🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர்-29

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (28 ஆம் வாரத் தொடர்ச்சி )


எம்ஜிஆரின் தத்துவம், "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் "


தமிழக மக்களின் நல் ஆசியோடும், ஆதரவோடும் மிகச் சிறந்த ஆட்சியைக் கொடுத்து வருகிறார் எம்ஜிஆர்.1986 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் தன் சொத்துக்களை உயில் எழுதுகிறார். தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பள்ளிக்கு எழுதியவர், தான் தொடங்கிய அதிமுகவுக்கு தலைமை கழக கட்டிடத்தையும், (இந்த கட்டிடம் ஜானகி அம்மையார் பெயரில் திருமண மண்டபமாக இருந்து, பின்பு எம்ஜிஆர் கட்சி தொடங்கியதும் கட்சிக்காக எழுதி வாங்கியது) சத்யா ஸ்டூடியோவையும் எழுதிக் கொடுக்கிறார். 

சட்டமன்றத்தில் உள்ள மேலவையால் மக்களின் வரிப்பணம் விரயமாவதாக ஒரு கருத்து நிலவியது என்பதால் மேல்சபை கலைக்கப்பட்டது. அரசின் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ம.பொ.சி.யும் ஒருவர். ஏனெனில் அந்த நேரத்தில் அவர் மேல்சபைத் தலைவராக இருக்கிறார். எம்ஜிஆரின் நண்பரான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, ம.பொ.சி.க்கும் நெருக்கமானவராகத் திகழ்கிறார். ஆதலால் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வர். அப்படி ஒருமுறை சந்திக்கும்பொழுது, மேல்சபை விசயத்தில் நீங்கள் ஏன் கடுமையான விமர்சனம் செய்கிறீர்கள் என்று கேட்ட பெரியசாமியிடம், மேல்சபை  போய்விட்டதால் தலைவர் பதவியில் மாதந்தோறும் எனக்கு கிடைக்கும் சம்பளம் போய்விடும். இப்பொழுது எனக்கு அரசாங்க கார் உள்ளது, இனி  அதுவும் எனக்கு கிடைக்காது. வயது முதிர்ந்த காலத்தில் வெளியே செல்ல வேண்டுமெனில் என்பாடு திண்டாட்டம் எனக் கூறி வருத்தம் அடைகிறார் ம.பொ.சி. அன்று இரவே இதை எம்ஜிஆரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார் பெரியசாமி. செவிமடுத்த எம்ஜிஆர் அப்படியா? எனக் கேட்டுக்கொண்டாரே தவிர வேறொன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. 

ம.பொ.சி. ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில், அங்குள்ள பழனி பெரியசாமியின் வீட்டில் தங்குகிறார். அப்பொழுது எம்ஜிஆரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுமுனையில் பேசிய பெரியசாமியிடம் டெலிபோனை ம.பொ.சி. யிடம் கொடுக்கச் சொல்கிறார் எம்ஜிஆர். ம.பொ.சி.யிடம் நலம் விசாரித்துவிட்டு, அமெரிக்காவை நன்கு சுற்றிப் பார்த்துவிட்டு தேவையானப் பொருள்களை வாங்கிக் கொள்ளும்படியும், இது குறித்து பெரியசாமியிடம் சொல்லியிருக்கிறேன் என்றும் எம்ஜிஆர் கூறுகிறார். பின்னர் அமெரிக்காவிலிருந்து ம.பொ.சி. திரும்பியபின் ஒருநாள் கோட்டையில் இருந்து இல்லத்திற்கு திரும்பும் வழியில் திடீரென ம.பொ.சி.யின் வீட்டுக்குச் செல்கிறார் எம்ஜிஆர். சற்றும் எதிர்பாராத முதல்வரின் வருகையில் மகிழ்ச்சி அடைந்த ம.பொ.சி யிடம் அமெரிக்கா சுற்றுப்பயணம் பற்றி விசாரித்த எம்ஜிஆர், ம.பொ.சி. யின் கையில் ஒரு கார் சாவியைத் திணிக்கிறார். ஒன்றும் புரியாமல் திகைத்த ம.பொ.சி யிடம் உங்களுக்கு அரசாங்கம் கார் கொடுத்துள்ளது. மேல்சபைத் தலைவராக இருந்தபொழுது வழங்கப்பட்ட மாதச் சம்பளம் 15000 ரூபாயும் தொடர்ந்து கிடைக்கும், அத்துடன் அந்த பதவியின் எல்லா சலுகைகளும், வசதிகளும் உங்களுக்குத் தொடரும். உங்களை தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவராக நியமனம் செய்திருக்கிறேன் என்கிறார் எம்ஜிஆர். இதைக்கேட்டு உணர்ச்சியின் உச்சியில் கண்கலங்கி நிற்கிறார் ம.பொ.சி. அத்துடன் சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான ம. பொ.சி. எழுதிய "விடுதலைப் போரில் தமிழகம்"என்ற நூலை நாட்டுடமை  ஆக்கிய பொன்மனம் கொண்ட பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் விடை பெற்றுச் செல்கிறார். 

அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் அறிவும் ஆற்றலும் தமிழகத்திற்குப் பயன்படவும், இங்குள்ள திறமையான தமிழர்கள் அமெரிக்காவில் வாய்ப்புகள் பெறவும் "தமிழ்நாடு பவுண்டேசன் ஆப் யு.எஸ்.ஏ" என்ற அமைப்பை பெரியசாமி தொடங்கினார். அதற்கான அறக்கட்டளைக்கு சென்னை டெய்லர்ஸ் ரோடில் நான்கு கிரவுண்ட் நிலத்தை தனது சொந்தப் பணத்தில் எம்ஜிஆர் வாங்கி கொடுக்கிறார். அதன் இன்றைய மதிப்பு 30 கோடி ரூபாய்க்கும் மேல் என்கின்றனர். 

ஒருமுறை சென்னையில் நடைபெற்ற கம்பன் கழக விழாவைத் தொடங்கி வைத்த எம்ஜிஆர், கம்ப ராமாயணத்தில் கம்பனின் கவிதைகளில் இருந்து, இலக்கிய நுணுக்கமும் பொருட்செறிவும் நிறைந்த சில கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் பேசுகிறார். இதைக்கேட்ட நீதியரசர் மு.மு. இஸ்மாயில் உட்பட தமிழறிஞர்களே வியந்து போகின்றனர். தமிழறிஞர்களின் கரகோசம் அரங்கத்தை அதிரச் செய்கிறது. எம்ஜிஆரிடம் கம்பனைப் பற்றி படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என வினவுகிறார் நீதியரசர் இஸ்மாயில். அதற்கு நான் சிறுவயதில் "சம்பூர்ண ராமாயணம்" நாடகத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அப்பொழுது கம்ப ராமாயணம் படித்திருக்கிறேன் என்கிறார் எம்ஜிஆர். இதுபோலவே இன்னொரு முறை எம்ஜிஆர் பங்கேற்ற கம்பன் கழக விழாவில் உரையாற்றிய இளைஞன் ஒருவன், தமிழ் இலக்கணத்தில் 'மெய்ப்பாடு' என்ற ஒன்று உண்டு. தொல்காப்பியர் இயற்றிய "தொல்காப்பியத்தில்" மெய்ப்பாட்டு இயல் என்று ஒரு இயலே உண்டு. அந்த இயலின்படி, நகை, அழுகை. இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை போன்ற எட்டு மெய்ப்பாடுகள் உள்ளன. இந்த எட்டுடன் 'சமநிலை'யும் சேர்த்து மெய்ப்பாடுகள் "ஒன்பது" எனப் பேசுகிறான். பின்னர் பேசிய எம்ஜிஆர், தமிழ் இலக்கண மரபுப்படி மெய்ப்பாடுகள் எட்டு தான். சமநிலை என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து வந்து பின்னால் சேர்ந்தது என்று உரையாற்றுகிறார். இதைக்கேட்ட தமிழறிஞர்களும், முன்பொரு முறை கம்பன் கழக தலைவராகவும் பணியாற்றிய நீதியரசர் இஸ்மாயிலும் அசந்து போகிறார்கள். இது எப்படி உங்களுக்குத் தெரியும் எனக் கேட்ட இஸ்மாயிலிடம் தொல்காப்பியம் படித்திருக்கிறேன் என எம்ஜிஆர் பதிலளிக்கிறார் . நிறைகுடம் தழும்பாது எனச் சொல்வார்கள். அதுபோல எவ்வளவோ விஷயங்கள் படித்திருந்தாலும் அதை எல்லாம் வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாதவர் எம்ஜிஆர்.

1987 மே மாதத்தில் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்படுகிறார் எம்ஜிஆர். உடன் சென்ற 7 பேரில் மருத்துவர் ராஜாமணியும் ஒருவர். நியூயார்க்கில் எம்ஜிஆர் தங்கியிருந்த ஹோட்டல் "வெஸ்ட்பரியின்" இரண்டாவது மாடியிலேயே இந்த ஏழு மருத்துவர்களுக்கும் அறை ஏற்பாடு செய்யப்படுகிறது. வெஸ்ட்பரி ஹோட்டலில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புரூக்களின் மருத்துவமனைக்குச் செல்ல எம்ஜிஆர் தயாராகிறார். செக் யூரிட்டி கார்கள் புடைசூழ மருத்துவமனை சென்று திரும்புகிறார். 

தாயகம் திரும்பிய எம்ஜிஆர் டில்லியில் நடைபெற்ற இந்திரா காந்தியின் இரங்கல் கூட்டத்தில் தொடர்ந்து ஏழு நிமிடங்கள் இரங்கல் உரையாற்றுகிறார். இப்படி தனது உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் எம்ஜிஆர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஜுன் 14 அன்று விருதுநகரில் அரசின் பிரச்சார நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த ஐசரிவேலன் மேடையிலேயே மாரடைப்பால் மரணம் அடைகிறார். பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் எம்ஜிஆர் கலந்து கொள்கிறார். ஐசரிவேலனின் மறைவால், சோகத்தில் இருந்த அவரின் குடும்பத்தினருக்கு அடுத்த மாதமே மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தி வருகிறது. அது என்னவெனில் அவர்களின் வீட்டிற்கு வந்த ஜப்தி நோட்டீஸ். அப்பொழுது அவருடைய மகன் ஐசரி கணேஷ் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறார். இதுவரை கஷ்டம் தெரியாமல் இருந்த அவருக்கு இப்பொழுது குடும்பத்தின் கஷ்ட நிலை தெரியவருகிறது. இந்த கஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி இராமாவரம் தோட்டம் சென்று எம்ஜிஆரை சந்திப்பது தான் என முடிவெடுக்கிறார். அதன்படியே எம்ஜிஆரிடம் தங்கள் குடும்ப நிலையை விவரிக்கிறார் ஐசரி கணேஷ். இதையறிந்த எம்ஜிஆர் 5 லட்சம் கொடுத்து, எல்லா கடனையும் அடைத்துவிட்டு மீதி இருக்கும் 1 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு நன்றாகப் படிக்கவேண்டும் எனச் சொல்லி இரண்டு நபர்களை உடன் அனுப்புகிறார். 

அவர்கள்  முதலில் 'புரசைவாக்கம் பெனிபிட் பண்ட் ' சென்று பணத்தைக் கட்டிவிட்டு பத்திரத்தை மீட்டு ஐசரி கணேசிடம் தருகின்றனர்.பின்னர் மந்தைவெளி மார்வாடி கடைக்குச் சென்று நகைகளை அடமானத்திலிருந்து மீட்டுக் கொடுக்கின்றனர். மீதம் இருந்த பணத்தில் ஐசரி கணேஷ் கன்ஸ்ட்ரக்சன் வேலையைத் தொடங்கி, இன்று பல்வேறு நிறுவனங்களுடன், வேல் கல்லூரியையும், பல்கலைக் கழகத்தையும் நிர்வகித்து வரும் ஐசரி கணேஷ் எனக்கு எல்லாமே எம்ஜிஆர் தான் என பெருமிதம் கொள்கிறார். இதுபோல் இதற்கு முன்னரும் தொடர்ந்து வாரி வழங்குவதில் எம்ஜிஆரே முன்னோடி என்பதை நாம் பலமுறை  அறிந்துள்ளோம்.


சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved