களப்பிரர் அட்சி ஏன் இருண்ட காலம்?
களப்பிரர் காலம் குறித்துப் புரிந்து கொள்ள முதலில் களப்பிரர் காலத்துக்கு முந்தைய சங்க காலம் குறித்து அறிவது தேவையாகிறது. சங்ககாலம் என்பது கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3ஆம் நூற்றாண்டு வரை எனவும், சேரன் செங்குட்டுவனின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனவும் கருதப்பட்டு, அதன் அடிப்படையில் இதுவரை காலங்கள் கணிக்கப்பட்டு வந்தன.
ஆனால் எமது ஆய்வு சேரன் செங்குட்டுவனின் காலத்தை 400 ஆண்டுகளுக்குமேல் பின்னோக்கிக் கொண்டு சென்று அவனது காலத்தை, கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும், சங்ககால வேந்தர்களின் காலம் என்பது கி.மு. 350 முதல் கி.மு. 50 வரை எனவும், சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான நகர அரசுகளின் காலம் எனவும், அதற்குப் பிந்தைய சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான பேரரசுகளின் காலம் எனவும் சங்க இலக்கியம், கல்வெட்டுகள், அகழாய்வுத் தரவுகள், நாணயங்கள், வெளிநாட்டினர் குறிப்புகள் போன்ற பல்வேறு தரவுகளையும் முழுமையாக ஆய்வு செய்து உறுதி செய்துள்ளது.
எமது ஆய்வு முடிவுகளுக்குக் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற இடங்களில் நடந்த அகழாய்வுத் தரவுகள் சான்றுகளாக உள்ளன. மேலே சொல்லப்பட்ட எமது ஆய்வு முடிவுகள் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எமது ஆய்வு நூலில் சான்றுகளுடன் கூடிய ஆய்வுகளோடு விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன (1). பேரரசுக்காலமான சங்கம் மருவிய காலகட்டம்தான் களப்பிரர் காலத்திற்கு முந்தைய காலகட்டம். சங்கம் மருவிய காலம் என்பது சங்ககாலத்தின் தொடர்ச்சியே என்பதால் சங்ககாலம், சங்கம் மருவியகாலம் ஆகிய இரண்டையும் களப்பிரர் காலத்திற்கு முந்தைய காலம் எனக்கொண்டு அவை குறித்து ஆய்ந்து, அவற்றைக் களப்பிரர் காலம் குறித்தத் தரவுகளுடன் ஒப்பிட்டு, களப்பிரர் காலம் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்.
சங்ககாலச் சமூகம் – உலகின் முன்னணிச் சமூகம்:
கி.மு. 5000 முதலே பழந்தமிழகத்தில் இரும்புக்கால நாகரிகம் இருந்துவந்தது என்பதையும், தமிழர்களே உலகின் முதல் இரும்புக்கால நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் என்பதையும் இன்றைய சிவகளை அகழாய்வு உறுதி செய்துள்ளது. கி.மு. 1500 வாக்கிலேயே ஆதிச்சநல்லூர் ஒரு தொழிற்துறை நகராக இருந்து வந்தது. அங்கு அன்றே உயர்தொழில் நுட்பமும், மிகச்சிறந்த தரமும் கொண்ட பலவகையான இரும்பு, வெண்கல, மட்பாண்டப்பொருட்கள் தயாராகி பழந்தமிழர்களின் தொழில்நுட்ப மேன்மையை பறைசாற்றின. கி.மு. 1500 முதலே தமிழ்க்குறியீடுகள் என்பன தமிழ்மொழிக்கான எழுத்தாக இருந்து வந்தன. கி.மு. 1500 முதலே பழந்தமிழகத்தில் சிறுகுறு நகர அரசுகள் இருந்துவந்தன. கி.மு. 1000க்குப்பின் அவை வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகளாகப் பரிணமித்தன. கி.மு. 800 வாக்கில் தமிழி எழுத்து உருவாகி இருந்தது. அன்றே தொல்கபிலர் என்ற மாமேதை உருவாகி எண்ணியம் என்ற வளர்ச்சிபெற்ற பொருள்முதல்வாத மெய்யியலைத் தோற்றுவித்தார் (2). அதன்காரணமாக தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் பல தமிழில் உருவாகி இருந்தன. பழந்தமிழர்களிடம் இருந்த உயர்தொழில்நுட்ப அறிவும், ஐக்கியக்கூட்டணியும் அவர்களை உலகளாவிய கடல் வணிகத்தின் தலைசிறந்த நாடாகவும், பேரளவான உற்பத்தியும் பெருஞ்செல்வமும் பெருவளமும் கொண்ட நாடாகவும் மாற்றியமைத்தது.
இவற்றின் காரணமாக கி.மு. 750 முதல் கி.பி. 250 வரையான 1000 வருடகால, களப்பிரர்களுக்கு முந்தைய காலகட்டத்தில், தமிழ்ச் சமூகம், அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், வர்மம், போர்க்கலைகளான களரி, சிலம்பு, கட்டடக்கலை, கப்பல்கலை, இசை, நடனம், ஓவியம், சிற்பம் முதலான பல்வேறு துறைகளிலும் ஒரு உச்சகட்ட வளர்ச்சியைப் பெற்று உலகின் ஒரு முன்னணிச் சமூகமாக இருந்தது. அன்று சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களும், திருக்குறள் போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும், சிலப்பதிகாரமும் படைக்கப்பட்டன. இவை போன்ற வளர்ச்சியின் காரணமாக தமிழ் மக்கள் அன்றே தங்களைத் தமிழர்கள் என அடையாளப் படுத்திக் கொண்டனர். தமிழ்மொழி 1000 ஆண்டுகளுக்கும் மேலாக தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக, ஆட்சிமொழியாக, வணிக மொழியாக, கல்வி மொழியாக என அனைத்துமாக இருந்து வந்ததால், அன்றைய வட மொழிகளான பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளைவிட இலக்கிய வளமும், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த நிறைய நூல்களையும், பேரளவான சொல் வளத்தையும் கொண்ட மொழியாக இருந்தது. மேலும் பழந்தமிழ்ச் சமூகத்தில் கி.மு. 600 வாக்கிலேயே பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருந்தது. இவை அனைத்திற்கும் அடிப்படையாக பழந்தமிழ்ச்சமூகம் என்பது எண்ணியம், சிறப்பியம், அளவியல், பூதவாதம் போன்ற பொருள் முதல்வாதச் சிந்தனைகளைக் கொண்ட சமூகமாகவும் இருந்தது.
சுகாப் எழுதிய எரித்ரேயக்கடலின் பெரிப்ளசு நூல், முசிறி - அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தம், பிளினியின் இயற்கை வரலாறு, தாலமியின் புவியியல் நூல், பான்கூ என்ற சீனர், சேசு, கென்னடி, வின்சென்ட் சுமித், சுவெல், சுட்ராபோ, போன்ற வெளிநாட்டினரின் குறிப்புகள், நேரு, ஆர்.எசு. சர்மா, கே.ஏ. நீலகண்ட சாத்திரி, சீனிவாச அய்யங்கார், டி.என்.சா ஆகியவர்களின் எழுத்துகள் போன்றன பழந்தமிழக வணிகத்தின் சிறப்பைப் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியுள்ளன. இவற்றில் இரு தரவுகள், 1. எரித்ரேயக்கடலின் பெரிப்ளசு (கி.பி.75) என்ற நூல், மேற்கு நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த கப்பல்களைவிட தமிழ்நாட்டில் இருந்து சீனா போன்ற கிழக்கு நாடுகளுக்குச் சென்ற கப்பல்கள் மிகப் பெரியவனாகவும், அதிக எண்ணிக்கையிலும் இருந்தன என்கிறது. 2. முசிறி - அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தப்படி (கி.பி.150), ஒரு தமிழ் வணிகன் ஒரு கப்பலில் ஒரு தடவை உரோமுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களின் இன்றைய மதிப்பு ரூ 200 கோடி. இதுபோன்று அன்று நூற்றுக்கணக்கான கப்பல்களில் ஆயிரக்கணக்கான வணிகர்கள் உரோமுக்கு ஏற்றுமதி செய்தனர். இதை விடப் பலமடங்கு கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இவற்றின் இன்றைய மதிப்பு பல இலட்சங்கோடி வரும். அதனால்தான் தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அதிக அளவான உரோம நாணயங்கள் கிடைக்கின்றன.
(3).கேரளாவில் பட்டணம் என்ற பண்டைய சேரர் துறைமுக நகரான முசிறியில் 10 வருடங்களாக அகழாய்வு செய்துவரும் செரியன், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முசிறி நகர் குறித்து, ‘கிரேக்க இலத்தின் இலக்கியங்களை நன்கு படித்தறிந்த அமெரிக்க ஐரோப்பிய அறிஞர்கள், இன்றைய நியூயார்க், இலண்டன், சாங்காய் போன்ற பெரும் துறைமுக நகரங்களுக்கு இணையான பெரும்துறைமுக நகராக அன்றைய முசிறிநகர் இருந்தது’ எனக் குறிப்பிடுவதாகக் கூறுகிறார் (4). பூம்புகார், கொற்கை போன்ற துறைமுக நகரங்கள் முசிறியைவிடப் பெரியனவாக இருந்தன. ஆகவே பண்டைய தமிழ்நாட்டு நகரங்கள் அன்றைய உலகின் பெரு நகரங்களாக இருந்தன. மேற்கண்ட தகவல்களின் மூலம் பழந்தமிழ்ச்சமூகம் கி.பி. 250 வரை பொருள் முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட, சமயச் சார்பற்ற, ஒரு அறிவியல் சமூகமாகவும், உலகின் பெருங்கப்பல்களையும், பெரு நகரங்களையும் கொண்டதாகவும், உயர் தொழில்நுட்ப மேன்மையும், பேரளவான பொருள் உற்பத்தியும், பெருஞ்செல்வமும் கொண்ட அன்றைய உலகின் ஒரு முன்னணிச் சமூகமாகவும் இருந்தது என உறுதி செய்யலாம்.
பழந்தமிழகத்தின் வீழ்ச்சி:
கி.பி. 1ஆம் 2ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச்சமூகம் உச்சகட்ட வளர்ச்சியைப் பெற்றிருந்தது. எனினும், சங்கம் மருவிய காலம் (கி.மு.50-கி.பி.250) என்பது பேரரசுக்காலம் என்பதால் அதற்கேயுரிய பல்வேறு குறைபாடுகளால் கி.பி. 200 க்கு முன்பிருந்தே ஒரு சீரழிந்த சமூகமாக ஆகிக் கொண்டிருந்தது. சங்கம் மருவிய காலத்தின் இறுதியில் உற்பத்தி இருந்தது, செல்வம் இருந்தது, வளம் இருந்தது. ஆனால் ஒரு புத்துணர்வும், சுயசிந்தனையும், ஒற்றுமை உணர்வும் குறைந்து போனதோடு, சூழ்நிலைக்கும், இடத்திற்கும் ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறனும் குறைந்து போயிருந்தது. இந்நிலையில்தான் மக்களை நல்வழிப்படுத்த திருக்குறள் போன்ற அறம் சார்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம்மருவிய காலத்தில் (கி.மு.50-கி.பி.250) உருவாகின. உரோம் பேரரசு கி.பி. 235 முதல் கி.பி. 284 வரை மிகப்பெரிய அரசியல் வீழ்ச்சிக்கு உள்ளானதால் (5), அக்காலத்தில் உரோமுடனான தமிழக வணிகம் நின்று போனது. அதனால் கி.பி.235க்குப்பின் உரோம் மூலம் கிடைத்து வந்த வணிக வருவாயை இழந்து, ஒரு பொருளாதார நெருக்கடியைப் பழந்தமிழகம் சந்தித்த காலகட்டத்தில், கி.பி. 250வாக்கில் களப்பிரர் படையெடுப்பு நடந்தது.
களப்பிரர்கள் – அநாகரிக மக்கள்:
சங்ககாலம் முதல் சங்கம் மருவிய காலம்வரை தமிழ்மக்கள் வடபகுதிக் காடுகளில் வாழ்ந்தவர்களை வளர்ச்சியடையாத, அநாகரிக மக்களாகவே கருதி வந்தனர். அதனால்தான் சிலப்பதிகாரம், கருநாடகப் பகுதியில் வாழ்ந்தவர்களைக் கொடும் கருநாடர் என்றது (6). வேள்விக்குடி செப்பேடு, கருநாடகத்திலிருந்து படையெடுத்து வந்த களப்பிரர்கள், கி.பி. 250 வாக்கில் மதுரையைக் கைப்பற்றித் தமிழைப் பாண்டிய நாட்டில் ஒடுக்கினர் எனக் கூறுகிறது. பெரியபுராணம் தனது மூர்த்தி நாயனார் புராணத்தில், ‘கானக்கடி சூழ் வடுக கருநாடர் மன்னர்’ எனவும் கல்லாடம் தனது செய்யுளில் ‘மதுரை வவ்விய கருநாடர் வேந்தன்’ எனவும் கூறுகிறது (7). யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கணநூல் களப்பிரர்கள் மூவேந்தர்களையும் சிறையில் இட்டனர் என்கிறது. தளவாய்புரச் செப்பேடு ‘களப்பாழர் குலங்களைந்தும்’ எனப் பாண்டியன் கடுங்கோன் மீண்டும் தமிழகத்தைக் கி.பி. 575 வாக்கில் கைப்பற்றியதைக் குறிப்பிடுகிறது (8). இச்செய்திகள் கி.பி. 250 வாக்கில் அநாகரிக மக்களான களப்பிரர்களால் தமிழ்நாடு கைப்பற்றப்பட்டது எனவும் பின் கி.பி. 575 வாக்கில் பாண்டியர்கள் மீண்டும் தமிழ்நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர் எனவும் கூறுகின்றன.
களப்பிரர்கள் என்ற பெயரை சங்க இலக்கியமோ அல்லது பதினெண் கீழ்க்கணக்கு இலக்கியங்களோ எதுவும் குறிப்பிடவில்லை. சங்க இலக்கியம் வடபகுதியில் வாழ்ந்த மக்களான மழவர், எயினர், வடுகர் போன்ற பல பெயரைக் குறிப்பிட்ட போதும் களப்பிரர் என்ற பெயரைக் குறிப்பிடவில்லை. தக்காணத்தின் பேரரசாக இருந்த சாதவாகனர்கள் கி.பி. 225 வாக்கில் வீழ்ச்சியடைந்தபோது, சிறுஅரசுகளாக வடமெற்கில் ஆபிரரும், தெற்கில் சுதுவரும், ஆந்திரதேசத்தில் இட்சுவாகுகளும், தென்கிழக்கில் பல்லவர்களும் தோன்றினர் (9). ஆனால் அதிலும் களப்பிரர் இடம்பெறவில்லை. வேறு எந்த வரலாற்றிலும் அவர்கள் பெயர் கி.பி. 250க்கு முன் இடம்பெறவில்லை. ஆகவே அவர்கள் எங்கும் வேளாண்மை செய்து நிலைத்து வாழவில்லை என்பதோடு எந்த ஒரு அரசும் அவர்களுக்கு இருக்கவில்லை. கர்நாடகத்தில் உள்ள மைசூரின் சரவணபெளகொள என்ற பகுதி களபப்பு எனப்பட்டது எனவும், அதனை ஆட்சி செய்தவர்களே களப்பிரர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த மைசூர்ப் பகுதியை எருமைநாடு என சங்க இலக்கியம் கூறுகிறது எனில் கர்நாடகப் பகுதியில் இருந்தவர்களை கொடும் கருநாடர் என சிலப்பதிகாரம் கூறுகிறது. ஆகவே களப்பிரர்கள், கர்நாடகம் உட்பட்ட தக்காணக் காடுகளில் வாழ்ந்த அநாகரிக மக்கள்.
களப்பிரர் படையெடுப்பும் பேரழிவும்:
அநாகரிக நிலையில் உள்ள மக்கள் பக்கத்திலுள்ள நாகரிகச் சமூகத்தை தாக்கி அழித்துக் கைப்பற்றுவது என்பது வரலாறு முழுவதும் நடந்து வந்துள்ளது. செர்மானிய ஊணர்கள் உரோம் நாகரிகத்தைத் தாக்கி அழித்தனர். டோரிகள் மைசீனிய நாகரிகத்தைத் தாக்கி அழித்தனர். ஆரியப் படையெடுப்பாளர்கள் சிந்துவெளி நாகரிகத்தைத் தாக்கி அழித்தனர். இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கவே சீனர்கள் பெருஞ்சுவர்களைக் கட்டினர். பழந்தமிழர்களும் இதனைத் தடுக்கவே மொழிபெயர்தேயம் எனப்படும் தக்காணப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தக்காணக் காடுகளில் வாழ்ந்த களப்பிரர்கள் தங்களைப் போன்ற பல அநாகரிகக் குழுக்களை ஒன்று சேர்த்து, ஒரிரு வருடத் தயாரிப்புக்குப்பின் கி.பி. 250 வாக்கில் கருநாடகப் பகுதி வழியாக பெரும்படையும் பெரும்பலமும் கொண்டு, பெருஞ்செல்வ வளம் கொண்ட பழந்தமிழகத்தைத் தாக்கி மூவேந்தர்களையும் தோற்கடித்து பழந்தமிழ் நகரங்களைத் தீயிட்டுத் தரைமட்டமாக்கிப் பேரழிவை ஏற்படுத்தினர்.
களப்பிரர்கள் அநாகரிக மக்கள் என்பதால் அவர்களின் படையெடுப்பு என்பது இயல்பாகவே கொடூர வன்முறையையும் பேரழிவையும் கொண்டுவந்தது. சான்றாக அநாகரிக டோரியர்களின் படையெடுப்பால், “ஆப்ரிக்காவில் பயிரிட்டு வாழ்ந்த மக்களுக்கும். கிரேக்க மக்களுக்கும் வேறுபாடு இல்லாது போனது…. மைசீனியாவின் கடந்த காலம் முற்றிலுமாக மறக்கப் பட்டிருந்தது…. கிராமங்கள் ஒன்றுக்கொன்று துண்டிக்கப்பட்டிருந்தன… மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். கைவினைத் தேர்ச்சி முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை…. வாழ்க்கை கடுமையானதாகவும், பஞ்சங்கள் மிகுந்ததாகவும் இருந்தது” எனக் கூறுகிறார் கிரிசு ஆர்மன் (10). டோரியர் படையெடுப்பால், மைசீனிய நகரம் உட்பட அநேக நகரங்கள் சாம்பற் குவியலாகின, கிரீசின் வாழ்க்கை அதிர்ச்சிக்குள்ளாகி நின்றுபோய்விட்டது, அந்நாகரிகத்தை இருள் சூழ்ந்துகொண்டது, மக்களின் வறுமை அதிகரித்தது, வாழ்க்கை நிலையற்றதாகியது என்கிறார் சாமிநாத சர்மா (11). களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய தமிழ்ச்சமூகம் இந்த நிலையில் தான் இருந்தது. இது போன்ற நிலையிலிருந்து மீண்டுவரும் சமூகம் முற்றிலும் ஒரு புதிய, மாறுபட்ட சமூகமாக, பழைய நினைவுகள் இல்லாத, பிற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட கிராமச் சமூகமாக ஆகி விடுகிறது. பழந்தமிழ்ச் சமூகமும் அவ்வாறுதான் மாறிப் போயிருந்தது.
களப்பிரர் படையெடுப்புக்கு முன்பு பழந்தமிழகம் பெரு நகரங்களையும் பேரளவான உற்பத்தியையும், பெருஞ்செல்வத்தையும் கொண்ட நாடாக இருந்துள்ளது என்பதை நமது ஆய்வுகள் உறுதி செய்கின்றன. எனினும் களப்பிரர்கள் ஒருசில வருடங்களில் பெருஞ்செல்வ வளம் கொண்டதாக இருந்த பழந்தமிழகம் முழுவதையும் கைப்பற்றி அனைத்து நகரங்களையும் தீயிட்டுத் தரைமட்டமாக்கினர். செங்கிசுகான் போன்றே அநாகரிக மக்களுக்கே உரிய மிருக பலத்தோடும், ஈவு இரக்கமில்லாத வெறி உணர்வோடும், நகர நாகரிக மக்களின் மேல் உள்ள பெரும்பகை உணர்வோடும் அவர்களது தாக்குதல் நடந்துள்ளது. அதனால்தான் அவர்களால் மூவேந்தர்களையும் வெற்றி கொள்ள முடிந்தது என்பதோடு, 300 வருடகாலம் தொடர்ந்து ஆளவும் முடிந்துள்ளது. மிகக்கொடிய வன்முறையை, மீளமுடியாத பேரழிவை ஏற்படுத்தி, மக்களை அளவிட முடியாத ஆழ்ந்த அச்சத்தில் வைத்திருந்ததன் மூலமே இவற்றைச் சாதிக்க முடிந்துள்ளது. இவற்றைப் புரிந்து கொள்ளும் பொழுதுதான், டோரியர்களின் மைசீனிய படையெடுப்பால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து, கிரீசு ஆர்மனும் சாமிநாத சர்மாவும் என்ன கூறியுள்ளார்களோ அதுபோன்ற பயங்கர விளைவுகள் பழந்தமிழ்ச் சமூகத்திலும் ஏற்பட்டது என்பதை உணர முடியும்.
கிரேக்கத்தின் மீது படையெடுத்துப் பேரழிவை உருவாக்கிய அநாகரிக டோரியர்கள் 200 வருடங்களில் கிரேக்கர்களோடு ஐக்கியமாகி கிரேக்கர்களாகவே ஆகிவிட்டனர். அதுபோன்றுதான் பழந்தமிழ் நாட்டின் மீது படையெடுத்துப் பேரழிவை உருவாக்கிய அநாகரிகக் களப்பிரர்களும் 200 வருடங்களில் தமிழர்களோடு ஐக்கியமாகி தமிழர்களாகவே ஆகி விட்டனர். வளர்ச்சி பெற்ற, தங்களுக்கான சுய அடையாளங்களைக் கொண்ட (மொழி போன்ற) நாகரிக மக்கள் பிறரோடு எளிதில் ஐக்கியமாவதில்லை. ஆகவே டோரிகளைப் போலவே களப்பிரர்களும் அநாகரிக மக்களாவர்.
களப்பிரர் காலமும் வைதீகமும் (கி.பி.250-550):
களப்பிரர் காலம் குறித்து அறிய வேள்விக்குடி செப்பேடும், பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் உதவுகின்றன. ‘பூலாங்குறிச்சி’ கல்வெட்டு முதலில் ஒரு ஓலையில் எழுதப்பட்டு, பிறகு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு. சேந்தன் கூற்றன் என்னும் களப்பிர அரசனது ஆட்சியில் வேல்மருகன் கடலகபெரும் படைத்தலைவன் எங்குமான் என்பவன் இரண்டு கோவில்களையும், ஒரு சமணப்பள்ளியையும் கட்டுவித்து கோவிலில் வழிபாடு நடத்தவும் ஏற்பாடு செய்தான் என முதல் கல்வெட்டும், வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் பிரம்மதேயம், வேறு ஒரு ஊர் ஆகிய மூன்று ஊர்களும் மலைமேல் எடுக்கப்பட்ட கோவில்களுக்குத் தரப்பட்ட தானம் என்பதை இரண்டாவது கல்வெட்டும் கூறுகிறது. இக்கல்வெட்டின்படி இந்த களப்பிர அரசன் சோழ, பாண்டிய, கொங்கு நாடுகளுக்கு அரசனாய் இருந்துள்ளான். இக்கல்வெட்டுகளில் பிரம்மதேயம், பிரம்மதேயக்கிழார், பிரம்மதேயமுடையார், நாடு காப்பார், புறங்காப்பார் போன்ற பல பெயர்கள் வருகின்றன. பிரம்மதேயம், பிரம்மதேயமுடையார் ஆகிய சொற்கள் களப்பிரர் காலத்தில் பிரம்மதேயம் வழங்கப்பட்டதையும், அவை இருந்ததையும் உறுதி செய்கின்றன என்பதால் இக்காலம் பிரம்மதேயங்கள் பெருகத்துவங்கிய காலம் (12). பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள், களப்பிரர்கள் வைதீக நெறிகளுக்கு ஆதரவானவர்கள் என்பதோடு அவர்கள் பார்ப்பனர்களுக்குப் பிரம்மதேயம் வழங்கியவர்கள் என்பதையும் உறுதி செய்கின்றன. மேலும் யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கண நூலில் உள்ள பல பாடல்கள் மூலம் களப்பிரர்கள் மிகச்சிறந்த வைணவர்கள் என அறிய முடிகிறது (13). சோழநாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்த கூற்றுவன் என்கிற களப்பிர அரசன் ஒரு சிறந்த சிவபக்தன் என கூற்றுவநாயனார் புராணம் கூறுகிறது (14). ஆகவே களப்பிரர்கள் வைதீக பார்ப்பனியத்தின் ஆதரவாளர்கள்.
வேள்விக்குடி செப்பேடு என்பது தனக்கு யாகங்களைச் செய்து கொடுத்த கொற்கைக்கிழான் கொற்றன் என்கிற பார்ப்பனனுக்கு கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி (15). வேள்விக்குடி என்கிற ஊரைத் தானமாகக் கொடுத்தான் எனவும், இதனைக் களப்பிரர்கள் எடுத்துக் கொண்டனர் எனவும், கி.பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டுக்குரிய பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையனிடம் அந்த பார்ப்பானின் வழிவந்தவன் தனது முன்னோனுக்கு வழங்கிய வேள்விக்குடி ஊரை மீட்டுக் கொடுக்க கேட்டுக்கொண்டதை ஏற்று பாண்டியன் வேள்விக் குடி ஊரை மீட்டுக் கொடுத்த சாசனம்தான் வேள்விக்குடிச் செப்பேடு.
இச்செப்பேடு குறித்து முனைவர் தி.சு. நடராசன், சங்ககாலமான முதுகுடுமிப்பெருவழுதி காலத்தில் இது போன்று நில தானங்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கப்படுவதோ, செப்பேடுகளோ இருக்கவில்லை; வேள்விக்குடி என்ற ஊர் இல்லை; அதில் உள்ள பெயர்களும் பொருத்தமாக இல்லை; முதுகுடுமி கொடுத்த சாசனம் குறித்தத் தகவல் எதுவுமில்லை. சங்ககாலத்திலேயே பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்டது என்ற பிரமையை உருவாக்குவது தான் இதன் நோக்கம் என்கிறார் (16). வட இந்தியாவில் கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டுகளில் நந்தர், மௌரியர் காலத்தில்கூட பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்கப்படவில்லை. மேலும் கீழடி அகழாய்வுகளும் இன்ன பிறவும் அன்று சமயம் சார்ந்த எந்த விடயமும் இல்லை என்பதை உறுதி செய்த நிலையில் இந்த வேள்விக்குடி செப்பேடு ஏற்கத்தக்கதல்ல. பாடாண்தினையில் உள்ள ‘வேள்விநிலை’ என்ற துறை என்பது ஆநிரைகளை இலவயமாக வழங்குவது என்பதால் தமிழ் வேள்வி என்பது பார்ப்பன யாகம் அல்ல (17). ஆகவே இச்செப்பேடு ஒரு வரலாற்றுப் புனைவு என்பதால், பூலாங்குரிச்சி கல்வெட்டின்படி களப்பிரர்கள் வைதீக பார்ப்பனியத்துக்கு ஆதரவானவர்கள் என்பதே உண்மை.
களப்பிரர் காலம் - சமய ஆதிக்கம் மிகுந்த காலம்:
களப்பிரர் காலத்திற்கு முந்தைய தமிழ்ச்சமூகம், எண்ணியம், சிறப்பியம், அளவியல், பூதவாதம் போன்ற பொருள்முதல்வாதச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட சமூகமாகவும் சமயச்சார்பற்ற சமூகமாகவும் இருந்தது. பெரும்பாலோர் சமய நம்பிக்கை இல்லாதவர்களாகவும் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே ஏற்றுக்கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் களப்பிரர் காலத்தின் தொடக்கத்தில் நடந்த கொடூர வன்முறையாலும் பேரழிவாலும் கொடுங்கோன்மை ஆட்சியாலும் தமிழ்ச் சமூகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் அதன் அடிப்படைக் கட்டமைப்புகளும் முழுமையாக அழிக்கப்பட்டு, சமயம் சார்ந்த பிற்போக்குச் சிந்தனைகள் மேலோங்கி வளர்ந்தன. அதற்கு களப்பிரர்காலத் தமிழ்ச் சமூகத்தில் இருந்த பஞ்சம், பட்டினி, வறுமை, ஏழ்மை, வன்முறை, கல்வியின்மை, தொழிலின்மை, கொடுங்கோன்மை போன்ற நிலைமைகள் காரணமாயின. இதுபோன்ற சூழ்நிலைகள் மனிதனுக்கு ஆறுதலைத்தரும் சமய நம்பிக்கையில் அவனை ஈடுபட வைக்கிறது. களப்பிரர்காலத்தில் அதுதான் நடந்தது. இக்காலத்தில் சமண பௌத்த மதங்களோடு வைதீகமும் ஆதரிக்கப்பட்டு பார்ப்பனர்களுக்குப் பிரம்மதேயங்கள் வழங்கப்பட்டன. நாளடைவில் சமயம் சார்ந்த சிந்தனைகள் வளர்ச்சியடைந்து, கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டில் திருமூலரின் திருமந்திரமும், காரைக்கால் அம்மையாரின் பக்திப் பாடல்களும் தமிழில் தோன்றின (18). கி.பி. 5 முதல் 7ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய பௌத்த மதத் தமிழ்ச் சிந்தனையாளர்களான தின்னாகர், தர்மகீர்த்தி, திக்நாதர், தருமபாலர், போதிதர்மர் போன்ற அனைவரும் தங்கள் நூல்களை சமற்கிருதத்தில் எழுதினர் (19). சமண சமயத்தை வளர்த்தெடுப்பதற்காக கி.பி. 470இல் வச்சிரநந்தி என்பவர் மதுரையில் திரமிள சங்கத்தை நிறுவினார் (20). ஆகவே களப்பிரர்காலம் என்பது மதச்சிந்தனைகள் ஆதிக்கம் வகித்த காலம்.
களப்பிரர் காலத்தில் தமிழ்மொழி: களப்பிரர்கள் பாலி மற்றும் பிராகிருத மொழியை ஆதரித்தார்கள். அன்று பல நூல்கள் அம்மொழிகளில் படைக்கப்பட்டன. கி.பி. 5ஆம் நூற்றாண்டில், சோழநாட்டைச் சேர்ந்த புத்ததத்த மகாதேரர் என்னும் தமிழ் பௌத்த அறிஞர் பாலி மொழியில் புத்தவம்சாத்த கதா, அபிதம்மாவதாரம், உத்தரவினிச்சியம் போன்ற பல நூல்களைப் படைத்தார். களப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் ஆட்சிக் காலத்தில்தான் ‘வினய வினிச்சியம்’ என்னும் நூலை அவர் எழுதினார். களப்பிரர்காலத்தைச் சேர்ந்த தமிழரான தஞ்சை தருமபால ஆசாரியார் பாலிமொழியில் பல உரைநூல்களை எழுதியுள்ளார் (21). ஆகவே களப்பிரரின் தொடக்க காலத்தில் பாலி, பிராகிருத மொழிகள் செல்வாக்கு பெற்றவைகளாக இருந்தன. ஆனால் இறுதியில் சமற்கிருதம் பெரும் செல்வாக்கு பெற்றதாக ஆகி சமற்கிருதமயமாக்கலும் நடைபெற்றது.
களப்பிரர், பல்லவர் காலத்திற்கு முன்வரை கலை, அறிவியல் முதலான அனைத்திற்குமான மொழியாகத் தமிழ் இருந்தது. பரத நாட்டிய சாத்திரம் என்ற இசை நாட்டிய இலக்கண நூல், சரக சம்கிதை என்ற மருத்துவ நூல், மயமதம் மானசாரம் போன்ற கட்டடக்கலை, சிற்பக்கலை நூல்கள், வானவியல், கணிதம் சார்ந்த ஆரியபட்டியம் போன்ற பல நூல்கள் தமிழின் வழிநூலாக அல்லது அதன் மொழிபெயர்ப்பு நூலாக களப்பிரர் பல்லவர் காலத்தில்தான் சமற்கிருதத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன (22). இவ்வாறு பல கலை, அறிவியல், தொழில்நுட்பம் முதலான தமிழ் நூல்களை மொழி பெயர்த்துத் தன்வயப்படுத்திக்கொண்டு சமற்கிருதம் ஒரு அறிவியல் மொழியாக ஆனது. ஆனால் தமிழ்மொழி கீழ்மக்களின் மொழியாக மாற்றப்பட்டு, அறிவியல் மொழி, வணிகமொழி போன்ற தகுதிகளை இழந்து போனது. தமிழ் அறிவர்கள் அனைவரும் தொடக்கத்தில் பாலி, பிராகிருதத்திலும் பின் சமற்கிருதத்திலும் எழுதினர். இந்த மாற்றங்களுக்கு களப்பிரர்காலப் பேரழிவும், அதன் கொடுங்கோன்மை ஆட்சியுமே காரணம்.
தமிழ்ச்சமூகம் – மாற்றங்களும் காரணங்களும்:
‘கேரள வரலாறு’ என்ற ஆங்கில நூல், களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய 200 ஆண்டுகளில் பெரும் இடைவெளியும், வளர்ச்சியில் வீழ்ச்சியும், பெரும் சமூகமாற்றமும் நிகழ்ந்துள்ளது எனவும், அக்கால அகழாய்வும் வீழ்ச்சியை உறுதிசெய்கிறது எனவும் கூறுகிறது (23). களப்பிரர் படையெடுப்பால் நடந்த வன்முறையாலும் பேரழிவாலும் தமிழறிஞர்கள் பலர் தமிழ் நூல்களுடன் பல்லவர்களின் காஞ்சி நகர் சென்று தங்கினர். அதனால், அடுத்த 600 ஆண்டுகளுக்குத் தத்துவம், அறிவியல், கலை ஆகியவற்றின் புகழ்பெற்றப் பெருநகராகக் காஞ்சி ஆகியது. ஆனால் காஞ்சியைவிடப் பல மடங்கு பெருநகரங்களாக இருந்த பழந்தமிழ் நகரங்கள் அனைத்தும் காணாமல் போயின. இத்தரவு களப்பிரர்களால் நடந்த பெரும் சமூக மாற்றங்களை உறுதிசெய்கிறது. மேலும் களப்பிரர்காலம் குறித்து கி.பி. 400க்கும் முந்தைய செய்திகள் எதுவும் இல்லை என்பது களப்பிரர்களின் தொடக்ககாலக் கொடுங்கோன்மைமிக்க ஆட்சியை வெளிப்படுத்துகிறது.
களப்பிரர்காலத் தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட பஞ்சம், பட்டினி, வறுமை, ஏழ்மை, வன்முறை போன்ற கொடுமைகளாலும், பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இல்லாது போனதாலும் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டிருந்த தமிழ்ச்சமூகம், சமயம் சார்ந்த சமய ஆதிக்கமிக்க சமூகமாக ஆகிப்போனது. தமிழ் அறிவர்களும் மதம் சார்ந்தவர்களும் அரசு ஆதரவு பெற்ற பாலி, பிராகிருத மொழிகளில் தொடக்கத்திலும், பின் அனைவரும் சமற்கிருதத்திலும் எழுதினர். பிராகிருதம் பாலி ஆகிய வடமொழிகள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலும், சமற்கிருதம் கி.பி. 150 வாக்கிலும் தான் தமிழி எழுத்திலிருந்து தங்கள் மொழிக்கான எழுத்தைப் பெற்றன. அவைகளில் செவ்விலக்கியங்கள் இருக்கவில்லை. தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களும் மிக அரிதாகவே உருவாகி இருந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை இதுதான் அம்மூன்று மொழிகளின் நிலைமை. நூற்றுக்கணக்கான தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களையும், அதற்கான பேரளவான சொல் வளங்களையும் கொண்ட ஒரு அறிவியல் சமூகம், வளர்ச்சியற்ற பிற மொழிகளில் எழுதுவது என்பது வரலாற்றில் எங்கும் நடைபெறவில்லை.
பண்டைய காலத்திலேயே பெருவளர்ச்சி பெற்று, தங்களை மொழியால் அடையாளப்படுத்திக்கொண்ட சமூகங்களான, கிரேக்கம், சீனம், பாரசீகம், தமிழ் போன்ற செவ்வியல் மொழிச் சமூகங்கள் எந்தச் சூழ்நிலையிலும் பிற மொழிகளில் எழுதியதில்லை. உரோமர்கள் கிரேக்கத்தைக் கைப்பற்றிய பின்பும் கிரேக்க மொழி உரோமப் பேரரசின் ஒரு ஆட்சிமொழியாக ஆகியது. அது போன்றே அரேபியர்களால் கைப்பற்றப்பட்ட பாரசீகத்திலும் (ஈரான்), பாரசீகம் ஆட்சிமொழியாக ஆகியது. கிரேக்கர்கள் கிரேக்கத்திலும், பாரசீகர்கள் பாரசீகத்திலும் எழுதினர் என்பதோடு இரு மொழிகளும் பெருவளர்ச்சி பெற்றன. மங்கோலியப் படையெடுப்புக்குப் பின்பும் சீனர்கள் சீன மொழியில்தான் எழுதினர். சீனர்கள் பௌத்தமதத்தைத் தழுவியபோதும் சீனமொழியில்தான் எழுதினர். அதுபோன்றே பாரசீகர்கள் இசுலாம் மதத்தைத் தழுவியபோதும் பாரசீகத்தில்தான் எழுதினர். அதுபோன்றே களப்பிரர் காலத்திற்கு (கி.பி. 250க்கு) முன்வரை பிற மதத்தினர் உட்பட அனைத்துத் தமிழர்களும் அனைத்தையும் தமிழில்தான் எழுதினர்.
ஆனால் களப்பிரர் காலத்தில் தமிழறிவர்கள் பிறமொழியில் எழுத வேண்டிய கொடுஞ்சூழ்நிலை ஏற்பட்டது. உரோமால் கைப்பற்றப்பட்ட கிரேக்கத்திலோ, அரேபியர்களால் கைப்பற்றப்பட்ட பாரசீகத்திலோ, மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்ட சீனாவிலோ இக்கொடுஞ்சூழ்நிலை ஏற்படவில்லை. ஆகவே களப்பிரர்களின் படையெடுப்பின்போது நடந்த கொடூர வன்முறையாலும், பேரழிவாலும், அவர்களின் தொடக்ககாலக் கொடுங்கோன்மை ஆட்சியாலும், பழந்தமிழ்ச்சமூகம் ஒரு பின்தங்கிய பிற்போக்கான, பழைய நினைவுகளை மறந்துபோன, கல்வியறிவோ படிப்பறிவோ இல்லாத, ஒரு சமயம் சார்ந்த கிராமச் சமூகமாக ஆகிப்போனது. அதன் விளைவாக அரசு ஆதரவு பெற்ற பிற மொழிகளில் எழுதும் ஒரு கொடுஞ்சூழ்நிலை உருவானது.
களப்பிரர்களின் படையெடுப்பால், 1000 ஆண்டுகளுக்கும் மேலான பண்டைய மரபுகளும், பொருள்முதல்வாத கருத்துகளும், கலையும், பண்பாடும், பொருளாதார அடித்தளங்களும், தொழில்நுட்பமும், உற்பத்தி உறவுகளும் சங்ககால மதிப்பீடுகளும் முழுமையான அழிவுக்கும் மாற்றத்துக்கும் உள்ளாகின. தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், கலைகள் போன்றவைகளின் பயிற்சி மையமாகவும் பாதுகாவலனாகவும் இருந்த பல நிறுவனங்கள் முற்றிலுமாகச் சிதைந்து அழிந்துபோயின. பழந்தமிழ்ச் சமூகம் மீண்டெழ முடியாத ஒரு பேரழிவிற்கும் மாற்றத்திற்கும் உள்ளானது.
தொழில், வணிகம் போன்றவற்றில் பேரளவான வளர்ச்சியைப் பெற்றிருந்த, கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நூற்றுக்கணக்கான நூல்களைக் கொண்டிருந்த, உலகின் பெரு நகரங்களையும், பெருங்கப்பல்களையும் கொண்டிருந்த, தன்னை அன்றே மொழியால் அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, தொல்கபிலர், கணாதர், தொல்காப்பியர், வள்ளுவன் போன்ற மாமேதைகளைக் கொண்டிருந்த பழந்தமிழ்ச்சமூகம் சுவடே இல்லாமல் அழிந்து போனதற்கும், சமயம் சார்ந்த பிற்போக்கான, பின்தங்கிய கிராமச்சமூகமாக மாறிப்போனதற்கும், பழந்தமிழ்நாட்டின் பகுதியாக இருந்த சேரநாடு, கேரளமாக மாறுவதற்கும், தத்துவம் அறிவியல் தொழில்நுட்பம் இசை முதலான பல்வேறு கலைகள் போன்றனவற்றில் களப்பிரர் காலத்திற்கு முந்தைய சங்ககாலத்திற்கும், அதன் பிந்தைய பக்தி காலகட்டத்திற்கும் இடையே இணைக்க முடியாத மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டதற்கும், களப்பிரர் காலத்திற்கு முந்தைய இலக்கியங்கள் சமயச்சார்பற்றும், களப்பிரர் காலம் முதல் தோன்றிய இலக்கியங்கள் சமயச்சார்பானதாக இருப்பதற்கும் களப்பிரர் காலப்பேரழிவும் அதன் தொடக்ககாலக் கொடுங்கோன்மை ஆட்சியுமே காரணம்.
களப்பிரர் ஆட்சியின் விளைவு: ‘செங்கம்-தருமபுரி’ பகுதியைச் சேர்ந்த செங்கம், போளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, தருமபுரி, அரூர், ஊத்தங்கரை, கிருசுணகிரி, பாலக்கோடு, விழுப்புரம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய 14 பழைய வட்டங்களில் கிடைத்த 200 நடுகற்களையும் ஒப்பீட்டு அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பூங்குன்றன் பல கோணங்களில் விரிவாகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வின் முடிவில் இப்பகுதி மக்கள், சங்ககாலம் முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை பழங்குடி வாழ்நிலையில், மேய்ச்சல்நிலக் கால்நடை வளர்ப்புச் சமூகமாக (மிகவும் பின்தங்கிய பிற்போக்கான நிலை) வாழ்ந்து வந்தனர் எனவும் இங்கு ஊரக அரசியல் தான் (அரசு இல்லாத நிலை) நிலவியது எனவும் இங்கு பல்லவர் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 550-850ல்) மாற்றம் ஏற்படவில்லை எனவும் சோழ அரசு இங்கு நிலைபெற்றபின் தான் மாற்றம் ஏற்பட்டது எனவும் அவர் கூறுகிறார். ஆனால் கி.பி. 250 முதல் கி.பி. 550 வரை இப்பகுதியில் நடைபெற்ற களப்பிரர் ஆட்சி குறித்து அவர் பேசவில்லை.
(24).சங்ககாலத்தில் இப்பகுதியைச் சேர்ந்த தகடூரை (தருமபுரி) ஆண்ட அதியமான் மரபினர் மூவேந்தர்களுக்கு இணையாக அசோகன் கல்வெட்டில் குறிக்கப்பட்டவர்கள். இரும்பு எஃகு உற்பத்தியில் உலகப் புகழ்பெற்றவர்கள். அதியமான் வெளியிட்ட நாணயங்களும், அவனது மோதிரமும் கிடைத்துள்ளன. தற்போது கிருசுணகிரியில் நடைபெற்ற அகழாய்வு கி.மு. 2200 வாக்கிலேயே இங்கு இரும்புக்காலம் இருந்தது என்பதை உறுதி செய்கிறது. இப்பகுதியில் அன்று கால்நடை வளர்ப்பும், புன்செய் வேளாண்மையும் முக்கியத் தொழில்களாக இருந்த போதிலும், இரும்பு எஃகு, மணிகள் செய்தல், ஆடை உற்பத்தி போன்ற வேறுபல தொழில்களும் நடைபெற்றன. பல பெருவழிகள் தகடூர் வழியே சென்றன. வணிகம் பெரிய அளவில் நடைபெற்றது. அதியமான் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. அதன் பின் 450 ஆண்டுகள் கழித்துத்தான் களப்பிரர் படையெடுப்பு கி.பி. 250இல் நடந்தது. இந்த இடைப்பட்ட 450 ஆண்டுகளிலும் நல்ல வளர்ச்சி இருந்தது. கி.மு. 50 முதல் கி.பி. 200 வரையான காலகட்டத்தில் தொழில், வணிகம் ஆகியன பேரளவில் வளர்ச்சி பெற்றன. ஆகவே மிகவும் வளர்ச்சி அடைந்திருந்த இப்பகுதி மிகவும் பின் தங்கிய பிற்போக்கான பழங்குடி நிலையை அடைந்ததற்கு களப்பிரர் படையெடுப்பின்போது நடந்த பேரழிவும், அதன் பிந்தைய அவர்களது கொடுங்கோன்மை ஆட்சியுமே காரணம். இதே போன்ற பேரழிவு தான் களப்பிரர் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நடந்தது என்பதற்கு ‘செங்கம்-தருமபுரி’ பகுதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்: ஆறு அகப்பாடல் நூல்கள். ஒரு புறப்பாடல் நூல், இரு அற நூல்கள், ஒன்பது நீதி நூல்கள் என 18 நூல்கள், மொத்தம் 3255 பாடல்கள் (25). சங்ககாலத்திற்குப் பின்னர் எழுந்த நூல்களை, சங்கத்தோடு தொடர்புடைய, சங்கக் கருத்தைத் தழுவிய நூல்களை சங்கம் மருவிய நூல்கள் எனவும் அந்த நூல்களின் பட்டியலில் சிலப்பதிகாரமும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும் எனவும் நம் முன்னோர் மரபு கூறுகிறது. நச்சினார்க்கினியர் பேராசிரியர் ஆகிய உரையாசிரியர்களின் கூற்றுப்படியும், கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குரிய பன்னிரு பாட்டியல் படியும், அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று மட்டுமே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இருக்கும் (26). பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்க நூல்களைப் போன்று காரணகாரியமும், தர்க்கவாதச் சிந்தனையும் கொண்டனவாக, மிகச் சிறந்த கருத்துகளை உடையவனவாக, சமயம் சாராத, ஐந்திணைப் பாகுபாடுகளையும், அகம்புறம் சார்ந்த கருத்தியலையும், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை மட்டும் கொண்டனவாக உள்ளன (27). ஆகவே முன்னோர் மரபுப்படி இந்நூல்கள் சங்ககாலக் கருத்தியலைக் கொண்டவை என்பதாலும், சங்கம் மருவிய காலம் என்பது சங்க காலத்தின் தொடர்ச்சி என்பதாலும், சங்கம்மருவிய கால நூல்களின் பட்டியலில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வருவதாலும் இவை சங்கம்மருவிய கால நூல்கள்.
களப்பிரர் காலத்தில் பொருள்முதல்வாதச் சிந்தனைகளும், ஐந்திணைப் பாகுபாடுகளும், அகம்புறம் சார்ந்த கருத்தியலும் இல்லாது போயின. சமய ஆதிக்கம் மேலோங்கிய காலம் என்பதால் இக்காலத்தில் அறம் பொருள் இன்பம் ஆகியவற்றைவிட ‘வீடு’ என்பது மிக முக்கியமானதாக ஆகியது. 18 நூல்களில் 6 அகப்பாடல் நூல்களும், இன்பத்துப்பாலைக்கொண்ட இரு அற நூல்களும் உள்ளன. சமண, பௌத்த அறிவர்கள் இன்பத்துப்பாலை ஏற்காதவர்கள் என்பதால் அவர்கள் இவற்றை எழுதியிருக்க முடியாது. மேலும் சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பதால் அதற்கு முந்தைய திருக்குறளின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. திருக்குறளைப் பின்பற்றி உருவான, நாலடியார் காலம் திருக்குறளை ஒட்டி கி.பி. 1ஆம், 2ஆம் நூற்றாண்டு. பண்டைய ஐந்திணை மரபை ஒட்டி உருவான களவழி நாற்பது என்ற புறத்திணை நூலும் கார் நாற்பது முதலான ஆறு அகத்திணை நூல்களும் சிலப்பதிகாரக் காப்பியத்துக்கு முன் உருவான நூல்கள். ஆகவே மேலே சொல்லப்பட்ட 9 நூல்களும் கி.பி. 250க்கு முந்தைய நூல்கள். மீதியுள்ள 9 நீதி நூல்களும் காரணகாரியத் தர்க்கவாதச் சிந்தனையுடன், அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றை மட்டும் கொண்டனவாக இருப்பதால் இந்நூல்களும் கி.பி. 250க்கு முன் உருவானவை தான். மேலும் இக்காலத்தில் தமிழ் அறிவர்கள் அனைவரும் பாலி, பிராகிருத சமற்கிருத மொழிகளில் தான் எழுதினர். இக்கால இறுதியில்தான் சமயம் சார்ந்த திருமந்திரம் தோன்றியது. ஆகவே பதினெண் கீழ்க்கணக்கு போன்ற சமயச் சார்பற்ற நூல்கள் களப்பிரர் காலத்தில் தமிழில் தோன்ற இயலாது.
மேலும் சங்ககாலம் (கி.மு.750-50), சங்கம் மருவிய காலம் (கி.மு.50-கி.பி.250), களப்பிரர்காலம் (கி.பி.250-575) ஆகியன குறித்தத் தெளிவு இல்லாததாலும், கி.பி. 250 வரை சங்ககாலம் இருந்தது எனக் கருதியதாலும் அதன் தொடர்ச்சியாக வந்த களப்பிரர்காலத்தைச் சங்கம் மருவிய காலம் எனவும் அதில்தான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உருவாகின எனவும் பலரும் கருதினர். ஆனால் எமது ஆய்வு முடிவின்படி, சங்ககாலத்திற்கும் (கி.மு.750-50), களப்பிரர்காலத்திற்கும் (கி.பி.250-575) இடைப்பட்ட, கி.மு.50 முதல் கி.பி.250 வரையான 300 வருடகால, சங்கம்மருவிய காலத்தில்தான் சிலப்பதிகாரமும், திருக்குறள் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் உருவாகின.
களப்பிரர்காலத் தமிழ்ச் சமூகம்:
1. உலகின் பெருநகரங்களாக இருந்த பழந்தமிழ்நாட்டு நகரங்கள் அனைத்தும் பேரழிவுக்குள்ளாகி இல்லாது போயின. தமிழ்ச்சமூகம் பின்தங்கிய பிற்போக்கான சமயம் சார்ந்த கிராமச் சமூகமாக ஆகியிருந்தது.
2. பல்லவரின் காஞ்சிநகர் மட்டும் பழம்பெரும் தமிழ் நூல்களால் தத்துவம், கலை, அறிவியல் ஆகியவற்றில் புகழ்பெற்ற பெருநகராக ஆகியது.
3. உலகின் பெருங்கப்பல்களைக் கொண்டு உலகளாவிய அளவில் நடந்து வந்த பேரளவான கடல்வணிகம் இல்லாது போனது.
