பராசக்தி திரைப்படமும்.... முதல் மொழிப்போர் போராட்டமும்...
சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படம் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் மொழிப்போர் குறித்து மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தி திணிப்புக்கெதிரான போராட்டங்கள் பல கட்டங்களாக நடைபெற்றது. முதல் மொழிப்போரை தமிழர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை.
இராஜாஜி அவர்கள் 1937ல் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றுக்கொண்ட கையோடு முதன்முதலாக இந்தி மொழியை கட்டாயமாக்கும் சட்டத்தை கொண்டு வருகிறார்.
இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து 26 டிசம்பர் 1937ல் கட்டாய இந்தி மொழிக்கு எதிராக பெரியார் ஈவெரா சென்னை மாகாண 3 வது தமிழர் மாநாட்டைக் கூட்டுகிறார்.
இக்கூட்டத்தில் கி.அ.பெ விஸ்வநாதம், கேவி.அழகிரிசாமி, தியாகராய செட்டியார், அண்ணாதுரை, சோமசுந்தர பாரதி என எல்லா தமிழறிஞர்களும் இராஜாஜியினுடைய இந்தி மொழி திணிப்புக்கெதிராக பெரியார் பின்னால் திரண்டவர்கள்.
சென்னை மாகாணத்தில் ஆகப்பெரும் தலைவர்களாக அறியப்பட்ட இவர்களெல்லாம் எப்படி பெரியாரின் பின்னால் அணிதிரண்டார்கள்?
இவர்களெல்லாம் தனித்தனி அமைப்புகளில் இருந்தும் ஏன் தனியாகத் தங்கள் தலைமையில் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை? இதற்குக் காரணம் என்ன?
காரணம், பெரியார் மட்டுமே கட்சி சார்பில்லாமல் சுயமரியாதை இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்தார். அதுவுமில்லாமல் சென்னை மாகாணத்தில் இரண்டாவது பெரிய கட்சியான நீதிக்கட்சி தேர்தலில் தோல்வியடைந்து எதிர்கட்சியாகி மக்கள் செல்வாக்கை இழந்திருந்தது.
காங்கிரஸை எதிர்க்க வேற சரியான ஆட்களோ, கட்சிகளோ களத்தில் கிடையாது. பெரியார் ஒருவர் மட்டுமே பிராமண ஆதிக்க வண்டவாளங்களை தெருவுக்குத்தெரு கொண்டு வந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பெண்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருந்தார்.
இந்தி மொழி திணிப்பு செய்யப்பட்டவுடன் அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழறிஞர்களும் பெரியாரின் தலைமையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டை கூட்டி, அன்றைய முதல்வர் ராஜாஜி இந்தி திணிப்பை வாபஸ் வாங்க மறுக்கிறார், அதற்கு அன்றிருந்த வெள்ளைக்கார கவர்னரும் துணைபோகிறார். ஆகையால் கவர்னரை திரும்ப பெறுமாறும், கவர்னருக்கெதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரட்டீஷ் அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
பிரிட்டீஷ் அரசை எதிர்த்து அறிக்கை விட்டாலும் சரி, போராடினாலும் சரி, இந்தி மொழி திணிப்ப வாபஸ் வாங்க முடியாதுன்னு முதல்வர் ராஜாஜி கறார் காட்டுகிறார். இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் பரவுகிறது.
இதந்தொடர்ச்சியாக திருச்சி மற்றும் சேலம் ஆகிய ஊர்களில் பெரியார், பாரதிதாசன் மற்றும் அ.பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்ட இந்தி எதிர்ப்பு மாநாடுகளைச் சீர்குலைக்க செருப்பு மற்றும் கற்களை வீசித்தாக்குதல் நடத்தப்படுகிறது.
ஆனால் போராட்டத்தின் சூடு குறையாமல் மேலும் தீவிரமாகி அனல்பறக்கிறது. கி.ஆ.பெ, நாடிமுத்து, ராமலிங்கம் செட்டியார் ஆகியோரோடு பிராமணரான உ.வெ.சா வும் இந்தியை எதிர்த்து பெரியாருடன் கைகோர்க்கிறார்.
இப்போது ராஜாஜி கொஞ்சம் இறங்கி வருகிறார். 21 ஏப்ரல் 1938 அன்று அறிக்கை ஒன்றை வெளியிடும் ராஜாஜி, முதல் கட்டமாக 125 பள்ளிகளில் மட்டும் இந்தி விருப்பப் பாடமாக இருக்கும். தவிர உருது மொழியையும் விருப்பப் பாடமாக படிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் போராட்டக் களத்திலிருந்து முஸ்லீம்களை விலக்கி விடலாம் என்று திட்டம் போடுகிறார்.
ராஜாஜியின் பிரித்தாளும் சூழ்ச்சியைப் புரிந்துகொண்ட பெரியார் 1938 மே 28 ம்தேதி ஹிந்தி எதிர்ப்பு வாரியம் என்று ஒரு அமைப்பை உருவாக்குறார். அதன் பொருப்பாளர்களாக WPA சௌந்திரபாண்டியன் நாடார், உமா மகேஸ்வரன் பிள்ளை மற்றும் ஈவெரா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இவர்கள் தமிழகம் முழுவதிலிமிருந்தும் இந்தி எதிர்ப்பு பேரணி ஒன்றைத் தொடங்குகிறார்கள்.
1938 ஆகஸ்ட் 1ல் டாக்டர் தர்மாம்பாள், நீலாம்பிகை, மூவலூர் ராமமிர்தம் அம்மாள் ஆகிய பெண் தலைவர்கள் தலைமையில் திருச்சியில் இருந்து இந்தி எதிர்ப்பு நடைபயணம் தொடங்குகிறது. இதேபோல் தமிழகமெங்கும் தொடங்கிய நடைபயணப்பேரணி 42 நாட்கள் கடந்து சென்னை கடற்கரையில் முடிவடைகிறது.
அன்றைக்கு சுமார் 70000 பேர் கூடியிருந்த கடற்கரை இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ஈவெரா முதன் முறையாக ஒரு கோசத்தை வைக்கிறார். அந்த கோசம் பிரிட்டிஷாரை மட்டுமல்லாது காங்கிரஸ்காரர்கள் மற்றும் இந்தியாவையே அலற வைக்கிறது.
அந்த கோசம், "தமிழ்நாடு தமிழருக்கே"...
இந்தக் கோசம் நமக்கு இன்றைக்கு சாதாரணமாத் தெரியும்.
ஆனால் அன்றைய பிரிட்டிஸ் இந்தியாவில், வெள்ளையர்களின் ஆட்சியில் பாகிஸ்தானைக் கூட தனியாகப் பிரிக்கச்சொல்லி போராட்டங்கள் இல்லாதபோது, நாட்டிலேயே முதன்முறையா தமிழ்நாட்டை மட்டும் தனிநாடாகப் பிரிச்சிக்குடுங்கன்னு கேக்க உண்மையிலேயே ஒரு தில்லு வேணும்.

போராட்டம் திசைமாறிப் போவதை உணர்ந்த இராஜாஜி, தனிநாடு கோரிக்கையால் பிரிட்டீஷ் அரசு கோபித்துக்கொள்ளுமே என்று அஞ்சியவர், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்கள் என அனைவரையும் கைது செய்து சிறையிலடைக்கிறார்.
இந்த கைது நடவடிக்கை "சும்மா கெடந்தவணை சொறிஞ்சுவுட்டா மாதிரி" மக்கள் நாடெங்கும் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி இந்திக்கு எதிராகப் போராடத் தொடங்குகிறார்கள்.
இதில் நீதிக்கட்சி சார்பில் ஏ.டி.பன்னீர்செல்வம் உடையார் இந்தி எதிர்ப்பு மாநாட்டைக்கூட்டி, சிறையிலுள்ள பெரியார் போன்றே மாநாட்டு மேடையில் ஒரு உருவத்தை செய்துவைத்து, அவர் தலைமையிலேயே கூட்டம் நடக்குறதா போராட்டம் செய்கிறார்.
இப்போராட்டம் தீவிரமாகி கைது செய்யப்பட்டவர்களில் நடராசன் பறையர், தாளமுத்து நாடார் இருவரும் உடல்நலக்குறைவால் சிறையிலேயே மாண்டு போகிறார்கள்.
அவர்கள் இறப்பதற்கு முன்பாக அரசு சார்பில் அதிகாரிகள் போராட்டத்தைக் கைவிடுவதாக எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்வதாகக்கூறுகிறார்கள்.
ஆனால் அவர்களோ, இந்தி திணிப்பை வாபஸ் பெற்றால்தான் விடுதலையை ஏற்போம் என்றுகூறி சிகிச்சை எடுக்காமலே இறந்துவிடுகிறார்கள்.
இவர்களின் மறைவு மக்கள் போராட்டத்தை மேலும் தீவிரமாகிறது. இதனால் பெரியாரையும் சிறையிலுள்ள மற்றவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்ட இராஜாஜி, இந்தி திணிப்பை திரும்பப்பெற மறுக்கிறார். அதேசமயம் "வெள்ளையேனே வெளியேறு" போராட்டத்தைக் காரணம்காட்டி பதவியை ராஜினாமா செய்கிறார் இராஜாஜி.
இதனையடுத்து வெள்ளைக்கார கவர்னர் எர்ஸ்கின், இந்தி படிக்கச்சொன்னால் நாட்டையே பிரிக்கச் சொல்கிறார்களேன்னு கட்டாய இந்தி மொழி வகுப்பு கிடையாது என்று அறிவிப்பு வெளியிட்ட பின்பே தமிழகத்தில் அமைதி திரும்பியது.
அப்படி இந்திக்காக உயிரையே குடுத்து போராடிய பெண்கள் 1938 நவம்பர் 13 கூட்டிய இந்தி எதிர்ப்பு பெண்கள் மாநாட்டில் தான் ஈவெராவுக்கு பெரியார் என்று பட்டம் கொடுக்கப்பட்டது.
இந்தி திணிப்புக்கு எதிராக தந்தைப் பெரியாரின் பின்னால் கள்ளர், செட்டியார், உடையார், பிள்ளமார், பறையர்னு அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும், மறைமலை அடிகள், குன்றக்குடி அடிகளார் போன்ற சைவசமய பெரியார்களும் அணி திரண்டார்கள்.
இதோடு இந்தி மொழித் திணிப்பை கைவிட்டார்களா என்றால் இல்லை. 10 வருசம் கழித்து மீண்டும் வேறு வடிவத்தில் இந்தி திணிப்ப கொண்டுவரப்பட்டது. அப்போது எதிர்முகாமில் இருந்து பெரியாருக்கு துணையாக வந்தார் காமராசர்....
நன்றி...
ராஜா & ஷெரீப்

