாட்டில் பாளையக்காரர்களை ஒழித்துக் கட்ட ஆங்கிலேயர் திட்டமிட்டனர். கட்டபொம்மனை ஒழித்தால் நெல்லை புரட்சி கூட்டமைப்பை அழிக்கமுடியுமென சென்னையிலிருந்து ஆங்கிலேய தலைமை படை திரட்டியது. கட்டபொம்மனுக்கு எதிராக தஞ்சை, திருச்சி, மதுரை படைகள் நெல்லை நோக்கி அனுப்பப்பட்டன. திருவிதாங்கூர் அரசரின் படைகளும் ஆங்கிலேயரோடு இணைந்தன. கட்டபொம்மனின் படைகள் இந்த கூட்டுப்படைகளை எதிர்கொள்ள இயலாமல் சிவகங்கையை நோக்கி பின்வாங்கிய பொழுது புதுக்கோட்டையின் அரசர் ரகுநாத தொண்டைமான் காலாப்பூர் காடுகளின் இருபுறமும் தமது படைகளை குவித்து கட்டபொம்மன், அவரது சகோதரர்கள், படைகளை சுற்றி வளைத்து கைது செய்கிறார்கள்.
கட்டபொம்மனை சிறைபிடித்த பொழுது அவர் எதிரியிடம் சிக்கிக்கொள்ளாமல் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் எனது படைகள் அவரது கைகளை பிடித்து சிறைப்பிடித்ததாகவும் புதுக்கோட்டை அரசர் ஆங்கிலேய கலெக்டர் லூசிங்க்டனுக்கு கடிதம் அனுப்புகிறார்.
கட்டபொம்மனுடன் இணைந்து போர் புரிந்த நாகலாபுரத்தின் செளந்திரபாண்டியன் கைது செய்யப்பட்டு கோபலாபுரத்தில் படுகொலை செய்யப்படுகிறார். அதேபோல கட்டபொம்மனின் கூட்டாளியான சிவசுப்ரமணிய பிள்ளையும் படுகொலை செய்யப்படுகிறார். சிவசுப்ரமனியப்பிள்ளையின் உடல் பாஞ்சாலங்குறிச்சியின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டு, அவரது தலை துண்டிக்கப்பட்டு வேல்கம்பில் சொறுகப்பட்டு நிறுத்தப்படுகிறது. செப்டம்பர் 13ல் இவர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
அக்டோபர்16ல் கட்டபொம்மன் தூக்கிலேற்றப்படுகிறார். அவரை தூக்கிலேற்றக் கொண்டு சென்றபோது புரட்சிக்குழுவிற்கு துரோகம் இழைத்த எட்டையர்புரம் பாளையக்காரர், சிவகிரி பாளையக்காரர்களை மிகுந்த வெறுப்புடனும், எள்ளலுடனும் முறைத்துச் சென்றதாக அவரை தூக்கிலேற்றிய ஆங்கிலேய தளபதி பானர்மேன் தனது குறிப்பில் எழுதுகிறான்.
தூக்கிலேற்ற கொண்டு செல்லும் பொழுது கட்டபொம்மனின் உடல்மொழி பற்றிய பானர்மேன் குறிப்பில் எழுதப்பட்ட வாசகங்கள்,” . he frequently eyed the ettayapuram poligar (பாளையக்காரர்), who had been so active in attempting to his secure,.. and the poligar of Sivagiri with an appearance of indignant scorn, and when he went out to be executed, he walked with a firm and daring air and cast looks of sullen contempt on the poligars to his right and left as he passed…”. கட்டபொம்மனின் இறுதி கணங்கள் குறித்த பானர்மேன் எழுதிய குறிப்பு. கட்டபொம்மன், சிவசுப்ரமணிய பிள்ளை, செளந்திரபாண்டியன் ஆகியோர் இந்த மண்ணுக்காக உயிர் துறந்தனர். ஆளும் வர்க்கமான திருவிதாங்கூர் சமஸ்தானம், புதுக்கோட்டை சமாஸ்தானம், நவாப்கள், தஞ்சை சமஸ்தானம் ஆகியோர் ஆங்கிலேயருக்கு அடிபணிந்து புரட்சி குழுவை காட்டிக்கொடுத்தனர்.
சிவகங்கையின் மருதுபாண்டியர்களோடு நெல்லை புரட்சிக்கூட்டணி இணைந்திருக்கும் பட்சத்தில் வரலாறு வேறுவிதமாகி இருக்கலாம். இப்போராளிகளோடு திப்பு சுல்தானின் படை தளபதிகள், விருப்பாச்சி கோபாலநாயக்கர், தீரன் சின்னமலை, கேரளவர்மன், துந்தாஜிவாக் அப்பாஜிராவ், ரோனுல்லாகான், முகம்மது ஹாசம், கனிஜாகான் தளி -மணப்பாறை, கரூர், அரவக்குறிச்சி என பாளையங்கள் தொடர்ந்து கூட்டமைப்பாக இயங்கின. இரண்டு வருடங்களில் இக்கூட்டணி அழிக்கப்பட்டது. இறுதி முயற்சியாக வேலூர் கலகத்தில் திப்பு சுல்தானின் மகன்கள் தலைமையில் நடந்த புரட்சியும் படுகொலையில் முடிந்தன. இவர்கள் எவரும் ஆண்டபரம்பரை வம்சத்தில் வந்தவர்கள் அல்ல. சாமானிய பின்னனியில் சாதி-மதம் கடந்து மக்கள் தலைவர்களாக உருவெடுத்தவர்கள். சாதிகடந்து போராடிய புரட்சியாளர்களை சாதியாக பிரித்து போற்றுவதோ, தூற்றுவதோ வரலாற்றுக்கு நாம் செய்யும் துரோகம்.
பாளையக்காரர்கள் குடியான தமிழர்களுக்காக போர் புரிந்தனர். சாதி-மதம் கடந்து ஒன்றிணைந்தனர். மருதுபாண்டியர்களின் திருச்சி பிரகடனம், விடுதலை, சமத்துவத்தை கோரிய புரட்சிகர முழக்கமாக இருந்தது. அத்தகைய முழக்கங்கள் இந்தியாவில் தோன்ற ஒரு நூற்றாண்டு ஆனது. இந்த வரலாறை மே17 இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பல ஊர்களில் மாநாடு, பொதுகூட்டம் வாயிலாக மக்களுக்கு சொல்லி வருகிறது. போலித்தமிழ்த்தேசியவாதிகள், சாதியவாதிகள், சங்கிகள் ஆகியோரிடமிருந்து இந்த புரட்சிகர போராட்ட வரலாற்றை மீட்டெடுத்து மக்களிடம் கொடுக்கிறது மே17 இயக்கம்.
நன்றி: தோழர் திருமுருகன்காந்தி