4. உயர்தொழில்நுட்ப மேன்மையும், பேரளவான பொருளுற்பத்தியையும், பெருஞ்செல்வத்தையும் கொண்டிருந்த தமிழ்ச்சமூகம், அவைகளை முழுமையாக இழந்துபோய் தொழில்நுட்ப வல்லுனர்களோ, கைத்தொழில் வல்லுநர்களோ, கைவினைஞர்களோ இல்லாத கொடிய வறுமையும், பஞ்சமும் பட்டினியும் கொண்ட சமூகமாக மாறியிருந்தது.
5. பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் கொண்டிருந்த பழந்தமிழ்ச் சமூகம் அவற்றை முழுமையாக இழந்து போயிருந்தது.
6. பொருள்முதல்வாத மெய்யியலைக் கொண்ட, சமயச் சார்பற்ற சமூகமாக இருந்த பழந்தமிழ்ச் சமூகம், சமயச் சார்பும் சமய ஆதிக்கமும் கொண்டதாக அறம் பொருள் இன்பத்துடன் வீடு சேர்க்கப்பட்டதாக ஆகியிருந்தது.
7. ஐந்திணைப் பாகுபாடுகளும். அகம்புறம் சார்ந்த கருத்தியலும், காரண காரியத் தர்க்கவாதச் சிந்தனைகளும் இல்லாது போயிருந்தன.
8. எண்ணியம், சிறப்பியம், அளவியல், பூதவாதம் முதலான பொருள்முதல் வாதச் சிந்தனைகளை அடிப்படையாக் கொண்ட மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும், தமிழிசையும், நடனம், ஓவியம், கட்டடக்கலை, கப்பல்கலை, மருத்துவம், வர்மம், களரி, சிலம்பம் போன்ற பல்வேறு துறைகளும் பெரும் சிதைவுக்கும் அழிவுக்கும் உள்ளாகியிருந்தன. அவை சார்ந்த நூற்றுக்கணக்கான நூல்கள் அனைத்தும் இல்லாதுபோயின.
9. தமிழ் மொழி கீழ்மக்களின் மொழியாக மாற்றப்பட்டு தமிழில் இருந்த பெரும்பாலான நூல்களும் அழிவுக்குள்ளாகியிருந்தன. தமிழ் நூல்களை சமற்கிருதமயமாக்கல் மூலம் தன்வயப்படுத்திக் கொண்டு சமற்கிருதம் அறிவியல் மொழியாக மாற, தமிழ்மொழி அத்தகுதியை இழந்துபோனது.
10. தொடக்கத்தில் பாலி பிராகிருதமும் பின் சமற்கிருதமும் அரச ஆதரவால் வளர்ச்சி பெற்று நிறைய நூல்களைப் படைத்தன.
11. தமிழ் அறிவர்களும் தமிழை விடுத்து அரசு ஆதரவு பெற்ற பாலி, பிராகிருதத்தில் முதலிலும், பின் சமற்கிருதத்திலும் எழுதினர்.
12. தொடக்ககால களப்பிரர் ஆட்சியில் அடக்கப்பட்ட தமிழ்மொழி அவர்களின் இறுதிக் காலத்தில் தமிழ்மக்களின் தமிழ்ப்பற்றால் எழுச்சி பெற்று சமயம் சார்ந்த திருமந்திரமும், காரைக்கால் அம்மையாரின் பக்திப் பாடல்களும், பின் பக்தி இலக்கியமும் தோன்றக் காரணமாகியது.
13. பேரளவான வளர்ச்சியின் காரணமாக உருவாகியிருந்த ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்தைத் தமிழ்ச் சமூகம் இழந்து போயிருந்தது.
14. பழந்தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சேரநாடு, பெருமளவிலான பார்ப்பனர் குடியேற்றத்துக்கு உள்ளாகி கேரளாவாக மாறிப் போனது.
15. தங்களது வளர்ச்சி பெற்ற நகர நாகரிகத்தை, தொழில்நுட்ப மேன்மையை, பெருநகரங்களை, பெருங்கப்பல்களைக் கொண்டு நடந்துவந்த உலகளாவிய கடல் வணிகத்தை, உலகின் ஒரு முன்னணிச் சமூகமாக இருந்து வந்த நிலையை, தமிழின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களை பழந்தமிழ்ச் சமூகம் முழுமையாக இழந்தும் மறந்தும் போயிருந்தது.
இந்த 15 சமூகமாற்றங்களில் ஒருசில சமூகமாற்றங்களுக்கு களப்பிரர் படையெடுப்பு மட்டுமின்றி சமண பௌத்த வைதீக மதங்களும் காரணம்.
இறுதியுரை: மேற்கண்ட 15 சமூக மாற்றங்கள், களப்பிரர் காலத் தமிழ்ச் சமூகம் என்பது முற்றிலும் ஒரு புதிய, மாறுபட்ட சமூகமாக, பழைய நினைவுகள் இல்லாத, கல்வியறிவோ, எழுத்தறிவோ, அறிவியலோ, தொழில் நுட்பமோ, கலையுணர்வோ, இன்னபிற நகர நாகரிகத்திற்கான எந்த அடையாளமும் இல்லாத, ஏழ்மையும், வறுமையும், பஞ்சமும், பட்டினியும், கொடூரமும் கொண்ட ஒரு பின்தங்கிய பிற்போக்கான சமயச் சார்பான கிராமச் சமூகமாக ஆகியிருந்தது என்பதை உறுதி செய்கின்றன. இவை அநாகரிக டோரியர் படையெடுப்பால் கிரேக்கத்தில் ஏற்பட்ட கொடூரப் பின்விளைவுகள் பழந்தமிழகத்திலும் ஏற்பட்டன என்பதை உறுதி செய்கின்றன. கி.பி. 400க்குப் பிறகு இவை மாறத் தொடங்கின எனினும், அம்மாற்றங்கள் சமயச் சார்பானதாகவும் கிராமம் சார்ந்ததாகவும், பிற்போக்குச் சிந்தனைகளோடும் தான் இருந்தன. பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகமாக இருந்த சேர நாடு கி.பி. 250க்குப் பின் கேரள நாடாக மாறியதற்கு மேலே குறிப்பிட்ட சமூக நிலைமைகள் சேர நாட்டிலும் உருவானதுதான் காரணம். மேற்கண்ட பல சமூக மாற்றங்களுக்கு செங்கம் - தருமபுரிப் பகுதி ஒரு சான்றாக உள்ளது.
கி.மு. 750 முதல் கி.பி. 250 வரையான 1000 வருடகாலப் பழந்தமிழ்ச் சமூகம், உலகின் பெரு நகரங்களையும், பேரளவான பொருளுற்பத்தியையும், பெருஞ் செல்வத்தையும் கொண்ட அன்றைய உலகின் ஒரு முன்னணிச் சமூகமாகவும் ஒரு அறிவியல் சமூகமாகவும் இருந்தது என்பதை, பழந்தமிழக நகர நாகரிகத்தின் அறம் சார்ந்த வாழ்வை, அதன் பொருள்முதல்வாத அடிப்படையை, அதன் மேன்மையை, தமிழில் இருந்த தத்துவார்த்த, அறிவியல் தொழில்நுட்ப, கலை, இலக்கிய நூல்களின் பெருஞ்சிறப்பை முழுமையாக உணர்ந்து கொள்வதன் மூலமே அவற்றின் அழிவுக்குக் காரணமான களப்பிரர் படையெடுப்பும் அதன் ஆட்சியும் தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழர் வரலாற்றுக்கும் ஏற்படுத்திய பெரும் பாதிப்பைப் புரிந்து கொள்ள இயலும். – கணியன் பாலன்.

