அறிவியல் ரீதியாக ஜோதிடம் ஏன் பொய்யானது (1) - அசோக்வரதன்ஷெட்டி IAS

நட்சத்திரம் பார்த்தல், ஜோதிடம் பார்த்தல், நல்வாய்ப்பு அல்லது கெட்ட வாய்ப்பு போன்ற நிகழ்வுகளை அறிகுறிகள் கொண்டு கணித்தல், நன்மை அல்லது தீமைகளை முன்கணித்தல் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட வேண்டியவை. – புத்தர்
நட்சத்திரங்களை பற்றி தொடர்ந்து ஆராயும் குழந்தைத்தனமான மனிதனிடமிருந்து செல்வம் விலகிச் செல்லும். – சாணக்கியர்
ஜோதிடம் மற்றும் இத்தகைய போலி விடயங்கள் யாவும் பலவீனமான மனதின் அறிகுறிகள் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள்; அத்தகைய எண்ணங்கள் நமது மனதில் தோன்றும் போது, நாம் ஒரு மருத்துவருடன் கலந்தாலோசித்து, ஆரோக்கியமான உணவை உண்டு, நன்கு ஓய்வெடுக்க வேண்டும். – விவேகானந்தர்
பெரும் பாதிப்பு:
பகுத்தறிவு மற்றும் மனிதநேயத்தின் தீவிரப் போராளியான தந்தைபெரியார், எளிய மக்களின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற பல்வேறு மூடநம்பிக்கைகளை அகற்ற பாடுபட்டார். அவர் பல சாதனைகள் செய்திருந்தபோதிலும், தமிழ் சமூகத்தின் கல்வியறிவு பெற்ற பிரிவினரிடையேயும் ஜோதிடம், நாடிஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஏனைய மூடநம்பிக்கைகளின் மீதான ஆர்வம் ஒரு நிலையான வளர்ச்சியின் கவலைக்குரிய அறிகுறிகள் உள்ளன. ஆம், நாட்டின் பிற பகுதிகளில் நிலைமை இதைவிட மிகவும் மோசமாக உள்ளது.
விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நமது கல்வி முறையானது, எழுத்தறிவில்லாத ஏமாளியை எழுத்தறிவு கொண்ட ஏமாளியாகவும், படிக்காத மூடநம்பிக்கை கொண்டவனைப் படித்த மூடநம்பிக்கையாளராகவும் மாற்றுவதாகத் தெரிகிறது! முரண்பாடாக, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூடநம்பிக்கைகளின் விரைவான மற்றும் பரந்த பரவலுக்கு தளங்களை வழங்கி அவற்றின் பரவலை எளிதாக்குகின்றன.
பகுத்தறிவின்மை:
ஜோதிடம் என்பது அனைத்து மூடநம்பிக்கைகளிலும் மிகவும் பிரபலமானது. மேலும் இது சமூகத்தில் பகுத்தறிவின்மையையும் தெளிவின்மையையும் அளவிடக்கூடிய ஒரு கருவியாகவும் விளங்குகின்றது. காலங்காலமாக அறிவார்ந்த மக்கள் அனைவரும் ஜோதிடத்தை அலட்சியமாகவே கருதினர். ஆயினும், கோடிக்கணக்கான இந்தியர்கள் ஜோதிடத்தின் ஆலோசனையின்படி தங்களின் அன்றாட செயல்பாடுகளை அதாவது – பயணம் மேற்கொள்ளுதல், திருமணம் நடத்துதல், மத நிகழ்வுகள், வணிக முடிவுகள், திட்டங்களை தொடங்குதல், தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தல், அறுவைச் சிகிச்சைகளை செய்துக்கொள்ள திட்டமிடல் போன்றவற்றை மேற்கொள்கொள்கின்றனர்.
போலி அறிவியல்:
சிலர் நம்புவது போல் ஜோதிடம் என்பது பிறருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு விளையாட்டு அல்ல. சோதிடர்கள் மக்களின் பலவீனங்களை பயன்படுத்திக்கொண்டு, அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டுகிறார்கள். ஜாதக பொருத்தமின்மையின் காரண மாக எண்ணற்ற திருமணங்கள் நிராகரிக்கப்படுகின்றன. கற்பனையான “மாங்கல்ய தோஷம்” காரணமாக பல பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு, பாலிவுட் கதாநாயகி அய்ஸ்வர்யா ராய் தனது மாங்கல்ய தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுப்பதற்காக முதலில் வாழை மரத்தை ‘திருமணம்’ செய்துக்கொண்டு, பின்னர் அபிஷேக்பச்சனை மணந்த அபத்தமான காட்சியை இந்தியா கண்டது!
இக்கட்டுரையில், ஜோதிடம் போலி அறிவியலாக விளங்குவதற்கான காராணத்தையும் அது போலியாக உள்ளபோதும், ஏன் பலர் அதை நம்புகின்றனர் என்பதையும் நான் விளக்க முற்படுகிறேன்.
ஜோதிடத்திற்கு எதிரான அறிவியல் வாதங்கள்:
ஒரு மனிதன் பிறக்கும் போது சூரியன், சந்திரன் மற்றும் கோள்களின் (12 ராசிகள்) நிலைகளிலிருந்து அந்த மனிதனின் குணநலன்கள் மற்றும் விதியையும் ஜாதகம் எனப்படும் விளக்கப்படத்தைப் பயன்படுத்தி கண்டறியும் கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டது ஜோதிடமாகும். ஜாதகம் தனிநபர்களுக்கு மட்டுமன்று. நாடுகள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், விளையாட்டு அணிகள் மற்றும் வீட்டு செல்லப்பிராணிகளுக்கும் கூட எழுதப்படுகிறது.
ஜோதிடம் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய குடும்பம் மற்றும் கண்ணுக்குப் புலப்படும் நட்சத்திரங்ககள் பற்றி அறியப்பட்டவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அப்போதிருந்து, பிரபஞ்சத்தைப் பற்றிய நமது அறிவு வெகுவாக விரிவடைந்ததுள்ளது, ஆனால் ஜோதிடம் அதே நிலையிலேயே தேக்கமடைந்து உள்ளது. ஜோதிடத்தில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் அல்லது ஜோதிடத்தின் வளர்ச்சி குறித்து நீங்கள் கடைசியாக எப்போது அறிந்துக் கொண்டீர்கள்? மேலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், ஜோதிடர்கள் தங்கள் கூற்றுகளுக்கான அடிப்படைக் கோட்பாடுகளில் இன்னும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை, மேலும் கோள்களின் நிலைகள் நமது குண நலன்கள் மற்றும் விதிகளின் மீது எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பது குறித்து அவர்களால் விளக்கமளிக்க முடியவில்லை.
தவறான அடித்தளங்கள்:
ஜோதிடர்கள், நீண்டகாலமாக மதிப்பிழந்த கோப்பர்நிக்கஸ் காலத்திற்கு முந்தைய, பிரபஞ்சத்தின் புவி மய்ய மாதிரியின் அடிப்படையில் அவர்களின் வியாபாரத்தை நடத்துகிறார்கள்! புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 2001ஆம் ஆண்டில் புதுடில்லியில் ஒரு விரிவுரையில் கூறியது போல்: “பூமி பிரபஞ்சத்தின் மய்யம் அல்ல என்று கண்டுபிடிக்கப்பட்ட போது, ஜோதிடம் சாத்தியமற்றதாகிவிட்டது.”
ஜோதிடம் என்பது ஒரு பொருள் ஒப்புமை வாயிலான விளைவைக் கொண்டிருக்கிறது என்கிற தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக, செவ்வாய் கோள் சிவப்பு நிறமாகத் தோன்றுவதாலும் சிவப்பு என்பது இரத்தத்தின் நிறம் என்பதாலும் அது ‘போர்’ என்பதைக் குறிக்கிறது. ரிஷபம் என்னும் விண்மீன் கூட்டம் காளையை ஒத்திருப்பதாகக் கருதப்படுவதால், அது ‘வலிமையை’ குறிக்கிறது. ஜோதிடம் தனிப்பட்ட கோள்கள் மற்றும் விண்மீன்களுடன் தொடர்புடைய ‘குணங்களை குறிப்பிட்ட ராசிகளின் கீழ் பிறந்தவர்களுக்கு ’ஒதுக்குகின்ற ஒரு அபத்தமான முறை இது!
முட்டாள்தனம்:
ஜோதிடர்கள் அவ்வப்போது சூரியன், சந்திரன் அல்லது ஏதேனும் ஒரு கோள் “குறிப்பிட்ட ராசி மண்டலம் வழியாகப் பெயர்ச்சி ஆவது” (எ.கா தனுசு) பற்றிய அறிக்கைகளை அளிக்கிறார்கள். இது முட்டாள்தனமானது. முதலாவதாக, சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள், வெவ்வேறு விண்மீன் கூட்டங்களைச் சேர்ந்த நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது பூமிக்கு மிக நெருக்கமாக உள்ளன, எனவே அவை “குறிப்பிட்ட ராசி மண்டலம் வழியாகப் பெயர்ச்சி ஆவது” சாத்தியமற்றது. இரண்டாவதாக, ஒரு விண்மீன் கூட்டம் என்பது உண்மையான நட்சத்திரத் தொகுதி அல்ல. பூமியில் இருந்து கணிசமான அளவு வேறுபடுகின்ற தொலைவு அமைந்துள்ள ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நட்சத்திரங்களின் ஒரு தொகுப்பாகும், மேலும் அவை பூமியில் இருந்து பார்க்கும் போது மட்டுமே ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தோன்றுகின்றன. வேறு இடங்களில் இருந்து காணும் போது அவ்வாறு தோன்றுவதில்லை.
காணாமல் போன விண்கோள்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத கோள்கள்:
தொடக்கத்தில், பூமியில் இருந்து தெரிகின்ற புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் சனி ஆகிய 5 கோள்கள் மட்டுமே ஜோதிடத்தில் கணக்கில் எடுக்கப்பட்டன. யுரேனஸ், நெப்டியூன் மற்றும் சிறிய கோளான புளூட்டோ ஆகியவை முறையே 1781, 1846 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளில் தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டன. ஜோதிடர்கள் தங்கள் கணக்கீட்டில் குறைந்தபட்சம் ஒரு கோளின் தாக்கத்தையேனும் விட்டுவிட நேர்ந்திருக்கும் என்பதால், 1930 ஆண்டிற்கு முன் எழுதப்பட்ட அனைத்து ஜாதகங்களும் தவறாக இருந்திருக்க வேண்டாமா? இப்போதும், பெரும்பாலான ஜோதிடர்கள் யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோவை கணக்கில் எடுப்பதில்லை.
எப்படி சரியாக இருக்கும்:
நமது சூரிய மண்டலத்தில் ஆயிரக்கணக்கான சிறுகோள்களும், நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களும் டஜன் கணக்கான துணைக்கோள்களும் உள்ளன, ஆனால் ஜோதிடர்கள் அவர்களின் கணக்கீடுகளில் அவற்றைக் கருதுவதில்லை. நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தில் பல கோடிக்கணக்கிலான பிற விண்மீன் திரள்களும் பல்சார்கள், குவாசர்கள், கருந்துளைகள், கரும்பொருள் மற்றும் கருப்பு ஆற்றல் போன்ற விசித்திரமான பொருட் களும் உள்ளன என்பதை நாம் அறிவோம். இவ்வாறு பல காரணிகளை விட்டுவிடுகின்ற ஒரு அமைப்பு முறை எப்படி சரியானதாக இருக்க முடியும்?
இந்திய ஜோதிடம், ஜோதிட அட்டவணையில் இராகு மற்றும் கேது என்கிற இரண்டு கற்பனைக் கோள்களை இணைத்துள்ளது. தொடக்கத்தில், இராகுவும் கேதுவும் குறிப்பிட்ட நாட்களில் சூரியனையும் சந்திரனையும் விழுங்கி, சூரிய மறைப்பை ஏற்படுத்துகின்ற விண்ணு லகப்பாம்புகளாகக் கருதப்பட்டன. தற்போது, நமது ஜோதிடர்கள் அவற்றை, நமது செயல்களையும் நமது விதியையும் பாதிக்கின்ற ‘கண்ணுக்குத் தெரியாத கோள்கள்’ என்று அழைக்கிறார்கள்.
கருத்தரிக்கும் தருணம் மற்றும் குழந்தை பிறக்கும் நேரம்:
ஒரு நபரின் உடற்கூறுகளும் மற்றும் பண்புகளும், கருத்தரிக்கும் தருணத்தில், அதாவது அவரின் பிறப்புக்கு முன்னரே பெற்றோரிடமிருந்தும் கடத்தப்படுகிற மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றும், ஒருவரின் பிறப்புக்கு வெகு காலத்திற்குப் பின்னரும்ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் அவற்றை மாற்றியமைக்க முடியும் என்றும் உயிரியல் நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் ஜோதிடத்தின் படி மரபுத்தொடர்பு, சுற்றுச்சூழல் ஆகிய நன்கு நிறுவப்பட்ட அறிவியல் கொள்கைகளைப் புறக்கணித்து, பிறந்த நேர விவரங்களை மட்டுமே தரவு களாகப் பயன்படுத்தி எழுதப்படுகின்ற ஒருவரின் ஜாதகத்துடன், அவரின் உடற் கூறுகளும் ஆளுமைப் பண்புகளும் தொடர்பு படுத்தப்படுகின்றன.
‘நேரம்’ தொடர்பான சிக்கல்கள்:
பிறப்பு என்பது ஒரு உடனடி நிகழ்வாக இல்லாமல் ஒரு செயல்முறையாக இருக்கும்போது பிறந்த நேரத்தை ஒருவர் துல்லியமாகத் தீர்மானிப்பது எப்படி? கடிகாரங்களும் துல்லியமாக நேரத்தை அளவிடும் பிற கருவிகளும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் ஜோதிடர்கள் என்ன செய்தனர்? ஜோதிடர்கள் எந்த நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் – உள்ளூர் நேரத்தையா (இது ஒவ்வொரு டிகிரி தீர்க்கரேகைக்கும் 4 நிமிடங்கள் மாறுபடும்) அல்லது நாட்டின் நிலையான நேரத்தையா? வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வரையறுக்கப்பட்ட வேகத்தில் ஒளி பயணிக்கிறது என்று நாம் அறிவோம். ஒளி, சூரியனிலிருந்து பூமிக்கு பயணிப்பதற்கு எட்டு நிமிடங்கள் நேரம் எடுப்பதால் நாம் பார்க்கின்ற சூரியனின் நிலை உண்மையில் எட்டு நிமிடங்களுக்கு முந்தைய நிலையாகும். ஆனால் ஜோதிடர்கள் இந்த அம்சத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதைப்போல், இராசி மண்டலங்களிலுள்ள அனைத்து கோள்கள் மற்றும் அனைத்து நட்சத்திரங்களின் உண்மையான மற்றும் பார்க்கக்கூடிய நிலைகளுக்கு இடையே வேறுபாடு உள்ளதால், ஜாதகக் கட்டங்கள் சில நிமிடங்கள் முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை காலாவதியாகின்றன!
நாளை தொடரும்....
நன்றி: முனைவர் திரு.அசோக்வரதன் ஷெட்டி ஐஏஎஸ் (ஓய்வு)