🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேரறிவுப்பெட்டகமே! அன்பின் ஊற்றே எங்கள் அண்ணா!- ஆசிரியர்.ஏஎம்ஆர்.

பேரறிவுப் பெட்டகமே! அன்பின் ஊற்றே!

பெறற்க்கரிய பெரும்பேறே இந்த நாட்டை

வேரறுந்த மரமாக விட்டு விட்டு

வேறெங்கு சென்றீரோ! அறியோம்; உங்கள்

கூரறிவின் பேராற்றல் கண்டு அந்தக்

கூற்றுவனே அழுக்காறால் கவர்ந்தான் கொல்லோ!! 

யாரறிவார் அண்ணாவுன் அறிவின் ஆற்றல்

அன்பரசே! எமைவிட்டு எங்கு சென்றீர்!!


கண்ணற்ற எங்களுக்கு விழியாய் நின்று

காரிருளில் பேரொளியைக் காட்டிச் சென்ற

தென்னாட்டுப் பெருமகனே! தமிழ் வேந்தே!! 

திக்கெட்டும் புகழ்ந்தேற்ற வாழ்ந்த மன்னா!! 

இந்நாட்டு மக்களுன்னை எண்ணி இன்று

ஏங்கியழும் அழுகுரலுக் கிரங்கா யோநீ!!

எண்ணற்ற ஏழைகளின் இதயக் கூட்டில்

இடம்பெற்றாய் அண்ணாநீ இறக்கவில்லை.


இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றாய்;

ஏற்றிடுவோம் அறிவொளியை என்று சொன்னாய்;

பொறுப்புள்ள தம்பிகளை வளர்த்து விட்டாய்;

பொறையுடைமை உள்ளவனாய் வாழ்ந்து சென்றாய்;

கறுப்பிருக்கும் என்கொடியில், இந்த நாட்டின்

கடைசிமகன் உயர்கின்ற வரைக்கும் என்றாய்;

பொறுத்திருந்து பார்க்காமல் சென்று விட்டாய்

பொறையரசே புகழுருவில் என்றும் வாழ்வாய்!!


தாழ்வுற்ற தென்னாட்டை வாழ வைத்து

தமிழுக்கு உயிரளித்தான் மறைந்து விட்டான்!

ஊழுக்கு இரையாகும் தமிழே! உந்தன்

உயர்வுக்குப் போராட அண்ணா இல்லை

"யேலு"க்குப் புகழ்தந்து பட்டம் பெற்றாய்

எமக்கேனோ துயர்தந்து மறைந்து விட்டாய்!

வேலுக்கும் வாளுக்கும் அஞ்சாக் கூட்டம்

வெற்றிச்சொல் வேந்துனக்கு அடங்கக் கண்டோம்!!


எழுத்துலக வேந்தனென இருந்தாய், ஈடு

இணையற்ற சொற்பொழிவால் உயர்வு பெற்றாய்!

பழுத்திருக்கும் மரம்நாடும் பறவை யைப்போல்

பண்பிருக்கும் உனைநாடும் இளைஞர் கூட்டம்!

உழுத்துவிடும் தமிழ்நாட்டுப் பெருமை என்று

உரைத்தவர்கள் வாய்மூட உயர்த்தி விட்டாய்!

வெளுத்தமனம் படைத்தவனே! உனக்கு என்றும்

வீழ்ச்சியில்லை! உறுதியிலும் உறுதி அண்ணா!


இறப்பில்லாப் பெரும்புகழைப் பெற்று எங்கள்

இதயத்தில் குடிஇருக்கும் இறைவா! அற்றைச்

சிறப்பெல்லாம் மறந்திருந்த தமிழ நாட்டின்

சீர்கூறி மாற்றாரை மருள வைத்தாய்! 

அறப்புகழுக் குயிர்ப்பொருளாய் வாழந்தாய்! தம்பி

இறக்கவில்லை எங்கள் அண்ணா...


எழுத்துலக வேந்தனென இருந்தாய், ஈடு

இணையற்ற சொற்பொழிவால் உயர்வு பெற்றாய்!

பழுத்திருக்கும் மரம்நாடும் பறவை யைப்போல்

பண்பிருக்கும் உனைநாடும் இளைஞர் கூட்டம்!

உழுத்துவிடும் தமிழ்நாட்டுப் பெருமை என்று

உரைத்தவர்கள் வாய்மூட உயர்த்தி விட்டாய்!

வெளுத்தமனம் படைத்தவனே! உனக்கு என்றும்

வீழ்ச்சியில்லை! உறுதியிலும் உறுதி அண்ணா!


இறப்பில்லாப் பெரும்புகழைப் பெற்று எங்கள்

இதயத்தில் குடிஇருக்கும் இறைவா! அற்றைச்

சிறப்பெல்லாம் மறந்திருந்த தமிழ நாட்டின்

சீர்கூறி மாற்றாரை மருள வைத்தாய்! 

அறப்புகழுக் குயிர்ப்பொருளாய் வாழந்தாய்! தம்பி

அல்லலுற்று ஆற்றாது அழவும் வைத்தாய்!

பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் என்று சொன்ன

பேரறிவுக் கோபுரமே! பிரிந்து விட்டாய்!                   


வெற்றிக்கு வித்திட்ட வேந்தே ! சுட்டு

விரலுக்கு இந்நாட்டை ஆட வைத்த

பெற்றிக்கு உரியவனே! பிரிந்து விட்டாய்!

பேரறிவே கடலோரம் அடங்கிற் றம்மா!

கற்றுக்கொள் தம்பீநீ இந்த நாட்டைக்

காப்பாற்ற உன்னுயிரைத் தருதல் வேண்டும்! 

பற்றோடு பாசத்தை வளர்த்து இந்தப்

பாருக்குள் முதல்மகனாய்த் திகழ்தல் வேண்டும்


எண்திசையும் புகழ்மணக்க இருந்த தாய்க்கு

இழுக்கென்றால் உயிரென்ன வெல்லம் கொல்லோ!!

பண்பட்ட தென்னாட்டுப் பெருமை எல்லாம்

பாழ்பட்டுப் போகாமல் காக்கும் போரில்

புண்பட்டு உன்உடம்பு அழிந்து போனால்

பகழ்பெற்று எப்போதும் வாழ்வாய் என்றாய்!

கண்பட்டு மறைந்தாயோ? அறியோம் அண்ணா!

கறைபட்டுப் போனதண்ணா தமிழன் வாழ்வு

அல்லலுற்று ஆற்றாது அழவும் வைத்தாய்!


திருவிழந்த நாட்டிற்குத் தெம்பு தந்தாய்;

திக்கிழந்த மக்களுக்குத் தெளிவு தந்தாய்; 

உருவிழந்த கலைத்துறைக்கு உயர்வு தந்தாய்; 

உண்மைக்கு என்றென்றும் சிறப்பு தந்தாய்;

இருளடைந்த இதயத்துக் கறிவு தந்தாய்;

இயற்றமிழோ டிசைத்தமிழ்க்கும் வாழ்வு தந்தாய்;

அருங்குணத்தால் எமக்கெல்லாம் அண்ணா வானாய்;

ஆறாத துயர்தந்து மறைந்து போனாய்.!


நீரற்ற பாலையிலே எம்மை விட்டாய்;

நிழலற்ற சுடுமணலில் வாழ வைத்தாய்;

ஊரற்ற உறவற்ற அனாதை போல

உலகத்தில் தமிழ்மொழியை விட்டு விட்டாய்

கூறண்ணா உன்செயலும் நியாயம் தானா?

கூற்றுவனோ டேன்சென்றாய் எம்மை விட்டு;

சாரற்ற பழமானோம்!உன்னைக் காணச்

சாவுலகு வரும்நாளே திருநா ளாகும்!!

அண்ணனின் வழியில் என்றும்...
AMR.துரைசாமி, தலைமை ஆசிரியர் ஓய்வு, பழனி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved